sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பாரதியாரே!

/

பாரதியாரே!

பாரதியாரே!

பாரதியாரே!

3


PUBLISHED ON : டிச 21, 2025

Google News

PUBLISHED ON : டிச 21, 2025

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எப்பவும் போல், அரை மணி முன்னதாகவே ஆபிசுக்குள் நுழைந்தாள், ராதிகா. கண்களில் முதலில் பட்டது, அரசாங்க முத்திரையுடன் இருந்த கவர். அது, ஒரு கோர்ட் சம்மன்.

'எல்லாம் முடிந்து விட்டதே...' என்ற யோசனையுடன் பிரித்து பார்த்தாள். அன்றைய தினம் காலை, 10:00 மணிக்கு அவள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று இருந்தது, அந்த நோட்டீஸில்.

தன் விவாகரத்துக்காக அவள் சென்றது, அதே கோர்ட்டுக்கு தான். ஆட்டோவில் ஏறி அமர்ந்தவள், தன் முதலாளிக்கு போன் பண்ணி, தகவல் தெரிவித்தாள்.

அவசரமாக ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்துவிட்டு, அவள் கோர்ட்டுக்குள் நுழைந்த போது, 'ராதிகா, ராதிகா... யாரம்மா ராதிகா. வந்திருக்காங்களா?' என்ற குரல் கேட்டது.

''ஐயா நான் தான் ராதிகா,'' என்று கூறியபடியே உள்ளே நுழைந்தாள்.

''உன் வக்கீல் யாரம்மா,'' என்றார், ஜட்ஜ் சிவராமன்.

''ஐயா, இந்த நோட்டீஸ் எனக்கு இப்பதான் கிடைச்சது. எதுக்கு இங்க வர சொல்லி இருக்காங்கன்னு கூட தெரியாது,'' என்றபடி எதிர்புறம் பார்த்தபோது, அவளது முன்னாள் கணவன், அவரது வக்கீல், மாமியார் மற்றும் அவர்களுக்கு பின்புறம், சோகமும், தயக்கமுமாக அவளது, 13 வயது மகன், அர்ஜுன்.

''ஸ்கூலுக்கு போகாம இங்கே என்னப்பா செய்யற,'' என்றாள், தான் இருக்கும் இடம் மறந்து.

தொண்டையை கனைத்த, ஜட்ஜ், ''அவனுக்காக தான் இந்த வழக்கே,'' என்றார்.

''அவன் நல்ல பையன், சார். அனாவசியமா எதுவும் பேச மாட்டான்; செய்ய மாட்டான். ஏதோ தப்பா புரிஞ்சுட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். யார் சார் அவன் மேல கேஸ் போட்டது,'' என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

மேலும் ஆச்சரியமாகிப் போனது, ஜட்ஜ் சிவராமனுக்கு. இதுவரை பார்க்காத புது கேஸ் என்று நினைத்தவர், நிதானமாக அவளைப் பார்த்து, ''ராதிகா, நீங்களும், வாதி, சசிதரனும் சட்டப்படி பிரிஞ்சுட்டீங்க இல்லையா?'' என்றார், ஜட்ஜ்.

''ஆமாம், 'யுவர் ஆ னர்!' மூணு மாசம் ஆச்சு,'' என்றாள், குழப்பத்துடன்.

''பையன் ஒரு மைனர். யார் கூட இருக்கணும்ன்னு தீர்மானிக்கதான்மா இந்த வழக்கு,'' என்றார், ஜட்ஜ்.

திகைத்து, பேச்சே வராமல் நின்று விட்டாள், ராதிகா.

''அர்ஜுனாப்பா உன்னோட பேரு. இங்க வாங்க,'' என்று, ஜட்ஜ் கூப்பிட, குழப்பமும், மிரட்சியுமாக வந்து நின்றான், மகன் அர்ஜுன்.

''நீங்க என்னப்பா சொல்றீங்க. அப்பாவோட இருக்கீங்களா, இல்ல அம்மாவோட போறீங்களா? எதுவா இருந்தாலும் பயப்படாம சொல்லுங்க,'' என்று மென்மையாகவே கேட்டார், ஜட்ஜ்.

''அது நான், நான்...'' என்று தடுமாறி அம்மாவையும், அப்பாவையும் பார்த்தான், அர்ஜுன்.

அவசரமாக இடையில் புகுந்தாள், ராதிகா.

''குறுக்கே பேசறேன்னு தப்பா நினைக்காதீங்க, ஐயா. ஒரு அம்மாவா எனக்கு, 10 நிமிஷம் பேச அனுமதி கொடுங்க, சார்,'' என்றாள், பணிவாக.

அவள் முகத்தில் இருந்த எதுவோ, ஜட்ஜ் சிவராமனை பாதித்தது. ''வாதாட வக்கீல் எதுவும் ஏற்பாடு செய்யணுமா,'' என்றார்.

''பையனை, வெளியில் கார்ல உட்கார சொன்னீங்கன்னா, நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன். அப்புறமா, ஐயா சொல்ற தீர்ப்புக்கு நான் கட்டுப்படுகிறேன்,'' என்றாள்.

சற்று யோசித்து, ''சரி, மிஸ்டர் சசிதரன், மாஸ்டர் அர்ஜுனை பாதுகாப்பா அனுப்புங்க,'' என்றார்.

காரோட்டி, ராமு தாத்தாவுடன் அர்ஜுனை அனுப்பினான், சசிதரன். தன் தாயை திரும்பி, திரும்பி பார்த்தபடி சென்றான், அர்ஜுன்.

''ஐயா, இந்த நிலைமை எந்த குழந்தைக்கும் வரக்கூடாது. இன்னைக்கு ஒருத்தரை தேர்ந்து எடுத்துட்டு, அந்த நிமிஷத்திலிருந்து குற்ற உணர்ச்சியோட அந்த குழந்தை வளரும். அம்மாவுக்கோ இல்ல அப்பாவுக்கோ துரோகம் செஞ்சிட்டோம்ன்னு உள்ளே நொறுங்கி போய்டுவாங்க. அது, எங்க, அர்ஜுனனுக்கு வரவே கூடாதுங்க, ஐயா.''

சசிதரனின் வக்கீல் சட்டென்று, ''ஓ, அந்த நிலைமை, அர்ஜுனுக்கு வரக்கூடாது என்று தான் நீங்க வந்து, 'டைவர்ஸ் அப்ளை' பண்ணி, வாங்கிட்டீங்களா. சாத்தான் வேதம் ஓதுங்கறது இதுதாங்க,'' என்று கூறி, நக்கலாக, ராதிகாவை கை காண்பித்தார்.

ஜட்ஜின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, ''ஐயா, நான் ரொம்ப விரும்பி தான் இவரை கல்யாணம் செய்தேன். வேலை பார்க்குற தொழிலாளர்கள் மேல் இவர் காட்டுற அன்பு, யார் என்ன உதவி கேட்டாலும் செய்ற குணம், அதோட பொய்யே சொல்ல மாட்டார். தாய் மேல ரொம்ப பாசம் அவருக்கு.

''ஏழு வயசுல அப்பாவை இழந்தவள் நான். தாய் பாசம் மட்டும் தான் எனக்கு தெரியும். அப்பாவின் பாசத்துக்காக நான் ரொம்ப ஏங்கி இருக்கேன். நமக்கு அப்பா இல்லையேன்னு நெனைச்சி இருக்கேன். அந்த நிலைமை என் பையன், அர்ஜுனுக்கும் வந்திடக் கூடாது.

''தகப்பன் இல்லாம வளர்ந்தவ அப்படிங்கறதனால, நான் ஒரு கோழையா இருப்பேன். யார் எது சொன்னாலும் அதை கேட்டுகிட்டு, ஒரு மூலைல இருப்பேன்னு நினைச்சாங்க, என் மாமியார். ஆனா, நான் அப்படி இல்ல. எங்க அம்மா என்னை தைரியமான பொண்ணா வளர்த்தாங்க. உண்மைக்கு தல வணங்கணும். பொய்யா இருந்ததுன்னா, அது எதுவா இருந்தாலும், ஏன் இப்படி நடக்கிறது என்பதை தெரிஞ்சிக்கணும்ன்னு எங்க அம்மா சொல்லிய படிதான் நானும் வளர்ந்தேன்.

''நல்லா படிச்சு, ஒரு கவுரவமான வேலையில இருக்கேன். என் வேலையில எனக்கு கிடைக்கிற மரியாதை, அவங்க அம்மா மனசை உறுத்திடுச்சு. வேலைக்குப் போக கூடாதுங்கறதுக்காக பல காரணங்களை உருவாக்கினார். அதையும் இவர் மூலமா சொல்ல வச்சாங்க. கணவர் சொல்றாருன்னு வேலையை விட்டுட்டேன். வீட்டுலயே தான் இருந்தேன்.

''வீட்டு வேலைகளோடு, தோட்டத்தை பராமரிக்கிறதும், வீட்டு அலங்காரத்தை மாற்றி அமைக்கறதும்ன்னு பார்த்து, பார்த்து செய்தேன். என் வேலைகளை யாராவது பாராட்டினா கூட, மாமியாருக்கு ரொம்ப கோபம் வந்துரும். இதுக்கு நான் என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல. 'ஆன்லைன்'ல டியூஷன் கிளாஸ் எடுக்க ஆரம்பித்தேன்.

''என்கிட்ட படிச்ச ஸ்டூடண்ட்ஸும் சரி, அவங்களோட பெற்றோரும் சரி, ரொம்ப பாராட்டி, குழந்தைகளை ரொம்ப, 'என்கரேஜ்' பண்றீங்கன்னு சொல்லி, பாராட்டினாங்க. அதுவும் இவர்களுக்கு கோவத்தை உண்டாக்கிருச்சு. கடைசியா பெண்களுக்கே ஒரு சாபம் இருக்கு இல்லையா, அவங்களோட கேரக்டர் பத்தி தப்பா பேசறதுன்னு. அதை ஆரம்பிச்சிட்டாங்க.

''அதுக்கு மேல என்னால பொறுக்க முடியல. இது என்னோட மரியாதை சம்பந்தப்பட்ட விஷயம். அதனால, நான் அவங்ககிட்ட கோவமா, 'இன்னொரு முறை என்னைப் பற்றி அசிங்கமா பேசினா, அவ்வளவு தான் மரியாதை...' என்று சொல்லிட்டேன்.

''ஆனா, அதை என் கணவர்கிட்ட போய் கதைக்கட்டி மரியாதை குறைவா பேசினேன் அப்படி இப்படின்னு சொல்லிட்டார், என் மாமியார். அதை கேட்டுட்டு என்னை அடிச்சிட்டாரு, என் கணவர். இப்பவும் சொல்றேன், இவர் மனசுக்கு ஒரு பொய்யும் சொல்ல மாட்டார்,'' என்று திரும்பி, சசிதரனை பார்த்த போது, அவன் அவமானத்தில் தலை குனிந்தான்.

''பதினான்கு வருஷம் என் கூட வாழ்ந்துட்டு, ஒரு குழந்தை பிறந்து, அந்த குழந்தையை நான் எப்படி வளர்க்கிறேன் என்கிறதையும் பார்த்துட்டு, அவங்க அம்மாவ மரியாதை குறைவா நான் பேசியிருப்பேனா என்று கூட தோணாமல், என்கிட்ட எந்த விளக்கமும் கேட்காமல், என்னை அடிச்சதை எப்படி ஏத்துக்க முடியும்.

''இது, அதோடு நின்னுடாது. அந்த அம்மா ஏதாவது சொல்வாங்க, இவரும் யோசிக்காம, சரியா விசாரிக்காம என்னை அடிக்க போறாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு. இதுக்கு மேல, அங்க வாழ்ந்தேன்னா, என் மேல் இருக்கிற மரியாதையே குறைஞ்சு போயிரும்ன்னு நெனைச்சேன். அதனால, நண்பர்களா பிரியணும்ன்னு நினைச்சேன். இப்பவும் சொல்றேன். ஒரு கணவனும் - மனைவியும் பிரியலாம், ஒரு தாயும், தந்தையும் எப்பவுமே பிரிய முடியாது. பாலமா குழந்தைகளே எப்பவும் இருப்பாங்க.

''இதுல வருத்தத்துக்குரிய விஷயம் என்னன்னா, என் பையன் என் கூட தான் இருக்கணும்ன்னு, நான் இதுவரை சொல்லவேயில்லை. எல்லா மாமியார்களுக்கும் உள்ள பயம் என்னன்னா, தன் புள்ளைய, வந்த மருமகள் பிரித்து விடுவாளோ என்று நினைப்பதுண்டு. அதற்காக என் மகனை என்கிட்ட இருந்து பிரிக்கணும்ன்னு நினைக்கிறாங்க. அவன் சின்ன பையன். அவனுக்கு அப்பாவும் வேணும், அம்மாவும் வேணும்.

''நான், அவனை அங்கிருந்து கூட்டிட்டு வந்துட்டா, அப்பா இல்லாம போயிடுவாரு. ஆனா, அவன் எங்க இருந்தாலும், நான் அம்மாவா இருப்பேன். அதனால தான், நான் தைரியமா, அவங்க வீட்டு வாரிசான அந்த குழந்தைக்கு கெடுதல் ஏதும் செய்ய மாட்டாங்க என்ற நம்பிக்கையில் பிரிந்து வந்தேன்.

''ஆனா, இந்த மாதிரி, கோர்ட்டுல கொண்டு வந்து அந்த குழந்தையோட மனசு பாதிக்கிற மாதிரி நிறுத்தி வைத்து, 'உனக்கு அப்பா வேணுமா, அம்மா வேணும்மா'ன்னு கேக்குற ஒரு செயல அவங்க செய்வாங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல. அர்ஜுனுக்கு, 13 வயசு ஆகுது. இன்னும் அஞ்சு வருஷத்துல அவன் மேஜர். அவனோட முடிவுகளை அவனே எடுப்பான். அதே மாதிரி, அப்பாவோடையும் இருக்கலாம், அம்மாவுடனும் இருக்கலாங்கிற நம்பிக்கை அவனுக்கு வரும்.

''இத்தனை துாரம், 'டைவர்ஸ்' என்று கோர்ட்டுக்கு வந்தபோதும், ஒரு வார்த்தை கூட, இவங்க அப்பாவ பத்தியோ, இல்ல அவங்க பாட்டிய பத்தியோ தப்பா இந்த பையனுக்கு நான் சொன்னதே இல்ல. அவன் நல்லபடியா, 'ஹேப்பியா' இருக்கணும்ன்னு தான் நான் நினைச்சேன். தகப்பன் இல்லாமல் வளர்ந்த என் நிலைமை, அந்த குழந்தைக்கு இருக்கக் கூடாது.

''எனக்கு ஒரு நல்ல புருஷனா தான் இல்ல, 'அட்லீஸ்ட்' எங்க பையனுக்கு ஒரு நல்ல அப்பாவா இருப்பார், என்ற ஒரு நம்பிக்கை இருந்துச்சு. ஆனா, இப்ப எனக்கு யோசனையா இருக்கு. நீங்களே ஒரு நல்ல தீர்ப்பு சொல்லுங்க, ஐயா,'' என்று முடித்தாள், ராதிகா.

''ராதிகா, உங்களை மாதிரி ஒரு பெண்ணை சந்தித்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்மா. மாஸ்டர் அர்ஜுன் பண்பான ஒரு குழந்தையா, பெண்களை மதிக்கக்கூடிய ஒரு ஆண் மகனா வளரணும்னா, அவன் அம்மாவோட தான் வளரணும்.

''எப்ப வேணாலும், அவன் அப்பா வீட்டுக்கு போகலாம், பார்க்கலாம். அவன் அப்பாவும் எப்ப வேணாலும் போய் அந்த குழந்தையை பார்க்கலாம், பேசலாம். ஆனால், அந்த குழந்தையை வளர்ப்பதற்கான முழு உரிமையும், அம்மாவுக்கு தான் உள்ளது, என்று தீர்ப்பளித்து இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்,'' என்றார், ஜட்ஜ் சிவராமன்.

ஆனந்தி ராஜகோபால். வயது : 50. படிப்பு : எம்.காம்., இல்லத்தரசி. பல கதைகள் எழுதியிருந்தாலும், பத்திரிகைக்கு அனுப்பியது இதுவே முதன்முறை. இச்சிறுகதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிடுகிறார். கதைக்கரு பிறந்த விதம்: உறவினர் வீட்டில் நடந்த, விவாகரத்து வழக்கு ஒன்றை பார்த்ததிலிருந்து பிறந்த கதை இது. கையெழுத்து பத்திரிகை ஒன்று ஆரம்பித்து, நடத்துவது இவரது லட்சியம் என்கிறார்.






      Dinamalar
      Follow us