sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தீபாராதனா! (9)

/

தீபாராதனா! (9)

தீபாராதனா! (9)

தீபாராதனா! (9)


PUBLISHED ON : நவ 30, 2025

Google News

PUBLISHED ON : நவ 30, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: தீ பாவின் அப்பா இறந்த அன்று, அஞ்சலி செலுத்த வந்த, ஆராதனா மற்றும் அவள் தம்பி வருண் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருந்தாள், தீபா. அவர்களை பற்றி விசாரிக்கும்படி, தன் காதலன், திலகனிடம் சொல்லியிருந்தாள், தீபா. திலகனும், வருண் தங்கி படிக்கும் விடுதி பற்றி அறிந்து, தீபாவிடம் சொல்ல, இருவரும், வருணை சந்திக்க சென்றனர். வருணின் போனிலிருந்து அவன் அக்கா ஆராதனாவிடம் பேசி, அவளை சந்திக்க வேண்டும் என்று கூறினாள், தீபா. ஆராதனாவும் சம்மதித்து, தீபாவை, 'பீச்'சுக்கு வர சொன்னாள். அங்கு ஆராதனா குடும்பத்துக்கும், தன் அப்பா ஞானசேகரனுக்கும் என்ன சம்பந்தம் என்று தீபா கேட்க, தன் வீட்டுக்கு வர சொன்னாள், ஆராதனா. ஞா யிற்றுக்கிழமை!

அப்பாவின் இரண்டாவது குடும்பம் பற்றிய தன் கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக, ஆராதனா வரச்சொன்ன அதே ஞாயிற்றுக்கிழமை!

மூன்று நுாற்றாண்டுகள் காத்திருந்தது போல் சலிப்பு, தீபாவுக்கு.

காலையிலேயே சுறுசுறுப்புடன் தயாராகி விட்டாள்.

இப்போதெல்லாம், தீபாவின் அம்மா மஞ்சுளா படுக்கை அறையை விட்டு வெளியே வருவதே அபூர்வமாகி விட்டது. சாப்பாட்டு நேரத்தில் வற்புறுத்தி வெளியே இழுத்து வந்தால், சாப்பிட்டு விட்டு, நேரே பூஜை அறைக்குப் போய் சாமி படங்களுக்கு எதிரில் அமர்ந்து அழுவாள்.

'நான் உனக்கு என்ன தப்பு பண்ணேன்? ஒருநாள் விடாம பூஜை பண்ணதுக்கு இதுதான் நீ எனக்கு கொடுக்கற வரமா?' என்று கண்ணுக்குத் தெரியாத கடவுள்களுடன் சண்டையிடுவது அவளுக்கு வாடிக்கையாகி விட்டது.

சாப்பாடோ, அழுகையோ இல்லாத நேரம், மாத்திரைகளை போட்டுக்கொண்டு துாக்கம்.

தீபாவிற்கு பாவமாயிருந்தது. அம்மா இப்படி இருந்ததே இல்லை. வசதியானவர்களின் நட்பு வட்டத்தில், அவளுக்கு தோழிகள் அதிகம். 'லயன்ஸ் கிளப், லேடீஸ் கிளப்' என்று எப்போதுமே காரில் அலைந்து கொண்டிருந்தவள்!

எல்லாவற்றையும் இழந்த பின், தோழிகளுக்கெதிரில் முகம் காட்ட வெட்கம், அவமானம்!

தன் சமூக அந்தஸ்தையும், அமர்ந்திருக்கும் உயரத்தையும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் மற்றவர்களிடம் நிலைநிறுத்திய, திமிர் இப்போது செல்லுபடியாகாதே என்ற பயம். சிறகுகள் உடைக்கப்பட்ட, நொண்டிக் கிளி போல வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறாள்.

மஞ்சுளாவின் அறைக்குள் நுழைந்து, ''அம்மா, இன்னிக்கு அந்த ஆராதனா வீட்டுக்குப் போலாம்ன்னு சொன்னேனே?'' என்று நினைவூட்டினாள், தீபா.

''எந்த ஆராதனா வீட்டுக்கும் நான் வரல்ல. நீ போயிட்டு வா,'' என்று சாய்வு நாற்காலியில் முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டே சொன்னாள், மஞ்சுளா.

''அவங்கம்மாவைப் பார்க்கணும்ன்னு சொன்னியேம்மா?''

''யார் அம்மாவையும் பார்க்க எனக்கு இஷ்டமில்ல,''

அதற்கு மேல், மஞ்சுளாவை வற்புறுத்த மனமில்லாமல் புறப்பட்டாள், தீபா.

வே ளச்சேரி.

பூட்டியிருந்த ஒரு கடையின் வாசலில் காரை நிறுத்தினாள், தீபா. வாட்சில் நேரம் பார்த்தாள்.

சரியாக, 7:00 மணி. அந்தத் தெருவில் நடந்தாள். தெரு விளக்கின் கீழே நின்று முகவரியை சரிபார்த்தாள்.

இதோ, இந்த வீடு தான்.

அரை கிரவுண்டுக்கும் குறைவான இடத்தில், சிக்கனமாக கட்டப்பட்ட வீடாகத் தெரிந்தது. பழமையான சிறிய வீடு. மார்புயர இரும்பு கேட். தள்ளித் திறந்தாள். நிறைய சிராய்ப்புகளும், விரிசல்களுமாய், சிமென்ட் மெழுகிய ஒற்றையடிப் பாதை. இரு புறமும் தொட்டிச்செடிகளில் பூக்கள் காற்றாடும் சிக்கனமான தோட்டம்.

சிமென்ட் பாதையின் பிளவுகளில் புல் தலைகாட்டியிருந்தது. ஜன்னல் கதவுகள் சாயம் போயிருந்தன.

கதவில் பிள்ளையார் ஸ்டிக்கர். இரண்டு படிகள் ஏறி, காலிங் பெல்லை அழுத்தினாள்.

தாழ் நீக்கப்பட்டு, கதவு திறந்தது.

எதிரில் நின்றான், வருண்.

வாசலில் எரிந்து கொண்டிருந்த, 40 வாட்ஸ் பல்பின் போதாத வெளிச்சத்தில் அவள் முகத்தை முதலில் புரிந்துகொள்ள முடியாமல் கண்களைச் சுருக்கிப் பார்த்தான். அடையாளம் புரிந்ததும் அதே கண்கள், அகலமாக விரிந்தன.

''வாங்க... வாங்க...'' என்றான், பதற்றமாய். கதவை அகலமாகத் திறந்து, குழல் விளக்கைப் போட்டான்.

முகத்தில் புன்னகை இல்லாமல், ''உங்கக்கா வந்தாச்சா?'' என்றாள், தீபா.

''ப்ளைட் டிலேன்னு மெஸேஜ் அனுப்பியிருந்தா, வர்ற நேரம் தான். உள்ளே வந்து உட்காருங்க,'' என்றான், வருண்.

சிறிது தயங்கிய தீபா, செருப்புகளை வாசலில் விட்டுவிட்டு, உள் ஹாலில் காலெடுத்து வைத்தாள்.

பிளாஸ்டிக் நாற்காலிகளை தவிர்த்து, அங்கிருந்த இரண்டு மர நாற்காலிகளில் ஒன்றில் உட்கார்ந்தாள்.

எளிமையான அலங்காரங்களாக, ஜன்னல் திரைகள். உள்சுவர்களுக்கு பெயின்ட் அடித்து, இரண்டு ஆண்டுகளாவது ஆகியிருக்கும்.

''என்ன சாப்பிடறீங்க?'' என்றான், வருண்.

ஒரு நிலையில் நிற்க முடியாமல் கால்களை மாற்றி மாற்றி, 'பாலன்ஸ்' செய்து கொண்டு, அவன் பரிதவித்தான்.

''நத்திங், நான் சாப்பிட வரலை,'' என்று கடுமையாக கூறினாள், தீபா.

விழிகளை மேய விட்டாள். சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தைப் பார்த்தாள்.

சட்டமிட்ட சிறிய படத்தில், அவள் அப்பா, ஞானசேகரன். படத்தின் உச்சியில் ஒற்றை ரோஜா செருகப்பட்டிருந்தது.

இன்னொரு படத்தில், ஒரு பெண்மணி தோட்டத்து பெஞ்சில் அமர்ந்திருக்க, அவளுடைய வலதுபுறம் இள வயது, ஆராதனா. இடதுபுறம் பள்ளிச் சிறுவனாக, வருண்.

''எங்கம்மா,'' என்றான், வருண்.

அவளுடைய சருமம் வெளிறிய மஞ்சள் நிறம். மையிட்ட கண்கள் பெரியதாய் அற்புதமாய் இருந்தன. மூக்குத்தி மங்களகரமாக இருந்தது. உதடுகளில் பெருமை நிறைந்த ஒரு புன்னகை. நெற்றியில் அகலமான குங்குமப் பொட்டு. கழுத்தில் கனமான மஞ்சள் கயிறு.

'என் அம்மாவிடம் இல்லாத ஓர் எளிமையான அழகு இந்தப் பெண்ணிடம் இருக்கக்கண்டு தான் அப்பா இவள் பக்கம் சாய்ந்தாரோ!'

''அப்பாவோட எடுத்துக்கிட்ட பேமிலி போட்டோ மாட்டல?'' என்ற, தீபாவின் குரலில் கேலி இருந்தது.

வருண் முகம் இறுகிற்று. பதில் சொல்லாமல், தன் போன் எடுத்து, ஆராதனாவுக்கு, 'அவள் வந்தாயிற்று,' என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.

''உங்கக்கா வர, 'லேட்' ஆகும்னா, உங்கம்மாவோட பேசிட்டிருக்கேனே. அவங்கள வரச் சொல்லு,'' என்றாள்.

வருண் முகம் மீண்டும் இறுகிற்று.

''காத்திருக்கக் கஷ்டமா இருந்தா, வாங்க, வீட்டை சுத்திக் காட்டறேன்,'' என, படபடப்புடன் பேசினான், வருண்.

''சரி வா, வீட்டைப் பார்க்கலாம்,'' என்று எழுந்தாள், தீபா.

தன்னுடைய வீடு போன்ற பெரிய மாளிகை இல்லை இது. இருந்தாலும், 'அவள் அப்பா இந்தச் சின்னக் குடும்பத்துக்கும் எவ்வளவு துாரம் வசதி செய்து தந்திருக்கிறார் என்று தெரிந்து கொள்வதில் தவறு இல்லை!' என்று தோன்றியது.

வருண் பரபரப்புடன் வீட்டைக் காட்டலானான்.

''இது ஹால், இது டைனிங் ஹால்.''

டைனிங் ஹால் என்று சொல்லப்பட்ட சிறு அறையில், ஓரமாகப் படுத்திருந்த பூனை, ஒற்றை கண்ணைத் திறந்து பார்த்து மூடிக்கொண்டது.

''இது கிச்சன்.''

சின்ன சதுரம். ஆனால், சுத்தமான பராமரிப்பு.

தன் வீட்டில் இருப்பதுபோல் இங்கே பூஜை அறை இல்லை. கிச்சனில் ஒரு அலமாரித் தட்டில் சாமி படங்கள் அணிவகுத்து நின்றதை கவனித்தாள், தீபா.

கும்மென்று ஊதுபத்திப் புகை நாசியை வருடி, நெஞ்சை நிறைத்தது. சாமி படங்களுக்கு சூட்டப்பட்ட மல்லிகைச் சரங்களின் மயக்கும் வாசமும் கலந்து வந்தது.

கொல்லைக் கதவு திறந்து, பின்னால் வளர்ந்திருந்த மாமரத்தைக் காட்டினான், வருண்.

''சீஸன்ல சூப்பரா காய்க்கும்,'' என்றான். மூடியிருந்த ஓர் அறையைத் தவிர்த்து மறுபடி ஹாலுக்குக் கூட்டிவர முனைந்தான்.

'அந்த அறையில் தான் அவனுடைய அம்மா ஒளிந்து கொண்டிருக்க வேண்டும்...' என்று நினைத்த தீபா, ''பெட்ரூம்?'' என்றாள்.

''அம்மா ரெஸ்ட் எடுக்கறாங்க,'' என்றான், வருண்.

''வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்க, எழுந்து வெளிய வாம்மான்னு கையைப் பிடிச்சு இழுத்துக்கிட்டு வா'' என்றாள், தீபா.

வருணின் கண்களில் கனல் மின்னியது.

''விருந்தாளியா வந்திருக்கீங்க; விருந்தாளியா நடந்துக்குங்க. உங்களைப் பாக்கணுமா, வேண்டாமான்னு அம்மா முடிவெடுப்பாங்க.''

தீபாவின் முகத்தில் புன்னகை நழுவியது.

''ஈஸ் இட்?'' என்றாள், கோபமாக.

மேற்கொண்டு இருவர் பேச்சிலும், அனல் வீசும் முன், அழைப்பு மணி ஒலித்தது.

''அக்கா வந்துட்டாங்க போலிருக்கு!''

வாசலை நோக்கி ஓடினான், வருண். எரிச்சலுடன், ஹாலுக்குத் திரும்பினாள், தீபா.

வாசலில் செருப்புகளை கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தாள், ஆராதனா. சுடிதார் அணிந்திருந்தாள்.

''ஸாரி, ரியலி ஸாரி. ப்ளைட் டிலே.''

''ஆபீஸ்ல வேலை அதிகம், விமானம் லேட்டா வந்துச்சு, டாக்ஸி பஞ்சர் ஆச்சுன்னு ஏதாவது காரணம் சொல்லி, என்னைக் காக்க வைக்கணும், உனக்கு,'' என்ற தீபாவிடம், ''ரொம்ப நேரமா, 'வெயிட்' பண்றீங்களா?'' என்றாள், ஆராதனா மன்னிப்புக் கோரும் குரலில்.

''இல்லக்கா... பத்து நிமிஷம் தான் ஆச்சு,'' என்றான், வருண், அவளிடமிருந்து பயணப்பெட்டியை வாங்கிக்கொண்டே.

''சாப்பிட எதாச்சும் கொடுத்தியா, வருண்?''

''உன் தம்பிகிட்ட சொன்னதையே உங்கிட்டயும் சொல்றேன். நான் சாப்பிட வரலை,'' என்றாள், தீபா.

''பின்னே, சண்டை போட வந்திருக்கீங்களா?'' என்று சிரித்துக்கொண்டே கேட்டாள், ஆராதனா.

கைப்பையையும், ஆங்கிலத்தில் வெளிவரும் பெண்கள் பத்திரிகையையும் மேஜை மீது வைத்துவிட்டு, ''அஞ்சு நிமிஷம் கொடுப்பீங்களா? முகம் கழுவிட்டு வந்துடறேன்...'' என்றாள்.

''வரும்போது, உங்கம்மாவையும் கூட்டிட்டு வா.''

ஐந்து நிமிடங்களில், ஆராதனா மீண்டும் ஹாலுக்குள் நுழைந்தபோதும், தனியாகத்தான் வந்தாள். புடவைக்கு மாறியிருந்தாள். எளிமையான நுால் புடவை. இவளுக்குப் புடவைகள் ஏன் இவ்வளவு அழகாகப் பொருந்துகின்றன?

பவுடர் கூட போடாத முகம் எப்படி இவ்வளவு பளிச்சென்று இருக்கிறது? அவள் அம்மாவைப் போல எவ்வளவு சக்தி வாய்ந்த கண்கள்!

''அம்மா எப்படியிருக்காங்க, தீபா?''

''உங்கக் குடும்பத்து புண்ணியத்துல நல்லா இருக்காங்க, இன்னும் உசுரு ஒண்ணு தான் போகலை.''

''வருண், நீயும் உக்காரு. அன்னிக்கு, 'டெத்' வீட்டுல கூட நீங்க வெளிய துரத்தினப்போ, மனசைக் கல்லாக்கிக்கிட்டு நாங்க உடனே இடத்தை காலி பண்ணினோமா இல்லையா? அப்புறமும் ஏன் எங்களை விரோதி மாதிரியே பார்க்கறீங்கன்னு, புரியலை, தீபா.''

''அன்பாப் பாசமாப் பார்க்கற மாதிரியா காரியம் பண்ணியிருக்கீங்க, நீங்கள்லாம்?'' வெடித்தாள், தீபா.

''இருங்க, நிதானமா சொல்லுங்க. நாங்க உங்களுக்கு என்ன கெடுதல் பண்ணிட்டோம்?'' என்ற, ஆராதனாவிடம்...

''எங்கப்பாவை ஏமாத்தி கைக்குள்ள போட்டுக்கிட்டாங்களே, உங்கம்மா. அவங்களைக் கூப்புடு. அவங்க சொல்வாங்க உன் கேள்விக்கு பதில்,'' என்ற தீபாவை தாக்குவதுபோல் ஆத்திரத்துடன் எழுந்த வருணை, பார்வையாலேயே அடக்கினாள், ஆராதனா.

''ஆத்திரம் வந்தா, அறிவு வேலை செய்யாது, தீபா. உங்களுக்கு எங்கம்மாவை பார்க்கணும், அவ்வளவு தானே? ஆனா, இப்பவும் சொல்றேன், எங்கம்மாவைப் பார்க்கணும்ன்னா, நெஞ்சில உறுதி வேணும். தயாரா?''

''பூச்சி காட்டாம, கூப்புடு உங்கம்மாவை.''

''வாங்க, போய் பார்ப்போம்,'' என்றாள், ஆராதனா.

தன் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒரு தருணத்தைச் சந்திக்கும் வேளை வந்ததை அறியாமல், திமிராகவே அவளைத் தொடர்ந்தாள், தீபா.



- தொடரும்.சுபா






      Dinamalar
      Follow us