sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தீபாராதனா! (10)

/

தீபாராதனா! (10)

தீபாராதனா! (10)

தீபாராதனா! (10)


PUBLISHED ON : டிச 07, 2025

Google News

PUBLISHED ON : டிச 07, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: ஆ ராதனா குடும்பத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று, தீபா வற்புறுத்த, தன் வீட்டு விலாசத்தை கொடுத்து, வர சொன்னாள், ஆராதனா. அதன்படி, அவள் வீட்டுக்கு சென்றாள், தீபா. அப்போது, வீட்டில் ஆராதனா இல்லை; அவள் தம்பி வருண் மட்டும் இருந்தான். அவர்கள் மீது இருந்த ஆத்திரத்தில், வருணிடம், எடக்கு மடக்காக, தீபா கேள்விகள் கேட்க, கோபமடைந்தான், வருண். அச்சமயம், ஆராதனா வர, அவள் அம்மாவை எகத்தாளமாக பேசினாள், தீபா. இருப்பினும், பொறுமையாக, தன் அம்மா இருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள், ஆராதனா. அங்கு... ப டுக்கையறை கதவைத் தட்டிவிட்டு, மெல்லத் திறந்தாள், ஆராதனா. உள்ளே இருட்டாய் இருந்தது.



''அம்மா, தீபா உன்னைப் பாக்கணுங்கறாங்க. லைட்டு போடலாமா?''

''ம்ம்,'' என்று முனகலாய் ஒரு குரல் வந்தது.

ஆராதனா சுவரில், இருந்த ஒரு சுவிட்சைத் தட்ட, அந்த அறையில் ஒருவித மஞ்சள் வெளிச்சம் பரவிற்று. சுவர் ஓரத்தில் கட்டில். அதன் அருகே குஷன் நாற்காலி. நாற்காலியில் அமர்ந்திருந்த பெண்மணியின் மீது வெளிச்சம் குறைவாகவே விழுந்தது. தீபா ஒழுங்காக பார்க்க முடியாதபடி, வேறு கோணத்தில் திரும்பி அமர்ந்திருந்தாள். புடவை தலைப்பால், தலையையும், முகத்தையும் மூடியிருந்தாள்.

''எல்லாம் சேர்ந்துகிட்டு, என்னவோ சினிமா காட்டறீங்க?'' என்று எள்ளலான குரலில் கேட்டாள், தீபா.

அங்கிருந்த ஸ்டூலை குஷன் நாற்காலியின் அருகில் போட்டாள், ஆராதனா.

''இங்க வாங்க, தீபா. என்ன கேக்கணுமோ எங்கம்மாவைக் கேளுங்க,'' என்றாள், ஆராதனா.

சற்றே தயக்கத்துடன் அந்த முக்காலியில் அமர்ந்தாள், தீபா.

அம்மாவை நெருங்கி, முகத்தை மூடியிருந்த புடைவையை விலக்கினாள், ஆராதனா.

அந்த முகத்தை, தீபா இன்னும் தெளிவாகப் பார்க்க வசதி செய்வதுபோல், இன்னொரு மின்விளக்கும் போடப்பட்டது.

தீபாவின் மூச்சு ஒரு கணம் நின்று போனது.

அந்தப் பெண்மணியின் முகம் இடதுபுறம் பொசுங்கியிருந்தது. கன்னத்துத் தசை கழுத்தை நோக்கி இழுபட்டிருந்தது. பற்களை மூட முடியாமல் உதடு கோணியிருந்தது. நாசி துவாரம் பயமுறுத்தலாய் பெரிதாகியிருந்தது. இடது விழி பிதுங்கி வெளிப்பட்டிருந்தது.

''அம்மா, இது, தீபா. உங்கிட்ட ஏதோ கேக்கணுமாம்.''

'ம்ம்,' என்று உறுமலாகக் குரல் வந்தது. அடுத்து, ஆராதனாவின் அம்மா சொன்னது எதுவுமே, தீபாவுக்கு விளங்கவில்லை. ஒலியை அழுத்திக்கொண்டு காற்று கலந்து வந்ததால், குழறலாக இருந்தது.

''எங்க வாழ்க்கைல ஒளியேத்தி வெச்சவரு உங்கப்பான்னு அனுதாபம் தெரிவிக்கறாங்க. உங்கம்மா பத்தி விசாரிக்கறாங்க,'' என்று விளக்கம் சொன்னாள், ஆராதனா.

'ஆம்' என்று தலையசைத்து ஆமோதித்து, அந்தப் பெண்மணி, தீபாவின் கைகளைப் பற்றிக்கொள்ள முனைந்தபோது, தீபா எழுந்து விட்டாள்.

''எ... என்னாச்சு உங்கம்மாவுக்கு?''

''இங்கயே பேசணுமா, தீபா வெளிய போய் பேசுவோமா?''

''ஹாலுக்கே போயிடலாம்,'' என்றாள், தீபா அவசரமாக.

அப்போதுதான், அந்த அறை மூலையில் இருந்த கண்ணாடித் தொட்டியை கவனித்தாள். அதில், சில மஞ்சள் மீன்களும், கருநீல மீன்களும், தங்கநிற மீன்களும் ஒன்றையொன்று துரத்தி, நீச்சல் வித்தைகளைக் காட்டிக் கொண்டிருந்தன.

''அம்மாவுக்குக் கம்பெனி இந்த மீனுங்கதான்,'' என்றாள், ஆராதனா, ஒவ்வொரு விளக்காக அணைத்துக் கொண்டே ஹாலில் வந்து அமர்ந்தனர்.

வருண், இரண்டு கண்ணாடி டம்ளர்களில் பழரசம் கொண்டு வந்து வைத்தான்.

அவனைப் பின்தொடர்ந்த, பூனை, மியாவ், மியாவ் என்று குரல் கொடுத்தபடி, ஆராதனாவின் காலுக்கடியில் வந்து உட்கார்ந்து கொண்டது.

''ஜூஸ் சாப்பிடுங்க, தீபா.''

அதிர்ச்சியிலிருந்து மீளாதவளாக, ''என்னாச்சு உங்கம்மாவுக்கு?'' என்று மீண்டும் கேட்டாள், தீபா.

''ஆறு வருஷத்துக்கு முன்னால, பேப்பர்ல 'பெண் முகத்தில் அமில வீச்சு'னு நியூஸ் பார்த்து, கடந்து போயிருப்பீங்களே... அது, எங்களைப் பத்தி வந்த செய்திதான்,'' என்றாள், ஆராதனா.

தீபாவின் பார்வை தன்னிச்சையாக அங்கிருந்த புகைப்படத்தின் மீது படிந்து திரும்பியது. மகளும், மகனும் இருபுறமும் அமர்ந்திருக்க எப்பேர்ப்பட்ட பெருமிதமான அழகான முகம் இது! இப்போது எப்படி சிதைக்கப்பட்டு விட்டது!

''அந்த ஆஸிட் எனக்கு குறி வெச்சது,'' என்ற, ஆராதனாவிடம், ''யாரு, யாரு இப்படி பண்ணது?'' என்று கேட்டாள், தீபா.

''காலேஜ்ல கடைசி வருஷத்துல இருந்தேன். என் மேல லவ்வா இருக்குன்னு ஒருத்தன் லெட்டர் மேல லெட்டராப் போட்டான். ரோஜாப் பூவா அனுப்பினான். 'என் குடும்பத்தை மேல கொண்டுவரது தான் எனக்கு முக்கியம், லவ்வுக்கு இடமில்ல'ன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கேக்கல. அழகா இருக்கறதால நான் அவனை அலட்சியம் பண்றேன்னு நெனைச்சுட்டான்.

''தீபாவளிக்கு டிரெஸ் வாங்க அம்மாவோட கடைக்கு போயிருந்தேன். குறுக்க வந்து மறிச்சான். 'கடைசி தடவையாக் கேக்கறேன்'னு மிரட்டினான். நான் சம்மதிக்கலை. சட்டுன்னு பாக்கெட்லேர்ந்து பாட்டிலை எடுத்து அடிச்சான். அம்மா என்னை தள்ளிட்டு, குறுக்க வந்து வாங்கிக்கிட்டாங்க,'' என்றபோது, விழியோரங்களில் துளிர்த்த கண்ணீரை புறங்கையால் துடைத்து கொண்டாள், ஆராதனா.

''நானும் முழுசா தப்பிக்கல,'' என, தன் கழுத்தை மூடியிருந்த ரவிக்கையை சற்றுத் தழைத்துக் காட்டினாள், ஆராதனா. அவள் கழுத்தும், இடது தோளும் தீய்ந்து போயிருந்தன.

''அவனுக்கு லாடம் கட்டாமலா விட்டே... அப்பாகிட்ட சொன்னியா?'' என்ற, தீபாவிடம் ''எங்கப்பாகிட்டயா, உங்கப்பாகிட்டயா?'' என்றாள், ஆராதனா.

அந்தக் கேள்வி, தீபாவை அதிரடித்தது.

''என்ன சொல்றே, ரெண்டு பேருக்கும் ஒரே அப்பாதான!''

''அது நீங்களா நெனச்சுக்கிட்டது, தீபா. எங்கம்மாவுக்குத் தாலி கட்டுன ஆளு, வருண் தொட்டில்ல இருக்கும்போதே சூதாட்டக் கடனுக்கு பயந்து ஊரைவிட்டு ஓடிப் போயிட்டாரு.''

''அப்ப, எங்கப்பா?''

''ஆஸிட் அடிச்சானே, அவன், 'தீபா ஷிப்பிங்' கம்பெனில வேலை செஞ்சிட்டிருந்தான். போலீஸ்ல அவன் பேரு அடிபட்டா, கம்பெனிக்கு அசிங்கம்ன்னு நெனச்சு, உங்க அப்பா வந்து எங்கம்மாகிட்ட கெஞ்சுனாரு. அம்மா என்னைக் கைகாட்டுனாங்க. 'அவன் பண்ணின தப்புக்கு நான் மன்னிப்பு கேக்கறேன், உங்கப்பாவா என்னை நெனச்சுக்கம்மா'ன்னு மன்னிப்பு கேட்டாரு. அதோடு நிக்கல.

''அம்மாவுக்கு ஒரு வருஷம் சிகிச்சை நடந்துச்சு. ஆஸ்பத்திரி செலவு பூராவும் அவர் பார்த்துக்கிட்டாரு. அதனாலதான் அம்மா இந்த அளவுக்கு குணமாகியிருக்காங்க. நான் மேல்படிப்பு முடிச்சு, வேலைக்குப் போற வரைக்கும், எங்க குடும்பத்துக்கு ஆதரவா இருந்தாரு,'' என்றாள், ஆராதனா.

''அப்புறமும் பணம் கொடுக்க அவர் ரெடியா இருந்தாரு. அக்கா தான் மறுத்துட்டாங்க. என் படிப்புச் செலவையாவது முழுசா ஏத்துக்க விடணும், மறுக்க கூடாதுன்னு ரொம்பக் கேட்டுக்கிட்டாரு. பெத்த பசங்களுக்குப் பண்ற மாதிரி தான் ஒவ்வொண்ணும் பார்த்துப் பார்த்து பண்ணினாரு. அவரை எங்கப்பாவா தான் நாங்களும் பார்த்தோம்,'' என்றான், வருண்.

இவர்கள் சொல்வது முழுமையான உண்மையா அல்லது பரிதாபம் தேட கதை கட்டுகின்றனரா என்று குழம்பினாள், தீபா.

''எனக்கு சில விபரங்கள் தெரியணும். எங்கப்பா பரிதாபப்பட்டாருன்னு நீங்க...'' என்று இழுத்தாள், தீபா.

''கெடைச்ச வரைக்கும் ஆதாயம்னு மேல மேல கறந்தோமான்னு கேக்கறீங்களா, தீபா?''

பதில் சொல்லாமல் பார்த்தாள், தீபா.

''யோசியுங்க, தீபா. அப்பா காசுல நாங்க கார் வாங்கினோமா, பெரிய பங்களா கட்டிக்கிட்டோமா, ஊரு பூரா சொத்து வாங்கி சேர்த்திருக்கோமா? அவரை ரத்த சம்பந்தம் இல்லாத ஒரு உறவாத்தான் பார்த்தோம். அவரோட கடைசி காரியத்துல கலந்துகொள்ள முடியலையேன்னு வருத்தத்தோட தான் ஒதுங்கி போனோம்,'' என்றாள், ஆராதனா, குரலை உயர்த்தாமல்.

அவளை ஏறிட்டாள், தீபா.

''இந்த வீடு?''

''சரியான சந்தேகப்பிராணி நீங்க. இது, வாடகை வீடு. நான் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணேன். 'இன்டர்வியூ'வுல, 'செலக்ட்' ஆனேன். பெரிய கம்பெனில எந்த சிபாரிசும் இல்லாம, சொந்த முயற்சியில வேலை கெடைச்சது. அம்மா இந்த தனி வீட்டுல கெடைக்கற, 'ப்ரைவசி' கம்பெனி, 'க்வார்ட்டர்ஸ்'ல கிடைக்காதுன்னு சொல்லிட்டதால, இங்கேயே இருக்கோம்.

''வருண் இந்த ஆண்டு காலேஜ் முடிப்பான். மேல்படிப்புக்கு போவானா, வேலைக்குப் போவானாங்கறது அவன் இஷ்டம். ஆனா, நீங்க செஞ்ச வரைக்கும் போதும், எங்களுக்காக, உயில்ல ஒரு பைசா எழுதி வைக்கக்கூடாதுன்னு அப்பாகிட்ட சத்தியமே வாங்கிக்கிட்டாங்க எங்கம்மா.''

''இத்தனை வருஷமா, ஒரு தடவை கூட இதைப் பத்தி எல்லாம் அப்பா ஏன் எங்ககிட்ட சொல்லல?'' என்ற, தீபாவிடம், ''அவருக்கு நெருக்கமா இருந்த யாருக்குமே அவர் சொ ல்லி பெருமை தேடிக்கல. அது அவரோட பெருந்தன்மை. அதை நாங்க எப்படி கேள்வி கேட்க முடியும்?'' என்றாள், ஆராதனா.

''ரகசியமாக கழுத்தறுக்கறது தான் பெருந்தன்மையா?''

''அப்பாவை அப்படி மட்டமாப் பேசாதீங்க, தீபாக்கா'' என்றான், வருண்.

''இதப்பாரு, அக்கா, சொக்கான்னு உறவு கொண்டாடாதே. எனக்குப் பத்திக்கிட்டு வருது.''

''தீபா, உங்க கவலை எனக்குப் புரியுது. உறவு கொண்டாடிக்கிட்டு, உங்க சொத்துல பங்கு போட்டுக்க ஒரு நாளும் வர மாட்டோம்,'' என்று கூறிய ஆராதனாவின் முகம் சிவந்து போனது.

''சொத்து!'' -விரக்தியாக சிரித்தாள், தீபா. ''அப்பா வெச்சிட்டுப் போயிருக்கறதெல்லாம் கடன்தான்னு தெரிஞ்சதும், உறவில்ல, அது இதுன்னு ஒதுங்கறே, நீ.''

ஆராதனாவின் புருவங்கள் சுருங்கின.

''என்ன சொல்றீங்க, தீபா? எங்களுக்குப் படிப்பு கொடுத்தாரு. நான் சம்பாதிக்க ஆரம்பிக்கற வரைக்கும் மாத செலவுக்குன்னு சில ஆயிரம் கொடுத்தாரு. மத்தபடி, கப்பல் கம்பெனியும், மத்த அத்தனை சொத்தும் உங்களுக்குத்தானே சேர்ந்திருக்கும்?''

''கப்பலும் இல்ல, கம்பெனியும் இல்ல. எல்லாத்தையும் தலைமுழுகிட்டு, எங்களை நிராதரவா விட்டுட்டுத்தான் போயிருக்காரு, எங்கப்பா,'' என்றாள், தீபா.

''புரியல.'' என்ற ஆராதானாவிடம்...

''இன்னும் உடைச்சு சொல்லணுமா? பிஸினஸ்ல எக்கச்சக்க நஷ்டம். பாங்க் கடன்ல எல்லாம் மூழ்கிடுச்சாம். கம்பெனியையே வேற ஒருத்தர் பேருக்கு வித்துட்டாரு, அப்பா. வெறும் வீடும், காரும் மட்டும் தான் எங்களுக்கு மிச்சம் வச்சிருக்காரு.''

''மை காட்! நிஜமாவா?''

''ஏன் ஆராதனா, ஒண்ணும் தெரியாதவ மாதிரி நடிக்கிறே. அப்பா உன்கிட்ட சொல்லாமலா இருந்திருப்பாரு?''

''சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது, தீபா.''

''ஆரம்பத்துலேர்ந்தே குடிசை வீட்டுல வாழ்ந்திருந்தா பரவாயில்லை. இத்தனை நாள் வசதியோட வச்சிருந்துட்டு, இப்ப அம்போன்னு நடுத்தெருவுல நிக்க வச்சிட்டுப் போயிட்டாரு. உங்களை மாதிரி புதுசா இன்னொரு பணக்கார அப்பா தேடிக்க எனக்கு சாமர்த்தியம் பத்தாது.''

''தீபா, 'திஸ் இஸ் தி லிமிட்.' நீங்க அநாவசியமா சண்டை பிடிக்கறதுக்கு வந்திருக்கீங்க.''

''என்னடி கத்தறே?''

''இதோ பார், அடி, புடின்னா அப்புறம் நானும் அசிங்கமாப் பேசிருவேன்,'' என்று சிலிர்த்துக்கொண்டு வந்தான், வருண்.

''நீ சும்மா இரு, வருண். தீபா, உங்களுக்கு என்ன தெரியணும்? நானும், என் தம்பியும் தான் உங்கப்பா மனசை மாத்திக் கெடுத்திட்டோம். அத்தனை சொத்தும் இல்லாமப் பண்ணிட்டோம். திருப்தியா? போங்க வெளியே!'' ஆராதனாவின் முகம் சிவந்து போனது.

நாற்காலி கவிழ எழுந்தாள், ''உங்களை சும்மா விட மாட்டேன்,'' என்று உறுமி, கோபமாக வெளியேறினாள், தீபா.



- தொடரும்சுபா






      Dinamalar
      Follow us