
முன்கதைச் சுருக்கம்: தீபா அம்மா மஞ்சுளாவுக்கு, இரண்டாவது அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது. ஆனாலும், அவளது வலது பக்க கை மற்றும் கால் செயலிழந்து தான் இருக்கும். பேச்சும் தெளிவில்லாமல் குழறியபடி தான் பேசுவார். தொடர்ந்து, 'பிசியோதெரபி' மற்றும் பேச்சு பயிற்சி அளித்தால் குணமாக வாய்ப்புள்ளது என்று கூறினார், மருத்துவர். இதற்கிடையில், ஞானசேகரன் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்த காரணத்தை அறிய, தனியார் துப்பறியும் நிறுவனத்தை ஏற்பாடு செய்திருந்த, ஆராதனாவுக்கு சில விஷயங்கள் தெரியவந்தன. அதைப்பற்றி, தன் அம்மாவிடம் கூறினாள், ஆராதனா. 'தீபா ஷிப்பிங் கம்பெனி'யில், பொதுமேலாளர் பதவி காலியாக இருப்பதை விளம்பரம் மூலம் அறிந்து, திலகன் விண்ணப்பித்தான். தீபாவும், அதன் முன்னாள் பொதுமேலாளராக இருந்த, முத்துராமனிடம் அவனுக்காக சிபாரிசு செய்திருந்தாள். நேர்முக தேர்வு நடந்த போது, அப்பதவிக்கு விண்ணப்பித்திருந்த, ஆராதனா தேர்ந்தெடுக்கப்பட்டாள். இத்தகவலை, திலகன் மூலம் அறிந்த தீபா, அதிர்ச்சி அடந்தாள். திலகனின் வாடிப்போன முகத்தைப் பார்த்தாள், தீபா. பரபரப்பாக எழுந்தாள்.
''இதை நான் சும்மா விடமாட்டேன், திலக். அது எங்கப்பாவோட கம்பெனி. உனக்கு வேலை கொடுக்கணும்ன்னு நான் சொல்லியும், என் பேச்சுக்கு அங்க மரியாதை இல்லைனா, எப்படி?''
''ஏய், அது இப்ப உங்கப்பா கம்பெனி இல்ல. எப்பவோ அது கைய விட்டுப் போயிருச்சு. உனக்கு அங்க எந்த செல்வாக்கும் கிடையாது.''
அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, வேகமாக பூங்காவை விட்டு வெளியேறி ஆட்டோ பிடித்தாள், தீபா.
கீ ர்த்திலாலுக்கு, 60 வயதை நெருங்கும் வயது. தக்காளி போல் நிறம். முழு வழுக்கையாகி விட்ட தலை. செந்துாரம் தீற்றிய நெற்றி. பழுப்பான மீசை.
தன் மாளிகையின் பால்கனியில் சாய்வு நாற்காலியில், அமர்ந்திருந்தார்.
''நீ வீட்டுக்கு வந்து பாக்கணும்ன்னு சொன்னபோதே ஏதோ பிரச்னையின்னு பயந்தேன். அதேபோல இருக்கு இந்த லெட்டர்,'' என்று தங்க பிரேம் போட்ட கண்ணாடி வழியே, எதிரில் மரியாதையுடன் அமர்ந்திருந்த, ஆராதனாவை பார்த்தார், கீர்த்திலால்.
''சம்பளம் பத்தலியா?''
''ஐயோ, சார். இந்த சம்பளமும், வசதியும் எனக்கு வேற எங்கேயும் கெடைக்காதுன்னு எனக்குத் தெரியும்.'' என்றவளிடம்...
''யாராச்சும் உன்னை மரியாதையில்லாம பேசினாங்களா, சொல்லு. அவங்களையே வேலையிலேர்ந்து துாக்கிடறேன்.'' என்றார்.
''கம்பெனில அத்தனை பேரும் அன்பும், மரியாதையுமாத்தான், என்கிட்ட பழகறாங்க. ஆனா, எனக்கு ஒரு, 'பர்சனல்' காரணம் இருக்கு. உங்ககிட்ட வெளிப்படையாவே சொல்றேன், சார்,'' என்று, ஆராதனா சொல்லச் சொல்ல சாய்வுநாற்காலியில் மெல்ல ஆடிக்கொண்டே கேட்டார், கீர்த்திலால்.
''நீ சொல்றது எல்லாம் நியாயமா இருக்கு. ஆனா, அதுக்கு ஏன்மா எனக்கு திடீர்ன்னு அதிர்ச்சி குடுக்கறே?''
''உங்ககிட்ட சொல்லாம எதுவும் செய்யக்கூடாதுன்னு தான், சார், 'இன்டர்வியூ' போறதுக்கு முன்னாலயும், 'இ-மெயில்' அனுப்பினேன். இன்னும் ரெண்டு வாரம் கழிச்சுதான் நான் அங்க வேலையில சேரணும்,'' என்றாள், ஆராதனா.
''ஸாரி. உனக்கு எத்தனை மாசம் லீவு கேட்டாலும், குடுப்பேனே தவிர, உன் ராஜினாமாவை ஏத்துக்க மாட்டேன்,'' என, பேசியபடியே, ஆராதனா கொடுத்த கடிதத்தை எடுத்து கிழித்தார். பால்கனி ஓரத்திலிருந்த குப்பைத் தொட்டியில் போடச் சொல்லி, அவளிடமே கொடுத்தார்.
''மொதல்ல உக்காரும்மா,'' என்றார், முத்துராமன்.
''நான் உக்கார வரலை... ஏன் அங்கிள் நான் சொல்லியும், திலகனுக்கு வேலை தரலை?'' என்று கேட்டபடி, நாற்காலியை டர்ரென்று இழுத்து உட்கார்ந்தாள், தீபா.
''வேலை தர மாட்டேன்னு சொல்லலியே. 'மேனேஜ்மென்ட் ட்ரெய்னி'யா சேரட்டுமே! ஜி.எம்., போஸ்ட்டு தான் இல்லேன்னு சொன்னோம், தீபா.''
''அதான் ஏன்னு கேக்கறேன். திலகன், 'கோல்டு மெடலிஸ்ட்.' அவனைவிட உங்களுக்கு எங்கிருந்தோ வந்த, ஆராதனா பெரிசா போயிட்டாளா? அங்கிள்.''
''இது பொறுப்பான பதவி, வெறும் படிப்பு மட்டும் போதாது. முன் அனுபவம் கொஞ்சமாவது இருந்தாத்தான் சரியா இருக்கும்ன்னு, எம்.டி. சொல்லிட்டாரும்மா. 'அப்ளை' பண்ணவங்கள்ல, ஆராதனா தான் ரொம்ப, 'ஸ்மார்ட்'டா இருந்தா. அவளுக்கு பெரிய கம்பெனில ஊழியர்களை பிரமாதமாக கையாண்ட அனுபவம் இருக்கு. பைனான்ஸ் பத்தியும், அனுபவ அறிவு வெச்சிருக்கா. அவளோட தகுதியைப் பார்த்துத்தாம்மா கொடுத்தோம்.'' என்றார்.
''திலகன் அவளுக்குக் கீழ கையைக் கட்டி வேலை செய்யணும்ன்னு சொல்றீங்களா?'' என, 'படபட'த்தாள், தீபா.
''இங்க வேணாம்ன்னா, எனக்கு தெரிஞ்ச கம்பெனிகள்ல சொல்லி, திலகனுக்கு என்னாலான, 'ஹெல்ப்'பை நிச்சயம் பண்றேன், தீபாம்மா.''
''உங்க சிபாரிசு ஒரு மண்ணும் தேவையில்லை, அங்கிள்.''
''சின்னப் பொண்ணு நீ. கோபத்துல மத்தவங்க சொல்றது எதுவும் உனக்கு ஏற மாட்டேங்குது,'' என்றார், முத்துராமன்.
''ஆமாம், நான் மக்குதான். ஆராதனா தான் புத்திசாலி. அவ யாருன்னு தெரியாதுன்னு என்கிட்ட சொன்னவர் தானே நீங்க? உங்க சதி எனக்கு இப்பப் புரியுது, அங்கிள்.''
நாற்காலியை இரைச்சலுடன் நகர்த்திவிட்டு எழுந்தாள், தீபா.
''திலகனைச் சும்மா எடை போடாதீங்க. நீங்க வேலை தரலேன்னா, எதுவும் குடிமுழுகிப் போயிடாது. அவனைச் சேர்த்துக்க, நுாறு கம்பெனி, 'க்யூ'வுல நிக்கும்.''
ம ஞ்சுளாவை வீட்டுக்குக் கூட்டி வந்ததும், திலகனுக்கு போன் செய்து, வீட்டுக்கு வரச் சொன்னாள், தீபா.
அவனை பார்த்ததும், தன் உள்ளங்கையை நீட்டினாள்.
''திலக், நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் கொடு,'' என்ற தீபாவின் ஆவேசமான குரல், திலகனை திகைக்க செய்தது.
''என்ன?'' என்றான்.
''தீபா ஷிப்பிங்கைவிட பெரிய கம்பெனில நீ, ஜி.எம்., இல்லேன்னா, அதுக்கும் மேல, எம்.டி., ஆகி, அந்த, ஆராதனாவோட மூக்கை உடைக்கணும்.''
''ஆராதனா மேல அவ்வளவு காழ்ப்பா, தீபூ?''
''அம்மாவை பார்த்துக்க வேண்டியிருக்கு. இல்லேன்னா, ஆராதனாவை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குக்கூட போயிருவேன்.''
தீபாவின் கையைப் பற்றி அழுத்தினான், திலகன்.
''தீபாவோட கம்பெனி நமக்குத்தான்னு கொஞ்சம் அலட்சியமா இருந்தது என்னோட தப்பு தான். ஆராதனாவுக்காக இல்ல. எனக்காக நான் முன்னேறித்தான் ஆகணும். நீயும் அவளையே நெனைச்சிட்டிருக்காம, வாழ்க்கையை பிராக்டிக்கலா ஏத்துக்க, தீபூ.''
''எப்படி முடியும், திலக்? ஒவ்வொண்ணா இழந்திட்டிருக்கேன் நான்.''
''வாழ்க்கை அப்படித்தான். ஒரு சமயம் மேலே ஏத்திவிடும், ஒரு சமயம் குப்புறத் தள்ளிவிடும். ரெண்டுக்கும் தயாரா இருக்கணும். வா, பீச்சுக்குப் போலாம், சினிமாக்குப் போலாம், இல்ல பைக்ல சும்மா ஒரு ரவுண்டாவது போலாம். உனக்கு ஒரு மாறுதல் வேணும்.''
அரை மனதோடு, அவன் நீட்டிய கையைப் பற்றிக்கொண்டு எழுந்தாள், தீபா.
ஒரு பக்கம், மஞ்சுளாவுக்கு தினமும் உடற்பயிற்சி அளிக்க ஆள் வந்துகொண்டிருந்தது. இன்னொரு பக்கம், குழந்தைக்கு சொல்லித் தருவதுபோல் பேச்சுப் பயிற்சி கொடுக்கவும் ஒருவர் வரலானார்.
அவளை உடனிருந்து கவனித்துக்கொள்ளும் செவிலிக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்தார், சமையல்காரர், துரை.
தீபா, முதன்முறையாக தினசரிகளில் வந்த வேலைவாய்ப்பு விளம்பரங்களை மேயலானாள். 'தன் படிப்புக்கேற்ப ஏதாவது, நல்ல வேலை கிடைக்குமா...' என்று தேடலானாள்.
'ஆராதனாவின் அம்மா முடங்கிக் கிடப்பதை போலவே தன் அம்மாவும் முடங்கியிருக்கிறாள். அவள் அம்மா பேசுவது புரியாதது போலவே, தன் அம்மா பேசுவதும் குழறலாக இருக்கிறது. அப்படியென்றால், ஆராதனாவுக்கும் தனக்கும் ஏதோ சில ஒற்றுமைகள் இருக்கின்றனவோ...' என்று கூட, அவள் மனம் ஒரு நிமிடம் அசைபோட்டது.
மூன்று வாரங்களில், மெல்ல மெல்ல கைத்தடியுடன் நடக்கக் கற்றுக்கொண்டிருந்தாள், மஞ்சுளா.
தடாலென்று இனிப்புப் பொட்டலத்துடன் ஒரு நாள் வந்து நின்றான், திலகன்.
''தீபூ, ஒரு நல்ல சேதி.''
''வேலை கெடைச்சிருச்சா, திலக்?''
''ஆமா. மும்பைலேர்ந்து ஒரு தொழிலதிபர் வந்தாரு, என்னைப் பிடிச்சுப் போய் அவர் கம்பெனில சேரச் சொன்னாருன்னு சொன்னேனில்ல?'' என்றான், திலகன்.
''ஞாபகமிருக்கு. அந்தக் கம்பெனில போய்ச் சேரணுமா?''
''ஆமா, ஆனா...'' என்று இழுத்தான்.
''ஆனா என்ன?''
''அவங்களும் மொதல்ல என்னைப் பயிற்சி எடுத்துக்க சொல்றாங்க. மும்பைல ஆறு மாசம் 'ட்ரெய்னிங்.' அதுக்கப்புறம் தான் எங்கே, 'போஸ்டிங்'ன்னு தெரியும்.''
''ஆறு மாசமா!'' தீபாவின் குரலில் ஏமாற்றம் வழிந்தது.
''நீதான, தீபூ வாழ்க்கைல பெரிய ஆளா முன்னுக்கு வந்து காட்டுன்னு உசுப்பேத்தினே? நீயும் வந்துரு. உன் படிப்புக்கு மும்பையில நிறைய வாய்ப்பு இருக்கும்.''
''அம்மா இருக்கற நெலமைல நான் எங்கேயும் வர முடியாதே, திலக். நீயும் என்னை விட்டுட்டு ஓடிடு. தனியாக் கெடந்து தவிக்கறேன்.''
''தீபூ, 'ப்ளீஸ்' அழாத. இந்த உலகத்துல எந்த மூலையில இருந்தாலும், தீபாவைத்தான் நெனைச்சிட்டு இருப்பேன்றதை மறக்காத. தினம் காலைலயும், ராத்திரியும் உன்கூட போன் பேசுவேன், 'ப்ராமிஸ்!' எப்ப விடுமுறை கிடைச்சாலும் ஓடி வந்துருவேன். இப்ப ஒரு, 'பெஸ்ட் ஆப் லக்' சொல்லு,'' என்று தன் உதட்டை தொட்டுக் காட்டினான்.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, அவன் கன்னத்தில் முத்தமிட்டாள், தீபா.
கு னிந்து தரையை தொட்டுக் கும்பிட்டு, 'தீபா ஷிப்பிங் ஏஜன்சீஸ்' அலுவலகத்தில் நுழைந்தாள், ஆராதனா.
அவளை ஒரு மலர்ச்செண்டுடன் எதிர்கொண்டார், முத்துராமன்.
''எம்.டி., தன் சார்புல இதைக் கொடுத்து உங்களை வரவேற்க சொன்னாரும்மா,'' என்று, ஊழியர்கள் அனைவரையும் கூட்டி, அவளை அறிமுகம் செய்து வைத்தார், முத்துராமன்.
''இன்னிலேர்ந்து இவங்க தான் இங்க ஜெனரல் மேனேஜர். எனக்கு என்ன மரியாதை குடுத்தீங்களோ, அதே மரியாதையையும், ஒத்துழைப்பையும் இவங்களுக்கும் குடுக்கணும்.''
ஊழியர்கள் அனைவரையும் வணங்கி, கணீரென்ற குரலில் பேசினாள், ஆராதனா...
''நாம எல்லாரும் ஒரே குடும்பமா நடந்துப்போம். அண்ணன், தங்கை, அக்கா-, தம்பின்னு எந்த உறவா இருந்தாலும், சின்னச்சின்ன சண்டை வரும். ஆனா, உறவு விட்டுப் போகாதில்ல. அந்த மாதிரி நாமல்லாம் இருப்போம். தினம் பதினொண்ணுலேர்ந்து பன்னெண்டு வரைக்கும் நான் உங்களுக்கான நேரமா ஒதுக்கப்போறேன். உங்களுக்கு எந்தப் பிரச்னையா இருந்தாலும், அது என்னைப் பத்தி இருந்தாலும் கூட, வெளிப்படையா என்கிட்ட வந்து பேசலாம். நியாயமா என்ன தீர்வு குடுக்க முடியும்ன்னு யோசிப்போம்.'' என்றாள்.
ஊழியர்கள் கைதட்டி அவளுக்கு உற்சாக மூட்டினர்.
இத்தனை ஆண்டுகளாக தான் ஆட்சி செய்த அறைக்குள் அவளை அவர் கூட்டிப் போனார், முத்துராமன்.
''நான் வேலை பார்த்த அதே மேஜைம்மா. சேர் மட்டும் புதுசா மாத்தச் சொல்லிட்டேன்,'' என்றார்.
அவள் அந்த சுழல் நாற்காலியில் அமரும்வரை அருகிலேயே இருந்தார். புதிய கணினியில் அவளுடைய அதிகார உரிமைக்கான கடவுச்சொல்லை அமைக்குமாறு சொன்னார்.
''மத்தவங்க கோரிக்கைக்கு நீங்க நேரம் ஒதுக்கியிருக்கீங்க. உங்களுக்கு எந்த பிரச்னையாயிருந்தாலும், தயங்காம என்கிட்ட சொல்லலாம், ஆராதனா.''
''நன்றி, சார். ரெண்டு கோரிக்கை. முதல் கோரிக்கை உங்களை விட நான் ரொம்பச் சின்னவ. என்னை வா, போன்னே நீங்க பேசணும்.''
எதிரில் அமர்ந்து, புன்னகைத்தார், முத்துராமன். ''சரிம்மா. ரெண்டாவது?''
''எனக்கு எம்.டி., கல்யாண் மேத்தாகிட்ட ஒரு, 'அப்பாயின்ட்மென்ட்' வேணும்.''
''அடுத்தடுத்து வெளிநாடு போயிட்டிருக்காரு. அதனால தான் எனக்கு பதவி உயர்வு தந்து, கம்பெனி பொறுப்பையும் குடுத்திருக்காரு. எப்படியும் அடுத்த வாரம் இங்க வருவாரு. அப்ப அவரை நீ சந்திக்கலாம்.''
''ரொம்ப நன்றி, சார்.''
''இப்ப நான் உன்கிட்ட ஒரு, 'பர்சனல்' கேள்வி கேட்கலாமா, ஆராதனா?'' என்றார், முத்துராமன்.
மறுப்பதா, ஆமோதிப்பதா என்று அவள் யோசிக்கும் முன், அவர் கேள்வியை வீசினார்...
''தீபாகிட்ட ஏம்மா அவ்வளவு பெரிய பொய்யை சொன்னே?''
- தொடரும்.- சுபா

