
முன்கதைச் சுருக்கம்: தான் விற்ற காரை, ஆராதனா வாங்கியதை அறிந்ததும் தீபாவுக்கு ஆத்திரம் வந்தது. அப்போது, 'உன் அம்மாவின் மருத்துவ செலவுக்காக நான் கொடுத்த ஆறு லட்ச ரூபாய் பணத்தை, நீ நகை விற்ற பணத்தை, வீம்புக்காக என்கிட்ட திருப்பிக் கொடுத்தே. அந்த பணத்தில் தான், உன் காரை வாங்கினேன். அது, உன் பணம் தான். உன் அம்மாவை, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இந்த கார் உதவும்...' என்று கூறி, கார் சாவியை, தீபா வீட்டிலேயே வைத்து விட்டு சென்றாள், ஆராதனா. இதற்கிடையில், மும்பையில் புதிதாக வேலைக்கு சேர்ந்த, தீபாவின் காதலன் திலகன், தன்னுடன் பணிபுரியும் சாதனாவுடன் புனேவில் உள்ள தொழிற்சாலையில் ஒரு வாரம் பயிற்சி முடித்து திரும்பினான். அவனுக்கு நிமிஷா என்ற பெண்ணை அறிமுகம் செய்து வைத்து, 'உங்கள் மூவரில் ஒருவர் தான் இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள்....' என்று கூறுகிறார், கம்பெனியின் எம்.டி., விட்டல்ராஜ். தனியாக துப்பறியும் நிறுவனம் வைத்து நடத்தும், யுவராஜிடம், தீபா ஷிப்பிங் கம்பெனி பற்றி விசாரிக்க சொல்லியிருந்தாள், ஆராதனா. அவன், 'மிக முக்கிய செய்தி, அது உனக்குப் பெரும் அதிர்ச்சி தரப்போவது என்னவோ நிச்சயம். கோவாவில் சொல்கிறேன்...' என்று ஆராதனாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான். கு றுஞ்செய்தியில் குறிப்பிட்டிருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் என்னவென்று குறுகுறுக்க, உடனே யுவராஜுக்கு போன் செய்தாள், ஆராதனா.
''போன்ல வேணாம், கோவாவுல சொல்றேன்னு தானே, 'மெசேஜ்' அனுப்பினேன்?'' என்றான், யுவராஜ்.
'மும்பையில் சந்தித்தபோது தான் அவன் மனம்விட்டு தன் காதலைச் சொன்னான். வெளியூரில் தான் அவன் இயல்பாக நெருக்கமாக இருக்கிறானோ அல்லது அவன் ஏதாவது சொல்லப்போக, அது என்னுடைய மற்ற அலுவலக வேலைகளை சிதறடித்துவிடும் என்று நினைக்கிறானோ!' என்று நினைத்த ஆராதனா, ''சரி, கோவால சந்திப்போம்,'' என்றாள். சிறு உரையாடலோடு, தொடர்பைத் துண்டித்து, கேன்டீனுக்கு நடந்தாள்.
சென்னையில் உள்ள அண்ணாசாலையிலிருந்து வெட்டிச்சென்ற ஒரு குறுக்குத்தெருவில் இருந்தது, அந்த முகவரி.
ஆட்டோவிலிருந்து இறங்கி நடந்தாள், தீபா. இடதுபுறம் ஒரு தேநீர்க்கடை வாசலில் நின்றிருந்த நான்கைந்து இளைஞர்கள், மசால் வடையை மென்றுகொண்டே, எதற்காகவோ ஓங்கிச் சிரித்தனர்.
'எல்லாரும் எவ்வளவு ஆனந்தமாக இருக்கின்றனர். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? முதலாளியாக வலம் வர வேண்டியவள், எங்கோ பணியாளராக உழைக்க வேண்டும் என்று ஏன் தலையெழுத்து மாறியது?' தன்னிரக்கம், தீபாவை அழுத்தியது. அந்தக் கட்டடத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
'உறைவாள்' என்ற அறிவிப்பு பலகைக்கு சந்தனமிட்டு, பூமாலை அணிவிக்கப் பட்டிருந்தது. கீழே சுவரொட்டியில் 'வீசும் வாளுக்கு வயது ஆறு' என்று முந்தின வாரத்தில் சிறப்புக் கொண்டாட்டம் நடந்த அறிவிப்பு.
கட்டடத்தின் வளாகத்தில் மஞ்சள் பூச்சொரியும் ஒரு மரம். வரிசையாக இரு சக்கர வாகனங்கள். பின்வாங்கி நின்றிருந்த ஒரு லாரியிலிருந்து இறக்கப்படும் காகித உருளைகள்.
''ரெண்டாவது மாடியில, உதவி ஆசிரியர், நாதப்ரியன் இருப்பாரு, அவரைப் போய் பாருங்க,'' என்றாள், வரவேற்பு கவுன்ட்டர் பெண்.
'லிப்ட்'டின் இரும்புக்கதவை இழுத்து தள்ளித்திறக்க வேண்டியிருந்தது. தங்கள் கம்பெனியின் நவீன மின்துாக்கிகளை நினைத்தபடி, இரண்டாவது மாடியில் வெளிப்பட்டாள், தீபா.
அது ஒரு பெரிய ஹால். 20 பேர் தனித்தனி மரத்தடுப்புகளுக்கு பின்னே தத்தம் மேஜைகளில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தனர்.
உதவி ஆசிரியர் என்று போட்டிருந்த சிற்றறைக்கு வெளியே தயங்கி நின்றாள், தீபா.
''மிஸ்டர் நாதப்ரியன்?''
மேஜையில் குப்பையாக காகிதங்களைப் பரப்பி வைத்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்தார்.
''நான் தான் அந்த அயிட்டம். நீங்க?''
''தீபா ஞானசேகரன்.''
''ரிப்போர்ட்டர் வேலைக்கு, 'அப்ளை' பண்ணியிருந்தீங்க இல்ல? உக்காருங்க,'' என்றார்.
நாதப்ரியனின் மீசை கன்னங்களில் பரவியிருந்தது. இடது காதில் தங்கக் கடுக்கன். சிவந்த கண்கள். மேல் பட்டன்கள் போடாத மார்பில் தடிமனான தங்கச் சங்கிலி. சற்றுக் கூடுதலாகவே உள்வாங்கியிருந்த முன் வழுக்கை.
''நீங்க மாதிரிக்கு அனுப்பியிருந்த மேட்டரைப் படிச்சேன். 'திருக்குறள் எழுதியவர் திருவள்ளுவர். அவர் நினைவாக வள்ளுவர் கோட்டம் நிறுவப்பட்டது...' அப்படின்னு ஆரம்பிக்குது கட்டுரை. பள்ளிக்கூட பரீட்சையில எழுதற மாதிரி இருந்துச்சு. திருக்குறள் எழுதினது யாருன்னு எல்லாருக்கும் தெரியும். அதையெல்லாம் நாம எழுதிட்டிருக்கக்கூடாது.
''அங்க போய் புதிதாக வேற தகவல் சேகரிச்சு நீங்க எழுதியிருக்கணும். பரவால்ல. இதான ஆரம்பம்,'' என்ற, நாதப்ரியன் மற்ற ஊழியர்களுக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தார்.
''கப்பல் கம்பெனி வெச்சிருந்தவங்க இல்ல, நீங்க? நெனச்சா, நீங்களே பத்திரிகை நடத்தலாம். விட்டுப்போட்டு, இங்க வேலைக்கு வந்திருக்கீங்க?'' என்று, கேட்ட இளைஞனை, கண்ணாலேயே அதட்டி விலக்கினார், நாதப்ரியன். தனக்கு அடுத்திருந்த சிற்றறையில் அவளுக்கு இடம் செய்து கொடுத்தார்.
கற்றையாக அச்சடித்த காகிதங்களையும், நான்கைந்து வண்ணப் பேனாக்களையும் கொடுத்தார்.
''இன்னிக்கு உங்க 'டூட்டியே' 'புரூப்' பாக்கறது தான். அச்சுக்குப் போற மேட்டரல்லாம் படிச்சீங்கன்னா, உங்க எழுத்தும் 'ஷார்ப்பா'வும். அடுத்த தடுப்புலயே நான் இருக்கேன். என்ன சந்தேகம் வந்தாலும், தயங்காம கேளுங்க. வாழ்க, வளர்க,'' என்றார், நாதப்ரியன்.
தீபாவின் உடல் சற்று உதறிக்கொண்டிருந்தது. அந்த இளைஞன் கேட்ட கேள்வி ரீங்கரித்துக் கொண்டேயிருந்தது. போராட்டத்துடன் தன் கவனத்தைத் தனக்கு முன்னால் இருந்த காகிதங்களில் திருப்பினாள்.
மு ம்பை வெயில் சென்னைக்கு சற்றும் குறைவில்லாமல் தகதகத்து கொண்டிருந்தது.
திலகனுக்கு புது வேலை மிகவும் பிடித்திருந்தது. கல்லுாரியில் கற்றுத் தேர்ந்ததையெல்லாம் எந்த அளவுக்கு களத்தில் செயல்படுத்தி பார்க்க முடியும் என்ற சவால் அவனை உற்சாகப்படுத்தியது.
அங்கு பணிபுரிந்த ஆண்கள், பெண்கள் வித்தியாசமின்றி அவனுடன் பழகியது கூடுதல் மகிழ்ச்சி தந்தது. போதாததற்கு, அவனுக்கு இரு புறமும், சாதனா, நிமிஷா என்று இரு இளம் பெண்கள். அவனுடன் கல்லுாரியில் ஒன்றாகப் படித்தவர்கள் போல் சகஜமாகி, எதைப்பற்றி வேண்டுமானாலும் எந்த கூச்சமும் இன்றி பேசத் தயாராக இருந்தனர்.
அதிலும், நிமிஷா எப்போதும் புதிதாக பறித்த வாசமலர் போல் இருந்தாள். தன் வசீகர புன்னகையால், அவன் கவனத்தை ஈர்த்தாள். ஒரு நாள், வேலை நேரம் முடிந்து எழுந்த போது, ''உங்க ரெண்டு பேருக்கும் வேற, 'கமிட்மென்ட்' இல்லைனா, எங்க வீட்டுக்குப் போலாமா?'' என்றாள், நிமிஷா.
''சந்தோஷமாக,'' என்றாள், சாதனா.
''ஏதாவது விசேஷமா, நிமிஷா?'' என்றான், திலகன்.
''ஏன் திலக், எனக்கு 'பர்த்டே!' அம்மா-அப்பாவுக்கு கல்யாண நாள்னு ஏதாவது காரணம் சொன்னாதான் வருவியா?''
''ஐயோ... அப்படிலாம் இல்ல. ரூம்ல போய் போரடிக்கிற, 'டிவி' நிகழ்ச்சியை பார்த்திட்டிருக்கறதுக்கு பதிலா உன்கூட ரவுண்டு வரதுக்கு கசக்குதா?'' என்று அவசரமாக தன் சம்மதத்தை தெரிவித்தான், திலகன்.
திலகனுக்கு பின்னால் பார்த்தாள், நிமிஷா.
''என்கிட்ட தான் பேசினியா, நீ? மேனேஜ்மென்ட்ல இருக்கணும்ன்னா, பேசறது அடுத்த ஆளுக்குக் கேக்க வேணாமா? குரல் அடுத்த தீவுலேர்ந்து வருது?''
அவள் குரலில் மெலிதான எள்ளல் இருந்தது.
'ராகிங்' செய்யப்படும் புது மாணவன் போல், திலகனின் முகம் குழப்பமான உணர்ச்சிகளை பிரதிபலித்தது.
''அதில்ல.''
''கமான்யா. சும்மா கலாய்ச்சேன்,'' என்று அவன் தோளைச் சுற்றி கை போட்டு வளைத்து, தன் உடலை அவனுடன் சின்னதாக ஒற்றி எடுத்து அவள் சிரித்தாள்.
கூடவே, ''எங்க வீட்ல, 'லைட்டா' சாப்டுட்டு, 'ஜுஹு பீச்'சுக்குப் போலாம்,'' என்றாள்.
நிமிஷா தான் கார் ஓட்டினாள். உருட்டிவிட்ட பந்து போல் கார் மிருதுவாகப் போக்குவரத்தில் கலந்தது. வழியில் இடதும், வலதும் மும்பையின் பகுதிகளை அவனுக்கு அறிவித்துக்கொண்டே, அநாயாசமாக காரைச் செலுத்தினாள்.
அந்தப் பயணத்தின் போது, சாதனாவும் ஏதேதோ சொன்னாள். ஆனால், அதில் எதுவும், திலகன் கவனத்தில் பதியவே இல்லை. நிமிஷாவிடமிருந்து கவனத்தை நகர்த்த முடியாததை சற்று திடுக்கிடலோடு உணர்ந்தான், திலகன்.
மும்பை, 'தானே' பகுதியில், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட இடத்தில் காரை செருகி நிறுத்தினாள், நிமிஷா. காரிலிருந்து கவிதை போல நழுவி இறங்கினாள். வாலிபம் அவள் கண்களில், உதட்டு சுழிப்பில், முன்புறம் வந்து விழுந்த கூந்தலில், துள்ளலான நடையில், இடுப்பு அசைவில் எங்கும் எதிரொலித்தது.
ஏழாவது மாடியில் அவளுடைய, 'அபார்ட்மென்ட்'டின் கதவில் பதித்திருந்த, 'எலக்ட்ரானிக்' பூட்டில் எண்கள் ஒற்றி, திறந்தாள்.
''மம்மீ, யார் வந்திருக்காங்க, பாரு,'' என்று குரல் கொடுத்தாள்.
அவளுடைய அம்மா உயர்ரக சூரிதார் அணிந்து, சிக்கென்று இருந்தாள்.
முகமெங்கும் புன்னகை ஒளிர, வந்தவர்களை வரவேற்றாள்.
''நாங்க பீச்சுக்குப் போலாம்ன்னு இருக்கோம். 'க்விக் டின்னர் ரெடி' பண்ணு, ப்ளீஸ்.''
''இன்னும், பத்து நிமிஷத்துல 'ரெடியா'யிரும்,'' என்றாள், நிமிஷாவின் அம்மா.
அறிமுகங்கள் முடிந்தன.
''சாதனா, உன்னைப் பத்திச் சொல்லு,'' என்றாள், நிமிஷாவின் அம்மா.
சாதனா தன் தந்தை பணிபுரியும் கம்பெனி பற்றியும், வீட்டை தாய் நிர்வகிப்பதாக சொன்னாள். தன் சகோதரன் லண்டனில் என்னவாக இருக்கிறான் என்று சொன்னாள்.
''திலகன், உன் குடும்பம்?'' என்றாள், நிமிஷாவின் அம்மா.
''எங்கப்பா சேலம் 'கலெக்டர் ஆபீஸ்'ல வேலை பாக்கறாரு. அம்மா வீட்லயே நெறய பேருக்கு 'டியூஷன்' எடுக்கறாங்க. ரெண்டு தங்கைங்க. பெரியவ காலேஜ் பைனல் இயர். சின்னவ ஸ்கூல் பைனல்,'' என்றான், திலகன்.
''அவங்க சேலத்துல இருக்காங்க. நீ, சென்னைல படிச்சே, ரைட்?'' என்றாள், நிமிஷாவின் அம்மா.
''ஆமா.''
''என்கூட, ஹேண்ட்ஸமான ஒரு சென்னை பையன் 'டிரெய்னிங்' எடுத்துக்கறான்னு, நிமிஷா சொன்ன போது, உன்னைப் பாக்கணும்ன்னு நான்தான் கூட்டிட்டு வரச் சொன்னேன்,'' என்று, நிமிஷாவின் அம்மா சொல்ல, திலகனை பார்த்துக் கண்ணடித்தாள், நிமிஷா.
திலகன் தலையில் பூமழை பொழிந்தது.
'' அம்மா... 'டின்னர் ரெடி, டேபிள்'ல வைக்கட்டுமா?'' என, 'கிச்சன்' வாசலிலிருந்து குரல் கேட்டது.
சமையல் செய்வதற்கு ஒரு பெண்மணி இருப்பதால் தான், நிமிஷாவின் அம்மா இங்கேயே உட்கார்ந்திருந்தாள் என்று புரிந்தது திலகனுக்கு.
''வாங்க...'லெட்ஸ் ஹேவ் டின்னர்!' திலக்,'' என்று, நிமிஷா அவன் தோளில் தட்டி எழுந்தாள். அரை மயக்கத்தில் அவள் பின்னே பூனைக்குட்டி போல் சென்றான், திலகன்.
''தீ பா மேடம்,'' நாதப்ரியனின் குரல் எட்டியதும், அவள் பரபரப்பாக எழுந்தாள்.
பார்த்துக்கொண்டிருந்த தாள்களைக் கீழே வைத்துவிட்டு, தடுப்பிற்கு மறுபுறம் இருந்த பிரிவுக்கு சென்றாள்.
''சார், தீபான்னு மட்டும் கூப்புடுங்க. மேடம்ன்னு சொன்னா வயசான மாதிரி தோணுது.''
''மூணு நாளா சும்மா 'புரூப்' பாத்துட்டே இருக்கோமே, இதுவா, 'ரிப்போர்ட்டர்' வேலைன்னு உங்களுக்கு ஒரு சலிப்பு வருதில்ல?''
''உண்மையைச் சொன்னா, எனக்கு வேலை போயிடும் இல்ல?'' என்றாள், தீபா, சற்றே துணிவாக.
சிரித்தார், நாதப்ரியன்.
''மொதல்ல ஒரு பயிற்சிக்கு தான் அந்த வேலை கொடுத்தோம். இப்ப, 'டெஸ்க் ரிப்போர்ட்டிங்'ல ஒரு பயிற்சி எடுத்துக்குங்க.''
''அப்படின்னா?''
''எங்கயும் வெளிய போய் வெயில்ல அலையாம, உட்கார்ந்த இடத்துலேர்ந்து எழுதற கட்டுரைன்னு வெச்சுக்குங்க. அடுத்தது களத்துக்கு போய் தகவல் சேகரிச்சு எழுதலாம்.''
''ஓ.கே., எதைப் பத்தி எழுதட்டும், சார்?'' என்றாள், தீபா.
தன் மேஜையில் இருந்த ஒன்றிரண்டு தினசரிகளை அவள் முன் போட்டார், நாதப்ரியன்.
''மனுஷனுக்கும், காட்டு விலங்குக்கும் எப்பவுமே ஒரு மோதல் ஓடிட்டிருக்கு. இருக்கற காட்டை அழிச்சு, அவங்க இடத்தை நாம ஆக்ரமிக்கறோம். அதனால, சிறுத்தை, புலிலாம் ஊருக்குள்ள வந்து ஆளை அடிக்குது. காட்டுக்கு குறுக்க பாதை போட்டு, குழுவா இருக்கற மிருகங்களை நாம பிரிச்சுடறோம்.
''இந்தியாவுல, அஞ்சு வருஷத்துல ரயில்வே, 'டிராக்கை கிராஸ்' பண்றப்ப, 80 யானைங்களுக்கு மேல ரயில் மோதி செத்திருக்கு. இப்ப சமீபத்துல, அசாம்ல ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மோதி ஏழோ, எட்டோ யானைங்க அவுட்டு. இதையெல்லாம் பின்னணியா வெச்சு ஒரு மூணு, நாலு பக்கம் வர மாதிரி ஒரு விழிப்புணர்வு கட்டுரை எழுதிட்டு வாங்க,'' என்று நாதப்ரியன் சொல்லிக்கொண்டே போக, திடீரென்று பீறிட்டு அழலானாள், தீபா.
திடுக்கிட்டு பேச்சை நிறுத்தினார், நாதப்ரியன்.
- தொடரும்.சுபா

