sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தீபாராதனா! (24)

/

தீபாராதனா! (24)

தீபாராதனா! (24)

தீபாராதனா! (24)


PUBLISHED ON : மார் 15, 2026

Google News

PUBLISHED ON : மார் 15, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: மு ம்பையில் வேலை செய்யும், தீபாவின் காதலன் திலகன், நிமிஷா மற்றும் சாதனா என்ற இரு பெண்களுடன், ஒன்றாக பணிபுரிய வேண்டியிருந்தது. ஒருநாள், சாதனா அழைத்ததால், அவள் வீட்டுக்கு சென்றான், திலகன். அங்கு இருவரும் பீர் அருந்தினர். அப்போது, 'புதிதாக, 'ஸ்டார்ட்-அப்' கம்பெனி ஒன்றை நாம் இருவரும் ஆரம்பிக்கலாம்...' என, யோசனை சொன்னாள், சாதனா. பத்திரிகை அலுவலகம் ஒன்றில் பணியில் சேர்ந்திருந்த, தீபாவுக்கு, கல்லுாரிகளில் நடக்கும், 'ராகிங்' பற்றி தகவல் சேகரித்து, கட்டுரை எழுதும்படி கூறினார், சீப் எடிட்டர். 'ராகிங்' பற்றி தெரிந்து கொள்ள கல்லுாரிக்கு சென்ற, தீபாவிடமே, 'ராகிங்' செய்ய முயன்றனர் அங்குள்ள, மாணவர்கள். அப்போது... மா ணவன், வீரா ஒரு தென்னங்குச்சியை தீபாவின் முகத்தருகே ஆட்டினான்.

''இது என்ன?'' என, கேட்டான்.

''தென்னந் துடைப்பத்துலேர்ந்து உருவின குச்சி மாதிரி தெரியுது, வீரா,'' என்றபடி, பின்னால் நகரப் பார்த்தாள், தீபா.

''ஏன் பயந்துட்டே சொல்றீங்க, பிடிங்க,'' என்றான், வீரா.

அவனிடமிருந்து அந்த மெல்லிய குச்சியை வாங்கிக் கொண்டாள், தீபா. உடல் வியர்த்து விட்டது. எங்கேயோ கல்லுாரியின் கலை நிகழ்ச்சிகள் துவங்கி விட்ட விபரம் ஒலிபெருக்கியில் கேட்டது.

''இப்ப இந்தக் குச்சியால இங்க மண்ணைத் தோண்டப் போறீங்க. ரெண்டடி ஆழம் தோண்டணும். குச்சிமுனை உடையக்கூடாது,'' என்றான், வீரா.

திகைத்தாள், தீபா.

''எப்படி வீரா, இந்தக் குச்சியால கெட்டி மண்ணைத் தோண்ட முடியும்?'' என கேட்டாள், தீபா.

''தோண்டினா நீங்க போயிட்டே இருக்கலாம். குச்சிமுனை உடைஞ்சா, இதோ இந்தப் பையனுக்கு ரெண்டு கன்னத்துலயும் முத்தம் குடுக்கணும்,'' என்றான், வீரா.

''வாட் நான்சென்ஸ்? நீயும் தண்ணி அடிச்சிருக்கியா?'' என்று அந்தக் குச்சியைத் துாக்கிப்போடப் பார்த்தாள், தீபா.

''வெயிட், வெயிட். குச்சியைத் துாக்கிப்போட்டா, உங்க ரெண்டு கன்னத்துலயும் நாங்க எல்லாரும் கிஸ் பண்ணுவோம்,'' என்று சொல்லி அவர்களுடன், பூர்ணாவும் சேர்ந்து கொண்டாள்.

''ஓ.கே., இப்டில்லாம், 'ராகிங்' பண்ணுவீங்கன்னு புரியுது. விளக்கிப் புரிய வெச்சதுக்கு, தேங்க்ஸ்,'' என்றபடி சுதாரிக்கப் பார்த்தாள், தீபா.

''இல்லடி செல்லம். இது நெஜம்,'' என்றான், பைக்கில் வந்தவன். சொல்லிவிட்டு, அவளை மிக நெருங்கினான். தன் டீஷர்ட்டைக் கழற்றி வெற்று மார்புடன் நின்றான்.

''ஆரம்பிச்ச, 'ராகிங்' பாதில நிக்கக்கூடாது. தோண்டறியா, கிஸ் பண்றியா? ரெண்டுக்கும் இஷ்டமில்லேனா, என்னைப் போல... நீயும்,'' என்றவனை, சட்டென்று பிடித்துத்தள்ளி விட்டு ஓ டப்பார்த்தாள், தீபா.

அவன், அவள் உடையைப் பின்னாலிருந்து பிடித்து நிறுத்தினான்.

அதீத அச்சத்தில் திகைத்து நின்றாள், தீபா.

''டேய்,'' என்று அதிகாரக்குரல் கேட்டது. எல்லாரும் திரும்பிப் பார்த்தனர். ஓட்டி வந்த சைக்கிளை அப்படியே சாய்த்துவிட்டு, அங்கு வந்து நின்றான், வருண்.

''வீரா... என்ன நடக்குது இங்க?'' என்ற, வருணின் குரல் ஆக்ரோஷமாக ஒலித்தது.

தீபாவைப் பற்றியிருந்தவன் அவசரமாகத் தன் கையை விலக்கிக் கொண்டான்.

''இல்லண்ணா. இவங்க ஒரு பத்திரிகைக்காக, 'ராகிங்' பத்திக் கேட்டாங்க,'' என்று, பூர்ணா ஏதோ சொல்ல முனைய, ''நம்மள நம்பி வந்தவங்கள இப்படித்தான் நடத்துவீங்களா?'' என்று இரைந்தான், வருண்.

இத்தனை நேரம் நெஞ்சை நிமிர்த்தி நின்றவர்கள் சட்டென்று பம்மினர்.

''சாரிண்ணா. சும்மா வெளையாட்டுக்குத் தான்,'' என்றான், வீ ரா.

''எல்லாரும் அவங்ககிட்ட மன்னிப்பு கேளுங்க,'' என்றான், வருண்.

கண்களில் கண்ணீருடன் சிலிர்த்தாள், தீபா...

''இப்ப, இங்கே சினிமாவுல வருவது போல, ''சீன்' பண்றியா? நீயே இவங்கள அனுப்பிட்டு, பின்னால, 'ஹீரோ' மாதிரி வந்து பெரிய ஆளாக் காட்டிக்கறியா?'' என்றாள், தீபா.

''அப்படி எல்லாம் எதுவும் இல்ல. வருண் அண்ணா தான், 'ஸ்டூடன்ட் யூனியன் லீடர்' அக்கா,'' என்று பதறினாள், பூர்ணா.

''சாரி, மிஸ்,'' என்றனர், அவள் அருகில், நின்றிருந்த அந்த மாணவர்கள்!

''ஸாரி, மேடம்,'' என்றான், வீரா.

''நோ, நான் யாரையும் விட மாட்டேன். போலீஸ்ல, 'கம்ப்ளெயின்ட்' குடுக்கப்போறேன். இங்க நடந்தது அத்தனையும் போன்ல, 'ரெக்கார்டு' பண்ணியிருக்கேன்,'' என்று போனைத் துாக்கிக் காட்டி, விருட்டென்று திரும்பினாள், தீபா.

அவள் வழியை மறித்து நின்றான், வருண்.

''அக்கா, ப்ளீஸ்... அவங்க பண்ணது தப்பு தான். எல்லாரும், 'பைனல் இயர்'ல இருக்காங்க. இன்னும் ஆறு வாரத்துல, பரீட்சை எழுதி, பாஸ் பண்ணிட்டு ஏதோ ஒரு வேலையத் தேடிக்கிட்டு போயிடுவாங்க. இப்ப போலீஸ்ல புகார் குடுத்து, அவங்க எதிர்காலத்தையே வீணாக்கிடாதீங்க. 'ரெக்கார்டு' பண்ணதை அழிச்சிருங்க,'' என்று கையை நீட்டினான், வருண்.

''நோ சான்ஸ்,'' என்று போனை முதுகில் மறைத்தவள், ''இதப் பார், அக்கா, முக்கான்னு நீ உறவு கொண்டாடாதேன்னு எத்தனை முறை சொல்றது? போலீஸ்ல உன் பேரும் தான் எழுதிக் கொடுக்கப்போறேன்,'' என்றாள், தீபா.

பொறுமை இழந்தவனாக, ஒரே எட்டில் அவள் கையிலிருந்து போனைப் பறித்தான், வருண்.

அவனை, அவள் நெருங்க விடாமல் மற்றவர்கள் சூழ்ந்து நிற்க, வருண் அவள் போனில் பதிவாகியிருந்த காட்சியை அழித்தான்.

போனை அவளிடமே திருப்பிக் கொடுத்தான்.

''வெரி சாரி. இங்க நடந்தது எல்லாத்துக்கும் மாணவர் தலைவன் என்ற முறைல நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். 'ராகிங்' பத்தி உங்களுக்கு என்ன தகவல் வேணுமோ, எல்லாம் நான் தரேன். ஆனா, போலீஸ்ல இத்தனை பேருக்கு எதிரா புகார் சொன்னீங்கன்னா, மொத்த 'ஸ்டூடன்ட்ஸ்'க்கும் நீங்க எதிரி ஆயிடுவீங்க. அப்புறம் பத்திரமா வெளிய நடமாட முடியுமான்னு யோசிச்சுக்குங்க,'' என்றான், வருண்.

சைக்கிளை நிமிர்த்தி அவன் மிதித்துச் சென்றுவிட, அடுத்த கணம் வீராவும், நண்பர்களும் மாயமாகியிருந்தனர்.

அங்கேயே சற்று நேரம் நின்றுவிட்டு, பிரின்சிபால் அறை நோக்கி வேகமாக நடந்தாள், தீபா.

உள்ளே நுழைந்தவள் திகைத்து நின்றாள். அவளை முந்திக்கொண்டு அங்கே வந்திருந்தான், வருண்.

பிரின்சிபால் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தவர், ''இதோ அவங்களே வந்துட்டாங்க,'' என்று போனைத் தழைத்து, தீபாவிடம் நீட்டினார்.

''எனக்கா?'' என, குழப்பத்துடன் போனை வாங்கினாள், தீபா. எதிர்முனையில் அவள் வேலை செய்யும் பத்திரிகை அலுவலகத்திலிருந்து, சீப் எடிட்டர், பேசினார்.

''அங்க நடந்ததை பிரின்சிபால் சொன்னாங்கம்மா. நாட்டு எல்லைல சில சமயம் போரை கவர் பண்ணப்போற, 'ஜர்னலிஸ்ட்' அனுபவிக்கறதை விட, இது பெரிசில்ல. இதை ஒரு, 'பிராக்டிகல்' ஜோக்கா நெனச்சு, பசங்கள மன்னிச்சு விட்டுருங்க. போலீஸ் அது இதுன்னு போனா, நமக்குத்தான் நேர விரயம். ஒரு தடவை, பொது இடத்தில் அத்துமீறி கட்சி ஆளு வீடு கட்டியிருந்ததைப் பத்தி நான், 'கவர்' பண்ணப்போய், கைமுறிஞ்சு ஆறுவாரம் ஆஸ்பத்திரில இருந்திருக்கேன். இதெல்லாம் நிருபர் வாழ்க்கைல ஒரு சுவாரசியமான அனுபவம்,'' என்று எடிட்டர், சொல்லச்சொல்ல, மறுத்து எதுவும் பேச முடியாமல், ''ஓ.கே., சார்,'' என்றாள், தீபா.

''மத்த மாணவர்களை சந்திச்சு தகவல் வாங்க, அவங்க யூனியன் லீடர் உங்களுக்கு எல்லா விதத்திலயும் ஒத்துழைப்பு தருவாருன்னு, பிரின்சிபால் சொன்னாங்க. வாழ்த்துக்கள், தீபா,'' என்று தொடர்பைத் துண்டித்தார், எடிட்டர்.

''வருண் எங்க காலேஜோட பெருமை. அவன் உங்களுக்கு தேவையான தகவலை சேகரிச்சு கொடுப்பான். உங்களை கலாட்டா பண்ண பசங்களை ஒரு வாரம், 'சஸ்பென்ட்' பண்ணிட்டேன்,'' என்று சொன்னார், பிரின்சிபால்.

பிரின்சிபாலுக்கு நன்றி சொல்லி எழுந்தான், வருண்.

''வாங்க, போலாம்,'' என்றான், தீபாவிடம். கவனமாக, அக்கா என்று அழைக்காமல் அவன் தவிர்க்கிறான் என்பதை கவனித்தாள், தீபா.

முகத்தில் எரிச்சலுடன் அவன் பின்னே போனாள், தீபா.

ஆ ராதனா, கோவாவின், 'டபோலிம்' விமான நிலையத்தை விட்டு வெளிப்பட்டபோது மெலிதாக மழை துாறிக் கொண்டிருந்தது. வாடகைக் கார் எடுத்து வந்திருந்தான், யுவராஜ்.

''சாரி, யுவா. நாலு நாள் உன்னை காக்க வெச்சிட்டேன்,'' என்றாள், ஆராதனா.

''சேச்சே, அம்மாவோட பொறந்தநாள் முக்கியம். முதல் தடவையா வெளிய வந்தாங்கன்னு சொன்னியே... அதைவிட இது பெரிசில்ல,'' என்றான், யுவராஜ்.

வளைந்து நெளிந்து, ஏறி இறங்கிய, கோவா சாலைகள் சென்னையை விட சுத்தமாக இருந்தன. அந்த சிறிய காரைச் செலுத்திக் கொண்டே பேசினான், யுவராஜ்...

''தீபாவோட அம்மா என்ன சொன்னாங்க?'' என்றான்.

''காழ்ப்பில்லாம தான் பேசினாங்க. அம்மாவோட முகத்தை பார்த்து, 'ஷாக்' ஆயிட்டாங்க. யார் இந்த கொடுமைய பண்ணினதுன்னு மறைமுகமா கேட்டாங்க. அம்மா பதில் சொல்லாம மழுப்பிட்டாங்க,'' என்றாள், ஆராதனா.

''குட்.''

''நேத்து போன்ல, தீபாவோட அம்மாகிட்ட பேசினேன். தீபா ரெண்டு நாளா அவங்ககூட பேசலயாம். வருத்தத்தோட சொன்னாங்க,'' என்றாள், ஆராதனா.

''அந்தப் பொண்ணு ஒரு அவசரப் பட்டாசு, ஆரூ,'' என்றான், யுவராஜ்.

''இப்ப அவ ஒரு பத்திரிகைல வேலைக்கு சேர்ந்திருக்கா.''

''நல்லது தான், ஆரூ. வீட்லயே இருந்தா அவங்கம்மாவை மென்ட்டலாக்கிடுவா,'' என்று கூறியபடி, காரை வளைத்துத் திருப்பினான், யுவராஜ்.

அந்த, 'ரிசார்ட்' கடற்கரையை ஒட்டி இருந்தது. தனித்தனி இரட்டைக் குடில்கள். அதில் ஒன்றை நெருங்கி கார் நின்றது.

''நமக்கு மாடி போர்ஷன்,'' என்று பயணப் பையுடன் படியேறினான், யுவராஜ்.

கு ளித்து உடைமாற்றி வந்து அமர்ந்தாள், ஆராதனா.

இரண்டு கோப்பைகளில் சூடான தேநீர் கொண்டு வந்து வைத்தான், யுவராஜ்.

''அஷ்வத்தோட கேசினோவும் இதே ஏரியா தான், ஆராதனா,'' என்றான்.

''யுவா, இந்த தடவை, அஷ்வத் பேரை நீயா எடுக்கற வரைக்கும் நான் எடுக்கக்கூடாதுன்னு கவனமா இருந்தேன்,'' என, சிரித்தாள்.

''அஷ்வத் என்னென்னவோ பிசினஸ் பண்ணிட்டிருந்தான்னு சொன்னேனே. அதுல ஒண்ணு, 'ரெடிமேட் துணி' வியாபாரம். ஆறேழு வருஷத்துக்கு முன் அவன் ஒரு பெரிய, மால்ல ஷோரூம் வெச்சிருந்தான். அந்த மால் எங்க இருந்துச்சு தெரியுமா? ஆரூ.''

''சஸ்பென்ஸ் வெக்காத, யுவா.''

''ஜடாயு மால். ஹைதராபாத்துல இருக்கே. அங்க, ரெண்டாவது மாடில,'' என்றான்.

''மைகாட்,'' என்று கோப்பையைத் தவற விட்டாள், ஆராதனா. கார்பெட்டில் விழுந்ததால், பீங்கான் கோப்பை உடையவில்லை. தேநீர்க் கறை பரவ ஆரம்பிக்கும் முன், அந்தப் பீங்கான் கோப்பையை நிமிர்த்தி எடுத்தான், யுவராஜ்.

நெற்றியைப் பிடித்துக் கொண்ட, ஆராதனா...

''அந்த மால்ல, எங்க மேல, 'ஆசிட்' அடிச்சதை அவன் பார்த்திருப்பானா?''

''நிச்சயம் வாய்ப்பிருக்கு. இப்போ தெரியுதா, ஞானசேகரன் அங்கிளை அவன் எப்படி, 'பிளாக்மெயில்' பண்ணி, தன் இஷ்டத்துக்கு வளைச்சிருக்கான்னு?'' என்றான், யுவா. ஆராதனாவின் முகம் இறுகியது.

''அந்த, ராஸ்கல் யாருன்னு பார்க்கணும், யுவா. அவன் கோவா கேசினோவுக்கு வரானா?''

''கேசினோ அவனோடது. ஆனா, அவன் நாசிக்ல தான் பாதிநாள் இருப்பானாம். விசாரிச்சேன். சில சமயம் ஞாயித்துக்கிழமைல மட்டும் இங்க வருவான்னு சொன்னாங்க. நமக்கு அதிர்ஷ்டமிருந்தா நாளைக்கு வரலாம். நீ, அவன் முகத்தை இதுவரை பார்த்ததில்ல. ஆனா, அவன் உன் முகத்தைப் பார்த்திருப்பான் இல்ல? உன்னை இங்க பார்த்தா, 'அலர்ட்' ஆகிடுவான், ஆரூ.''

''அப்ப என்ன செய்யலாம், யுவா?''

''நீ பர்தா போடலாம். ஆனா, கேசினோல அது கொஞ்சமும் பொருந்தாது, ஆரூ.''

''சினிமால வர்ற மாதிரி நான் ஏதாவது மாறு வேஷம் போட்டுக்கவா?'' என்றாள், ஆராதனா.

''வேடிக்கையா நீ பேசினாலும், அதுக்கு வாய்ப்பு இருக்கு. எப்பவும், பொய் மீசை, ஒட்டு தாடின்னு எங்கிட்ட இருக்கும். என் தொழில் அப்படி. உனக்கு மீசையை ஒட்டி, தொப்பி போட்டு, ஒரு ஓவர் கோட்டையும் போட்டுவிட்டா, சட்டுன்னு அடையாளம் தெரியாது, ஆரூ.''

சற்று யோசித்து, மறுத்து தலையசைத்தாள், ஆராதனா.

''பழக்கமில்லாத வேலை. மீசை கீசை கழண்டு விழுந்தா, அசிங்கமாயிடும். அஷ்வத் நாளைக்கு தான வர வாய்ப்பிருக்கு. இன்னிக்கே கேசினோக்கு போவோம்,'' என்றாள், ஆராதனா.

''சாயந்திரம் போலாம். இப்ப பீச்சுக்குப் போலாம், வரியா?'' என்றழைத்தான், யுவராஜ்.

''இப்படியேவா, மீசை ஒட்டிக்கிட்டா?'' என்று சிரித்தாள், ஆராதனா.

மா லை கேசினோவில், யுவராஜும், ஆராதனாவும் நுழைந்தனர்.

எங்கு பார்த்தாலும், இயந்திரங்கள் வண்ண வண்ண வெளிச்சத்தை உமிழ்ந்தன; 'கிர்கிர்' சத்தத்துடன் இயங்கின. பலதரப்பட்ட மக்கள் அவற்றின் எதிரில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

நாற்காலி நுனியில் அமர்ந்து மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்த ஒரு பெண்மணியின் தோளைத்தொட்டு அழைத்தாள், ஆராதனா.

''உங்க பர்ஸ் கீழ கிடக்கு,'' என்று எடுத்துக் கொடுத்தாள்.

அப்பெண்மணி விருட்டென்று எழுந்து, பர்ஸை, ஆராதனாவின் முகத்தில் எறிந்தாள்.

புரியாத மொழியில் சரமாரியாக ஏதோ ஆவேசத்துடன், ஆராதனாவைப் பார்த்துக் கத்தலானாள்.

என்ன ஆயிற்று என்று புரியாமல் திகைத்து நின்றாள், ஆராதனா.



- தொடரும்.- சுபா






      Dinamalar
      Follow us