
முன்கதைச் சுருக்கம்: கோ வாவில் , அஷ்வத் நடத்தும் , 'கேசினோ' எனப்படும் சூதாட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்றனர், ஆராதனாவும், யுவராஜும்.
அங்கு, ஒருவன், ரகசியமாக ஏதோ ஒரு பொட்டலத்தை பாப்கார்னில் போட்டு ஒரு சிலரிடம் மட்டும் கொடுப்பதைக் கவனித்து, 'அது போதை மருந்தாக இருக்குமோ...' என்று சந்தேகப்பட்டு, யுவராஜிடம் தெரிவித்தாள், ஆராதனா.
அது குறித்து, ஆதாரத்துடன் கண்டுபிடித்து தருவதாக அவன் கூற, எம்.டி., கல்யாண் மேத்தாவுடன் தான் வெளிநாட்டுகளுக்கு, செல்ல இருப்பதை தெரிவித்து, சென்னை திரும்பினாள், ஆராதனா.
தீபா எழுதி கொடுத்த, 'ராகிங்' பற்றிய கட்டுரை சிறப்பாக வந்திருப்பதாக பாராட்டிய, எடிட்டர்...
'இது சம்பந்தமாக, 10 ஆண்டுகளுக்கு முன், நாளிதழ்களில் வெளியான தகவல்களையும் சேகரித்து எழுதினால், சுவாரஸ்யமாக இருக்கும்...' என்று கூறினார்.
அச்செய்திகளை பொது நுாலகத்திற்கு சேகரிக்க செல்லும், தீபா, 'ஆறு ஆண்டுகளுக்கு முன், தன் முகத்தில் அமிலம் அடிக்கப்பட்டது பற்றி நாளிதழ்களில் படித்திருக்கலாமே...' என்று, ஆராதனா சொன்னது ஞாபகம் வர, அந்த செய்தியை நுாலகத்தில் தேடி கண்டுபிடித்தாள்.
அந்த ஆங்கில நாளிதழின், ஹைதராபாத் பதிப்பில், ஆறு ஆண்டுகளுக்கு முன் வந்திருந்த செய்தி, மூன்றாம் பக்கத்தில் ஒரு பெட்டிச் செய்தியாகத் தான் வெளியாகியிருந்தது. அதை, நிதானமாகப் படித்தாள், தீபா.
அம்ருதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஹைதராபாத் கல்லூரியில் இறுதியாண்டில் படிக்கும் ஓர் இளம் பெண். இவர் தன் தாயுடன் கடை வீதிக்கு வந்திருக்கிறார். அப்போது, முகத்தை மறைத்தபடி குறுக்கிட்ட, இளைஞர் ஒருவர், அந்த இளம் பெண்ணின் முகத்தைக் குறிவைத்து அமிலத்தை வீசியிருக்கிறார். குறுக்கிட்ட பெண்ணின் தாய் முகத்தில் அந்த அமிலம் தாக்கி அவர் துடிதுடித்த சம்பவம், நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய், மகள் இருவருமே சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காதலை ஏற்க மறுத்ததன் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று, அம்ருதா சொன்னதாகவும், காவல்துறை மேலும் விசாரணை மேற்கொண்டிருப்பதாகவும், சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை தீவிரமாகத் தேடி வருவதாகவும் ஆய்வாளர், வசந்தகுமார் தெரிவித்தார். அந்தச் செய்தியை, தன் மொபைல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டாள், தீபா.
பெயர் மாற்றப்பட்டதாகக் குறிப்பிட்டிருப்பது, ஆராதனாவை தான் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால், நிகழ்வு சென்னையில் இல்லாமல், ஹைதராபாத்தில் என்பது அவள் பரபரப்புக்குச் சற்று பின்னடைவை தந்தது.
வீட்டிற்கு வந்து, ஆராதனாவுக்கு போன் செய்தாள்.
''ஹாய், தீபா. 'வாட் எ சர்ப்ரைஸ்!' நான் இப்ப ஆபீஸ் விஷயமா, எம்.டி.,யோட சிங்கப்பூர் கெளம்பிட்டிருக்கேன். ஏதாவது அவசரமா?''
''ஒரே கேள்வி. உன் மூஞ்சில, 'ஆசிட்' அடிச்சது ஹைதராபாத்லயா, ஆராதனா?''
பதில் இல்லை.
''ஆராதனா, உண்மையச் சொல்லு. அது, ஹைதராபாத்தா?''
''செக்-இன் பண்ணிட்டிருக்கேன். அப்புறம் பேசறேன்,'' என்று மறுமுனை துண்டிக்கப்பட்டதும், தீபாவின் முகம் சிவந்தது.
''ஆமா, இல்லைன்னு பதில் சொல்ல எத்தனை நேரமாயிடும்? 'செக்-இன்' பண்றதா சொல்லி, 'கட்' பண்ணிட்டா. திமிர் பிடிச்சவ,'' என்று தன் அம்மா, மஞ்சுளாவிடம் பொருமினாள், தீபா.
''தப்புன்னு சொல்லணும்ன்னா உடனே சொல்லியிருப்பாளே. பதிலே சொல்லலைன்னா, அது, 'கரெக்ட்'ன்னு தான அர்த்தம், தீபா?'' என்றாள், மஞ்சுளா, கையில் இருந்த பந்து ஒன்றை அழுத்துவதும், விடுவிப்பதுமாக பயிற்சி செய்து கொண்டே!
''அம்மா, இப்ப அந்தக்கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க நான், ஹைதராபாத் போகணும்.''
''எதுக்கு, தீபா. கண்டுபிடிச்சு என்ன ஆகப்போகுது?''
''ஏம்மா, ஆராதனாவுக்கு எதுக்கு அப்பா அப்படி செல்லம் குடுத்தார்ன்னு தெரிஞ்சுக்க வேணாமா? ஒருவேளை புருஷன் விட்டுட்டுப் போயிட்டான்னு தெரிஞ்சு, அப்பாவே, அவங்கம்மா மீது ஆசைப்பட்டிருப்பாரோ? அவருக்கு வளைஞ்சு கொடுக்காததுக்கு அவரே ஆளை வச்சி, 'ஆசிட்' அடிச்சிருப்பாரோ?''
''சீச்சீ, வாயக்கழுவு. உன் புத்தி ஏன் இப்படி கோணலாப் போகுது, தீபா?''
''நீயும் தான அப்பாவை சந்தேகப்பட்டே?''
''அது மொதல்ல. ஆராதனாவோட அம்மாவைப் பார்த்தப்புறம், அந்த சந்தேகம் எவ்ளோ முட்டாள்தனமானதுன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு, தீபா.''
''நீ எப்படியோ இருந்துட்டுப்போ! பதில் தெரியலைன்னா எனக்கு மண்டை வெடிச்சிரும். நான் ஆபீஸ்ல லீவு கேட்டு, ஹைதராபாத் போகத்தான் போறேன்,'' என்றாள், தீபா.
சி ங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து ஓர் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதை கவனித்து ஆச்சரியமடைந்தாள், ஆராதனா.
சிங்கப்பூர் துறைமுகத்தில், முக்கியமான அதிகாரிகளுக்கு, ஆராதனாவை அறிமுகம் செய்து வைத்தார், கல்யாண் மேத்தா. அவர்கள், அவளுக்கு அங்குள்ள சுங்க நடைமுறை விதிகளைப் புரிய வைத்தனர். புதிய பணிகளைக் கற்றுக்கொள்வதில், ஆராதனா காட்டிய ஆர்வம் கண்டு, கல்யாண் மேத்தாவுக்கு மகிழ்ச்சி.
அவர் தங்கும் அதே, ஐந்து நட்சத்திர விடுதியில், அவளுக்கும் தனியறை போட்டிருந்தது, கம்பெனி. உரிய மரியாதையும், அன்பும் வழங்க, கல்யாண் மேத்தாவும் தவறவில்லை.
விலை உயர்ந்த காரில் அவருடன் பயணப்பட்டபோது, திடீரென்று அவர் பேச்சைத் துவங்க, கவனத்தை அவர் பக்கம் திருப்பினாள், ஆராதனா.
''உன்னை, என் மகளா நெனச்சு சொல்றேன். எனக்கு ஏற்கனவே இருக்கற பிசினஸ்களோட சேர்த்து இந்த, 'ஷிப்பிங்' கம்பெனியையும் நிர்வாகம் பண்றது கஷ்டம்ன்னு பயந்தேன். ஆனா, நீ எனக்கு முழு விடுதலை குடுத்துட்ட. கம்பெனியோட பங்கு விலை சுறுசுறுன்னு ஏறிட்டிருக்கு,'' என்றார், முக மலர்ச்சியுடன், கல்யாண் மேத்தா.
''கொடுத்த வேலையை நேர்மையா, முழு ஈடுபாட்டோட செய்யறேன், சார். அதுக்கு தான சம்பளத்தையும், 'ஷேரா' வாங்கறேன்?'' என்றாள், ஆராதனா.
''முத்துராமனை நம்ம கொல்கத்தா கிளைக்கு எம்.டி.,யா போட்டு அனுப்பலாம்ன்னு யோசிக்கறேன். அவருக்கும் சந்தோஷம் தான்,'' என்றார், கல்யாண் மேத்தா.
''அவர் ரொம்ப சீனியர், சார். நல்ல முடிவு,'' என்றாள்.
''உனக்கும் இன்னும் கூடுதல் பொறுப்பு கொடுக்க ஒரு வாய்ப்பு வருது, ஆராதனா.''
''சார், எனக்கு இந்த ஜி.எம்., பதவியே திருப்தியாத்தான் இருக்கு.''
''வெயிட். நம்ம டைரக்டர்ஸ்ல ஒருத்தர் விலகணும்ன்னு சொல்றாரு. ஜெர்மனில மகனோட செட்டிலாகப் போறாராம். அந்த இடத்துக்கு உன்னைத் தான் சிபாரிசு பண்ணலாம்ன்னு இருக்கேன்.''
சிலிர்த்தாள், ஆராதனா. ஆனால், 'வெறும் கோழிச்சிறகுகளை வைத்துக்கொண்டு கழுகாகப் பறக்க முடியுமா என்ன?' என்று நினைத்தவள்...
''சார், விலக நினைக்கற டைரக்டருக்கு, 'காம்பன்சேஷன்' கொடுக்கணுமில்ல?'' என்று கேட்டாள்.
''அப்கோர்ஸ். அவருக்கு கம்பெனில, 20 சதவீத, 'ஷேர்' இருக்கு. அதை, நீ வாங்கிட்டா போதும்.''
''அதுக்குக் கோடிக்கணக்குல பணம் வேணுமே, சார்.''
''உனக்கு கடன் தரச்சொல்லி பேங்க்ல நானே சிபாரிசு பண்றேன், ஆராதனா,'' என்றார், கல்யாண் மேத்தா.
நெஞ்சுக்குள், பூரிப்பில் பொங்கினாள், இன்னொரு, ஆராதனா...
'ஏய், எப்பேர்ப்பட்டதொரு வாய்ப்பு! ஆனால், இவ்வளவு விரைவில் உன் கனவு கைகூடும் என்று நீயே எதிர்பார்க்கவில்லை தானே!' என்று தனக்குள் பேசி, குதுாகலமானாள்.
''ரெண்டு வாரம், 'டைம்' கொடுங்க, சார். யோசிச்சு சொல்றேன்.''
ஆராதனாவின் மனதில் சில திட்டங்கள் உருவாகத் துவங்கின.
தி லகன், டீ குடிக்க, தன் அறையை விட்டு வெளியே வந்தபோது, 'கெஸ்ட் ஹவுஸ்' வாசலில் ஒரு பென்ஸ் கார் வந்து நிற்பதை கவனித்தான்.
டிரைவர் இறங்கி, வணக்கம் சொன்னதும் தான் அவனுக்கு அடையாளம் புரிந்தது.
சண்முகம்! மும்பை வந்து இறங்கியபோது, அவனை அழைத்துச் செல்ல விமான நிலையத்துக்கு வந்தவர்.
''வணக்கம், சண்முகம். எப்படியிருக்கீங்க?''
''நல்லா இருக்கேன், சார். எம்.டி., வீட்ல ஒரு, 'பார்ட்டி.' உங்களை கூட்டிட்டு வரச் சொன்னாரு.''
திலகனுக்கு பரபரப்பு கூடியது.
''என்னையா கூட்டிட்டு வரச் சொன்னாங்க?''
''ஆமா, சார். கார்ல, 'வெயிட்' பண்றேன்,'' என்று கூறி சென்றார், டிரைவர், சண்முகம்.
உடை மாற்ற அறைக்கு விரைந்தான், திலகன்.
வி ட்டல் ராஜின் பங்களா, மும்பை, நாரிமன் பாயின்ட்டில் இருந்தது. உயரமான கேட்களுக்கு வெளியே, 'செக்யூரிட்டி' ஆசாமிகள். உயர்ந்து நிற்கும் அசோக மரங்கள். காம்பவுண்டு சுவரில் பலுான் பலுானாக மஞ்சள் விளக்குகள். மரங்களின் கிளைகள் எல்லாம் மின்சார நகைகள் அணிந்திருந்தன.
கான்க்ரீட் வழுக்கலில் கார் உருண்டது. பங்களாவின் ஜன்னல்களெல்லாம் வெளிச்சச் சதுரங்களாக இருட்டை மறந்திருந்தன. எங்கிருந்தோ உருவாகி, ஓடி வந்து, அவன் கையைப் பிடித்தாள், நிமிஷா. எம்பிராய்டரி செய்த, மஞ்சள் சூரிதாரில் மின்சார ஒளியில் வானிலிருந்து இறங்கிய தேவதை போல் தெரிந்தாள்.
''இதான் நான் சொன்ன, சர்ப்ரைஸ்,'' என்று அவனைக் கூட்டிச் சென்றாள், நிமிஷா.
பங்களாவின் பின்புறம் இருந்த சின்ன நீச்சல் குளத்தின் இருபுறம் இருந்த தோட்டம், ஆங்காங்கு சிதறியிருந்த நாற்காலிகள், கோட்சூட் மனிதர்கள், கண்ணாடிக் கோப்பைகளின், 'க்ளிங், க்ளிங்!' ஹலோக்கள், ஹாய்கள், சிரிப்புகள் என, நிறைந்திருந்தன.
திலகன், சற்றுத் தயக்கத்துடன் அங்கே நிற்க, ''வா, வா,'' என்று, அவனை இழுத்துச் சென்றாள், நிமிஷா.
விருந்தாளிகளுடன் நின்று பேசிக்கொண்டிருந்த, விட்டல்ராஜ் அங்கிருந்து விலகி அவனருகில் வந்தார்.
''மீட் மை அங்கிள்,'' என்றாள், நிமிஷா.
திலகன் திகைத்துப் பார்க்க, ''இப்பதான் சொல்றாளா?'' என்று கேட்டபடி வந்து நின்றாள் ஒரு, பெண்மணி.
''மாயா, என் மனைவி,'' என்றார், விட்டல்ராஜ். அவள் கழுத்தில் வைரங்கள் மினுக்கின.
''ஜப்பான் கம்பெனியோட புதுசா ஒரு ஒப்பந்தம் ஆகியிருக்கு. அதுக்கு தான், 'பார்ட்டி.' நான் உன்கிட்ட அப்புறம் பர்சனலா பேசறேன்,'' என்று, விட்டல்ராஜ் விலகிப்போக, ''ஹாய், திலக்,'' என்று அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டாள், நிமிஷாவின் அம்மா.
''இது, ரேகா, எங்கம்மா. ஞாபகம் இருக்கா?'' என்று கண்ணடித்தாள், நிமிஷா.
''ரேகா என் தங்கை,'' என்றாள், விட்டல் ராஜின் மனைவி. இருவருக்கும் ஒரே முகச்சாயல்.
''ஹாய் ஆன்ட்டி,'' என்று சொல்வதற்குள், திலகனின் உதடுகள் உலர்ந்து விட்டன.
''நிமிஷா, ரேகாவுக்கு பொறந்தாலும், எங்களோட செல்லக்குட்டி. உன்னைக் கூட்டிட்டு வந்து அறிமுகம் பண்றேன்னு சொல்லியிருந்தா,'' என்றாள், விட்டல்ராஜின் மனைவி.
திலகனுக்கு ஏதோ ஒரு மாய உலகத்துக்குள் வந்து விட்டாற் போல் இருந்தது.
சிறிது நேரம் சென்னை பற்றி, அவன் கல்வி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
''ஓ.கே., ஹேவ் பன்,'' என்று கூறி, சகோதரிகள் விலகிச் செல்ல, திலகனை மது வகைகள் வழங்கும் மேஜைக்கு இழுத்துப் போனாள், நிமிஷா.
''பிடிச்சதெல்லாம் சாப்பிடு.''
மதுவைத் தொடாமலேயே, திலகனுக்கு போதை ஏறியது போல் இருந்தது.
''ஹலோ மை ஸ்வீட்டி,'' என்று, நிமிஷாவின் எதிரே வந்து நின்றான், இளைஞன் ஒருவன். அதிகபட்சம், 26 வயதிருக்கலாம். எலுமிச்சை நிற சருமம். அடர்த்தியான மீசை. உதடுகள் ரோஸ் நிறம்.
நிமிஷாவின் முகம் மாறியது.
''கெட்லாஸ்ட்,'' என்று அவனிடம் உறும, அவன் சிரித்துக் கொண்டே விலகினான்.
''இன்னிக்கு, 'பார்ட்டி' முடிஞ்சவுடனே உன்கிட்ட ஒரு விஷயம் பேசலாம்ன்னு இருந்தேன். இப்பவே கேக்கறேன். என்னை கல்யாணம் செஞ்சுக்கிறயா?'' என்றாள், நிமிஷா.
மிரண்டான், திலகன்.
முதலில், தீபா. இப்போது இவள். அவனுடைய அந்தஸ்திற்கு பொருத்தமேயில்லாத பெண்கள், தங்கள் காதலைச் சொல்கின்றனர்.
அடுத்த சில மணிநேரம் எப்படி நழுவியது என்றே, திலகனுக்கு தெரியவில்லை.
'பார்ட்டி'யின் கடைசி விருந்தாளிகள் சற்றே தள்ளாடியபடி விடைபெற, விட்டல்ராஜ் சிகரெட்டை அணைத்துவிட்டு, அவன் எதிரில் வந்து நின்றார்.
''உனக்கு சென்னைல ஒரு சின்ன வேலை வெச்சிருக்கேன். முடிச்சிட்டு, உன் அப்பா, அம்மாவை மும்பைக்கு கூட்டிவா. அவங்ககிட்ட நான் பேசறேன்.''
பொம்மைபோல் தலையாட்டினான், திலகன்.
அ மெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் அமைந்திருந்த, நியூயார்க் - நியூஜெர்சி துறைமுகம் குளிரில் நடுங்கி கொண்டிருந்தது.
''இது, சர்வதேச சந்தைகளுக்கான சரக்கு கப்பல்கள் சந்திக்கும் முக்கியமான துறைமுகம்ன்னு படிச்சிருக்கேன். இன்னிக்கு தான் பாக்கறேன். அப்பா, எவ்ளோ பெரிசு,'' என்று, கல்யாண் மேத்தாவிடம், ஆராதனா சொல்லிக் கொண்டிருந்தபோது, அவளுடைய போன் ஒலித்தது.
''பரவாயில்ல, பேசு,'' என்று சொல்லி, அங்கிருந்த ஊழியருடன் பேசப் போய் விட்டார், கல்யாண் மேத்தா.
ஆராதனா, தன் போனைப் பார்த்தாள். அஷ்வத்தின் அலுவலகத்திலிருந்து அழைப்பு.
எடுத்தாள்...
''எப்ப, 'மீட்' பண்ணலாம்?'' என்று, மறுமுனையிலிருந்து கேட்டான், அஷ்வத்.
- தொடரும்- சுபா

