PUBLISHED ON : ஏப் 12, 2026

முன்கதைச் சுருக்கம்: ஆராதனா மீது, 'ஆசிட்' வீசியது யார் என, தெரிந்து கொள்வதற்காக, ஹைதராபாத் சென்றாள், தீபா. அச்செய்தி வெளியான, பத்திரிகை அலுவலகத்துக்கு சென்று, விசாரித்தாள். அவர்கள், காவல் நிலையத்தில் விசாரிக்க சொல்ல, அந்த வழக்கை விசாரித்த, விஸ்வநாதன் என்ற ஓய்வு பெற்ற காவல் அதிகாரியை தேடி சென்றாள், தீபா.
அமெரிக்காவிலிருந்து, இந்தியா திரும்பிய, ஆராதனா, அஷ்வத்தை, நேரில் சந்திக்க, ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றாள். தனக்கு உடனடியாக, பெரும் தொகை வேண்டியிருக்கிறது, சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டிருப்பவன் என்பதால், தனக்கு உதவ வேண்டும் என்று, ஆராதானா கேட்க, சந்தேகமடைந்த அஷ்வத், சற்று யோசித்து, 'ஆசிட்' வீச்சுக்கு ஆளான பெண் தான் இவள் என்று அறிந்து, அவளை மிரட்டும் தொனியில் பேசினான், அஷ்வத்.
அஷ்வத்தின் மிரட்டலுக்கு, ஆராதனா அசைந்து கொடுக்காமல், அவனது கண்களை நேருக்கு நேராக பார்த்தாள்.
''எங்க மேல, 'ஆசிட்' அடிச்சபோது எடுத்த அந்த, 'புட்டேஜை' போலீஸ் கேட்டபோது இல்லைன்னு சொல்லியிருக்கே. அதை வெச்சு, ஞானசேகரன் அங்கிளை, 'பிளாக்மெயில்' பண்ணி, தப்பான வேலை செய்ய வெச்சிருக்கே. உன்னால, அவர் கம்பெனியே கவுந்துருச்சு. அதே மாதிரி என்னை மெரட்டப் பார்த்தா, நடக்காது. தடயத்தை மறைச்சதுக்காக என்ன, 'செக்ஷன்ல அரெஸ்ட்' பண்ணலாம், 'பிளாக்மெயில்' பண்ணதுக்காக உனக்கு என்ன தண்டனை கெடைக்கும் எல்லாம் தெரிஞ்சுதான் வந்திருக்கேன். அந்த, 'புட்டேஜை' தாராளமா, 'ரிலீஸ்' பண்ணிக்க. நீ வெச்ச நெருப்பு, உன்னையே பொசுக்கப் போவுது, அஷ்வத்,'' என்று, ஆராதனா சொல்லச் சொல்ல, வாய்விட்டுச் சிரித்தான், அஷ்வத். ''என் செல்வாக்கு பத்தி உனக்குத் தெரியாது, ஹனி.''
புன்னகைத்து எழுந்தாள், ஆராதனா.
அஷ்வத்தின் விஸ்கிக்கும் சேர்த்து பணம் கொடுத்துவிட்டு, விடுவிடுவென்று வெளிநடந்தாள்.
ஹைதராபாத்.
மறுநாள் காலைச் சிற்றுண்டி முடித்ததும், ஆட்டோ பிடித்தாள், தீபா.
ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர், விஸ்வநாத்தின் வீடு எளிமையாக இருந்தது. அப்போது தான் கோவிலிலிருந்து திரும்பியிருந்தார்.
தீபா சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டார்.
''நீங்க இவ்வளவு துாரம் பிடிவாதமா தேடி வந்திருக்கீங்கன்னா, அந்த விபரம் உங்களுக்கு ரொம்ப முக்கியமா வேணும்ன்னு எனக்குப் புரியுது.
''நுாத்துக்கணக்குல கேஸ் பார்க்கறோம். எல்லா பேரும் ஞாபகம் வெச்சுக்க முடியாது. ஆனா, தினமும் டைரி எழுதற பழக்கம் எனக்கு உண்டு. அதனால, என் டைரில நீங்க கேக்கற விபரம் இருக்கான்னு பார்த்துச் சொல்றேன்,'' என்றார்.
அவர் மனைவி கொடுத்த சுவையான தேநீரை அருந்தியபடி காத்திருந்தாள், தீபா.
டைரியுடன் வந்தார், விஸ்வநாத். பக்கங்களைப் புரட்டினார். மலர்ச்சியுடன் நிமிர்ந்தார்.
''உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கு, தீபா. என் டைரில அந்தக் கேஸ் பத்தி விபரமா எழுதியிருக்கேன். உங்களுக்கு என்ன விபரம் வேணும்?''
''ஆசிட் அடிச்சவன் எந்த காலேஜ்?''
''அவன் மாணவன் இல்லம்மா. காலேஜ் முடிச்சிட்டு, ஏதோ ஐ.டி., கம்பெனில வேலை பார்த்திட்டிருந்தான்.''
''அவன் சார்பா வக்கீலோட வந்தது?''
''வக்கீலைக் கூட்டிட்டு வந்தவர், ஞானசேகரன். சென்னையில பெரிய பிசினஸ்மேன்.''
''ஆசிட் அடிச்சவனுக்கு தண்டனை கெடைச்சதா இல்லியா?''
''இல்லம்மா. சம்பவம் நடந்த ஜடாயு மால்ல ஒரு கடைல, 'சிசிடிவி' இருந்துச்சு. அவங்ககிட்ட இந்த சம்பவத்தோட, 'புட்டேஜ்' இருக்குன்னு மொதல்ல சொன்னாங்க. அப்புறம் இல்லன்னு மறுத்திட்டாங்க. ஞானசேகரன் பணத்தை வீசி எறிஞ்சு அவனை விலைக்கு வாங்கிட்டார்ன்னு சொன்னாங்க.
''பாதிக்கப்பட்ட பொண்ணுகிட்டயும் பேசி, கேஸை வாபஸ் வாங்கிட்டதால, 'ஆசிட்' அடிச்சவனுக்கு தண்டனை எதுவும் கிடைக்கல.''
''அவன் பேராவது இருக்கா?''
''இருக்கும்மா.''
டைரியில் தேடி, ''அவன் பேரு, கவுதம்,'' என்றார்.
திகைத்தாள், தீபா.
''கவுதம்னா சொன்னீங்க?'' என்று அடிபட்ட குரலில் முனகலாய் கேட்டாள்.
அவள் அண்ணன் பெயரல்லவா அது?
''ஆமாம் போலீஸ், 'அரெஸ்ட்' பண்ணபோது போதை மருந்து சாப்பிட்டிருந்தான். அதனால, விசாரணைல அவனால ஒத்துழைக்க முடியல. ஆனா, ஞானசேகரன் மேலிடத்துல பேசி, எந்தக் குற்றமும் அவன் பேர்ல பதிவாகாம பாத்துக்கிட்டாரு. கவுதமை கையோட கூட்டிட்டுப் போயிட்டாரு.''
மேற்கொண்டு எதுவும் கேட்க, தீபாவுக்குத் துணிவில்லை. அவள் அப்பா அவளிடமோ, அவள் அம்மாவிடமோ, அலுவலகத்தில் எவரிடமோ ஏன் இதுபற்றி சொல்லாமல் தவிர்த்திருக்கிறார் என்று இப்போதல்லவா புரிகிறது!
கீர்த்திலால் அதே பால்கனியில், அதே சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தார்.
''நீ, வீட்டுக்கு வந்து பார்க்கணும்ன்னு சொன்னாலே எனக்கு, 'டென்ஷன்' ஆவுது. உன் ராஜினாமாவை ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டேனே. எத்தனை தடவை கேட்டாலும் அதேதான் பதில்.''
தங்க ப்ரேம் போட்ட கண்ணாடி வழியே, எதிரில் பணிவுடன் அமர்ந்திருந்த, ஆராதனாவை பார்த்து, மறுத்து தலையசைத்தார்.
''இல்ல, சார். வாக்கு கொடுத்தபடி, நான் ராஜினாமா பண்ணல. உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டுப்போக வந்திருக்கேன்.''
''கல்யாணமா? அந்த, 'டிடக்டிவ்' பையனா?''
''அதுக்கு அப்புறம் வரேன், சார். என்னை, 'தீபா ஷிப்பிங் கம்பெனி'ல ஒரு டைரக்டரா ஆகறியான்னு, கல்யாண் மேத்தா கேக்கறாரு.''
சாய்வு நாற்காலி கதற, கீர்த்திலால் நிமிர்ந்து கை நீட்டினார். கை கொடுக்காமல், குனிந்து தன் தலையை நீட்டினாள், ஆராதனா. உச்சியைத் தொட்டு ஆசீர்வதித்தார், கீர்த்திலால்.
''ரொம்ப சந்தோஷம், ஆராதனா. இதுக்குத்தானம்மா நீ கடுமையா உழைச்சே?''
''ஆமா, சார்.''
''கல்யாண் மேத்தா, அவங்க கம்பெனில உன்னை நிரந்தரமா வளைச்சுப்போட எப்படி, 'பிளான்' பண்றான், பாரு,'' என்றதும், சிரித்தாள், ஆராதனா.
''ஆனா, என் வேர் எப்பவும் கீர்த்திலால் கம்பெனிலதான் இருக்கும், சார்.''
''நீ பேசத் தெரிஞ்சவம்மா.''
''உங்ககிட்ட இன்னொரு விஷயமும் சொல்லணும், சார்.''
கீர்த்திலால் மறுபடியும் சாய்ந்துகொள்ள, அஷ்வத் பற்றியும், அவனுடைய நிழலான பிசினஸ்கள் பற்றியும், அவளும், யுவராஜும் திரட்டியிருக்கும் ஆதாரங்கள் பற்றியும் சொன்னாள், ஆராதனா.
''போதை மருந்தாலே அடுத்த தலைமுறையே வீணாப்போயிடும், சார். அதுக்கு, அஷ்வத் போல இருக்கறவங்களுக்கு கெடைச்சிருக்கற அரசியல் தொடர்பும் ஒரு முக்கிய காரணம். அவனை அப்படியே விடக்கூடாது, சார்.''
கீர்த்திலால் கண்மூடி சாய்வு நாற்காலியில் சற்று ஆடினார். தில்லியில் மத்திய அமைச்சரவையில் முக்கிய துறை ஒன்றின் அமைச்சர் பெயரைச் சொன்னார்.
''எனக்கு அவரு ரொம்ப, 'க்ளோஸ் ப்ரெண்டு' நீயும், யுவராஜும் அத்தனை ஆதாரங்களையும் எடுத்துக்கிட்டு போய் அவரைப் பாருங்க. நான் சொன்னா, நிச்சயம் அவர் உதவி செய்வாரு.''
''ரொம்ப ரொம்ப தேங்க்ஸ், சார்,'' அவர் பாதங்களைத் தொட்டுப் பணிந்தாள், ஆராதனா.
தீபாவுக்கு சென்னை திரும்ப அச்சமாக இருந்தது. இலக்கில்லாமல், ஹைதராபாத்தின் வெவ்வேறு பகுதிகளை மேய்ந்தாள்.
முத்துகளும், வளையல்களும் நிறைந்த சந்தடி மிகுந்த சார்மினார், சாலர் ஜங் மியூஸியம், பிர்லா மந்திரின் உச்சியில் வருடிச் செல்லும் தென்றல் காற்று, கோல்கொண்டா கோட்டையின் சரித்திர நினைவுகள், ஹுசைன் சாகர் ஏரியின் கொக்கு பறக்கும் நீர்ப்பரப்பு மற்றும் ஏரிக்கரையோர நடைபாதை... ஹைதராபாத்தின் எந்த வசீகரமும், தீபாவின் மனதில் பதியவில்லை. நாதப்ரியனை திருப்தி செய்ய, தெலுங்கு சினிமா தொடர்பாக சில விபரங்களைச் சேகரித்ததோடு சரி, அதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
அவள் மனதை அரித்த ஒரே கேள்வி: 'போனாயே, 'ஆசிட்' அடித்தவன் யாரென்று கண்டுபிடித்தாயா?' என்று அம்மா கேட்பாளே, அவளுக்கு எப்படி பதில் சொல்வது? அவள் எப்படி உண்மையைத் தாங்குவாள்?
மனதை நிலைப்படுத்த, தீபாவுக்கு இரண்டு நாட்கள் பிடித்தன. கவனத்தை வேறு எதிலாவது திருப்ப வேண்டும் என்று மீண்டும் சினிமா ஸ்டூடியோக்களை தேடிப் போனாள்.
நான்கு நாட்களில் சில பேட்டிகள், சில சந்திப்புகள். எப்படியும் சென்னை திரும்பியே ஆக வேண்டும் என்ற உண்மை அவளை அறைந்தது.
ஹைதராபாத்தை விட, சென்னை இன்னும் அதிக வெப்பமாக இருந்தது.
தீபாவின் வருகையை ஆவலாக எதிர்பார்த்திருந்தாள், மஞ்சுளா.
செவிலியை அனுப்பிவிட்டு, மஞ்சுளாவின் எதிரில் அமர்ந்தாள், தீபா. அவள் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
''அம்மா, இப்ப நான் சொல்லப்போறதை கேட்டு, நீ, 'ஷாக்' ஆகக்கூடாது,'' என்றாள்.
மஞ்சுளா முகத்தில் கவலை ரேகைகள். 'சொல்லு' என்பது போல் தலையை ஆட்டினாள், மஞ்சுளா.
''ஹைதராபாத் போய், 'ஆசிட்' அடிச்சவனை பத்தி முழு விபரமும் சேகரிச்சுட்டேன். அது வேற யாருமில்ல, கவுதம்.''
மஞ்சுளா முகம் இறுகியது... ''என்ன சொல்றே, தீபா?''
''ஆமாம்மா. உன் செல்ல மகன், என் ஒரே அண்ணன், கவுதம் தான் அது. ஆராதனாவை ஒருதலையா ஆசைப்பட்டு, கெடைக்கலைன்னவுடனே, 'ஆசிட்' அடிச்சிருக்கான். அவனுக்கு போதை மருந்து பழக்கமும் இருந்திருக்கு. அவனை போலீஸ்லேர்ந்து காப்பாத்திக் கொண்டு வர்றதுக்காக அப்பா நமக்குத் தெரியாம வேலை செஞ்சிருக்காரு. அவன் பண்ண தப்புக்கு பிராயச்சித்தம் தேடித்தான், ஆராதனா குடும்பத்துக்கு அப்பா எல்லா உதவியும் பண்ணியிருக்காரு.''
அதிர்ந்து அமர்ந்திருந்தாள், மஞ்சுளா.
தீபாவின் போன் ஒலித்தது.
''திலகன் சென்னை வந்திருக்கான். என்னைப் பார்க்கணும்ன்னு போன் பண்ணிட்டிருக்கான். போய்ட்டு வந்துடறேன்மா.''
மஞ்சுளாவை சற்று நேரம் தனிமையில் விட்டால் தான், அந்தச் செய்தியின் முழுத்தாக்கமும் குறைந்து அவள் சகஜ நிலைக்கு வருவாள் என்று தோன்றியது. தனக்கே நான்கு நாட்கள் பிடித்தது. பெற்றவளுக்கு, இன்னும் அதிக நேரம் பிடிக்கலாம். அவள் எதுவும் ஆட்சேபிக்கும் முன், விருட்டென்று புறப்பட்டு விட்டாள், தீபா.
வழக்கமாக அவர்கள் சந்திக்கும் அதே இடத்தில் காத்திருந்தான், திலகன். தீபாவைப் பார்த்ததும், பிரகாசமாகும் முகத்தில் இப்போது வெளிச்சமில்லை.
அவன் முகம் மாறியிருந்தது. கன்னங்கள் சற்று உப்பி விட்டன. முன் நெற்றியில் சுருளாக வந்து விழும் முடியைக் காணோம். தெற்றுப்பல் தெரிய விரியும் சிரிப்பில் உண்மை இல்லை.
''தினம் காலைலயும், ராத்திரியும் என்கூட போன் பேசுவேன்னு மும்பை புறப்பட்ட போது, 'ப்ராமிஸ்' பண்ணியே, ஞாபகம் இருக்கா, திலக்?''
''ஸாரி, தீபு. வேலை அதிகம். முன்னுக்கு வரணும்ன்னு ஒரு வெறி. வேற எதிலயும் கவனம் போகல,'' என்று, அவள் கண்களை் பார்க்காமல் பதில் சொன்னான்.
மும்பை பற்றி, அதன் நெரிக்கும் போக்குவரத்து பற்றி, தன் வேலை பற்றி, வித்தியாசமான உணவு வகைகள் பற்றி என, எது எதையோ பேசிவிட்டு, ''அப்புறம் ஒரு விஷயம் தீபு,'' என்று தயங்கி இழுத்தான்.
' 'என்ன திலக்?''
''எம்.பி.ஏ.,ல கோல்டு மெடல் வாங்கினவன், ஆராதனாவை விட மேல வந்து காட்டணும்ன்னு சொல்வியே, நீ ஆசைப்பட்டது நிஜமாகறதுக்கு, ஒரு வாய்ப்பு வந்திருக்கு!''
''சூப்பர்டா!''
''விட்டல்ராஜ் என்னை, 'பிளான்' பண்ணித்தான் மும்பைக்கு வரவழைச்சிருக்காரு. அவருக்கு மட்டுமில்ல, அவர் குடும்பத்துல எல்லாருக்குமே என்னை ரொம்பப் பிடிச்சிருக்கு!''
''அந்த அளவுக்கு முதலாளியோட நெருக்கமாயிட்டியா, ஆச்சரியமாயிருக்கு!''
''ஆமா தீபு. கம்பெனில பெரிய பதவில என்னை உக்கார வைக்க அவர் ஆசைப்படறாரு.''
''எப்படி, திலக் அவ்வளவு துாரம் அவரை, 'இம்ப்ரஸ்' பண்ணினே?''
''நிமிஷான்னு என்கூட வேலை செய்யறவளோட, மாமா அவரு,'' என்றபோது, அவன் குரல் கம்மியது. ''ஸோ?'' அவனை ஆழமாகப் பார்த்தாள், தீபா.
''அவங்க குடும்பத்துல என்னை மாப்பிள்ளையாக்கிக்கணும்ன்னு ஆசைப்படறாங்க, தீபு,'' என்றான், திலகன், பார்வையைத் தழைத்துக்கொண்டு.
''பதவியக் காட்டி உன்னை விலைக்கு வாங்கிட்டாரா?''
''அப்படிலாம் பேரம் எதுவும் பேசலை, தீபு. ஆனா, அவ்வளவு பெரிய கம்பெனியோட முழுப் பொறுப்பும் என் கைக்கு சீக்கிரமே வரும். எப்படி என்னால மறுத்துப் பேச முடியும், சொல்லு. ரெண்டு தங்கைகளுக்கும் நல்ல எதிர்காலம் அமையறதுக்கு கிடைக்கற வாய்ப்பு இது.''
''உன் சுயநலத்துக்கு எதுக்கு அவங்களை காரணம் காட்டறே?'' என்றாள், தீபா.
அவள் பார்வையைத் தவிர்த்தான், திலகன்.
தன் இடத்தில், ஆராதனா இருந்தால் என்ன செய்வாள் என்று ஒரு கணம் யோசித்தாள், தீபா. சீற்றம் குறைந்து, அவள் உதடுகளில் ஓர் ஏளனப் புன்னகை வந்தமர்ந்தது.
''சந்தோஷம், திலக். அந்தப் பொண்ணுகிட்டயாவது கடைசி வரைக்கும் உண்மையா இரு. என்னைத் தேடிவந்து சொல்லணும்ன்னு தோணிச்சே, அதுக்கு தாங்க்ஸ்.''
பட்டென்று கைகளைத் தட்டிக் கும்பிட்டாள். திரும்பிப் பார்க்காமல் விலகிப் போனாள்.
- தொடரும்.சுபா
