sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 01, 2026 ,சித்திரை 18, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தீபாராதனா! (29)

/

தீபாராதனா! (29)

தீபாராதனா! (29)

தீபாராதனா! (29)


PUBLISHED ON : ஏப் 19, 2026

Google News

PUBLISHED ON : ஏப் 19, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: அ ஷ்வத் பற்றியும், அவனது நிழல் உலக செயல்பாடுகள் பற்றியும், கீர்த்திலால் கம்பெனி முதலாளி, கீர்த்திலாலிடம் விரிவாக சொன்னாள், ஆராதனா. அவன் தன்னை மிரட்டியது, ஞானசேகரனின், 'தீபா ஷிப்பிங் கம்பெனி'க்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதையும் கூறி, அவன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என்று கேட்டாள்.

மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவரது பெயரை குறிப்பிட்டு, அவர் தனக்கு பால்ய நண்பர் என்றும், இதைப்பற்றி அவரிடம் பேசுவதாகவும் சொல்லி, ஆராதனாவை, அவள் காதலன் யுவராஜுடன், தக்க ஆதாரங்களோடு அமைச்சரை சந்திக்குமாறு சொன்னார், கீர்த்திலால்.

ஹைதராபாத் சென்ற தீபா, ஆராதனா மீது, 'ஆசிட்' அடித்த வழக்கை விசாரித்த, இன்ஸ்பெக்டர் விஸ்வநாதனை சந்தித்தாள். அப்போது அவர், கவுதம் என்றவன், ஆராதனாவை காதலித்ததாகவும், காதலை ஆராதனா மறுக்கவே, அவள் மீது, அவன், 'ஆசிட்' அடித்ததாக டைரியில் எழுதி வைத்திருந்ததை படித்து, சொன்னார்.

இதை கேட்ட, தீபா அதிர்ந்து போனாள். காரணம், கவுதம் அவள் அண்ணன். சென்னை திரும்பிய தீபா, ஆராதனா மீது, 'ஆசிட்' அடித்தது, அண்ணன் கவுதம் தான் என்ற விபரத்தை தன் அம்மாவிடம் தெரிவித்துவிட்டு, மும்பையிலிருந்து வந்த காதலன், திலகனை சந்திக்க சென்றாள்.

அவன் தன்னுடன் வேலை செய்யும், நிமிஷா என்ற பெண்ணை, திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சொல்ல, 'அந்தப் பொண்ணுகிட்டயாவது கடைசி வரைக்கும் உண்மையா இரு...' என்று வருத்ததோடு சொல்லிவிட்டு, வீடு திரும்பினாள், தீபா.

'என்னை உதற உனக்கு எப்படி மனம் வந்தது?' என்று, தீபா, கண்ணீர் சிந்துவாள், கதறி அழுவாள், அவளை என்ன சொல்லி சமாளிப்பது என்றெல்லாம் ஒத்திகை பார்த்து வந்திருந்த, திலகனுக்கு அவள் அப்படி விருட்டென்று எழுந்து போனது அதிர்ச்சியாக இருந்தது.

ஒருவேளை அவள் திரும்பி வருகிறாளா என்று சற்று நேரம் காத்திருந்து பார்த்தான்.

'என்ன இருந்தாலும், நிமிஷாவின் இளமையும், நாகரிகமும் உன்னைவிட மேல்டி...' என்று முணுமுணுத்தபடி, எழுந்து பைக்கை நோக்கி நடந்தான்.

தில்லியில் இன்னும் குளிர் பாக்கியிருந்தது. யுவராஜும், ஆராதனாவும் மத்திய அமைச்சரின் வீட்டுக்கு வெளியே, காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தனர். அவர்களைத் தவிர, காத்திருந்த மற்றவர்கள் வட மாநிலத்தவர்கள். தொலைக்காட்சியில் முந்தின நாளின் பாராளுமன்ற நிகழ்வுகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.

வெளியே பரந்த வளாகத்தில் பச்சை மரங்களுக்கு நடுவே, பனி நனைத்த புல்வெளியில் தேசியக்கொடி குளிர் காற்றில் படபடத்து கொண்டிருந்தது.

சட்டைக்கு மேல் அரை கோட் போட்ட நபர் ஒருவர் உள்ளிருந்து வந்தார். அனைவரது பார்வையும் அவர் பக்கம் திரும்பின.

'ஆராதனா!' என்றழைத்தார்.

எழுந்தாள், ஆராதனா. அவளை வரச்சொல்லி சைகை செய்தார். ஆராதனாவை பெண் காவலரும், யுவராஜை ஆண் காவலரும் பரிசோதித்தனர்.

அவர்கள் கொண்டு வந்திருந்த கோப்புகள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, ஒப்படைக்கப்பட்டன.

''மொபைல்போன் இருந்தால் இங்கே கொடுத்து விடுங்கள்,'' என்றார், அதிகாரி.

''இதில் சில விபரங்கள் இருக்கின்றன. அவற்றை அமைச்சரிடம் காட்ட விரும்புகிறோம்,'' என்றான், யுவராஜ்.

''அப்படியானால், என்னிடம் கொடுங்கள். அமைச்சரிடம் போனிலிருந்து ஏதாவது காட்ட வேண்டுமென்றால், என் மூலம் தான் அதைச் செய்ய முடியும்,'' என்றார்.

இன்னோர் அறைக்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மாபெரும் மேஜைக்குப் பின்னே அமர்ந்திருந்தார், அமைச்சர். உப்பிய கன்னங்கள். இரு தோள்களுக்குமாக போடப்பட்ட சரிகை அங்கவஸ்திரம். செதுக்கிய மீசை. பரப்பிய தலைமுடி. அவர்களை வரவேற்று எதிரில் அமரச் சொன்னார். தெலுங்கானாவை சேர்ந்தவராயினும், சரளமாகத் தமிழ் பேசினார்.

''கீர்த்திலாலும், நானும் ஒரே காலேஜ்ல படிச்சோம். ரொம்ப அவசியமில்லாம என்கிட்ட அவன் எந்த உதவியும் கேட்டதில்ல,'' என்றார்.

வந்த நோக்கத்தை சுருக்கமாக சொன்னாள், ஆராதனா. யுவராஜ் திரட்டி வந்திருந்த ஆதாரங்களை, அவர் வசம் கொடுத்து விளக்கங்கள் கொடுத்தான்.

''நாசிக்ல உக்காந்துகிட்டு, இந்தியா முழுக்க போதை மருந்தை விநியோகம் பண்ணிட்டிருக்காரு, அஷ்வத். போலீஸ், கஸ்டம்ஸ், பாலிடிக்ஸ் எல்லா இடத்துலேயும் அவருக்கு செல்வாக்கு இருக்கு. அத்தனை பேரையும் சிறப்பா கவனிச்சுக்கறாரு.''

''நேத்து வரைக்கும் அப்படி இருந்திருக்கலாம். இனிமே அது நடக்காது. நம்ம பிரதமர் தேசத்தோட வளர்ச்சிக்கு எதிர்கால சந்ததியைத்தான் ரொம்ப நம்பியிருக்காரு. அவங்க கவனத்தை சிதறடிக்கற போதைப் பழக்கத்தை வேரோட அறுக்கணும்ன்னு தான் உண்மையா விரும்பறாரு. அதைத்தான் பாராளுமன்றத்துலேயும் பேசினாரு,'' என்றவர், தன் தலைமை உதவியாளரை அழைத்தார்.

''இதுல இருக்கற விபரங்களை ரகசியமா, 'பாலோ-அப்' பண்ணுங்க. யார் யாருக்கு தொடர்பு இருக்குன்னு ஒரு வாரத்துக்குள்ள எனக்கு பக்காவான, 'ரிப்போர்ட்' வேணும். எந்தக் கட்சிக்காரராயிருந்தாலும், பட்டியல்ல அவர் பேரு இருக்கணும்.''

''யெஸ், சார்,'' என்று பணிவுடன் கோப்புகளை வாங்கிப்போனார், உதவியாளர்.

''அரசாங்கம் செஞ்சிருக்க வேண்டிய வேலை. நீங்க பொறுப்பு எடுத்துக்கிட்டு இவ்வளவு விபரங்களை திரட்டியிருக்கீங்க. ரொம்ப நன்றி,'' என்று, யுவராஜின் கையைப் பிடித்து அழுத்தமாகக் குலுக்கினார்.

அவருக்கு நன்றி சொல்லி கும்பிட்டாள், ஆராதனா.

தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள், தீபா. திலகன் பேசியதை நினைத்து, தீபாவின் மனதில் ஏனோ துக்கம் கவியவில்லை. கண்களில் கண்ணீர் புரளவில்லை. அவன் மும்பையிலும், அவள் சென்னையிலுமாக பிரிந்து இருந்தது கூட, ஒருவிதத்தில் அவளை எதையும் எதிர்கொள்ள தயார் செய்திருந்தது என்று தான் தோன்றியது. நாசியை வருடி, கடந்துபோன ஒரு புகையாக அவன் பற்றிய நினைவுகளை துாக்கி எறிந்தாள்.

அவள் மனதை உறுத்தியது அவள் அண்ணன், கவுதம் பற்றிய நினைவுகள்தாம். சென்னையில் படித்தான். அவள் பள்ளி இறுதி வகுப்புக்கு வந்தபோது, வேலை கிடைத்து பெங்களூரு சென்றான். அங்கே பணிபுரிந்தான். அவன் எப்போது, எப்படி ஹைதராபாத்தில் ஒரு காதல் வலையில் சிக்கினான்? ஆராதனாவின் அழகு அவனைக் கவர்ந்திருக்கலாம்.

அவனும் குறையற்றவன் தானே? என்ன காரணம் சொல்லி, ஆராதனா அவனை நிராகரித்தாள்? அதற்காக, அவள் அண்ணன் வன்முறையை நாடலாமா? ஹைதராபாத்தில், 'ஆசிட்' அடித்து, அப்பாவால் காப்பாற்றப்பட்டு, பெங்களூருக்கு அவன் வந்து சேர்ந்த கதை எதுவுமே அவளுக்குத் தெரியாது.

பள்ளி மாணவி, வயது பற்றாது என்று அப்பா நினைத்து விட்டாரா? அம்மாவிடமும் சொல்லாமல் மறைத்திருக்கிறாரே... ஏன்? இந்த நிகழ்வுகளுக்கும், பெங்களூரு திரும்பிய பின், ரயிலில் அடிபட்டு அவன் இறந்ததுக்கும் இடையில் ஏதோ மறைக்கப்பட்ட சரித்திரம் இருக்க வேண்டும். ஹைதராபாத் இன்ஸ்பெக்டர் போல அப்பா ஏதாவது, டைரி எழுதியிருந்தால் தான் உண்டு.

இந்த நினைப்பு வந்ததுமே பரபரவென்று, மஞ்சுளாவின் அறையைத் தேடிப் போனாள்.

''அம்மா, அப்பாவுக்கு டைரி எழுதற பழக்கம் உண்டா?'' என்ற மகளை, உற்சாகமின்றி நிமிர்ந்து பார்த்தாள், மஞ்சுளா.

''பிசினஸ் ஆரம்பிச்சபோது தினம் ஏதோ எழுதுவாரு. அப்புறம் அதுக்கெல்லாம் அவருக்கு நேரமில்ல, தீபா. ஏன் கேக்கறே?''

''ஒண்ணுமில்ல,'' என்று சொல்லி, அதே வேகத்தில், ஞானசேகரனின், 'ஸ்டடி' அறைக்கு விரைந்தாள், தீபா. அந்த பிரத்யேக அறையில்தானே அவருடன் அவள் கடைசியாக உரையாடினாள்? அப்பாவுடைய சுவாசம் அங்கே தங்கியிருப்பது போல், கண்களை மூடி, ஆழமாக மூச்சை இழுத்தாள், தீபா. அவருடைய மேஜை இழுப்பறைகள், புத்தக அலமாரி என்று ஒவ்வொன்றாக துருவி ஆராய்ந்தாள். கிடைத்த குறிப்புகளையெல்லாம் அலசினாள். எல்லாமே பிசினஸ் தொடர்பானவை. எதிலும், கவுதம் பற்றி எந்த விபரமும் இல்லை.

அடுத்து அவருடைய தனிப்பட்ட, 'லேப்டாப்'பை அதன் உறையிலிருந்து எடுத்தாள். அதில், ஒரு, 'பென்டிரைவ்' செருகியபடியே இருப்பதை அப்போது தான் கவனித்தாள். அவருடைய மரணத்துக்குப் பின், அந்த அறையைச் சுத்தம் செய்ய, துரையின் மேற்பார்வையில் பணியாளர் வருவதோடு சரி. ஏதோ ஒரு கோபத்தில் அவள் வராமலே இருந்து விட்டாள்.

ஐயோ, இதை ஏன் இத்தனை நாள் கவனிக்காமல் விட்டேன்? அந்த, 'பென்டிரைவை' எடுத்தாள். தன் அறைக்கு திரும்பி, அவளுடைய, 'லேப்டாப்'பில் செருகி இயக்கினாள்.

ஞானசேகரனின் குரல் ஒலிக்கத் துவங்கியது...

'தீபுக்குட்டி, என் செல்லக் கண்ணம்மா... என்னை மன்னிச்சிரு. உன்கிட்டயும், அம்மாகிட்டயும் சில விஷயங்களை நான் மறைச்சிட்டேன். என்னுடைய வளர்ப்பு சரியில்லையோ என்னவோ, உங்கண்ணன், கவுதம் தப்பான வழில போயிட்டான். ஏதோ ஒரு கல்யாணத்துல பார்த்துட்டு, ஆராதனான்னு ஒரு பெண் மீது ஆசைப்பட்டிருக்கான். என்கிட்ட சொல்லியிருந்தா, நானே பேசி எப்படியாவது அவங்களை சேர்த்து வெச்சிருப்பேன். அதை விட்டுட்டு, அவ பின்னாலயே போறதும், தொந்தரவு பண்றதுமா ஏன் நடந்துக்கிட்டான்னு எனக்குப் புரியலை.

'இதுக்காக ஒவ்வொரு வாரக்கடைசிலேயும் அவன் வேலை பார்க்கற பெங்களூர்லேர்ந்து கிளம்பி, ஹைதராபாத் போயிருக்கான்.

'நடுவுல தப்பான சகவாசத்துல போதைப் பழக்கம் வேற சேர்ந்திருக்கு. சரக்கு அடிச்சுட்டு, ஹைதராபாத் போயி, அந்தப் பொண்ணு மூஞ்சில, 'ஆசிட்' அடிச்சிருக்கான். குறுக்க வந்த அவங்கம்மா பாவம், மூஞ்சி செதைஞ்சே போயிருச்சு. போலீஸ்லேர்ந்து தகவல் கெடைச்சவுடனே பதறிட்டு ஓடினேன். நம்ம உறவுக்காரங்களுக்கோ, நம்ம ஆபீஸ்ல வேலை செய்யறவங்களுக்கோ இந்த விபரம் தெரிஞ்சா, எவ்ளோ அசிங்கம்! கவுதம் இப்படி பண்ணிட்டான்னு தெரிஞ்சா, உங்கம்மாவோட, 'ஹார்ட்'டே நின்னுரும்.

'பெரிய வக்கீலை வெச்சு, கவுதம் மேல கேஸ் எழுதாமப் பாத்துக்கலாம். ஆனா, அதுக்கு அந்தப் பொண்ணும், அவங்கம்மாவும் ஒத்துழைக்கணுமே. போய் கெஞ்சினேன். அவன் சார்பா மன்னிப்பு கேட்டேன். அவங்க ரொம்ப நல்லவங்க. 'நடந்ததை மாத்த முடியாது, நடக்க வேண்டியதையாவது பொறுப்பா கவனிங்க'ன்னு, கேஸை வாபஸ் வாங்கினாங்க.

'கவுதமை எப்படியோ வெளிய கொண்டு வந்தேன். பெங்களூருல ஒரு புனர்வாழ்வு மையத்துல சேர்த்தேன். போதைப் பழக்கத்துலேர்ந்து வெளிய கொண்டுவர சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணினேன். இது எதுவுமே உங்களுக்குத் தெரியாது. வாராவாரம் நான் பெங்களூரு போனது இதுக்காகத்தான்.

'திடீர்ன்னு ஒருநாள், 'என்னால எல்லாருக்கும் எத்தனைக் கஷ்டம். மன்னிச்சிருங்கப்பா. இனிமே என் தொந்தரவு இருக்காது'ன்னு, கவுதம் கிட்டேர்ந்து எனக்கு போன்ல ஒரு மெஸேஜ் வருது. போன் பண்ணா அவன் எடுக்கல. அதுக்குள்ள ரயில்வே போலீஸ்லேர்ந்து எனக்கு போன் வருது. 'உங்க பையன் டிராக்ல நடந்து போய் ரயில்ல அடிபட்டிருக்கான்'னு. பெங்களூருக்குப் பறந்தேன். அவன் செத்தே போயிருந்தான்...'

ஞானசேகரனின் குரல் மங்கி, சற்று அழுகையும் கலந்து தொடர்ந்தது...

'அதைத் தற்கொலைன்னு சொன்னா, ஏன், எதுக்குன்னு கேள்வி வரும். செத்தப்புறமும் அவனுக்குக் கெட்ட பேர் வரும். எதையும், யார்கிட்டயும் சொல்ல முடியாம, மனசுக்குள்ளயே புதச்சுக்கிட்டு தவிச்சேன். கவுதம் ரயில்ல அடிபட்டு, விபத்துல செத்துட்டான்னுதான் உங்க எல்லார்கிட்டயும் பொய் சொன்னேன். பெங்களூர்லேர்ந்து அவனை மூட்டை கட்டி எடுத்திட்டு வந்தேன்.

'அவன் முடிஞ்சு போனாலும், அவனால ஆரம்பிச்ச ஒரு பிரச்னை முடியல. அதனால, நான் பல சிக்கல்ல மாட்டின கதையெல்லாம் சொல்றதுல இப்ப அர்த்தமில்ல.

'ஆனா, சீதை கோடு தாண்டி மாட்டிக்கிட்ட மாதிரி நானும் சில கோடுங்களைத் தாண்டி ஆபத்துல மாட்டிக்கிட்டேன்னு மட்டும் புரிஞ்சுக்க. விழக்கூடாத குழில விழுந்து, செய்யக்கூடாததை எல்லாம் செஞ்சிட்டேன். இப்ப, நம்ம கம்பெனியே கைய விட்டுப் போகுது.

'இதுக்கப்புறம் உங்க முகத்துலலாம் நான் எப்படி விழிப்பேன்? இதுல, நீ ஆசைப்பட்ட பையனுக்கு எப்படி பெரிய வேலை கொடுப்பேன்? மண்டை வெடிச்சுரும் போல இருக்கு. உங்கண்ணனைப் போல மொத்தமா இந்த உலகத்தை விட்டுப்போனாதான் இதுலேயிருந்து விடுதலை கெடைக்கும்ன்னு தோணுது.

'இதை உங்கம்மா கேக்கலைனா, அவகிட்ட எதுவும் சொல்ல வேணாம். அவ மனசுல, கவுதம் ஒரு தங்கமான பையனாவே இருந்துட்டுப் போகட்டும். என்னை மனசார மன்னிச்சிரு, கண்ணம்மா...'

இதற்கப்புறம், ஞானசேகரனின் சிறு விசும்பல்களுடன் அந்த ஒலிப்பதிவு முடிந்து போனது.

தீபாவின் கண்கள் நனைந்திருந்தன. ஞானசேகரனின் புகைப்படத்துக்கு எதிரில் கைகூப்பி நின்றாள்.

'என்னை மன்னிச்சிருங்கப்பா. எவ்வளவு கஷ்டத்தை எங்களுக்கு சொல்லாம, மனசுக்குள்ளயே பூட்டி வெச்சிருந்திருக்கீங்க. அது எதுவும் தெரியாம, உங்களை நான் எப்படி கேவலமா எடை போட்டுட்டேன்?'

சட்டென்று மனதின் இறுக்கம் எல்லாம் தளர்ந்து, விசும்பி அழ ஆரம்பித்தாள்.

ஆராதனா காரைச் செலுத்திக்கொண்டிருக்கும் போது போன் ஒலித்தது.

ப்ளூடூத்தில், 'ஆன்' செய்தாள்.

யுவராஜின் குரல் பரபரப்பாக ஒலித்தது.

''ஆரூ, 'பிரேக்கிங் நியூஸ்' பாத்தியா?''

''இல்லியே, யுவா.''

''பாரு, அப்புறம் பேசறேன்,'' என்று தொடர்பை துண்டித்தான்.



- தொடரும்.

சுபா






      Dinamalar
      Follow us