sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தீபாராதனா! (3)

/

தீபாராதனா! (3)

தீபாராதனா! (3)

தீபாராதனா! (3)

1


PUBLISHED ON : அக் 19, 2025

Google News

PUBLISHED ON : அக் 19, 2025

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: தொழிலதிபரும், தன் அப்பாவுமான ஞானசேகரனிடம், தன் காதலன் திலகன் பற்றி கூறி, அவரது அலுவலகத்திலேயே வேலையில் சேர்த்து விடவும், அவனையே திருமணம் செய்து கொள்ளவும், அப்பாவின் சம்மதம் பெற நினைத்தாள், தீபா.

அப்பாவிடமும் விஷயத்தை கூற, மறுநாள் நிச்சயம், திலகனை சந்திப்பதாக கூறினார், ஞானசேகரன்.

''இதுக்காகவா என் செல்லக்குட்டி முழிச்சிட்டு இருந்தது?'' என, தீபாவின் முகத்தை வருடிக் கொடுத்தார், ஞானசேகரன்.

''அம்மாகிட்ட சொல்லிட்டியா? அவ தான் இறுதி முடிவு செய்யணும்.''

''அம்மாவுக்கு, திலகன் பத்தி தெரியும்பா. உங்ககிட்ட சொல்லத்தான் தயக்கமா இருந்தது.''

''ஏன்?''

''நீங்க எப்பவும், 'பிஸி.' அதுவும் கொஞ்ச நாளா உள்ளுக்குள்ள ஏதோ ஓடிட்டே இருக்கற மாதிரி உங்க முகம் வழக்கம் போல இல்ல. அதான்..''

''பிசினஸ்ன்னு இருந்தா, நுாறு கவலை இருக்கும், கண்ணு. எல்லாக் கவலையும் என்னோட போகட்டும். நீங்கல்லாம் நிம்மதியா இருக்கணும்ன்னு தான் போராடிட்டுயிருக்கேன்,'' என்ற அவர் குரலில் களைப்பு இருந்தது.

சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்தார். தீபாவை அருகே இழுத்து, உச்சந்தலையில் முத்தமிட்டார்.

''நிம்மதியா போய்த் துாங்கு. எல்லாம் உன் இஷ்டப்படியே நடக்கும்,'' என்று புன்னகைத்தார்.

சற்றுத் தெளிந்தவளாக, அந்த அறையை விட்டு உற்சாகத்தோடு வெளியேறினாள், தீபா.

தீபாவின் துாக்கம் காணாமல் போயிருந்தது.

முதலில், திலகனுக்குச் சொல்ல வேண்டும். தலையணையை மடியில் அழுத்திக்கொண்டு போன் செய்தாள். மறுமுனையில் உடனடியாக அவன் குரல் கேட்டது.

''அப்பா வர, 'லேட்'டாகுது, 'லேட்'டாகுதுன்னு புலம்பிட்டிருந்தியே, உங்கப்பா வந்தாரா, இல்ல, ஆபீஸ்லயே துாங்கிட்டாரா?''

''வந்தாரு, பேசிட்டேன். ஆனா...'' என்று போலியான கவலைக் குரலில் இழுத்தாள், தீபா.

''ஆனா, என்ன தீபா?'' திலகன் குரல் பதறியது.

''பயந்துட்டியா? தீபாவோட பவர் பத்தி உனக்குத் தெரியாது. பேசி பேசியே ரஷ்யா--உக்ரைன் போரைக்கூட சமாதானம் பண்ணக்கூடியவ, நான். அப்பாகிட்ட சம்மதம் வாங்கறதா கஷ்டம்?''

''எப்ப வரணும்? எங்க வரணும்?''

''ரெண்டு கேள்விக்கும் காலைல தான் பதில் கிடைக்கும். வரும் போது, ஒழுங்கா, 'ஷேவ்' பண்ணி, அந்த நீலக்கலர் சட்டையைப் போட்டுட்டு, 'ட்ரிம்'மா வா. அவர் கண்ணைப் பாத்துப் பேசு. கேட்காத கேள்விக்கு பதில் சொல்லாத. அப்பாவுக்கு பூன்னா ரொம்பப் பிடிக்கும். ரோஜாப் பூங்கொத்து வாங்கிட்டுவா.''

''இன்டர்வியூக்கா வரப் போறேன்?''

''ரெண்டு இன்டர்வியூ, கண்ணா! எங்க கம்பெனில சேர ஒண்ணு. எங்க வீட்டுல சேர ஒண்ணு.''

''என் லவ்வர் கொஸ்டீன் பேப்பரை, 'லீக்' பண்ணா, சுலபமா பாஸ் பண்ணிடுவேன், தீபு.''

''அடிங்க. பிட் அடிச்சு பாஸ் பண்ற மக்கு மாப்பிள்ளை எங்கப்பாவுக்கு வேண்டாம்,'' என சொல்லி, வாய்விட்டுச் சிரித்தாள், தீபா.

உரையாடல் நீண்டுகொண்டே போனது. நள்ளிரவு 1:00 மணியை நெருங்கியதும் தான், மனசில்லாமல் இருபுறமும் போன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விடிந்திருந்தது.

மலை முகட்டிலிருந்து அவளை, திலகன் தள்ளி விடுவதாக ஒரு கனவு அறுந்து துாக்கிவாரிப்போட்டு எழுந்தாள், தீபா.

'ச்சே, ஏன் இப்படியோர் அபத்தமான கனவு!' கண்கள் தாமாக கடிகாரத்தை நோக்கின. காலை 8:00 மணி.

சோம்பலை உதறி, பாத்ரூமுக்குள் ஓடினாள். அப்பா ஆபீஸ் புறப்படும் முன் அவரிடம் பதில் வாங்கி விட வேண்டும்!

உதடுகளில் மெல்லிய விசில் மெட்டு ஒலிக்க, அறையை விட்டு அவள் வெளிப்பட்ட போது வீடே சுறுசுறுப்பாகி இருந்தது.

டைனிங் டேபிளில் அப்பா இல்லை. பூஜையறையில் அம்மா தான் இருந்தாள். அப்பா இல்லை.

கிச்சனில் துரையைப் பார்த்தாள். அதிகாலையிலேயே குளித்து நெற்றி நிறைய திருநீறு வைத்திருந்த அவருடைய சுறுசுறுப்பு அவளுக்குச் சற்று கூச்சம் தந்தது.

''அப்பா, 'வாக்' போயிருக்காரா?' '

''இல்லம்மா, ஐயா இன்னும் கீழயே வரலே,'' என்றார், துரை.

காலை 6:30 மணிக்கெல்லாம் நடைப்பயிற்சி முடித்து, சூடான காபியும், அன்றைய தினசரி இதழ்களுமாக உட்கார்ந்திருக்கும் அப்பா, ஏன் இன்றைக்கு இன்னும் கீழே வரவில்லை? முந்தின இரவு பார்த்தபோது களைத்திருந்தாரே... உடம்புக்கு ஏதாவது?

பரபரப்பாக மாடிப்படிகளில் ஏறும்போது, பூஜையறையில் அம்மா, மஞ்சுளா மணியை சப்தித்துக் கொண்டிருந்தது கேட்டது.

திலகனை வீட்டுக்கு வரச்சொல்லப் போகிறாரா, கம்பெனிக்கு வரச்சொல்வாரா?

கனவுகள் கண்களில் தளும்ப, அப்பாவின் அறைக் கதவை தட்டிவிட்டு நுழைந்தாள், தீபா.

இரட்டைக் கட்டிலில் கைகளை விரித்துப் படுத்திருந்தார், ஞானசேகரன்.

'குட் மார்னிங் டாடி...' என்று சற்று உரக்கவே குரல் கொடுத்தபடி, அவரை நெருங்கினாள்.

அவரிடம் சலனமே இல்லை. காய்ச்சல் கீய்ச்சல் அடிக்கிறதா? மெத்தையில் மண்டியிட்டு அவரை கன்னத்தில் முத்தமிட்டு எழுப்ப முனைந்தவள், அதிர்ந்தாள்.

அப்பாவின் உடல் சில்லிட்டிருந்தது.

'அப்பா...' என்றபடி அவருடைய நெற்றி, கழுத்து, கைகள், கால்கள் எல்லா இடங்களையும் அவசரமாகத் தொட்டுப் பார்த்தாள்.

ஞானசேகரன் முற்றிலும் சில்லிட்டிருந்தார். நாசியில் மூச்சுக்காற்று வெளிப்படவில்லை. அவசரமாகப் போர்வையை விலக்கி, அவர் மார்பில் காது வைத்துக் கேட்டாள். நிசப்தம்.

அப்போது தான் படுக்கையின் தலைமாட்டில் இருந்த சிறு மேஜையில் அவர் கையெழுத்தில் அந்தக் காகிதத்தைப் பார்த்தாள். நடுங்கும் விரல்களால் அதை உருவி எடுத்தாள். இரண்டே வரிகள்.

என் கன்றுக்குட்டி தீபா — வார்த்தை தவறுகிறேன். உன் ஆசையை நிறைவேற்றாமல், விடை பெறுகிறேன். இந்த உலகைச் சந்திக்க எனக்குத் தெம்பு இல்லை. இந்த முட்டாள் அப்பாவை மன்னித்து விடு. - —ஞானசேகரன். மின்சார மின்னல் ஒன்று, நேரே அவள் உடம்பைத் துளைத்தாற் போலிருந்தது.

'அப்பா... அப்பா...' என்று கதறினாள். உடலை புரட்டி, உலுக்கிப் பார்த்தாள். உண்மை உறைத்தது.

அழுகையில் வெடித்து அப்பாவின் மீது குப்புற விழுந்தாள், தீபா.

அவளுடைய அலறல், அந்தக் கட்டடத்தின் அத்தனை சுவர்களிலும் எதிரொலிக்க, மாடிப் படிகளில் தடதடவென்று காலடிகள் ஓடிவரும் சத்தம் கேட்டது.

குடும்ப டாக்டர் வந்தார். பார்த்தார். உதடுகளைப் பிதுக்கினார்.

''நைட்டே இறந்துட்டாருன்னு நினைக்கறேன். மாத்திரையை அள்ளிப் போட்டுக்கிட்டு போயிருக்காரு. இப்ப அதைப் போலீஸ்ல சொன்னா, தற்கொலைன்னு கேஸாகும். போஸ்ட்மார்ட்டத்துக்கு துாக்கிட்டுப் போய், கூறு போட்டுத் தருவாங்க. 'மீடியா'லலாம் அப்பா பேரு சந்தி சிரிக்கும். இருக்கறவங்களையும் விசாரணை அது, இதுன்னு சாகடிப்பாங்க. 'இன்ஷ்யூரன்ஸ்' பைசா பேராது. எப்படியும் போன உயிர் போனது தான். பேசாம, 'கார்டியாக் அரெஸ்ட்'னு சர்டிபிகேட் தரேன். அவர் எழுதிய லெட்டரை யார்கிட்டயும் காட்டாம, கிழிச்சுப்போடு.''

அவர் சொன்னதில் நியாயமிருப்பதாகத் தோன்றியது.

தீபாவே முடிவு எடுத்தாள். ''நீங்கள் சொல்றது தான் கரெக்ட் டாக்டர்.''

மஞ்சுளா அதே அறையில் படுத்தாலும், ஏதோ பூஜா, விரதம் என்று தனியே வேறொரு கட்டிலில் படுப்பதால், விழித்த பிறகும், அவரைத் தொட்டுப் பார்க்கவில்லை. அவர் உயிர் பிரிந்த அதே அறையில், அறியாமல் படுத்திருந்து, அவர் ஓய்வெடுக் கட்டும் என்று எழுந்து போன குற்ற உணர்ச்சியில் அழுதழுது, மயக்கமாகி இருந்தாள்.

அப்புறம் போன்கள் பறந்தன. ஆட்கள் நான்கு பக்கமும் ஓடினர். ஞானசேகரன் குளிர்ப்பெட்டியில் ஹாலுக்கு இடம் பெயர்ந்தார். வாகனங்கள் சேர்ந்தன. மலர் மாலைகளும், மலர் வளையங்களும் இறைந்தன.

துாரத்து உறவினர் இரண்டொரு பேர் பொறுப்புகளை இழுத்துப் போட்டுக் கொண்டனர்.

தீபாவின் மனம் கொந்தளித்து கொண்டிருந்த்து.

'அம்மாகிட்ட சொல்லிட்டியா? அவதான் இறுதியா முடிவு செய்யணும்...' என்று முந்தின இரவு அப்பா சொன்னது ரீங்கரித்தது. 'எல்லாக் கவலையும் என்னோட போகட்டும். நீங்கல்லாம் நிம்மதியா இருக்கணும்ன்னு தான் போராடிட்டிருக்கேன்...' என்று அவர் சொன்னது இயல்பான உரையாடல் இல்லையா? அதில் உள்ளர்த்தம் ஏதாவது பொதிந்திருந்ததா?

அடர்த்தியான ஊதுபத்தி புகை ஹாலில் சுருண்டு சுருண்டு நிறைந்தது.

கால்படும் இடத்திலெல்லாம் ரோஜா இதழ்கள் சிதறியிருந்தன. மெல்லிய எண்ணெய் வாசனையோடு தீபம் எரிந்து கொண்டிருந்தது.

மஞ்சுளா அவ்வப்போது மயக்கத்திலிருந்து எழுந்தாள். அதிர்ச்சியான கண்களால் சுற்று முற்றும் பார்த்தாள். ஓலமிட்டு அழுதாள். மீண்டும் மயக்கமானாள். அவளை கவனிக்கவே இரண்டு பணியாட்களுக்கு சரியாக இருந்தது.

வறண்ட கண்களுடன், உலர்ந்த தொண்டையுடன் வருபவர்களின் கேள்விகளுக்கெல்லாம் ஒற்றை வரியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள், தீபா. முத்துராமன் அங்கிள் வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடியது.

முத்துராமன், 'தீபா ஷிப்பிங் ஏஜன்சீஸ்' கம்பெனியில், ஜெனரல் மேனேஜர். ஞானசேகரனை விட, ஐந்து வயது மூத்தவர். ஞானசேகரனின் இளம் வயதிலிருந்து அவர் கூடவே இருந்தவர். கம்பெனியின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் பங்கு கொண்டவர்.

சேதி தெரிந்து மும்பை புறப்படவிருந்த விமானத்திலிருந்து பதறி இறங்கி ஓடி வந்திருந்தார். அவர் முகத்தில் துல்லியமான அதிர்ச்சி தெரிந்தது.

''என்னம்மா ஆச்சு?''

பதில் சொல்ல முடியாமல் அவர் மார்பில் சாய்ந்து அழுதாள், தீபா.

அழுகை அடங்கியதும், ''நேத்து நைட் அப்பா வழக்கம் போல இல்ல. கம்பெனி, 'மீட்டிங்'ல ஏதோ காரசாரமா விவாதம் இருந்துச்சுன்னு சொன்னாரு. அந்த உறுத்தலா தெரியல,'' என்றாள்.

முத்துராமனின் புருவங்கள் நெரிபட்டன.

''நேத்து கம்பெனில, 'மீட்டிங்' எதுவும் நடக்கலையே, தீபா... அப்பா தன் ரூமை மூடிக்கிட்டு ரொம்ப நேரம் ஏதோ பண்ணிட்டிருந்தாரு. என்கிட்ட கூட அதிகம் பேசல. 8:00 மணிக்கு வீட்டுக்குப் புறப்பட்டு போயிட்டாருன்னு பி.ஏ., சொன்னாங்களே!''

எட்டு மணிக்கே புறப்பட்டு விட்டாரா? 11:30 மணிக்கு மேல் தானே வீட்டுக்கு வந்தார்? அப்படியானால், மூன்று மணிநேரம் எங்கே போனார்? கம்பெனி, 'மீட்டிங்' என்று ஏன் பொய் சொன்னார்?

முத்துராமனிடம் மேற்கொண்டு பேச முடியாமல், பக்கத்து வீட்டுப் பெண்மணி வந்து, தீபாவின் கைகளை பற்றிக் கொண்டாள். கண்களில் நீர் திரண்டு உருள, உதடு விரிய துக்கம் விசாரித்தாள்.

அவளிடமிருந்து விடுபட்டதும், கார் ஓட்டுனரைத் தேடிப் பிடித்து விசாரித்தாள், தீபா.

''ஐயா ஆபீஸ்லேர்ந்து நேரா, பத்மனாபன் சார் ஆபீஸ்க்கு போனாரும்மா.''

பத்மனாபன், கம்பெனியின், 'லீகல் அட்வைஸர்!' என்பதால், அழைத்தால் அவரே ஓடி வருவாரே, அவரைத்தேடி அப்பா எதற்குப் போக வேண்டும்?

தீபாவை கேள்விகள் வண்டுகளாகக் குடைந்தன.

- தொடரும்சுபா






      Dinamalar
      Follow us