தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இலவசமாக ஓர் அறிவுரை!

இலவசமாக ஓர் அறிவுரை!

இலவசமாக ஓர் அறிவுரை!


PUBLISHED ON : ஜூன் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''இன்னும் எவ்வளவு துாரம் போகணும்?'' என்று கேட்ட, தர்மனின் முகம் களைத்திருந்தது. தேர்தல் வந்தாலும் வந்தது, அல்லும் பகலும் அலைச்சல்.

மாவட்ட பொறுப்பாளர், குறிப்பிட்டவர்களிடம் பொருட்களை வாங்கி, சொன்ன இடங்களில் விநியோகம் செய்து, 'எல்லாரும் கண்டிப்பா நம் சின்னத்திற்கு, ஓட்டு போட வேண்டும்' என, கற்பூரம் ஏற்றி, சத்தியம் வாங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரிடமும் நட்பாய் புன்னகைத்தது, அலுப்பாக இருந்தது, தர்மனுக்கு. தேர்தல் நாள் வரும் வரை இப்பாடுதான்! ஆனால், இந்த அலைச்சலுக்கும், கால விரயத்திற்கும், வேலைக்கும் கணிசமான சன்மானம் கிடைத்து விடுகிறது.

'அட்வான்ஸ்' வாங்கிய தொகையை கையில் தந்ததுமே, தர்மனின் மனைவி, பாரு என்ற பார்வதி அசந்து போனாள்.

''நமக்கு நல்ல காலம் வந்துடுச்சாங்க?'' முகமெல்லாம் சிரிப்பாக கேட்டாள்.

''கேள்வியெல்லாம் கேட்காதே! பேசாம உள்ற வெச்சு பூட்டு,'' என்றான், தர்மன்.

''வேன்ல இருக்குற அண்டா ரொம்ப பெரிசா இருக்கு. தண்ணி கஷ்ட காலத்துல, தண்ணி புடிச்சு வைக்க ரொம்ப உதவியா இருக்கும். ரெண்டு அண்டா எடுத்துக்கவா?''

''ஒண்ணு எடுத்துக்க. மேலும், மேலும் நோண்டாதே! உனக்கு எதைப் பார்த்தாலும் ஆசையாதான் இருக்கும்...'' என்றான், தர்மன்.

ஒரு சின்ன குடத்தையும், அண்டாவில் போட்டு உள்ளே கொண்டு போய் மறைவாக வைத்தாள், பார்வதி.

''எங்கே அதுக்குள்ள கிளம்பிட்டீங்க?''

''ஓய்வெடுக்காம உழைக்கணும்ன்னு சொல்லியிருக்காங்க. இன்னும் எத்தனை இடங்களுக்கு போகணும் தெரியுமா? நான் வரேன்.''

''எப்போ வருவீங்க?''

''தெரியலைடீ, போன் செய்யறேன்.''

இந்த தொழிலில், கூலி ஒரு துாண்டுதல் என்றால், பரிசுப்பொருள் வாங்குவதில், விநியோகிப்பதில், கணக்கு காட்டுவதில், தரப்படும் தப்பு கணக்கில், ஒரு விடுகதையின் சுவாரஸ்யம். அறிமுகமாகும் பெரிய மனிதர்களின் நட்பு ஒரு வரம். பெரிய மனிதர்களை நேரடியாக அணுக முடியாது. ஆனால், யார் மூலமாக அணுக முடியும், யார் மூலமாய் காரியம் சாதித்துக் கொள்ள முடியும் என்பது புரிந்து போகும். இரண்டு ஆண்டுகளுக்கு பின், மகன், கதிருக்கு அரசு வேலை, மகள், சரசுவிற்கு கல்லுாரி, எல்லாவற்றுக்குமே ஒரு வி.ஐ.பி., சிபாரிசு வேண்டித்தான் இருக்கிறது!

இதோடு, ஆறு தேர்தல்களுக்கு வேலை பார்த்து விட்டான், தர்மன். அப்போது அடித்த பணத்தில், பார்வதிக்கு, சங்கிலியும், வளையலும் வாங்க முடிந்தது. நண்பன், தயாளன் அதிர்ஷ்டக்காரன். அவன் பணியாற்றும் தொகுதியில் இடைத்தேர்தல் வேறு, இரண்டு முறை வந்து விட்டது. சொந்த வீடு வாங்கி குடியேறி விட்டான்.

யோ சனையில் மூழ்கிவிட்டதில் நேரம் கடந்து விட்டது. நீரோடையை கடக்கும்போது முகத்தில் அறைந்த குளிர்ந்த காற்றும், பச்சை புல்வெளியும் நிகழ்காலத்திற்கு அவனை அழைத்து வந்தது. வயல்வெளியில் வேலையில் ஆழ்ந்திருந்த விவசாயிகளை கண்டதும் சுறுசுறுப்பானான், தர்மன்.

''நாச்சியப்பா,'' என்று உதவியாளனை கூப்பிட்டான், தர்மன்.

''ஐயா!''

''போயி வயக்காட்டு மக்களை இங்க அழைச்சுட்டு வா. அதோட, கன்னியப்பனை அனுப்பி, வீட்டுல பொம்பளைங்க இருந்தாங்கன்னா கூட்டிட்டு வரச்சொல்லு. இது, படிப்பறிவில்லாத கிராமம். இங்கு மொத்தம், 237 ஓட்டு இருக்கு. அரசியல் கட்சிக்காரங்க யாரும் இவ்வளவு துாரமெல்லாம் ஓட்டு கேட்டுட்டு வரதில்லே; ஆனா, போன முறை தேர்தல் நடந்தப்போ, இருநுாறு ஓட்டு வித்தியாசத்துல எதிர்க்கட்சி ஜெயிச்சுடுத்து. அதனால, தலைவர் எந்த, 'ரிஸ்க்'கும் எடுக்கக்கூடாது. அஞ்சு ஓட்டு இருந்தாக்கூட, அங்கு போயி, பரிசு கொடுத்து, மக்கள்கிட்ட சத்தியம் வாங்கிட்டு வரணுமின்னு சொல்லியிருக்கார். புரியுதா?''

''சரிங்க.''

''அப்படியே ஏதாவதொரு கோவிலு தெரியுதா பாரு. அந்த சாமி பேரு சொல்லி தான் சத்தியம் வாங்கணும்,'' என்றவன், ''முருகா,'' என்று மற்றொரு உதவியாளனை அழைத்தான்.

''சொல்லுங்கய்யா... என்றவாறு'' வந்து நின்றான்.

''அந்த மரத்தடியை சுத்தம் செய்து, பேப்பர் விரிச்சு சேலையெல்லாம் நல்லா தெரியற மாதிரி அடுக்கு. தலைவர் படம், கட்சி சின்னம் எல்லாவற்றையும் மக்கள் பார்வையில படற மாதிரி வை. கற்பூரம் தட்டு, தீப்பெட்டி எல்லாம் எடுத்து வெச்சுக்க.''

அவன் அடுக்கி வைக்கவும், ஊர் மக்கள் திரண்டு வரவும் சரியாக இருந்தது.

''எல்லாரும் வாங்க. நல்லாருக்கீங்களா?''

''யாருயா நீங்க? யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க?''

''எல்லாம் உங்க மக்க, மக சொந்த பந்தம்தான்! உக்காருங்க பேசலாம்.''​

''ஏன்யா, எங்களை பார்த்தா பொழுது போகாம நிக்கிறவங்க மாதிரியா இருக்கு? உக்காருன்னு சொல்றே? வரப்பும், வேலையும் வா வாங்குது. இப்ப வெட்டி போட்டாதான் கதிரு காத்துல ஆறும்.''

கூட்டத்தில் தலைவன் போன்ற முதியவரை அணுகினான், தருமன்.

''ஐயா... எங்களை நம் தலைவர், தமிழ்நேசன் அனுப்பி வெச்சாருங்க.''

''சரி, சீக்கிரம் சொல்லு? என்ன வேணும் உனக்கு?''

''உங்க வீட்டு பெண்களுக்கு நல்ல சேலை, அண்டா, குக்கர், ஆம்பளைங்களுக்கு பணம்லாம் தரச் சொல்லி தலைவர் குடுத்து விட்டிருக்கார்.''

அதைக் கேட்டவுடன் கூட்டத்திலிருந்த பெண்களிடையே வெட்க சிரிப்பும், ஆண்கள் முகத்தில் கொஞ்சம் கோபமும் தெரிந்தது.

''எங்க வீட்டு பொம்பளைங்களுக்கு அவரு எதுக்குய்யா சேலை எடுத்து தரணும்?

''நம் ஊர் பெண்கள்ன்ற பாசம் தான்! அம்மாங்கல்லாம் இப்படி நில்லுங்க, வரிசைல வந்து புடவை வாங்கிக்குங்க.''

''யோவ் நிறுத்துயா! ஏதோ பெரிய மனுஷன் மாதிரி இருக்கேன்னு பேசினா, எங்கூட்டு புள்ளைங்களுக்கு புடவை தரேன்ற? உன் மனசுல என்ன நெனைச்சுட்டிருக்க?''

''புடவை நான் குடுக்கலீங்க. தலைவர் குடுத்து வுட்டுருக்காரு.''

''தலைவர்ன்னா, அரசாங்கமா?''

''ஆமாம். இன்னும் ரெண்டு மாசத்துல உங்க வாய் முகூர்த்தம் அவரு அரசாளத்தான் போறாரு.''

''தோ பாருடா! அரசாங்கம் குடுத்திருக்குன்னு வாய் கூசாம அவுத்து விடுறான்,'' என்று, பெரியவர் சொல்ல, அங்கிருந்த பலர் முகத்தில் சிரிப்பு.

''அதோ அங்க பச்சை புடவை கட்டிட்டு ஒரு ஆத்தா உக்கார்ந்திட்டிருக்கு, பாரு. அதோட மகன் பரீட்சைக்கு போற வழியில அரசாங்க பஸ் இடிச்சு இறந்துட்டான். அவன் இறந்த அன்னைக்கு வீட்டுக்கு வந்த பெரிய மனுஷங்கல்லாம் நஷ்ட ஈடா, லட்ச ரூபா தரோம்ன்னு பேசினாங்க. இன்னி வரை ஒத்த பைசா வரலை.

''கட்டை வெச்சு நடக்கிற பொன்னம்மா ஆத்தாவுக்கு, அவங்க புருஷன் இறந்தபின் வரவேண்டிய குடும்ப ஓய்வூதிய தொகையே வரலை. 'டவுன் ஆபீசுல' கேட்டா, நீ முதல்ல காசு குடுன்னு லஞ்சம் கேக்குறாங்க. நமக்கு உரிமையா சேர வேண்டிய பணத்தை தரவே லஞ்சம் கேக்குறவங்க, நம் மேல இருக்கிற பாசத்தால இதையெல்லாம் குடுத்து விட்டுருக்காங்கன்னு சொன்னா, யாராவது நம்புவாங்களா?''

''ஐயா பெரியவரே! உட்காருங்க! உங்க குறைகளை சொல்லுங்க. குறிச்சு வெச்சுக்கிட்டு நம்ம ஆட்சி வந்தவுடன், சரி செய்துடறோம்யா. அதுக்குதான் வந்திருக்கோம்.''

''நம்ம ஆட்சியா? தேர்தல் வருதுன்னு ஓட்டு கேட்க வந்திருக்கே, சரி. புடவை, எதுக்கு?''

''அன்பளிப்பு.''

''யோவ்! தமிழ்நாட்டுக் காரன்னாலும் தமிழ் பண்பாடு தெரியல உனக்கு. ஒரு பெண்ணுக்கு அவ புருஷன், அப்பன், உடன் பிறந்தவன், கண்ணாலம் கட்டப்போறவன் தான் புடவை வாங்கித்தரணும். மத்தவங்க வாங்கித்தர்றதை அனுமதிக்க மாட்டோம் புரியுதா?''

''நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க ஐயா,'' என்றதும், ஒரு இளங்காளை சிலுப்பிக் கொண்டு வந்தாள்.

''டவுனுகாரரே. நான், உன் பொண்டாட்டிக்கு புடவை எடுத்து தந்தா வாங்கிக்குவியா?'' என்றதும், பெண்கள் பக்கமிருந்து, 'கொல்'லென சிரிப்பு சப்தம் கேட்டது.

''சரி புடவை வேணாம். பணமாவது வாங்கிக்குங்க.''

''ஏன்யா, எங்களைப் பார்த்தா கோவில் வாசல்ல பிச்சை எடுக்கிறவங்க போல தெரியுதா?''

''ஐயா, பெருமக்களே, பிச்சைன்னெல்லாம் சொல்லாதீங்க. நீங்க சந்தோஷப்படணும்ன்னு தலைவர் பணம் குடுத்து அனுப்பியிருக்கார். தலைக்கு 10,000 ரூவா,'' என்றான், தர்மன்.

''கையு, காலு இல்லாதவங்களுக்கு அஞ்சு, பத்துன்னு பிச்சை போடுவோமில்லே! இவங்க பட்டணத்தாளுங்க, பணக்காரங்க; பத்தாயிரம் பிச்சை போட வந்திருக்காங்க. அதை வெச்சுட்டு என்னய்யா செய்ய?''

''எவ்வளவோ செய்யலாமே, உங்க வீட்டம்மாவை கூட்டிட்டு கடைக்கு போங்க. வேண்டியது வாங்கிக்குடுங்க. ஹோட்டலுக்கு போயி நல்லா சாப்பிடுங்க. சந்தோஷமா இருங்க.''

''நாங்க அப்படியெல்லாம் இருக்கணும்ன்னு நீ காசு குடுப்பியா?''

''குடும்பத்துக்கு பத்தாயிரம் ரூபா குடுக்கணுமின்னா, ஒரு வேட்பாளருக்கு எம்பூட்டு செலவாகும்? அம்மாடியோவ்! அப்புறம் அவரு போட்ட பணத்தை எடுக்க பார்ப்பாரா, நியாயமா மக்கள் பணி செய்வாரா? டவுனுகாரரே இதுக்கு பதில் சொல்லுங்க?''

பதில் கூற முடியாமல் நின்றான், தர்மன்.

''விவசாய பொருட்களுக்கு அடிமட்ட விலையை உயர்த்திக்குடுங்கன்னு பலமுறை விண்ணப்பிச்சிருக்கோம்; உரக்கடன், மோட்டாரு வாங்க கடன்னு பலமுறை ஆபீசருங்ககிட்ட கெஞ்சியிருக்கோம். அது எதையும் செய்யல... காடு, கழனியை கண்டுக்காம, பொண்டாட்டியை கூட்டிட்டு போக்கத்த பசங்க மாதிரி ஊரு சுத்தணுமாம். அதுக்கு இவன் காசு குடுப்பானாம். வெட்கம், மானமுள்ள எந்த ஆம்பளையாவது இதுக்கு ஒத்துக்குவானா?

''சொந்தக் காசுல பெண்டாட்டிக்கு புடவையும், புள்ளைங்களுக்கு துணியும் வாங்கித்தர்றவன் தான் சரியான ஆம்பளை,'' என்று சொல்லி, தர்மன் முகத்தருகே காரி துப்பினாள், ராக்காயி ஆத்தா.

''உழைக்காம வர்ற காசு கோடி ரூபாயின்னாலும் வேண்டாம்ய்யா! ஆண்டவன் எங்களுக்கு கை, கால் குடுத்திருக்கான். உழைச்சு பிழைக்க பெரியவங்க சொல்லித்தந்திருக்காங்க. ருசியா ஆக்கிப்போட வீட்டு பொம்பளைங்க இருக்காங்க. உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்றோம், கேட்டுக்குங்க. காசு இல்லததால நாங்க பிச்சைக்காரங்க இல்லை. உழைப்பாளிங்க. எங்களுக்கு இலவசமா எதுவும் வேணாம்.''

''மன்னிச்சுடுங்கய்யா! தப்பா பேசிட்டோம், ஓட்டு போடுவீங்களா?''

''அவசியம் போடுவோம். ஜனநாயக நாட்டுல அது எங்க உரிமை; தேதி சொல்லிட்டு, ஓட்டு சாவடி எதுன்னு சொல்லுங்க, வருவோம். மத்தபடி, அதையும், இதையும் கொண்டு வந்து அசிங்கமா பேசினீங்கன்னா மரியாதை கெட்டுடும்.''

தி ரும்பி வருகையில், தர்மன் குழுவிடம் கனத்த மவுனம் நிலவியது. இன்று நடந்தது இதுவரை கேள்விப்படாதது.

''என்னய்யா இப்புடி ஆகிப்போச்சு? இத்தனை பொருள், பணம், சேலைன்னு பார்த்தும் யாரும் ஆசைப்படலை. உழைச்சு சம்பாதிக்க நியாயமான பணம் வந்துசேர உதவி மட்டும் தான் கேட்டாங்க. கல்வியறிவு இல்லாத ஏழைகள் தான்! ஆனா, அவங்க காட்டின தன்மானமும், யோக்கியமும் பசுமரத்தாணியா மனசுல பதிஞ்சு போச்சு. 'என் வீட்டு பெண்களுக்கு புடவை வாங்கித்தர நாங்க அப்பன், மகன், கணவன் இருக்க, நீங்க யாரு?'ன்னு ஒரு கேள்வி கேட்டாங்க பாரு, அவமானத்துல வாய் ஒட்டிக்கிச்சு. இப்படி நல்ல மனிதர்களை தரிசித்ததே, கோவிலுக்கு போயிட்டு வந்தாப்புல மனசு நிறைஞ்சு கெடக்கு,'' என்று பிரமிப்புடன் கூறினான், தர்மன்.

ஸ்ரீ மல்லிகா குரு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us