PUBLISHED ON : ஆக 23, 2026

மகள், சுகன்யா வந்திருந்தாள்; பெற்றோருக்கு மிக்க மகிழ்ச்சி. 'மாமனார், மாமியார், கணவர், இரண்டு குழந்தைகள் என்று, அவர்களையே பார்த்துக் கொண்டு, ரொம்பவும் போர் அடிக்கிறது; அதனால்தான் உங்களைப் பார்க்க வருகிறேன்...' என்று, தொலைபேசியில் தகவல் தெரிவித்துவிட்டு தான் வந்தாள்.
அவள் சொன்ன காரணம் பொய் என்பது, பெற்றோருக்கு, முக்கியமாக அம்மாவுக்கு நன்றாக தெரியும். தங்களுடைய, எழுபதை கடந்த வயோதிகத் தனிமை என்ற பாலைவனத்தின் வெம்மையைக் குறைக்க வந்திருக்கும் பூங்காற்று அவள். நாலைந்து நாட்களுக்கு பிறகு விடைபெற்றுச் சென்று விடுவாள் என்றாலும், அந்த, 40 வயது தென்றலின் வருடல், பல மாதங்களுக்கு நெஞ்சை இதமாக நீவி விட்டுக் கொண்டிருக் கும்!
அவளுடனான அரட்டைதான் எத்தனை புத்துணர்வாக இருந்தது!
பழைய சம்பவங்கள், தங்களுடனான சந்திப்பு இடைவெளியில் தனக்கேற்பட்ட அனுபவங்கள், அவற்றின் சந்தோஷங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் என்று அவள் தான் எத்தனை கோர்வையாக எடுத்துச் சொல்கிறாள்! அம்மாவாவது நடுநடுவே ஏதேனும் கேள்வி கேட்டு விளக்கம் பெறுவாள்; ஆனால், அப்பாதான் திறந்தவாய் மூடாமல் பிரமித்து அமர்ந்திருப்பார்.
பிறந்த வீட்டுக்கு வந்தோம், நிம்மதியாக, நாள்பூரா ஓய்வெடுத்தோம் என்று நேரத்தை ஓட்டுவதில்லை, சுகன்யா. ஹாலில், படுக்கை அறையில், பூஜையறையில், ஏன் சமையலறையிலும் கூட பொருட்களை ஒழுங்குபடுத்துவாள். உடனடி தேவைக்கானவற்றை முன் வரிசையிலும், அடிக்கடி பயன்படுத்த வேண்டாதவற்றை பின் வரிசையிலும் அழகாக அடுக்கி வைப்பாள். கூடவே, 'அப்பா இப்படி இருந்தால், உங்களுக்கு சவுகரியமாக இருக்குமா?' என்று அவருடைய சம்மதத்தையும் கேட்பாள்.
ஆனால், சமையலறையில் தன் ராஜாங்கம் என்ற ஆதிகால எஜமானியாதிக்கம் கொண்டிருந்த, அம்மா மட்டும், 'வேண்டாம்மா, அது அப்படியே இருக்கட்டும்; இது, இப்படியே இருக்கட்டும், அதுதான் எனக்கு சவுகரியம்...' என்று, மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பாள். மனசுக்குள் சிரித்துக் கொள்வாள், சுகன்யா. அம்மா தான் என்றாலும், அவளும் ஒரு பெண்தானே!
''சுகன்யா, அப்பாகிட்ட நாலு நாளா சொல்றேன், கொஞ்சம் மளிகை சாமான், 'ஆர்டர்' பண்ணணும். அவருக்கு என்னவோ அப்படி ஒரு அலட்சியம். ஆனால், என் சமையலில் குறை மட்டும் சொல்லத் தெரியும்,'' என்று, புகார் சொன்னாள், அம்மா.
''ஏம்ப்பா அம்மாவை இப்படிப் படுத்தறீங்க?'' என்று கேலியாக கேட்டு, அம்மாவுக்குப் பரிந்து பேசினாள், சுகன்யா.
''நான் மாட்டேன்னு சொல்லலேம்மா. கடுமையான வெயிலா இருக்கு. பாவம், 'டெலிவரி' பசங்க நொந்து நுாடுல்ஸாகி வருவாங்க. வெயில் தணியட்டும், சாயங்காலமா, 'ஆர்டர்' பண்ணிக்கலாம்னுதான் ரெண்டு நாளா நினைக்கறேன், மறந்து போயிடுது,'' என்று பரிதாப விளக்கம் கொடுத்தார், அப்பா.
''என்னப்பா நீங்க?'' என, சற்றே உரத்தக் குரலில் கேட்டவள், ''அது அவங்க வேலைப்பா. அதுக்காகத்தான் அவங்க இருக்காங்க. வெயில், மழைன்னு பார்த்து நீங்க, 'ஆர்டர்' கொடுக்காததால ஒருத்தருக்கு இதனால வர்ற வருமானம் இல்லாம போயிடுதே, அதை யோசிச்சீங்களா?'' என்றாள், சுகன்யா.
''அது வந்தும்மா...''
' 'இதப்பாருங்க. உங்களோட இரக்கம் அவங்களுக்கு சோறு போடாது; உங்களோட, 'ஆர்டர்'தான் போடும். ரொம்பவும் பாவப்பட்டீங்களா, அப்படி வர்ற தம்பி கிட்ட, 'தண்ணி குடிக்கிறியாப்பா, மோர் தரவா?' என்று கேட்டு அவங்களோட அலைச்சலுக்கு ஆறுதல் காட்டுங்க.''
'ஓ, இப்படி ஒரு கோணம் இருக்கா?' என்று கேட்டு சம்மதமாக தலையாட்டினார், அப்பா.
நடுநடுவே, புகுந்த வீட்டிலிருந்து ஏதாவது தொலைபேசி அழைப்புகள் வந்தன.
நலவிசாரிப்புக்கு பின், ''உங்க பிள்ளைக்கு தான் சமையல் சொல்லிக் கொடுத்திருக்கேனே... இன்னிக்கு என்ன நளபாகம்?'' என்று கேட்டாள், சுகன்யா.
''இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை வேறயா, பொரிச்ச குழம்பு பண்ணினான், பாரு, அட்டகாசம். உன் கைமணம் எல்லாம் அப்புறம்தான்,'' என்று மாமியாரிடமிருந்து பதில் வந்தது.
''பிள்ளை பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறாரோ!'' என்று எதிர்முனைக் காட்சியை படம் பிடித்துக் கேட்டாள், சுகன்யா. உடனே பேச்சு அழைப்பு, வீடியோ காலாக மாறிவிட்டது. அங்கே, ஐந்து பேருடனும் மாற்றி, மாற்றி சுகன்யா கலகலப்பாக அரட்டை அடித்தாள். கூடவே தன் அம்மா, அப்பாவையும் அவர்களுக்கு காட்டி, பேச வைத்தாள்.
ஒ ருநாள் மாலை, ''அப்பா, அம்மா, வாங்க. இன்னிக்கு வெளியிலே ஹோட்டல்ல போய் சாப்பிடலாம். சமைக்க வேண்டாம், அம்மாவுக்கு, 'ரெஸ்ட்!'' என்றாள், சுகன்யா.
''சூப்பர். இன்று ஒருவேளைக்கு, செத்துப்போன என் நாக்குக்கு புது சுவை கிடைக்கும்,'' என்று கிண்டலடித்தார், அப்பா.
''இருக்கட்டும், இன்னும் இரண்டொரு நாள்தானே? அப்புறம் தட்டைத் துாக்கிக் கிட்டு, 'கிச்சன்' பக்கம்தானே வருவீங்க, அப்ப பேசிக்கறேன்,'' என்று, செல்லமாக கோபித்தாள், அம்மா.
மூவரும் ஆட்டோ பிடித்தனர். பேரம் பேசி, 150 ரூபாய்க்கு கட்டணம் நிர்ணயித்தாள், சுகன்யா. ''நான் தான் தருவேன்,'' என்றார், 'பென்ஷன்'தாரரான, அப்பா.
''சரி, சரி,'' என்று சிரித்தபடி ஒப்புக் கொண்டாள், அவள்.
ஹோட்டல் வந்ததும், இறங்குவதற்கு முன்னாலேயே அப்பா, 200 ரூபாய் தாள் ஒன்றை ஆட்டோக்காரரிடம் நீட்டினார்.
''உனக்கு இன்னிக்கு, 'லக்கி ப்ரைஸ்' 50 ரூபாய், 'எக்ஸ்ட்ரா' கொடுத்திருக்கேன், ஆனா, இதை எடுத்துகிட்டு, 'டாஸ்மாக்' பக்கம் போயிடாதே,'' என்று அறிவுரையும் தந்து, சுகன்யாவை, 'எப்படி நம்ம அட்வைஸ்?' என்று கண்களாலேயே பெருமை பொங்கக் கேட்டார்.
தன்னோடு அம்மா இறங்க, 'பளிச்'சென்று அப்பாவை ஆட்டோவிலிருந்து வெளியே இழுத்தாள், சுகன்யா. அதற்குள் பணம் கை மாறிவிட்டது. ஆட்டோ சிட்டாகப் பறந்தது.
''ஏம்ப்பா, உங்களுக்கு என்னாச்சு? ஏன், 50 ரூபாய் அதிகமா கொடுத்தீங்க? நான்தான் கட்டணத்தைப் பேசி முடிச்சிட்டேன் இல்லே? எதுக்காக இப்போ, 'எக்ஸ்ட்ரா?' அவர்கிட்ட நல்ல பேர் வாங்கிக்கறதுக்கா? இப்ப நீங்க கொடுத்திட்டீங்க, அடுத்த சவாரியும் இதே மாதிரி கொடுக்கும்ன்னு அவரை நினைக்க வெச்சிட்டீங்களே... ஒருவேளை இது மாதிரி கிடைக்காமல் போய்விட்டால், என்ன செய்வது என்ற பேராசையில் அடுத்த சவாரிகிட்ட எக்கச்சக்கமா, 'டிமாண்டும்' பண்ணுவாரே, அப்பா. நீங்க, கர்ணப் பிரபுவாகவே இருந்துட்டுப் போங்க, ஆனா அது என்ன, 'டாஸ்மாக் பக்கம் போயிடாதே'ன்னு, 'அட்வைஸ்?' அதுவரைக்கும் இயல்பா இருந்த அந்த ஆட்டோக்காரர் முகத்துல, நீங்க இப்படி சொன்னதும், 'பளிச்'னு ஒரு பிரகாசம்; உடனே, ஆட்டோ எடுத்த வேகத்தைப் பார்த்தீங்கல்ல? நேரா, 'டாஸ்மாக்'குக்குதான் அவர் போவார். கூடுதலா பணம் கொடுத்து, மொத்தத்தையும், 'டாஸ்மாக்'ல அவரைக் கரைக்க வெச்சுட்டீங்களே, அப்பா!''
'அடடா, என், 'அட்வைஸு'க்கு இப்படியும் ஒரு எதிர்மறை விளைவு இருக்கிறதா?' என்று முகத்தில் விளக்கண்ணெய் வழிய, தன்னைத் தானே நொந்து கொண்டார், அப்பா.
ஆனால், ஹோட்டலுக்குள் நுழைந்த அந்தக் கணமே நிதானமானாள், சுகன்யா. ஆட்டோ விவகாரம் என்ற ஒன்று நிகழ்ந்ததாகவே அவள் காட்டிக் கொள்ளவில்லை. அப்பாதான் இருப்பு கொள்ளாமல் நெளிந்தார். மேஜைக்கு முன்னால் நாற்காலியில் அவரால் முழுமையாக உட்காரவும் முடியவில்லை.
''என்னப்பா சாப்பிடறீங்க? இதோ, 'மெனு கார்டு!' பார்த்து சொல்லுங்க. அம்மா, நீ உன்னோட சாய்ஸை சொல்லு,'' என்று வழக்கமான உற்சாகத்துடன் கேட்டாள், சுகன்யா.
''எனக்கு ஒண்ணும் வேணாம்மா,'' குற்ற உணர்வுடன் சொன்னார், அப்பா.
''அப்பா, அந்த ஆட்டோக்காரரை மறந்திடுங்க; நடந்தது நடந்துப் போச்சு. ஒருவேளை, 'டாஸ்மாக்'குக்கு போக முடியாம, அவருக்கு பாதிப்பில்லாத ஏதேனும் இடையூறு வந்திருக்கும்ன்னு, 'பாஸிடிவா' யோசிங்க. இப்ப என்ன நடக்கணுமோ அதைப் பாருங்க. சரி, என்ன சாப்பிடறீங்க?''
''ஏடாகூடமா பண்ணிடறது, அப்புறம் மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கறது. நானும் தான், 45 வருஷமா பார்க்கறேனே,'' அம்மா தன் பங்குக்கு அப்பாவை இடித்தாள்.
''அம்மா, உனக்கும் சேர்த்துதான் சொல்றேன். அதை மறந்திடு. நீ என்ன சாப்பிடறே?'' அம்மாவைக் கண்டித்தாள், சுகன்யா.
மகளுடைய அறிவுறுத்தலிலும், கண்டிப்பிலும் பெற்றோர் இருவரும் திருப்தியாக சாப்பிட்டனர்.
அ ன்று, சுகன்யா புகுந்த வீட்டுக்குத் திரும்ப வேண்டிய நாள். துணிமணிகளை எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டாள். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் ஏக்கமாகத்தான் இருந்தது. அப்பா, சும்மாவானும் உள்ளுக்கும், வெளிக்குமாக நடந்து கொண்டிருந்தார். ''பார்த்து போம்மா. வழியில ஏதேனும் பிரச்னைன்னா, சட்டுன்னு மாப்பிள்ளைக்கு போன் பண்ணிடு,'' என்று யாரும் கேட்காமல் தானே சொன்னார், அப்பா.
அப்போது, மாப்பிள்ளையிடமிருந்து போன் அழைப்பு. ''சுகன்யா, சாயந்திரம் ஸ்கூல்லேருந்து நம்ம, சஞ்சய் சைக்கிள்ல வீட்டுக்குத் திரும்பிகிட்டிருந்தானா... இடது பக்கத்திலேர்ந்து ஒரு கார் வேகமா வந்து இவன் மேல மோதிட்டுது. இடது முழங்காலுக்குக் கீழே, 'ப்ராக்சரா' இருக்கும் போலிருக்கு. ஆஸ்பத்திரியில, 'அட்மிட்' பண்ணியிருக்கோம். நீ, நேரா ஆஸ்பத்திரிக்கே வந்திடு.''
''அடடா,'' என்று வருந்தினாள், சுகன்யா.
''என்னாச்சு?'' என்று கேட்ட பெற்றோரிடம் விபரம் தெரிவித்தாள்.
''நாம ஒழுங்கா போனாலும், மற்றவங்க நம்மை எங்கே ஒழுங்கா போக விடறாங்க!'' என்று பொதுவாக சொன்னாள்.
அம்மாவுக்கு கண்களில் நீர் தளும்பி விட்டது. அப்பாவோ பதறிப் போனார்.
''அடக்கடவுளே! பத்தாங்கிளாஸ் படிக்கற பேரப் பிள்ளையாச்சே! மாப்பிள்ளை, 'ப்ராக்சர்'ன்னு வேற சொல்றார். சுகன்யா, என்னம்மா இது சோதனை?'' என்று வாய்விட்டு அரற்றினார்.
''அப்பா, ஏன் வீணா கவலைப்பட்டு மனசை அலட்டிக்கறீங்க, இருக்கட்டும், எல்லாம் அனுபவம் தான். சீக்கிரம் குணமாக வேண்டிய முயற்சியெல்லாம் பண்ணலாம்,'' என்று அமைதியாகச் சொன்னாள்.
''என்னம்மா நீ, என்னால தாங்க முடியலியே!'' என்று புலம்பினார்.
''அப்பா, நீங்க கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது? சரி, இப்படி நடந்தாச்சு, அப்புறம் என்னன்னு தானே பார்க்கணும்? சஞ்சய் இப்போ, 'ட்ரீட்மென்ட்'ல இருக்கான். எல்லாம் சரியாகிடும்.''
''அதெப்படி நீ, இவ்ளோ, 'கூலா' இருக்கே?''
''கவலைப்படறதால நாம அடுத்து செய்ய வேண்டியதை மறந்திடறோம் அல்லது ஒத்திப் போடறோம். எனக்கு வழியில ஏதாவது ஆகிட்டா, மாப்பிள்ளைக்கு தகவல் தெரிவிக்கும்படி தான் நீங்க சொன்னீங்க. ஏன்னா, உங்களால, இந்த வயசிலே, இந்த உடம்போட எந்த உதவியையும் பண்ணிட முடியாதுன்னு தானே? அதனால, அனாவசியமா கவலைப்பட்டு மனசையும், உடம்பையும் கெடுத்துக்காதீங்க. அதுக்கு பதிலா, சஞ்சய்க்கு சீக்கிரம் குணமாகணும்ன்னு பிரார்த்தனை பண்ணிக்கோங்க. அதுக்கு நிச்சயம் பலன் இருக்கும்,'' என்ற சுகன்யா, ஏற்கனவே பதிவு செய்திருந்த ஆட்டோ வரவே அதிலேறி கிளம்பினாள்.
முக மலர்ச்சியுடன் கையை ஆட்டி, பெற்றோரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டாள்.
ஒ ரு மணி நேரத்துக்கெல்லாம் அவளிடமிருந்து போன்: ''அப்பா, அம்மா, சஞ்சய்க்கு சும்மா, 'ஹேர் லைன் க்ராக் 'தான். ஒரே வாரத்துல சரியாயிடும். எல்லாம் நீங்க பிரார்த்தனை பண்ணிக் கொண்ட பலன்தான்.''
அம்மாவும், அப்பாவும் நிம்மதியுடன் கண்களை துடைத்துக் கொண்டனர். மனசுக்குள்ளிருந்து, ''எதுக்கும் கவலைப்படாதீங்க; கவலையையே பிரார்த்தனையாக்கிடுங்க,'' என்று, அவருக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தாள், சுகன்யா.
பிரபு சங்கர்
