PUBLISHED ON : ஜூன் 14, 2026

மார்கழி மாதப் பனியில் குளித்துக் கொண்டிருந்தது, கோவை மாநகரம். காலைக் கடன்களை முடித்து நடைப்பயிற்சி செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள், சாரதா. தலைக்கு, 'ஸ்கார்பை' கட்டிக் கொண்டவள், கடிகாரத்தில் மணி பார்த்தாள். 6:00 என காட்டியது. வெளியில் இன்னும் இருள் விலகவில்லை.
இன்னும், 10 நிமிடம் ஆகட்டும் என நினைத்தவள், சோபாவில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள். மூடிய கண்களில், கணவரின் முகம் வந்தது... 'நமக்கு கிடைச்சிருக்கிற இந்த மனித வாழ்க்கை ரொம்ப அரிதானது. அதை நல்லா ரசிச்சு வாழணும்...' என்று அடிக்கடி அவர் கூறும் வாசகங்கள் மனதில் தோன்ற, புன்னகைத்தாள். காலை, மாலை இரு நேரமும் நடைப்பயிற்சி செய்வது, சாரதாவின் வழக்கம்.
வீட்டுக்கு அருகில் இருந்த பூங்காவின் காம்பவுண்டை சுற்றித் தான் நடப்பாள். பூங்காவினுள் சென்றால், அங்கு நடைப்பயிற்சி செல்லும் மனிதர்களையும், விளையாடும் குழந்தைகளையும் பார்த்தால், அவளின் தனிமை மனதில் சுருக்கென்று தைக்கும். தன்னிரக்கத்தால் கண்களில் நீர் கோர்க்கும். அதை தவிர்க்க உள்ளே செல்ல மாட்டாள்.
அன்று என்னவோ கால் வலிப்பது போல் இருந்ததால், பூங்காவினுள் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள், சாரதா. அருகில் இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்திருந்த அவள் வயதையொத்த, இரு ஆண்கள் பேசிக்கொண்டிருந்தது அவள் காதுகளில் விழுந்தது.
'இன்னிக்கி எனக்கு, அமெரிக்க அதிபர், டிரம்ப் கூட, 'மீட்டிங்' இருக்குப்பா. நான் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு கிளம்பணும்...' என்று ஒருவர் கூற, மற்றொருவர், 'எனக்கு மதியம், ரஷ்ய அதிபர், புடினோட, 'மீட்டிங்' இருக்கு...' என்று கூறி முடித்து, இருவரும் பெரிய குரலில் சிரித்தனர்.
பயந்து போய் எழுந்தாள், சாரதா.
அவள் எழுவதை பார்த்த இருவரும், அவளிடம், ''என்ன மேடம், இரண்டு பைத்தியங்ககிட்ட மாட்டிக்க போறோம்ன்னு கிளம்பிட்டீங்களா,'' என்று கேட்டனர்.
பயந்த குரலில், ''என்னமோ மாதிரி பேசினீங்களா... அதான் கொஞ்சம் பயந்துட்டேன்,'' என்றாள், சாரதா.
''மேடம் நான், சபேசன், இவர், ராஜாமணி. சும்மா தமாஷுக்கு இப்படி பேசிக்குவோம்,'' என்றவர், ''நாங்க ரெண்டு பேரும் பேங்க்ல மேனேஜரா இருந்து, 'ரிட்டயர்' ஆனவங்க,'' என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
சாரதாவும், அவர்களிடம் தான் பணி ஓய்வு பெற்ற ஆசிரியை என, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உடனே கிளம்பி விட்டாள்.
முதலில், அவர்களிடம் பேசவே பயந்து இறுக்கமாகவே இருந்தாள், சாரதா. நடைப்பயிற்சியின் போது அவர்களை பார்த்தாலும், பார்க்காதது போல் விலகிச் சென்று விடுவாள். ஆனால், சில நாட்கள் அவர்களை சற்று உற்று கவனித்ததில், அவர்களின் பேச்சில் இருந்த தெளிவான விஷய ஞானமும், உதவும் பண்பும் அவளுக்கு புரிந்தது.
அடுத்து வந்த நாட்களிலேயே, மூவரும் நல்ல நட்புடன் உரையாடினர். சாரதாவும் அவர்களை பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டாள். சபேசன் பல ஆண்டுகளுக்கு முன்பே மனைவியை இழந்தவர். தனி ஆளாகவே இருந்து, தன் மகள், மகன் இருவரையும் ஆளாக்கி இருந்தார். ராஜாமணியின் மனைவி, ஆறு மாதங்களுக்கு முன்பு, கேன்சர் நோயால் இறந்து போனதாகவும் தெரிந்து கொண்டாள். இருவரும் தற்போது தங்கள் பிள்ளைகளின் வீட்டில் வசிப்பதாக கூறினர்.
சாரதா, தன் இரு மகன்களும் வெளிநாட்டில் வசிப்பதையும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவள் கணவர் இறந்து விட்டதால் தான் வீட்டில் தனியாக இருப்பதையும் உரையாடலின் போது தெரிவித்தாள்.
சாரதாவுக்கு, மூன்று மாதங்கள் போனதே தெரியவில்லை. தனிமையின் இறுக்கம் சற்று தளர்ந்தது போல் உணர்ந்தாள். நடைப்பயிற்சியின் போது மட்டுமல்லாமல் அருகில் இருந்த, 'டிபார்ட்மென்ட் ஸ்டோரில்' பொருட்கள் வாங்க வரும் போது, கோவிலுக்கு செல்லும் போது என, மூவரும் அடிக்கடி சந்தித்து பேசி சிரித்து அளவளாவினர்.
சாரதாவுக்கு வங்கி விஷயமாக எந்த சந்தேகம் எழுந்தாலும், சபேசனோ, ராஜாமணியோ தெளிவுபடுத்துவர். நல்ல நண்பர்களின் துணை, வாழ்க்கையின் வரமாக நினைத்து மகிழ்ந்தாள், சாரதா.
ஒ ருநாள் மாலை எழுத்தாளர், சுஜாதாவின் நாவல் ஒன்றை படித்துக் கொண்டிருந்தாள், சாரதா. அமெரிக்காவிலிருந்து மூத்த மகன் போனில் அழைக்க ஆசையுடன் பேச ஆரம்பித்த, சாரதா, ''தம்பி என்ன அதிசயமா கூப்பிட்டு இருக்க,'' என்றாள். எப்போதுமே அவன் தன்னை பிசியாக இருப்பதாகவே காட்டிக் கொள்வான். ஏதாவது விஷயம் என்றாலும், மருமகள் தான் பேசுவாள்.
''ரொம்ப முக்கியமான விஷயம் அதான்,'' என்றவன், ''நீ புதுசா யாரோடையும் பழக வேண்டாம்மா? நீ உண்டு, உன் வேலை உண்டுன்னு இரும்மா. வேற ஏதாவது வில்லங்கத்தை இழுத்துட்டு வந்துடாத,'' என்றான், 'சிடுசிடு'வென. சாரதாவுக்கு, 'சுர்' என, கோபம் ஏறியது.
அவளும் கோபமாக, ''இந்த வயசுக்கு மேலே எனக்கு நீ, 'கிளாஸ்' எடுக்காதடா... எனக்கு தெரியும்,'' என்று கூறி கொதிப்புடன் போனை நிறுத்தினாள்.
'அவ்வளவு அக்கறை இருந்தா, மாசம் ஒரு தடவையாவது என்னோட பேசணும். மூணு வருஷம் ஆகப்போகுது, ரெண்டு பேரும் இங்க வந்து. எனக்கு என்ன நடந்தாலும் முதல்ல வர போறவங்க அக்கம் பக்கம் இருக்கிறவங்கதான். பேசறான் பேச்சு...' என்று ஆத்திரத்துடன் முணுமுணுத்தாள்.
சற்று நேரத்தில் திரும்பவும் போன் மணி அடிக்கவும் யார் எனப் பார்த்தாள். இளைய மகன் லண்டனில் இருந்து, ''அம்மா,'' என்று அவன் பாசமாக அழைக்கவும், சாரதாவும், ''சின்னப்பையா,'' என்றாள், தழுதழுத்த குரலில்.
''வருத்தப்படாதம்மா. அண்ணன் இப்பதான் பேசினான்,'' என்று கூறியவன், ''அவங்க புதுசா குடி வந்தவங்க தானே, யாரு எப்படின்னு தெரியாது. பொம்பளைங்கன்னா கூட பரவாயில்லை,'' என்று மகன் பேசப்பேச, சாரதாவுக்கு ஒன்று உறைத்தது.
''இங்க பாருடா, ரெண்டு மாசத்துக்கு முன்ன நான் டெங்கு காய்ச்சல் வந்து அவதிப்பட்டபோது, அவங்க தான் உதவி செஞ்சாங்க. ஆம்பள பொம்பளைன்னு பார்த்தாங்களா, இல்ல நீங்க தான் வந்தீங்களா? ரெண்டு பேரும் வெளிநாட்டில் இருக்கீங்க. உங்க அப்பாவும் போயிட்டாரு. நான் இன்னும் மிச்ச காலத்தை ஓட்ட வேண்டாமா?''அவள் பேச்சை மறுதலித்த மகன், ''அம்மா நீ எதையெதையோ யோசிக்கிற. நம்ம சொந்தக்காரங்க என்ன சொல்லுவாங்கன்னு யோசிக்க மாட்டாயா?'' என்றான்.
அ ன்று இரவு, சாரதாவால் துாங்க முடியவில்லை. பக்கத்து தெருவில் தன் வீட்டிலிருந்து, 100 மீட்டர் துாரத்தில் இருக்கும் சொந்தங்கள் ஒருநாளும், அவளை, 'எப்படி இருக்கிறாய்?' என நலம் விசாரித்ததில்லை. ஆனால், இங்கு நடக்கும் விஷயங்களை, வெளிநாட்டில் வசிக்கும் தன் மகன்களிடம் சொல்லும் இவர்களின் குணத்தை என்னவென்று சொல்வது. ஆண்-பெண் நட்பு எந்த வயதிலும் தவறாகத்தான் புரிந்து கொள்ளப்படுமா?
கா லை வழக்கம் போல் எழுந்த, சாரதா, 'வாக்கிங்' போக பிடிக்காமல் வீட்டிலேயே இருந்தாள். பகல் முழுவதும் ஏதேதோ யோசித்தவள், மாலை நண்பர்களை சந்திக்கப் பூங்காவுக்கு கிளம்பினாள். பெஞ்சில் அமர்ந்திருந்த, சபேசன், ''வாங்க, சாரதா... ஏன் காலையில, 'வாக்கிங்' வரல? உடம்புக்கு முடியலையோன்னு பார்க்க வரலாம்ன்னு நினைச்சோம்,'' என்று அவர் கூறியதை கேட்டு பெருமூச்செறிந்தாள், சாரதா.
மகன்கள் இருவரும் பேசியதை பற்றி கூற பிடிக்காமல், ''எங்க ராஜாமணி சாரை காணோம்,'' என்று கேட்டாள்.
''அதோ வர்றார் பாருங்க,'' என்றார் சிரித்தபடி, சபேசன்.
ராஜாமணியும், ''என்ன, சாரதாம்மா. முகம் வாட்டமா இருக்குதே, என்ன ஆச்சு?'' என்று கேட்கவும், சாரதாவின் கண்களில் நீர் கோர்த்தது.
அதை பார்த்ததும் இருவரும் பதறி, ''பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?'' என்றனர்.
''நான் ஏதாவது ஒரு நல்ல முதியோர் இல்லத்துல சேர்ந்துக்கலாம்ன்னு நினைக்கிறேன்,'' என்றாள், சாரதா.
இருவரும் சற்று திகைத்து பின் ஒருசேர, ''நாங்க கூட இதைப்பற்றி தான் காலையில பேசிட்டு இருந்தோம்,'' என்றனர்.
''சின்னவங்களுக்கு அவங்க குடும்பத்தை பார்க்கத்தான் நேரம் சரியா இருக்குது. பெரியவங்களோட தேவைகள் ரொம்ப கம்மி. அவங்க ஆசைப்படுறது அவ்வப்போது ஒரு அன்பான விசாரிப்பு அவ்வளவு தான். ஆனால், இதை சின்னவங்க ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க. வாழ்க்கையில சில விஷயங்களோட மதிப்பும், அருமையும் இப்போ தெரியாது. அது, இனி எப்போதும் திருப்பி கிடைக்காதுன்னு தெரியும் போது புரிஞ்சிக்குவாங்க,'' என்று சற்று வருத்தத்துடன் கூறினாள், சாரதா.
''ம்... நம் மூவரின் நட்பு, இப்போது பேசுபொருள் ஆகிவிட்டது, நம் வீடுகளில்,'' என்றார், சபேசன்.
சற்று ஆற்றாமையுடன், ''ஆ ம். உண்மைதான்,'' என, அவரை ஆமோதித்தார், ராஜாமணி.
கோ யமுத்துாரில் உள்ள பிரபலமான அந்த முதியோர் இல்லத்தின் பிரார்த்தனை கூடம். முதல் நாள் மாலை அங்கு சேர்ந்த நண்பர்கள் மூவரும், மகிழ்ச்சியாக கண்களை மூடி இறைவனை பிரார்த்தித்தனர்.
பவானி உமாசங்கர்
