தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கரை சேரும் மேகங்கள்! (1)

கரை சேரும் மேகங்கள்! (1)

கரை சேரும் மேகங்கள்! (1)


PUBLISHED ON : நவ 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விடிந்தால் தீபாவளி. முடிந்த மட்டும் உயரத்தில் வர்ணஜாலம் காட்டிக் கொண்டிருந்தன, வெடிகள்.

எண்ணெயில் பிழிந்த முறுக்கை எடுத்து தட்டில் போட்ட, சர்வேஷ், அடுப்பை அணைத்து விட்டு வெளியில் வந்தான்.

சிந்தனை வயப்பட்டவராய், 'ஈசி சேரில்' சாய்ந்திருந்தார் அவன் அப்பா, மாணிக்கம்.

முதல் தரத்தில் இருக்கும் 'பெயின்ட்' கம்பெனி ஒன்றில் 'அக்கவுன்டட்' வேலையில் இருந்தார், மாணிக்கம்.

மனைவி இறந்து, 10 வருடமாகிறது. வீட்டில் அப்பாவும், மகனும் மட்டும் தான்.

மற்ற வீடுகளைப் போல் ஆளுக்கொரு மூலையில் வாழும் தந்தை-மகன் இல்லை இவர்கள். இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் அதீத பாசம் வைத்திருந்தனர். இருவரும் சேர்ந்து விட்டால், வீடு அதகளப்படும்.

சர்வேஷ், பி.டெக்., பயோடெக்னாலஜி படிப்பை முடித்து, நான்கு ஆண்டுகளாகின்றன. வேலை இல்லை. அவனுடன் படித்தவர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து போய் கொண்டே இருக்க, அதுபற்றி, சர்வா கவலைப்படுவதில்லை.

''அப்பா, இந்த முறுக்கை, 'டேஸ்ட்' பார்த்து சொல்லுங்க. அப்படியே இதை செய்த கைக்கு, நீங்க வாங்கின, 'போனஸ்' பணத்துல பாதியை வெட்டணும்,'' என்றபடி அப்பாவிடம் முறுக்கு தட்டை நீட்டினான்.

''இப்படியே இருக்க போறியா, சர்வா?'' என்றார் கவலையாக.

''நான் ஏன் இப்படியே இருக்க போறேன்? 'மெரூன் கலர் பிராண்டட் சர்ட்'டும், அதுக்கு, 'மேட்சிங்கா பேன்ட்'டும் வாங்கி வச்சிருக்கேன். காலையில் விடிஞ்சதும், குளிச்சுட்டு அதை போட்டுக்குவேன்.

''இரண்டாயிரம் ரூபாய்க்கு வெடி வாங்கி வச்சிருக்கேன். அதை வெடிக்கணும். இதுக்கு மேல என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்க.''

''இதெல்லாம் செய்ய உனக்கு வயசு, ஏழு இல்ல, 27. உன் வயசு பையன்கள் எல்லாம் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போயாச்சு. நீ அப்படியே இருக்கே. போகிற இடத்தில் எல்லாம் ஏதாவது பிரச்னை,'' என்றார் கவலையாக.

முறுக்கு தட்டை வாங்கி அருகில் வைத்தான். அப்பாவை நோக்கி திரும்பி அமர்ந்தான்.

''ஏதாவது நல்ல நாள் வந்துட்டா போதுமே, 'அக்கவுன்டட்' சாருக்கு கவலை எங்கிருந்து வருமோ தெரியல.

''நான் தெரியாமதான் கேட்கிறேன். எதுக்கு பண்டிகை நாள் வருது? இல்லாத விஷயத்தை மனசுக்குள்ளே நினைச்சு நினைச்சு வருத்தப் படவா? சந்தோஷமாக இருக்கணும். கடவுள் மேல பக்தி வச்சா மட்டும் போதாது, நம்பிக்கையும் வைக்கணும்.

''முதல்ல கிளம்புங்க வெளியே ஒரு சுத்து சுத்திட்டு வரலாம். ஊரே சந்தோஷமாக இருக்கு. நாமும் சந்தோஷமாத்தான் இருக்கணும்.''

அப்பாவின் கை பிடித்து எழுப்பியவன், அவரை வலுக்கட்டாயமாய் தயாராக்கி, வீட்டை பூட்டி விட்டு தெருவில் இறங்கினான்.

வெடி சத்தம் காதை துளைத்தது.

''சர்வா,'' என்றபடி, இவன் தலையை கண்டதும் தெருவுக்கு வந்தார், மீனாட்சியம்மாள்.

''சொல்லுக்கா.''

''பொண்ணு, மருமக பிள்ளை எல்லாம் வந்தாச்சு. காலையில பூஜைக்கு பூவில்லை. நான் போயிடுவேன், அடுப்பிலே எண்ணெய் காயுது?''

''அதை காய விடாதீங்க. நான் வாங்கிட்டு வர்றேன்.''

மீனாட்சியம்மாள் வாயெல்லாம் பல்லாக திரும்பி போனார்.

''சர்வா கடைக்கா போறே, கேசரி பவுடர் வேணுமே.''

''சர்வா நீ தான், 'கரெக்டா' சொல்லுவ, இந்த தட்டை, 'மொறுமொறு'ப்பா இருக்கான்னு பார்த்து சொல்லேன்.''

கேட்பவர்களுக்கெல்லாம் வழிநெடுக மகன் செய்து வந்த உபகாரத்தில் நொந்து போனார், மாணிக்கம்.

''என்னடா, சர்வா இது? நீ என்ன இந்த ஏரியா செகரெட்டரியா? உன் தலையை வெளியில கண்டாலே, இத்தனை பேர் வர்றாங்க.''

''ஏரியா, 'வெல்விஷர்'னும் சொல்லலாம்,'' என்றபடி, அப்பாவை திரும்பி பார்த்து சொன்னவன், எதிரில் வந்தவளோடு மோதி நின்றான்.

பக்கத்து வீட்டில் வசிக்கும், யாதவி, கோபமாய் ஏதோ சொல்ல வந்தவள், அருகில், மாணிக்கத்தை பார்த்ததும் அமைதியாக நின்றாள்.

''சாரி...''

''நடக்கும் போது பாதையில் கவனம் வைக்கணும். தப்பு செய்துட்டு, 'சாரி' சொல்றதே வழக்கமாய் இருக்க கூடாது,'' என்றவள், சட்டென்று தன் வீட்டிற்குள் சென்று விட்டாள்.

''யாதவி, பூ வாங்கிட்டு வரச் சொன்னனே?'' என்றபடி வந்த லட்சுமி, மகளின் முகத்தில் கோபத்தை பார்த்து வார்த்தையை நிறுத்தினாள்...

''என்ன யாதவி?''

''எதிர்ல வந்த மலைமாடு கண்ணை பின்னால வச்சுட்டு வந்து, மோதிடுச்சு என்மேல,'' கடுகடுப்பை குறைக்காமல் சொல்ல, பதறி போனார், லட்சுமி.

''ஐயோ என்னம்மா சொல்ற? நம்ம தெருவுல ஏது மலைமாடு?'' அப்பாவியாய், லட்சுமி கேட்க, பல்லை கடித்தாள், யாதவி.

''நான் மலைமாடுன்னு சொன்னது, அந்த சர்வாவை. அவனும், அவன் மூஞ்சியும்,'' 'முணுமுணு'த்து கொண்டே உள்ளே சென்றாள்.

கனமான பைகளுடன் உள்ளே வந்தார், சுந்தரம். லட்சுமியின் கவனம் அவர் பக்கம் திரும்பியது.

''லட்சுமி, காய்கறி, பழங்கள் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன். நேத்தே வாங்கி இருந்திருக்கலாம். இன்னைக்கு குதிரை விலை, யானை விலை. யாது, கொஞ்சம் தண்ணி கொண்டு வாயேன்.''

தண்ணீரோடு வந்தாள்.

''ஏம்பா இதெல்லாம் நீங்கதான் போய் வாங்கணுமா? கார்த்திக்கிட்டே, 'லிஸ்ட்' கொடுத்திருந்தால் வாங்கிட்டு வந்திருப்பான் இல்ல.''

மகளின் கரிசனம் மனதை தொட்டாலும், மகனின் விலகலும், அவர் எண்ணத்தில் வந்து மறைந்தது...

''யாரு, உன் அண்ணன் கார்த்திக்கா? அவரு சாப்பாட்டை தொட்ட கையாலே வேற எதையும் தொட மாட்டாரே,'' என்றதும், மூவரும் சேர்ந்து சிரித்தனர்.

''தீபாவளி சமையலை நீயே செஞ்சிடுவியா லட்சுமி?'' கவலையாய் மனைவியை பார்த்தார், சுந்தரம்.

''அதெல்லாம் செஞ்சுடலாம்ங்க. இட்லி, வடை, கேசரி, சட்னி, சாம்பார் இவ்வளவு தானே? 25 பேருக்கு சமைக்கணும். 'ஸ்வீட்'டை கடையில வாங்கிட்டு வந்துட்டீங்க. இட்லியை ஒரு அடுப்பில அவிச்சுட்டே, இன்னொரு பக்கம் சாம்பார் கொதிக்க விட்டால் ஆச்சு.

''யாதவி, சட்னி அரைச்சு தாளிச்சுடுவா. அதெல்லாம் போட்டு கொடுக்க, 'ப்ளாஸ்டிக் பாக்ஸ்' வாங்கி இருக்கீங்க இல்ல,'' பையை ஆராய்ந்தாள்.

''எல்லாம் இருக்கு. பார்த்து எடுத்து வச்சிடு. காலையில என் உயிரை எடுக்காதே, லட்சுமி,'' என்றார் சலிப்பாக.

'ஈசி சேரில்' சாய்ந்து கொண்டார். முன்பு போல ஓடியாட முடிவதில்லை, வயதாவதன் அடையாளம்.

சுந்தரத்துக்கு, சென்னையில் இருக்கும் ஏழு மாடி துணிகடை, 'மயூரன் டெக்ஸ்டைல்'சில் மேனேஜர் உத்யோகம். ஆயிரம் சதுரடியில் கடை இருந்த காலம் தொட்டு ஒரே கடைதான். கடையின் வளர்ச்சி ஏழு மாடியில் வந்து நின்றது இப்போது.

நம்பிக்கைக்கு பெயர் பெற்ற, சுந்தரம்.

மகன் கார்த்திக்கை இன்ஜினியரிங்கும், மகளை எம்.எஸ்.சி., எம்.பில்லும் படிக்க வைத்து, கவுரவமாய் வாழ்வதற்கும் இந்த வேலை தான் மூலதனம்.

கடை முதலாளி திருநெல்வேலிக்காரர். இரக்க குணம் அதிகம். 25 புது புடவைகளை, சுந்தரத்திடம் தந்து, தீபாவளியன்று அருகிலுள்ள முதியோர் இல்லத்தில் தரச்சொல்லி இருந்தார்.

சுந்தரம் தன் பங்காய், 'ஸ்வீட் பாக்சை' வாங்கித் தரலாம் என்று முடிவு செய்ய, லட்சுமி டிபனையும் சேர்த்து தந்துவிடலாம் என்று யோசனையை சொல்லி இருந்தாள்.

''யா தவி, கார்த்திக் இன்னும் வீட்டுக்கு வரலயா? இன்னைக்கு கூட தாமதமா வரணுமா?'' என்றார் கவலையாக.

''வந்திடுவான்பா. வர்ற நேரம்தான்.''

அவள் சொல்லி முடிக்கவும், கார்த்திக்கின், 'பைக்' வாசலை அடைத்து நிற்கவும் சரியாக இருந்தது.

கை நிறைய பைகளுடன் வந்தவன் முகத்தில் அத்தனை மலர்ச்சி.

''இன்றைக்கு இவ்வளவு நேரமா, கார்த்திக்? ஒரு நாள் நேரத்தோடு வந்து, குடும்பத்தோடு இருக்க கூடாதா?'' ஆதங்கமாய் கேட்டாள், லட்சுமி.

''ஆபிஸ் முடிஞ்சு அப்படியே, 'ஷாப்பிங்' போயிட்டு வர்றேன்.''

கொண்டு வந்த பைகளை பிரித்தான். சிகப்பில் வெள்ளி ஜரிகை போட்ட, 'டிஷ்யூ சில்க்' புடவை, தங்கைக்கு. லட்சுமிக்கு மெல்லிய பார்டர் வைத்த பட்டு புடவை. சுந்தரத்துக்கு, 'பிராண்டட் சர்ட், பேன்ட்' கார்த்திக்குக்கு, 'பேன்ட், சர்ட்' என்று ஏராளமான துணிகள்.

நண்பர்களுக்கு அளிக்க, 'கிப்ட்' பாக்சுகள் என்று, அரை லட்சத்தை முழுங்கி இருக்கும் என்று, சுந்தரத்தின் அனுபவம் சொன்னது.

''நான் வேலை பார்க்கிறதே ஜவுளி கடையில தான். நாங்க துணி எடுத்துட்டோம். உனக்கு உடுத்திக்க வேட்டி, சட்டை எடுத்திருக்கு. அப்பறம் எதுக்கு, கார்த்தி இத்தனை செலவு?''

''சம்பாதிக்கிறதே செலவு செய்யத்தானேப்பா? தீபாவளிக்கு, 'யூனிபார்ம்' சட்டை வாங்கிப் போட்டுக்கிட்ட காலத்திலேயே நின்னு போயிட்டீங்க. நான் யார்கிட்டேயும் காசு கேட்கல. ஆனால், நான் வாங்கித் தர்றேன், நீங்க அனுபவிங்க, அவ்வளவுதான்.''

உள்ளே நகர்ந்து போனான்.

கதவை சாத்தியவன் நிலைக் கண்ணாடி முன் நின்று இடுப்பில் கை வைத்து பெருமூச்சு விட்டான்.

மூவாயிரம் ரூபாய் கொடுத்து, 'ஹேர்கட்' செய்ததை நல்லவேளை அப்பா கவனிக்கவில்லை என்று எண்ணி சிரித்தவன், அவசரமாய் தன்னுடைய உடைகளை எடுத்து பையில் திணித்தான். நண்பர்களுடன் மூணாறு, 'ட்ரிப்' செல்ல புறப்பட்டு கொண்டே, அப்பாவை எப்படி சமாளிப்பது என்று சிந்தித்து கொண்டிருக்க, அவனுடைய மொபைல் போனுக்கு, 'மெசேஜ்' வந்து விழுந்தது.

'மிஸ்டர் கார்த்திக், நீங்கள் எங்களிடம் வாங்கிய தொகைக்கு கட்ட வேண்டிய வட்டி தொகை இரண்டு மாதமாய் நிலுவையில் உள்ளது. உங்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. நேரில் வரவும். உடனடியாக பணம் செலுத்தாவிட்டால், விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்!'

வியர்த்து நின்றான், கார்த்திக்.

- தொடரும்

- ஜே.பி. யுகபாரதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us