PUBLISHED ON : நவ 15, 2026

முன்கதைச் சுருக்கம்: எதற்கும் பெரிதாய் அலட்டி கொள்ளாத வேலையில்லா பட்டதாரி, சர்வா, தன் அப்பாவிடம் பிரியத்துடன் இருக்கிறான். பல இடங்களில் வேலைக்கு முயன்றும், எதுவும் கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டில் வசிக்கும், கார்த்திக் ஆடம்பர பிரியன். அவன், 'ஆன்-லைனில்' வாங்கிய கடனுக்கு உடனடியாக வட்டி கட்டச் சொல்லி குறுஞ்செய்தி வந்தது. இ ந்த முறையும், சர்வாவுக்கு தோல்வி தான். தோல்வி புதிதில்லை; காரணம் தான் புதிது.
கண்துடைப்புக்கு நடந்த, 'இன்டர்வியூ'வை, அங்கேயே சுட்டிகாட்டி, தட்டி கேட்டு விட்டுத்தான் வந்திருந்தான்.
வீட்டிற்குள் செல்ல விருப்பமற்று, தோட்டத்தில், 'வெதுவெது'ப்பான வெயிலில், செடிகளுக்கு மத்தியில் அமர்ந்திருந்தவனை தேடிக் கொண்டு வந்தார், அவனது அப்பா, மாணிக்கம்.
மகனின் மனநிலையை உணர்ந்திருந்த, மாணிக்கம், அருகில் வந்து தோள்களை தொட்டார்.
''ஏன், சர்வா இங்கே வந்து உட்கார்ந்திருக்கே?''
''சட்டுன்னு ஒரு கவிதை தோணுதுப்பா, சொல்லட்டுமா?''
'செடிகளுக்கு நடுவே
அவள் அமர்ந்திருந்தாள்;
ஒரு பூவை போல...
அடடே!'
மகனின் குறும்பு முகம் திரும்பி வந்ததில் மனது லேசானது, மாணிக்கத்துக்கு.
''ரொம்ப நல்லாயிருக்கு. காதுல கேட்காத வரைக்கும்.''
அவரும், சர்வாவுக்கு சளைத்தவர் இல்லை என்று காட்ட, இருவரும் மனம் விட்டு சிரித்தனர்.
சிரிப்பு சத்தத்தில் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து எட்டி பார்த்த, யாதவி, அப்பாவும், மகனும் சிரித்து பேசி கொண்டிருப்பதை பார்த்து தலையை இழுத்து கொண்டாள்.
''இந்தமுறை வேலை கிடைச்சிடும்ன்னு நம்பிக்கையா சொன்னியே, சர்வா... என்னாச்சு?''
மகனின் தோளில் கை போட்டபடி அந்த சிறிய தோட்டத்தை சுற்றி நடக்க ஆரம்பித்தார், மாணிக்கம்.
''நம்ம சுயமரியாதையை விட்டுட்டு வேலை பார்க்கணும். அவங்க சொல்ற, 'கண்டிஷன்ஸ்' எதுவுமே ஒத்து வரல,'' என்றான், கசப்பான புன்னகையுடன்.
மெல்ல, அவன் தோள்களை தட்டித் தந்தார்.
''பார்த்துக்கலாம், மனசு தளராதே.''
''இனி வேலையை நாம தேடிப் போறது இல்ல. வேலை நம்மை தேடி வர வைக்கணும். என் நண்பன், அசோக் மரச்செக்கு பட்டறை போட்டு, எண்ணெய் எடுத்து விற்பனை செய்யும் வியாபாரம் துவங்கி இருக்கான். ஏஜென்சி மாதிரி போடலாம்ன்னு இருக்கேன். விற்பனையை பார்த்துட்டு மேற்கொண்டு செய்றதை முடிவு செய்யணும்.
''ஆரோக்கியத்துக்கு நிச்சயம் கூடுதலா நம்ம மக்கள் செலவு செய்வாங்க. அதைத்தான் யோசிச்சுட்டு இருந்தேன்,'' என்று, தன் யோசனைக்கான காரணத்தை, சர்வா விளக்க, மலர்ந்து போனார், மாணிக்கம்.
வீ ட்டின் மேல் தளத்தில் உள்ள தன் அறையில் அமர்ந்திருந்தான், கார்த்திக்.
மூணாறு சென்றவன், நேற்று தான் வீடு திரும்பி இருந்தான்.
கிளம்பும் போது, மொபைல் போனில் வந்து விழுந்த செய்தி மிரட்டினாலும், பெரிதாய், கார்த்திக்கை பாதிக்கவில்லை.
வரவிற்கும், செலவிற்கும் போதவில்லை. பணக்காரனாய் இருப்பதை விட, பணக்காரனாய் காட்டி கொள்வதற்கு, பெரும் செலவானது.
அதற்காக, ஒரு கடன் செயலியில் பெற்ற தொகைக்கு வட்டி கட்டச் சொல்லி, வந்த எச்சரிக்கை தான் அது.
மொபைலை நோண்டிக் கொண்டிருந்தவன், சட்டென்று நிறுத்தினான்.
'ரம்மி கிங்-ஆன்லைன் சூதாட்டம். 500 ரூபாய் செலுத்துங்கள், நிமிடங்களில், 50 ஆயிரம் ரூபாய் வெல்லுங்கள்!'
பற்றாக்குறையான நேரத்தில் வந்த விளம்பரம், பயன்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
வேடிக்கையாக, ஆயிரம் ரூபாய் போட்டு விளையாடிய கார்த்திக்கிற்கு, அந்த, 'ஆப்' அதிர்ஷ்டக் கதவைத் திறந்தது. முதல் சில சுற்றுகளில் அடுத்தடுத்து சிறு தொகையை ஜெயித்தான்.
மனம் நம்ப முடியாத சந்தோஷத்தில் திளைத்தது.
'வாழ்த்துகள்! நீங்கள், 20 ஆயிரம் ரூபாய் வென்றுள்ளீர்கள். பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது!'
மலர்ந்து போனான், கார்த்திக்.
ஐந்து நிமிடத்தில், 20 ஆயிரம் ரூபாய்! ஆபீஸில் ஒரு வாரம் கஷ்டப்பட்டு உழைத்தால் கூட இந்தப் பணம் கிடைக்காது.
'இதுதான் சரியான வழி... இதில் கொஞ்ச நாள் கவனமாக விளையாடினால், ஒரே மாதத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்து விடலாம்!' என்ற எண்ணம், அவனது மூளையை மயக்கியது.
உபரியாய் வந்த பணம், உல்லாசத்தை உண்டாக்கியது. புதிய உடைகள், வாட்ச் என, ஆடம்பரப் பொருட்களின் பட்டியல், அவன் மனக்கண்ணில் விரிந்தது.
முதலில் கிடைத்த, 20 ஆயிரம் ரூபாய் வெற்றி, அவனது நரம்புகளில் ஒருவித போதையை ஏற்றியிருந்தது. 'இன்னொரு ஆட்டம்... ஒரே ஒரு ஆட்டம் ஆடினால், ஐம்பதாயிரம் ரூபாய் ஜெயிக்கலாம்!' என, அவனது பேராசை துாண்டியது.
போனை எடுத்தான். ரம்மி, 'ஆப்'பைத் திறந்தான். வென்ற, 20 ஆயிரம் ரூபாயையும் மொத்தமாக பணயப் பந்த யமாகக் கட்டினான்.
ஆட்டம் தொடங்கியது.
ஆனால், இம்முறை கார்த்திக்கிற்கு தெரியாது... அந்த, 'ஆன்லைன்' ரம்மி செயலி, புதிதாக விளையாடுபவர்களை கவர்வதற்காக ஆரம்பத்தில் மட்டுமே வெற்றி பெற வைக்கும் பொறி என்று. இப்போது அந்த, 'ஆப்' தன் நிஜ முகத்தைக் காட்டத் துவங்கியிருந்தது.
திரையில், கார்டுகள் வேகமாக மாறியது. கார்த்திக்கின் முகம் வெளிறிப்போனது.
'நீங்கள், 20 ஆயிரம் ரூபாய் தொகையை இழந்து விட்டீர்கள்!' என்ற, 'மெசேஜ்' திரையில் தோன்றியது.
கார்த்திக்கிற்குத் துாக்கி வாரிப்போட்டது. 'சே... கை நழுவிப்போச்சே!' அதிர்ச்சியில், அவனுக்கு வேர்த்துக் கொட்டியது. இழந்த இருபதாயிரத்தை எப்படியாவது மீட்டாக வேண்டும் என்ற பதற்றம் தொற்றிக்கொண்டது. தன் சேமிப்புக் கணக்கில் இருந்த எஞ்சிய, பத்தாயிரம் ரூபா-யை வைத்து மீண்டும் பந்தயம் கட்டினான்.
அடுத்த பத்தாவது நிமிடம், அதுவும் காற்றில் பறந்தது!
'இப்போ நிறுத்த முடியாது! இழந்த பணத்தை எடுத்தே ஆகணும்...' அவனது பகுத்தறிவு முற்றிலும் செயலிழந்து போயிருந்தது.
வென்ற, 20 ஆயிரம் ரூபாய் மட்டும், அவன் கண்ணில் மின்ன, தோற்று கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து போனான்.
அப்போது, அவனது போன் திரையில் ஒரு புதிய விளம்பரம் பளிச்சிட்டது...
'பணம் இல்லையா? கவலை வேண்டாம்! உடனடி, 50 ஆயிரம் கடன் பெற, ஆவணங்களைப் பதிவேற்றுங்கள்! வெறும், ஐந்து நிமிடங்களில் கடன் கிடைக்கும்!'
கார்த்திக் யோசிக்கவே இல்லை. அந்த விளம்பரத்தை, 'கிளிக்' செய்தான். ஆதார் எண், முகவரி, பான் எண் ஆகியவற்றை யோசிக்காமல் பதிவேற்றம் செய்தான்.
கடனுக்காக விண்ணப்பிக்கும் போது, அந்தச் செயலி ஒரு நிபந்தனையை விதித்தது:
'உங்கள் போனில் உள்ள அனைத்து விபரங்களையும் அணுக அனுமதி தருகிறீர்களா?'
பணத்தின் அவசரத்தில் இருந்த கார்த்திக், அதன் ஆபத்தை உணராமல், கண்ணை மூடிக்கொண்டு, 'கிளிக்' செய்தான். அவனது போனில் இருந்த அனைத்துத் தொடர்புகளும், புகைப்படங்களும் அந்தப் போலி கடன் செயலியின் சர்வருக்கு ரகசியமாக சென்றடைந்தன.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், கார்த்திக்கின் கணக்கில், 40 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. ஐம்பதாயிரத்துக்கு, பத்தாயிரம் ரூபாய் வட்டியா, என்பதைக் கூட சிந்திக்க மறந்து போனான்.
நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஆனால், அவனுக்குத் தெரியாது... தான் ஒரு மிகப்பெரிய சிலந்தி வலையில் காலடி எடுத்து வைத்திருப்பது! அதே வேகத்தில் அந்த, 40 ஆயிரம் ரூபாயையும் மீண்டும் ரம்மியில் போட்டான். அரை மணி நேரத்தில் சிறிய தொகை வருவதும், பெரிய தொகை செல்வதும் என்றிருக்க, கடைசியில் வங்கி கணக்கு பூஜ்ஜியமானது.
தலையில் கைவைத்து உட்கார்ந்தான், கார்த்திக்.
முதல் செயலியில், ஐம்பதாயிரம் ரூபாய். இப்போது, ஐம்பதாயிரம் ரூபாய். ஆக மொத்தம், ஒரு லட்சம் ரூபாய் கடனாளி ஆகி இருந்தான்.
இனி, போனை தொடவே கூடாது. இந்த கடனை எப்படி கட்டுவது என்ற பெருத்த யோசனையில் அமர்ந்து இருந்தான்.
நடுநிசி, 12:30 மணிக்கு, கார்த்திக்கின் போனுக்கு ஒரு புது எண்ணில் இருந்து, 'மெசேஜ்' வந்தது. அதைத் தொடர்ந்து ஒரு, 'நோட்டிபிகேஷன்!'
பதற்றத்துடன் போனை எடுத்துப் பார்த்தான், கார்த்திக். அவனது இதயத் துடிப்பு நின்றுவிடும் போல் இருந்தது!
அவனது மொபைல் கேமரா, அவனுக்கே தெரியாமல் ரகசியமாக இயங்கி, அவனது முகத்தை படம் எடுத்திருந்தது. அந்த புகைப்படத்தின் கீழ், 'ஏமாற்றுக்காரன், கடனை திருப்பி செலுத்தாத மோசடிக்காரன்' என்று பெரிய சிவப்பு நிற எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்தது.
அதற்குக் கீழே வந்த, 'மெசேஜ்' கார்த்திக்கின் ரத்தத்தை உறைய வைத்தது:
'நாளை மாலைக்குள் நீ வாங்கிய கடனை வட்டியுடன், 60 ஆயிரம் ரூபாய் திருப்பிக் கட்டத் தவறினால், உன் புகைப்படமும், நீ மோசடி பேர்வழி என்ற தகவலும், உன் போனில் இருக்கும் யாதவி, சுந்தரம் மற்றும் உன் நண்பர்கள் உட்பட அனைவருக்கும் உடனடியாக அனுப்பப்படும்!'
கார்த்திக், அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க, அந்த, 'மெசேஜின்' கீழே அனுப்பியவரின் பெயர் மின்னியது: விக்ரம்-, ஏஜென்ட், க்விக் கேஷ் மாபியா.
கார்த்திக்கின் வாழ்க்கையில் ஒரு கொடூரமான புயல் வீசத் துவங்கியிருந்தது!
— தொடரும். ஜே.பி. யுகபாரதி
