PUBLISHED ON : நவ 22, 2026

முன்கதைச் சுருக்கம்: வே லை தேடுவதில் தொடர் தோல்வியை சந்தித்த சர்வா, சுயதொழிலில் ஈடுபட முடிவு செய்தான். மறுபுறம் ஆடம்பர செலவால் ஏற்பட்ட கடனை கட்டுவதற்காக, 'ஆன்-லைன்' ரம்மி விளையாடிய கார்த்திக், தன் மொத்த பணத்தையும் இழந்தான்.
சர்வா வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தபோது, தோசையின் மணம் மூக்கை துளைத்தது.
அவன் பசியோடு வருவான் என்பதால், டிபன் தயார் செய்து கொண்டிருந்தார், மாணிக்கம்.
''அப்பான்னா அப்பா தான்,'' என்றவன், விளம்பர பெண் போல் வேடிக்கை செய்ய, முறைத்து பார்த்தார், மாணிக்கம்.
''முதல்ல கை கால் கழுவி, 'ப்ரெஷ்' ஆகிட்டு வந்து சாப்பிடு. பசி வந்தா நீ நீயா இருக்க மாட்டே,'' என்று, அவரும் விளம்பர பாணியில் பதில் சொல்ல, இத்தனை நேரம் அமைதியாய் இருந்த வீட்டில் சிரிப்பு சத்தம் காதை கிழித்தது.
புத்துணர்வாகி வந்தவன் தோசையை தட்டில் எடுத்து வைத்து, சமையல் மேடையிலேயே அமர்ந்து உண்ண ஆரம்பித்தான்.
''இன்னைக்கு ஒரு நாள்ல, 40 கடைகளில், 'ஆர்டர்' பிடிச்சிருக்கேன்பா. அத்தனை கடையிலேயும் மரச்செக்கு எண்ணெய் எப்படி தயாரிக்கிறோம்ங்கிற வீடியோவை போட்டு காட்டி, 'இம்ப்ரஸ்' பண்ணி இருக்கேன்,'' என்றான், பெருமையாக.
அந்த மகிழ்ச்சி, மாணிக்கத்தையும் தொற்றிக் கொண்டது. அரட்டை கச்சேரி சிரிப்பும், பேச்சுமாய் கவனம் ஈர்த்தது.
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மடக்கி வைத்துவிட்டு, வெளியில் வந்து எட்டி பார்த்தாள், யாதவி.
நாளை கல்லுாரியில் ஒரு முக்கிய தேர்வு நடத்த, தயாராகி கொண்டு இருந்தாள். அதனால் தான் அப்பா, அம்மா கோவிலுக்கு அழைத்தும் கூட செல்லவில்லை.
அமைதியான படிப்புக்கு இடையூறாய், பக்கத்து வீட்டில், சிரிப்பு சத்தம்.
இவர்களால் எப்படி இத்தனை மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? சொல்லப்போனால், அவர்கள் வீட்டை விட, யாதவியின் வீட்டில் தான் ஆட்கள் அதிகம். ஆனால், இவர்கள் வீட்டில் இதுபோன்ற காட்சிகள் அபூர்வம்.
தந்தை-மகன் இருவர் வாழும் வீட்டில் மட்டும் எப்படி மகிழ்ச்சியாய் இருக்க முடிகிறது?
அவளை மீறி மெல்லிய புன்னகை வந்தது. மாணிக்கத்தை தெரியும். மிகவும் தன்மையான, அன்பான மனிதர். ஆனால், இந்த, சர்வாவால் தான் இரண்டு குடும்பங்களுக்கும் நடுவில், முகம் பார்த்து சிரிக்கும் நட்பு கூட இல்லாமல் போய் விட்டது.
சிந்தனையில் ஆழ்ந்து கிடந்தவளை திடுக்கிட வைத்தது வெளியில் கேட்ட அலறல், அதை தொடர்ந்த கூச்சல்.
''அய்யோ... யாராவது வாங்களேன்.''
''இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா?''
வெளியில் வந்தாள், யாதவி. அதற்குள், சர்வா, மாணிக்கம், எதிர்வீட்டு ஆட்கள் என்று நாலைந்து பேர் கூடி விட்டனர்.
சீதாம்மா அழுது கொண்டு வர, அவர் பின்னால் அவருடைய, 15 வயது பேத்தி, மீனாவும் அழுது கொண்டே வந்தாள்.
''என்னாச்சு சீதா? எதுக்கு இப்படி அழுதிட்டு ஓடி வர்றே? முதல்ல வந்து உட்காரு. யாராவது தண்ணி எடுத்துட்டு வாங்க.''
திண்ணை படிக்கட்டில் உட்கார்ந்தாலும், அவள் கண்ணீர் நின்றபாடில்லை.
''அழாம விஷயத்தை சொல்லுங்க. அப்பத்தானே எங்களால ஏதாவது பண்ண முடியும்,'' என்று, கூடி இருந்தவர்களில் ஒருவர் கூறினார்.
சீதாம்மாவின் வீடு தெருமுனையில் இருந்தது. நல்ல மையமான இடம். வீட்டிற்கு பக்கத்தில் இருந்த கடையை மதுபான கடைக்கு வாடகை விட்டதில், வந்தது அவருக்கு பிரச்னை.
'பொம்பளை புள்ளைங்க இருக்கிற இடத்துல, இப்படி நடுத்தெருவுல, இந்த கடைக்கு வாடகைக்கு விடறீங்களே இது நியாயமா?'
'அவன் தானே கேட்ட காசை தர்றான்? இங்கே பாதுகாப்பு இல்லைன்னு நினைச்சா, மூணு மாசம் டயம் தர்றேன். நீ காலி பண்ணிட்டு போயிடு. அவ்வளவுதான் செய்ய முடியும்...' என்று கறாராய் சொல்லி சென்றிருந்தார், இடத்தின் உரிமையாளர்.
மீனாவுக்கு, மூன்று வயதாக இருக்கும் போது, கோயம்பேடு சென்று வரும்போது, டிப்பர் லாரி மோதி, அப்பா-அம்மா இருவரும் இறந்து போக, பாட்டி சீதாம்மா தான் என்றானது, மீனாவின் வாழ்க்கை.
மதுக்கடை வந்ததில் இருந்து, வெளியில் தலைகாட்ட முடிவதில்லை. எந்நேரமும் கதவை அடைத்து பயந்து பயந்து வாழ்ந்தனர்.
வெளியே வந்த மீனாவிடம் குடிபோதையில் இருந்தவர்கள் வம்பு செய்ய, தட்டி கேட்க போன, சீதாம்மாவையும் அடித்து இருந்தனர் பாவிகள்.
''கேட்க ஆளில்லை, ஆம்பளை துணை இல்லைங்கிற தைரியத்துல என்னை அடிச்சிட்டான். என்னை அடிச்சாலும் பரவாயில்லை, வயசு பொண்ணை வீட்டில வச்சிருக்கேன். என்கிட்டே வந்து, 'உன் பேத்தி முழுசா வெளியே போயிட்டு வீட்டுக்கு வரணுமா இல்லையா'ன்னு கேலி பேசும்போது, நான் செத்து பிழைக்கிறேன்,'' கட்டுப்படுத்த முடியாமல் அழுதார், சீதாம்மா.
''என்ன கிழவி பஞ்சாயத்து வச்சிட்டு இருக்கே? இன்னும் முதுகுல போடணுமா?'' மது வாசனை முகத்தை சுளிக்க வைக்க, தாறுமாறாய் வந்து நின்றனர், போதை ஆசாமிகள் இருவர்.
''யாருடா நீங்க? எந்த ஏரியா?'' என்றான், சர்வா சட்டை கையை சுருட்டி கொண்டே.
''ஏன், ஏரியா தெரிஞ்சாத்தான், பொண்ணு தருவியா, மாப்பிள்ளை?'' என்ற போதை ஆசாமி ஒருவன் கேட்டு முடிப்பதற்குள், அவன் முகத்தில் ஓங்கி குத்தினான், சர்வா. தள்ளிப் போய் விழுந்து, 'ஐயோ' என்று அலறினான், அவன்.
''சர்வா, வேண்டாம் விட்...ரு...''
கூட்டத்தினர் தடுக்க, தடுக்க சரமாரியாய் குத்து விழ, உயிர் தப்பினால் போதும் என்று ஒடி மறைந்தனர், போதை ஆசாமிகள் இருவரும்.
மெல்லிய ஆசுவாசம் அனைவருக்கும்.
''சீதாம்மா, பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஏதாவது பிரச்னைன்னா என் நம்பருக்கு போன் பண்ணுங்க. கூடிய சீக்கிரம் அந்த கடை அங்கே இருக்காது. எடுக்கறதுக்கு ஏற்பாடு செய்யலாம். பயப்படாம போங்க,'' சீதாம்மாவை திருப்பி அனுப்பி வைக்க, கூடி இருந்த கூட்டம் மெல்ல கலைந்தது.
இவர்களையே வியப்பாய் பார்த்துக் கொண்டு நின்றாள், யாதவி.
சர்வா, 'ஸ்டன்ட்' அடிப்பது போல் தோன்றினாலும், அவனுடைய கோபத்தில் பளிச்சிட்ட நேர்மை அவளை கவர்ந்தது.
இ ரவு 9:00 மணி...
வீட்டின் மொட்டை மாடியில் நின்று, போனில் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தான், கார்த்திக். அவனது முகம் பயத்தில் வெளுத்துப்போயிருந்தது; கண்கள் கலங்கியிருந்தன.
''முரளி, அஞ்சு வட்டியா இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு, அஞ்சு லட்சம் ரூபாய் ஏற்பாடு பண்ணித் தர முடியுமா?''
''என்ன?'' என்று அதிர்ந்து கேட்ட, முரளி, கார்த்திக்கின் மனநிலை அறியாமல் பெரிதாய் சிரித்தான்.
''ஏன்டா சிரிக்கிறே?''
''வேலைக்கு சேர்ந்த ஒரு வருஷத்துல செய்தது அத்தனையும் அனாவசிய செலவு. இப்போ காசுக்கு கையேந்திட்டு நிக்கிறே, உன்னை என்ன சொல்றது?'' என்றவன், ''எந்த உலகத்துலடா இருக்கே? இந்த மீட்டர் வட்டி, 'டீலக்ஸ்' வட்டி எல்லாம் கேள்வி கூட பட்டதில்லையா, கார்த்திக்? லட்ச ரூபாய் கேட்டா, 75 ஆயிரம் ரூபாய் தான் கையில தருவாங்க. பதினைந்து நாள்ல நீ திருப்பி தரும்போது, ஒரு லட்ச ரூபாயா தரணும்.''
''ஒரு மாசத்துக்கு முப்பது நாள் தானேடா,'' என்றான் பரிதாபமாக.
''அது நம்ம கணக்கு. ஆனா, குடுக்கறவன் கணக்கு வேற. அதிகம் கேள்வி கேட்காதே. முதல்ல கிடைக்குதான்னு பார்ப்போம்.''
போன் துண்டிக்கப்பட்டது. கார்த்திக்கிற்கு தலையே சுற்றியது.
அ ந்த இரவு அவன் வாழ்க்கையில் வந்திருக்கவே வேண்டாம். இரண்டு, 'ஆன்-லைன்' செயலிகளுக்கு பணம் தர, அவனுக்கு தெரிந்தது, 'ஆன்-லைன்' ரம்மிதான். மறுமுறை முயற்சித்து பார்ப்போமா என்று மனசு பிராண்டியது.
இறைவன் மீது பாரத்தை போட்டு விளையாட ஆரம்பித்தான். ஒரு பெரும் தொகை கையில் சிக்கியது. அத்தோடு விலகி இருக்கலாம்.
அதிகம் ஆசைப்பட்டு கிடைத்த தொகையை வைத்து, மறுபடி ஆட, அத்தனையும் வழித்து கொண்டு போய்விட்டது.
கடன் செயலியின் மூலம் பெற்ற கடன், 15 லட்ச ரூபாயை தொட்டு விட்டிருந்த போது, போனை கட்டிலில் விசிறி அடித்தான்.
இரவு 10:00 மணி வரைக்குமே, 2 லட்ச ரூபாய் கடனோடு நின்றவன், இப்போது, 15 லட்சம் ரூபாய் கடனோடு நிற்கிறான்.
மெல்ல திகில் பரவ ஆரம்பித்தது.
கையில் ஒரு பைசா இல்லை. அப்பாவுக்குத் தெரிந்தால் பிணமே விழுந்துவிடும். தங்கையின் கல்யாணக் கனவுகள் பாழாகிவிடும்.
உறக்கம் பிய்த்து கொண்டு ஓடி இருக்க, கை கால்களில் நடுக்கம்.
மொபைல் திரை மின்னி மறைய, அந்த கடன் செயலியின் மெசேஜ் தான்.
அதை திறந்து கூட பார்க்கவில்லை. அவசரமாய் தோன்றிய சிந்தனையில் அந்த எண்ணை, 'ப்ளாக்' செய்ய, அடுத்த இரண்டாவது நிமிடம், 'வாட்ஸ்-அப் மெசேஜ்' வந்தது, வேறொரு எண்ணில் இருந்து.
நடுக்கத்துடன் திரையை திறந்து உள்ளே சென்றான்.
''என்ன மிஸ்டர், கார்த்திக். ரொம்ப, 'ஸ்மார்ட்'டா நடந்து கொள்வதா எண்ணமோ! ஆனால், எங்க, 'ஸ்மார்ட்னஸ்'சை நீங்க பார்க்கலயே? இப்போ பாருங்க,'' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்க, வரிசையாய் வந்து படங்கள் விழுந்தது.
அவசரமாய் அவற்றை தரவிறக்கம் செய்தவன், கைகளில் இருந்த போன் கீழே நழுவ, மயங்கி சரிந்தான்.
— தொடரும்ஜே.பி.யுகபாரதி
