PUBLISHED ON : நவ 29, 2026

முன்கதை சுருக்கம்:- தெ ருமுனையில் இருக்கும் மதுக்கடையால், அதன் அருகில் குடியிருக்கும் இரு பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னையை, சர்வா தலையிட்டு அடக்கினான்.
கடன் செயலியில் தொடர்ந்து கடன் பெற்ற, கார்த்திக் பயத்தில், கடன் கொடுத்த செயலியின் எண்ணை, 'பிளாக்' செய்தான்.
மற்றொரு, 'ஆன்-லைன்' கடன் செயலியின் எண்ணில் இருந்து வந்த மெசேஜை பார்த்த, கார்த்திக் பயந்து மயக்கமாகி கீழே விழுந்தான்.
'நோ ...' என்ற, கார்த்திக்கின் அலறல், அவனது அறையின் சுவர்களில் பட்டு எதிரொலித்து, அடங்கியது.
கையில் இருந்த போன் கீழே நழுவி விழ, மயங்கி விழுந்தவன், சிறிது நேரத்தில், சுவரைப் பிடித்து தட்டுத்தடுமாறி எழுந்து கட்டிலில் அமர்ந்தான்.
அவனது நெஞ்சு, 'படபட'வென அடித்துக் கொண்டது. கண்கள் இருண்டன. தலையைச் சுற்றிச் சுழன்ற பயத்தில் உடலெங்கும் வியர்வை வழிந்தது.
அரைகுறை ஆடையுடன் ஒரு பெண்ணின் மடியில் மயங்கி கிடப்பது போல், கார்த்திக்கின் படம்... 'மார்பிங்' செய்யப்பட்ட படம், மொபைல் போன் திரையில் தெரிந்ததை நினைவுப்படுத்தி பார்த்தான்.
ஆனால், இது கணினி தொழில் நுட்பம் மூலம், 'மார்பிங்' செய்யப்பட்டது என்று சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள். நிரூபிக்க முடியும் என்றாலும், மானம் போனது போனது தானே.
அந்த படம் மட்டுமல்ல, அதை விட கீழ்தரமாய் சித்தரித்த படங்கள் இன்னும் சில வந்திருந்தன.
திரையில் வந்திருந்த ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட படங்களும், அதன் கீழே வந்திருந்த மிரட்டல் செய்தியும் அவனது ரத்தத்தை உறைய வைத்திருந்தன; மூளை செயல்பாட்டை இழந்து இருந்தது.
ஐந்து நிமிடம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அந்த, 'மெசேஜ்' வந்திருந்த எண்ணுக்கு அழைத்தான்.
எதிர்முனையில் போனை எடுத்தவன், ஒரு நொடி தாமதித்து பெருஞ்சிரிப்பு சிரிக்க, நடுக்கமாய் உணர்ந்தான், கார்த்திக்.
''என்ன ரொம்ப, 'ஸ்மார்ட்'டா நடக்கிறதா நினைப்போ? பிச்சிடுவேன், மிஸ்டர் கார்த்திக் சுந்தரம். பணம்... பணம் மட்டும்தான் எங்களுடைய நோக்கம். அதற்காக எந்த எல்லைக்கும் கீழே இறங்கி போவோம். இவ்வளவு பெரிய, 'நெட்வொர்க்'ல இவ்வளவு பெரிய, 'பிசினஸ்' பண்ணிட்டு இருக்கோம்னா, இது கூட தெரியாம இருக்குமா?'' என, பேசியவன் குரலில் இருந்த கடுமையும், கோபமும், கார்த்திக்கின் தன்னம்பிக்கையை ஒடித்தது.
''சாரி, பதட்டம், பயத்தில என்ன பண்றதுன்னு தெரியாம அந்த, 'ஆப்'பை, 'டெலிட்' பண்ணிட்டேன். மற்றபடி உங்க பணத்தை ஏமாத்தற நோக்கமில்லை. நம்புங்க. எனக்கு, பத்து நாள், 'டைம்' கொடுங்க. கண்டிப்பா பணத்தை திருப்பி தந்துடுவேன். நான், கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவன்,'' என, கெஞ்சினான்.
ஒரு கணம் மறுமுனை அமைதியாக இருந்தது.
''ஆல்ரைட். தொகை பெரிசுங்கறதாலே, பத்து நாள், 'டைம்' தர்றோம். அதுக்குள்ளே, ஏதாவது ஏறுக்கு மாறாக நடந்தால், இந்த படம் உன், மொபைல் போனில் சேமித்து வைத்திருக்கும் அத்தனை பேர் எண்ணுக்கும் போகும். அதுக்கும் மேல பார்க்க ஆசைப்பட்டா, உன் மொபைல்போன், 'கேலரி'யில் இருக்கிற உன் தங்கச்சியோட படம் இதை விட கேவலமா சித்தரிச்சு, சமூக வலைதளத்துக்கு போய் சேரும். ஜாக்கிரதை.''
''சார்...'' ஈன ஸ்வரத்தில், இவன் கத்தியதை கேட்க ஆளில்லை அங்கே.
தலைக்கு மேல் தொங்கும் கத்தி, இவனை மட்டுமல்ல, இவன் குடும்பத்தையே கூர்பார்த்து கொண்டு இருந்தது. ஆபத்தின் அளவை உணர ஆரம்பித்து இருந்தான், கார்த்திக்.
ம ரச்செக்கு எண்ணெய் வியாபாரம், சர்வா எதிர்பார்த்ததை விட சூடு பிடித்திருந்தது.
''உங்க எண்ணெய்க்கு, 'மார்க்கெட்'டுல நல்ல மவுசு இருக்கு தம்பி. பேசாம இதோடு சேர்த்து, 'ஆர்கானிக்' காய்கறிகளையும், 'சப்ளை' செய்ய பாருங்க. மனசார சொல்றேன், இந்த தொழில்ல எவ்வளவு வருமானம் வருதுன்னு தெரியாது. ஆனால், பயனுள்ள நேர்மையான தொழில். இதை மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கிறது ரொம்ப சுலபம்.''
கடைக்கு எண்ணெய், 'சப்ளை'க்கு சென்றிருந்தபோது, விற்பனையாளர் சொல்ல, சர்வாவிற்கு சந்தோஷத்தோடு சேர்ந்து யோசனையும் வந்தது.
சென்னைக்கு அருகில், இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களை கண்டுபிடித்து, அவர்களிடம் ஒப்பந்தம் போட்ட நிமிடம் பெரிய காரியத்தை சாதித்தது போல் இருந்தது.
முதல் அடியை எடுத்து வைக்கும் வரைக்கும் தான் அவன் திட்டம். அடுத்தடுத்த அடிகள் இறைவனின் சித்தம்.
புது நிறுவன- உரிமத்துக்கு விண்ணப்பம் அனுப்பி விட்டு, மனதில் நிறைவான உணர்வோடு எண்ணெய் பாட்டில்கள் அடங்கிய பைகளை தன்னுடைய வண்டியின் இருபுறமும் தொங்கவிட்டபடி, கிளம்பி இருந்தான்.
பஸ் ஸ்டாப்பில், யாதவி நிற்க, மெல்ல தன் வண்டியின் வேகத்தை குறைத்தான்.
வண்டியின் முன்னும், பின்னும் எண்ணெய் பாட்டில்கள், வேகாத வெயிலில் இப்படி அவனை பார்த்த, யாதவிக்கு கோபம் வந்தது.
''என்னாச்சு?'' என்றான், கனிவான குரலில்.
''தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க? முதல்ல இந்த இடத்தை விட்டு கிளம்புங்க,'' என, முகத்தில் அடித்தது போல் பதில் வர, சர்வாவின் முகம் கன்றி போனது.
''எப்பவுமே ஒரு கோபத்தோடு என்கிட்டே பேச வேண்டிய தேவை என்ன, யாதவி? இயல்பா ஒரு நண்பனா பார்க்கலாம் இல்லையா?'' என்றான், அப்போதும்.
வெடுக்கென்று, அவள் முகத்தை திருப்பியது மனதை தைத்தது.
''இந்த, 'ரூட்'ல பஸ் வர்றதுக்கு நேரமாகும். 'பஸ் கண்டக்டருக்கும், ஸ்டுடண்ட்ஸ்'க்கும் ஏதோ பிரச்னை ஆயிடுச்சு. அதனால, தர்ணா பண்ணிட்டு இருக்காங்க. உனக்கு ஆட்சேபணை இல்லாட்டி, நான் வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கேன். என் கூட வரலாம். இந்த அழைப்புக்கு எந்த உள்நோக்கமும் இல்லை, யாதவி,'' என்றவனை நிமிர்ந்து பார்த்தாள்.
''அடடா! என்னையும், உங்க எண்ணெய் பாட்டில்களுக்கு நடுவே உட்கார்ந்துட்டு வரச் சொல்றீங்களா, மிஸ்டர் சர்வா. உங்க படிப்புக்கு தகுந்த வேலை பார்க்கணும். அதுதான் கவுரவம். இப்படி பாட்டிலை கட்டிட்டு வேகாத வெயில்ல தெரு தெருவா சுற்றி வர்றதுக்கு பேர் உழைப்பு இல்ல, திமிர். 'நான் யாருக்கும் அடிமை இல்லை'ன்னு வேண்டுமானால், 'ஸ்டன்ட்' அடிக்கலாம், அன்னைக்கு மதுக்கடை ஒழிப்பு, கடையை காலி பண்ண வைக்கப் போறேன்னு நீங்க அடிச்சீங்களே அது மாதிரிதான் இதுவும்.''
'படபட'வென வார்த்தைகளை கொட்டிவிட்டு வேறு இடத்தில் பார்வையை செலுத்தி நின்றாள்.
உள்ளுக்குள் துயரமாக உணர்ந்தான், சர்வா. அவனுடைய ஒவ்வொரு செயலுக்கு பின்னும், அவளாகவே ஒரு காரணத்தை உருவாக்கி கொள்கிறாள்.
'உருவாக்கிய காரணத்தை உறுதியாக நம்புகிறவளிடம் விளக்கம் சொல்வதால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை...'
''நான் மக்களை காப்பாற்றுகிற மாதிரி, 'ஸ்டன்ட்' அடிச்சேன்னே வச்சுக்கங்களேன். என்ன குறைஞ்சிடப் போகுது. இந்த வேகாத வெயிலில் நான் இப்படி பாட்டில்களை கட்டிட்டு சுத்தறேன். கறுத்துபோயிடுவீங்கிற கவலையில தான் சொல்றீங்கன்னு புரியுது,'' என்றவன், தன் வழக்கமான குறும்பை குத்தகைக்கு எடுக்க, கொதித்து போனாள், யாதவி.
''எனக்கென்ன தலையெழுத்து. உங்க மேல அக்கறைபட? நீங்க எப்படி போனாலும் எனக்கு கவலை இல்ல,'' என்றவள் அலட்சியமாய் தோளை குலுக்க, அவளின் உடல்மொழி, சர்வாவை, 'சுறுக்' என்று தைக்கத்தான் செய்தது.
''அதுக்காக நான் வருத்தப்பட போறதுமில்லை. யாதவி, ரொம்ப நேரமா நிக்கறேன்று நினைக்கிறேன். பிரச்னையை தள்ளி வச்சுட்டு என்னோடு வா,'' என்றவனை ஒரேடியாய் மறுத்து அனுப்பி விட்டாள்.
மதிய நேரம். வெயில் நேராய் தலையில் இறங்கியது. அடி வயிறு பசியில் சத்தம் போட்டது. இன்னும் எவ்வளவு நேரம் நிற்பது? என்ற கேள்வி வர முதல் முறையாய் பயம் வந்தது.
துாரத்தில் ஒரு ஆட்டோ, யாதவியை நோக்கி வர, ஆசுவாசமாய் உணர்ந்தாள்.
சொல்லி வைத்தது போல், இவள் அருகேயே வண்டியை நிறுத்தினான்.
''கே.கே. நகர் தானேம்மா போகணும். வண்டியில ஏறுங்க.''
''உங்களுக்கு எப்படி தெரியும்?'' என்றாள், வியப்போடு.
''என்னை, சர்வா தான் இடத்தை சொல்லி அனுப்பி வச்சார். சரக்கு அதிகம் இருந்தால் என் வண்டியில தான் எடுத்துட்டு போவார். உங்களை கொண்டு போய், 'வீட்டில இறக்கி விட்டுட்டு வா'னு சொன்னார். அவருக்காகத்தான் வந்தேன்,'' என்றவன், அவள் ஆட்டோவினுள் ஏறி அமர்ந்ததும், ஆட்டோவை, 'ஸ்டார்ட்' செய்தான்.
யாதவியின் எண்ணமும் அசைய ஆரம்பித்தது.
— தொடரும்ஜே.பி.யுகபாரதி
