sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கார்த்திகை புறாக்கள்!

/

கார்த்திகை புறாக்கள்!

கார்த்திகை புறாக்கள்!

கார்த்திகை புறாக்கள்!


PUBLISHED ON : நவ 16, 2025

Google News

PUBLISHED ON : நவ 16, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மலை ஏறும் போதிருந்த சிரமம் இறங்கும்போது அறவே இல்லாமல் போனதே. இதற்கு காரணம், அப்பன் முருகனின் அருள் தன் மீது இறங்கியதாலா?' என, தனக்குள் கேட்டபடியே, தேனிமலையின் கடைசிப்படியில் இறங்கி, தொலைவில் நிறுத்தியிருந்த, தன் இரு சக்கர வாகனத்தை நோக்கி நடந்தான், அண்ணாமலை. சட்டைப் பையிலிருந்து சாவியை எடுத்தவாறு, வண்டியின் கீழ் விட்டிருந்த செருப்பை தேடிய, அண்ணாமலையை, பின்னிருந்து ஒரு குரல் பிடித்திழுத்தது...

''அப்பச்சீ, வேணுங்களா?''

நிமிர்ந்து திரும்பினால், தாடிக்குறவன் நின்றிருந்தான்.

''சாமிக்குப் பிடிக்குமேன்னு,'' என்று இழுத்தான்.

''எது பிடிக்கும்?''

''வாங்க காட்டறேன்.''

சிறிது தொலைவில், ஒரு மரத்தின் கீழ் இருந்த சைக்கிளின் கேரியரில் ஒரு பிளாஸ்டிக் கூடை -- மார்க்கெட்டில் தக்காளி சுமக்கப் பயன்படுவது. அதில் தோரணம் போல் வியாபாரத்திற்கான பலவண்ணப் பாசிமாலைகள் தொங்கின. அதன்மீது வாயகன்ற பிரப்பங்கூடை. அதனுள் பவுடர் டப்பா, பொட்டு, கண்ணாடி, சீப்பு மற்றும் கண் மை போன்ற எளிய கிராமப் பெண்களுக்கான அன்றாட அழகு சாதனங்கள் இருந்தன.

''ஏம்ப்பா, இதுக எனக்கெதுக்கு?''

பீடி பிடிப்பதுபோல் வாயில் விரல் வைத்து, 'புளிச்'சென வெற்றிலை சாறை துாரமாய் துப்பினான், குறவன்.

''இருங்க சாமி.''

மேலிருந்த கூடையை அவிழ்த்து, கீழிறக்கி தரையில் வைத்து, கூடைக்குள் கையை விட்டு ஒரு கட்டைப் பையை எடுத்த குறவன், அதை இவரருகே கொண்டு வந்து, ''உள்ள பாருங்க,'' என்றான்.

குனிந்து பார்த்தார். எட்டு புறாக்கள் இருந்தன.

''வேணுமா சாமி?''

மனம் சப்புக் கொட்டியது. 'புறாக்கறி சாப்பிட்டு எவ்ளோ வருசமாச்சு!'

அந்நினைவு ஆணிவேரிலிருந்து கிளம்பி, மூளை வரை வழிந்தது.

சூடான சப்பாத்திக்கு தோதான, புறாக்கறி குருமாவின் வாசம் மன நாக்கில் மணத்தது.

''என்ன வெல சொல்ற?''

''ஒன்னு, நுாத்தி அம்பது ரூபா. எத்தினி வேணுஞ் சாமி?''

''அவ்ளவெல்லாம் பெறாது. எட்டையும் வாங்கிக்கறேன். அனுசரிச்சு சொல்லு!''

''சரி சாமி. ஒரே வெலயா தலைக்கு நுாறாப் போட்டுக் குடுங்க!''

''அங்கயே நிக்காத எறங்கி வா!''

''பாத்துக்குடுங்க சாமி. மூணு பேரு, முழுநாள் அலைச்சல். உள்காட்டுக்குள்ள, கரட்டடியில காத்துகெடந்து கண்ணி வெச்சுப் பிடிச்சது. பாரஸ்ட்காரங்க பார்த்தா பிடிங்கிக்குவாங்க. போலீஸ்காரங்க பார்த்தா கையில் வெலங்கு மாட்டி, களி திங்க அனுப்சுருவாங்க.

''ஒளிச்சு மறைச்சு ஊருக்குள்ள கொண்டாறதுக்குள்ள, ஒன்னப்பிடி என்னப்பிடின்னு ஆகிப் போச்சு!''

''அந்தக்கதை எனக்கெதுக்கு? கொண்டாந்துட்டீல்ல... தள்ளிவிட்டுட்டு, ஆறுநுாற வாங்கிக்கிட்டு நடயக் கட்டு.''

''ரெம்பக் கொறக்காதீங்க சாமி. ஏழுநுாறாக் குடுத்துருங்க. ஒங்க புண்ணியத்துல என் புள்ளகுட்டிக வகுறாரச் சாப்டட்டும்.''

''அம்பது சேத்து தர்றேன். இஷ்டம்ன்னா எடுத்துக்கிட்டு பின்னால உட்காரு. வீட்ல கொண்டாந்து குடுத்துட்டு பணத்தை வாங்கிக்க.''

''வீடெங்க சாமி?''

''ஏறு சொல்றேன்.''

''என் சைக்கிள் இங்க நிக்கிதே!''

''பூட்டிருக்குல்ல? வந்து எடுத்துக்க!''

அ ண்ணாமலையார் வீடு வலையபட்டி. இப்போது இதை அங்கு கொண்டு போக முடியாது. இதைப் பார்த்தால், மனைவி தெய்வானைக்கு ஆத்திரம் வரும். 'போயும் போயும் கார்த்திகை விரதத்தன்னிக்கு இந்த மனுஷனுக்கு புத்தி போகுது பாரு...' என்பாள்.

அதிகாலையில் குளித்து, வெறும் வயிற்றில் மலையேறி முடித்து, பச்சத்தண்ணி பல்லில் படாமல் வீடு திரும்பித்தான் விரதம் விடுவது. இன்று நேற்றா? 32 ஆண்டுகளாக தொடரும் பழக்கம்.

அப்போதெல்லாம் ஊரிலிருந்து அப்பனும், மகனும் நடந்தே தான் வருவர். தந்தை போய் சேர்ந்து, இவருக்கு மணமான பின், தெய்வானையையும் கூட்டி வர சைக்கிள் தேவைப்பட்டது. இப்போது அவளால் வரமுடிவதில்லை. 'பிள்ளைகள விட்டுட்டு அவ்வளவு துாரம் மெனக்கெட நேரமெங்க கெடக்கு? எங்களுக்கும் சேர்த்து நீங்களே முருகன்கிட்ட வேண்டிக்கிருங்க. நெலமய அவன் புரிஞ்சுக்குவான். ஞான பண்டிதனில்லையா...' என்பாள்.

சைக்கிள் மிதிக்க கால் வலிப்பதால், இரண்டு ஆண்டுகளாக பெட்ரோல் வண்டி.

ஒ ருபுறம் கார்த்திகை, மறுபுறம் புறாக்கள் இடையில் சிக்கி, அண்ணாமலையி ன் மனப்புறா படபடத்தது.

யோசித்தவாறே வண்டியை, தன் தங்கை, ஏகம்மை வீட்டுக்கு விட்டார்.

அவளை இங்கே கொப்பனாபட்டியில் தான் கட்டி கொடுத்திருந்தார். அவளிடம் ஒப்படைத்தால், நாளைக் காலை எனக்காக செய்து வைப்பாள். ஆனால், சுத்தம் செய்வது எப்படி?

வண்டி ஓட்டியபடியே, பின்னாலிருந்தவனிடம், ''ஏன்ப்பா சுத்தம் பண்ணிக் குடுத்துருவீல்ல? அதுக்கெங்கே ஆள்தேடுறது?'' என்றார், அண்ணாமலை.

''செஞ்சுறலாம் சாமி.''

ஏகம்மை வீட்டில் நின்றது வண்டி.

சத்தத்திலேயே அண்ணன் வருவதை யூகித்தவள், ''வாங்கண்ணே,'' என்றவாறே கதவைத் திறந்தாள்.

''இந்தாம்மா,'' என்று சட்டைப் பையிலிருந்து, இரு பொட்டலங்களை நீட்டினார். விபூதி, குங்கும பிரசாதம்.

''ஒரு ஆறுநுாத்து அம்பது எடுத்தா. கைமாத்துத்தான். காலைல தந்துர்றேன்.''

குறவனிடம் வாங்கிய பையை தங்கையிடம் காட்டினார். ''பாத்தியா? கெடைக்காத பொருளு. வீட்டுக்கு கொண்டுபோனா, தெய்வானை திட்டுவா. காலைல சப்பாத்தி, குருமா செய்துவிடு. பிள்ளைகளோட வந்துடறேன். எல்லாருமா சாப்பிடுவோம். இத, இந்தாளு இப்ப சுத்தம் செய்து குடுத்துருவாரு. வாங்கி, 'பிரிஜ்'ல வச்சிரு.''

குறவன், ''இன்னிக்கு சமைக்கலியா?''

''இல்லப்பா. இன்னிக்கு கார்த்திகை விரதம். சாப்பிட மாட்டோம்.''

''அப்ப, இப்ப வேணாம். ஐஸ் பெட்டியில் வச்சா ருசி கெட்டுப் போயிரும். நான் குடும்பத்தோட இங்க, கொப்பனாபட்டில தானே, 'டென்ட்' அடிச்சி தங்கியிருக்கேன். விடிகாலைல வந்து சுத்தம் பண்ணிக் குடுத்துடறேன்.''

''அதுவும் சரி தான். அப்ப இந்தா, ஐநுாறப் பிடி. காலைல வந்து வேலைய முடிச்சுக் குடுத்துட்டு மிச்சத்த வாங்கிக்க.''

''நம்பிக்கை இல்லையா? ஓடியா போப்போறேன்? பரவால்ல, குடுங்க. போய் அரிசி, பருப்பு, மொளகா வாங்கிட்டுப் போறேன்.''

''ஏம்ப்பா, இதுகளுக்கு சாப்பாடு?''

''பைக்குள்ள நானும் கொஞ்சம் தானியம் போட்டிருக்கேன். வீட்ல சோளமோ, கேப்பையோ இருந்தா துாவி விடுங்க. பாவம் கடைசியா ராத்திரி ஒருபொழுது நல்லா எரையெடுத்துப் போகட்டும்.''

பணத்தை வாங்கிய, குறவன் கும்பிட்டு, விடைபெற்றான்.

வண்டியை மிதித்து, 'ஸ்டார்ட்' செய்து, தன் வீட்டுக்கு கிளம்பினார், அண்ணாமலை.

புறாக்குருமாவுக்கு சேர்மானங்கள் குறித்து யோசித்தவாறே கதவைச் சாத்தினாள், ஏகம்மை.

ஏ கம்மை மகன், கார்த்திகை செல்வன். கார்த்திகையன்று பிறந்தவன். பள்ளி விட்டு திரும்பியவனுக்கு மறுநாள் காலை, 14வது பிறந்தநாள்.

பள்ளியிலிருந்து வந்தவன், தன் அம்மாவிடம், ''என் பிரண்ட்ஸ்க்கெல்லாம் சொல்லணும். 'கேக்' வெட்டணும், மாமா - அத்தை, அவங்க பிள்ளைகளையெல்லாம் கூப்டணும்.''

அப்பனை இழந்த தன் மகனின் ஆசைகளை ரசித்தாள், ஏகம்மை; ஆனாலும் நிராகரித்தாள்.

''அதுக்கெல்லாம் நம்மகிட்ட காசு ஏதுப்பா?''

''மாமாக்கிட்ட கேட்டா தருவார்ல்ல? நம்ம குடும்ப செலவு, என் படிப்பு செலவு, ட்ரெஸ், மத்த போக்குவரத்தெல்லாம் அவர் தானே பாத்துக்கிறாரு.''

''பாவம் புண்ணியத்துக்கு, உழுகிற மாட்டை பல்லப்பிடிச்சுப் பதம் பாக்குறது தப்புப்பா!''

''இதென்னம்மா பையில?''

''மாமா தான் வச்சுட்டு போயிருக்காரு. காலைல வரேன்னு சொல்லியிருக்காரு.''

அ திகாலையில் கத்தியுடன் கதவை தட்டிய குறவனின் குரல் கேட்டவுடன், ஏகம்மையின் கண்கள் அனிச்சையாய் கட்டைப் பையை தேடின.

காலிப்பை கவிழ்ந்து கிடந்தது. தானியங்களும் சிதறிக் கிடந்தன.

''கார்த்தீ... கார்த்தீ!'' அலறினாள் ஏகம்மை.

''மொட்டை மாடிக்கு வாங்கம்மா.''

திணறி திணறிப் படியேறியவள், மொட்டை மாடியில் புறாக்களை ஒவ்வொன்றாக பறக்க விட்டுக் கொண்டிருந்த, கார்த்தியின் கையிலிருந்த கடைசிப் புறாவை தான் பார்க்க முடிந்தது.

'' அடேய்... என்னடா பண்ற?''

''மாமாவுக்கு என் மேல எவ்வளவு பிரியம்... பிரதமர், ஜனாதிபதி, வெளிநாட்டு தலைவர்கள் ரேஞ்சுல என் பிறந்தநாளை கொண்டாட எவ்வளவு யோசிச்சிருந்தா எனக்காக மெனக்கெட்டு இப்படியொரு, 'சர்ப்ரைஸ் கிப்ட்' குடுத்திருப்பாரு...'' என்று சிலாகித்து, கையிலிருந்த கடைசி புறாவையும் வானில் பறக்க விட்டான், கார்த்திகை செல்வன்.

செய்வது அறியாமல் திகைத்து நின்றாள், ஏகம்மை .

அறிவுச்செல்வன்

வயது : 64. படிப்பு : 11ம் வகுப்பு. பணி : அச்சுத் தொழில். சொந்த ஊர் : சிறுகுடி - திண்டுக்கல் மாவட்டம்.கவிதை, கட்டுரை, சிறுகதை மட்டும் குறுநாவல்கள் என, இதுவரை 25 நுால்கள் வெளியாகியுள்ளன. தன் படைப்புகளுக்காக இதுவரை, ஏராளமான பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். கதைக்கரு பிறந்த விதம்: நண்பன் வீட்டில், நேரில் பார்த்த நிகழ்வை வைத்து எழுதப்பட்ட கதை இது. எழுத்துலகில் மேன்மேலும் ஆழமாய் காலுான்றி, புகழ் பெற வேண்டும் என்பது இவரது லட்சியம்.






      Dinamalar
      Follow us