PUBLISHED ON : நவ 15, 2026

பரமசிவம் அமைதியாகப் பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்தாலும், அவரது கண்கள் ஜன்னல் வழியாக அந்தப் பெண்ணையே கவனித்தன. கமலா சொன்னது போல, அவளது முகம் எப்போதும் இறுக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால், இப்போது அவள், இவரைப் பார்த்துப் புன்னகைத்ததில் ஒரு மென்மை தெரிந்தது.
''கமலி, அந்தப் பொண்ணு இப்பத்தான் என்னைப் பார்த்து சிரிச்சிட்டுப் போறா. நீ, ஏன் அவளை, உம்மணாம் மூஞ்சின்னு சொல்ற?'' என்று மெதுவாக ஆரம்பித்தார்...
''சிரிப்பாளே! புருஷன் கூட இருக்கும்போது சிரிப்பு வரும். தனியா இருக்கும்போது பாருங்களேன், ஒரு வார்த்தை பேசாது. அன்னைக்கு காய்கறிப் பை துாக்கிட்டு வந்தேன், ஒரு உதவிக்கு வரல. கெளுத்தி மீன் மாதிரி நழுவிப் போயிட்டே இருக்கா. பார்க்கத்தான், 'பளபள'ன்னு இருக்கா, ஆனா, பேச்சுல ஒரு முள் இருக்கும் போல,'' என்று 'படபட'த்தாள், கமலா.
ம றுநாள் காலை, கமலா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது, ரம்யா என்ற அந்தப் பெண் வெளியே வந்தாள். கமலாவின் முதுகுப் பக்கம் குனிந்து, கோலம் போடுவதைப் பார்த்தவள், ''கொஞ்சம் தள்ளிப் போடுங்க மாமி, கால்ல ஒட்டும்,'' என்று சொல்லி, 'விறுவிறு'வென நகர்ந்தாள்.
கமலாவுக்குக் கோபம் தலைக்கேறியது. ''பார்த்தீங்களா... பெரிய இவளாட்டம், 'அட்வைஸ்' பண்றா! நான் போடுற கோலத்துல இவளுக்கு என்ன அக்கறை? காலைலேயே முள்ளு மாதிரி குத்திட்டுப் போறா பாருங்க,'' என்று, பரமசிவத்திடம் புலம்பினாள். கெளுத்தி மீனைப் பிடித்தால் எப்படி கையில் முள் ஏறுமோ, அப்படி, ரம்யாவின் ஒவ்வொரு சொல்லும், கமலாவை குத்தியது.
அந்த, 'பிளாட்'டில் புதிதாகப் பால் போட வரும் பையன், ரவியும், 'செக்யூரிட்டி' முனுசாமியும், கமலாவுக்கு துணையாக அவளைப் பற்றி, சில கதைகளை கூறினர்...
'அந்த 302ம் எண் வீட்டு அம்மா ரொம்ப கண்டிப்புங்கம்மா. எதையும் நேருக்கு நேர் பேசிடுவாங்க...' என்றான், ரவி.
ஒ ருநாள் மதியம், கமலாவுக்குத் திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது. பரமசிவம் கடைக்கு சென்றிருந்த நேரம். மெல்ல எழுந்து கதவைத் திறக்க முயன்றாள், கமலா. அப்போதுதான், அலுவலகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தாள், ரம்யா. கமலாவின் தள்ளாட்டத்தைப் பார்த்தவள், ஓடி வந்து கையைப் பிடித்தாள்.
''என்ன மாமி, உடம்பு முடியலையா? உள்ள போங்க,'' என்று அதட்டலாகச் சொன்னாள்.
''இல்ல... அது ஒண்ணும் இல்ல...'' என்று, கமலா இழுக்க, ரம்யா விடவில்லை.
''பேசாம உட்காருங்க. 'பிபி செக்' பண்ணனும்,'' என்று கூறி, தன் பையிலிருந்து ஒரு கருவியை எடுத்தாள். அவள் ஒரு செவிலியர் என்பது, அப்போது தான், கமலாவுக்கு தெரிந்தது.
கமலாவுக்குத் தண்ணீர் கொடுத்து, மாத்திரை போட வைத்த ரம்யா, ''சாப்பாட்டுல உப்பு கம்மி பண்ணுங்கன்னு அன்னைக்கே சொல்ல வந்தேன். நீங்க தான் முறைச்சீங்க. இனிமே, நான் சொல்றதைக் கேளுங்க,'' என்றாள்.
அவள் பேச்சு அதிகாரமாகவும், பிடிவாதமாகவும் இருந்தது. ஆனால், அந்த அதிகாரத்தில் ஒரு பாதுகாப்பு இருந்தது. கெளுத்தி மீன் கையில் குத்தினாலும், அது சமைத்துச் சாப்பிட்டால், உடலுக்கு எவ்வளவு பலமோ, ரம்யாவின் கண்டிப்பும் அப்படியே இருந்தது.
சி ல வாரங்கள் கடந்தன. கமலாவுக்கு, ரம்யாவின் மேல் இருந்த, 'உம்மணாம் மூஞ்சி' பிம்பம் மெல்ல மறையத் துவங்கியது.
ஒ ரு ஞாயிற்றுக்கிழமை, ரம்யாவின் கணவன், ரகுவும், பரமசிவமும் பேசிக் கொண்டிருந்தனர்.
''சார், ரம்யாவுக்குச் சின்ன வயசுலயே அம்மா கிடையாது. அதனால, அவளுக்குக் கொஞ்சம் கடினமான சுபாவம். ஆனா, மனசுல ஒரு கள்ளமும் இல்லை. நேர்ல பார்த்தா முள்ளு மாதிரி பேசினாலும், எல்லாருக்கும் உதவி செய்வா,'' என்றான், ரகு.
அ ன்று இரவு பலத்த மழை. கமலாவின் வீட்டுக் கழிவறையில் குழாய் உடைந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது. திகைத்து நின்றார், பரமசிவம். தகவல் தெரிந்ததும் ஓடி வந்தாள், ரம்யா. மழையையும் பாராமல், 'பிளம்பரை' தேடிப் பிடித்து, அழைத்து வந்து சரி செய்ய வைத்தாள்.
வேலை முடிந்ததும், ''இந்த வயசுல இதெல்லாம் கவனிக்க வேண்டாமா? எல்லாம் நானே வந்து பாத்துக்க முடியாது, மாமி,'' என்று அதே பழைய, 'கடுகடு'ப்புடன் சொல்லிவிட்டுப் போனாள்.
ம றுநாள் காலை, கமலா வழக்கம்போல வாசலில் நின்றிருந்தபோது, ரம்யா அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள். கையில், 'லஞ்ச் பேக்', தோளில் ஒரு பெரிய பேக். அவளது முகம் எப்போதும் போல ஒருவித இறுக்கத்துடனேயே இருந்தது.
''ரம்யா... நேத்து ராத்திரி பண்ண உதவிக்கு ரொம்ப நன்றிம்மா. இந்தா, சூடா இட்லி பண்ணினேன், கொஞ்சம் சாப்பிட்டுப் போயேன்,'' என்று அன்போடு அழைத்தாள், கமலா.
ரம்யா சட்டென்று நின்றாள். கமலாவைப் பார்த்து ஒரு கணம் தயங்கியவள், ''மாமி எனக்கு, 'டியூட்டி'க்கு நேரமாயிடுச்சு. அங்க போனா மூச்சு விட நேரமிருக்காது. உங்க இட்லியை அப்புறம் சாப்பிடுறேன். முதல்ல உங்க, பிபி மாத்திரையை ஒழுங்கா போடுங்க. அன்னைக்கு மாதிரி தலை சுத்தி விழுந்தீங்கன்னா, அடுத்த முறை நான் பார்க்காம கூட போய்டுவேன், ஜாக்கிரதை,'' என்று, 'படபட'வெனப் பேசிவிட்டு, பதிலே எதிர்பார்க்காமல், 'லிப்ட்'டை நோக்கி ஓடினாள்.
கமலாவுக்கு இப்போது, அவள் பேச்சு கோபத்தை வரவழைக்கவில்லை. ''பாருங்களேன், ஒரு நன்றி சொன்னா கூட அதுக்கும் ஒரு மிரட்டல் வருது. நிஜமாவே இவ, கெளுத்தி மீன் தான். ஆனா, விஷமில்லாத முள்ளு,'' என்று சிரித்துக்கொண்டே, பரமசிவத்திடம் சொன்னாள், கமலா.
அ ன்று மாலை, கீழே நடைபயிற்சி சென்றபோது, ரம்யாவின் கணவன், ரகுவை சந்தித்தார், பரமசிவம். இருவரும் பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
''ரகு, ரம்யா ஏன் எப்போவும் இவ்வளவு, 'டென்ஷனா' ஒரு மாதிரி கண்டிப்போடவே இருக்கா? என் மனைவி, கமலா அவளைப் பார்த்து முதல்ல பயந்தா, இப்போ அவகிட்ட ஏதோ ஒரு தனி குணம் இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டா,'' என்றார், பரமசிவம்.
ரகு மெலிதாகப் புன்னகைத்தான்...
''சார், ரம்யா ஒரு, 'கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டல்'ல சீனியர் நர்ஸ். தினமும் நுாற்றுக்கணக்கான நோயாளிகள், மரண விளிம்புல இருக்கிறவங்க, அழுதுட்டு இருக்கிற உறவினர்கள்ன்னு சூழ்ந்திருக்க, இவங்க நடுவுலதான் அவளோட, 12 மணி நேரமும் கழியுது. அங்க ஒரு நிமிஷம் அசந்தா கூட ஒரு உயிர் போயிடும். அதனாலயே அவளது பேச்சுல மென்மை போயிருச்சு. ஆனா, அந்த ஆஸ்பத்திரில, அவளை, கைராசிக்காரின்னு சொல்வாங்க. முகம் தான், 'கடுகடு'ன்னு இருக்கும், ஆனா, அவ கவனிப்புல ஒரு உயிர் பிழைச்சுக்கும்.
''சின்ன வயசுல, அவங்க அப்பாவுக்கு உடம்பு முடியாம போனப்போ, யாரும் உதவிக்கு வரல. அவளே தனியா நின்னு போராடி, அவரைப் பார்த்துக்கிட்டா. அந்தப் போராட்டம் தான், அவளை இப்படி, 'கெளுத்தி'யா மாத்திருச்சு.''
அ ன்று இரவு, ரம்யா வீட்டு கதவைத் தட்டினாள், கமலா. ரம்யா கதவைத் திறந்தாள். முகத்தில் அலுப்பு தெரிந்தாலும், ''என்ன மாமி? மறுபடியும் குழாய் உடைஞ்சுடுச்சா?'' என்று கேட்டாள்.
ஒரு சிறிய தட்டில், இனிப்புகளை வைத்து நீட்டினாள், கமலா.
''இல்ல ரம்யா... இன்னைக்கு உன்னைப் பத்தி, ரகுகிட்ட கேட்டேன். நீ பண்ற வேலை எவ்வளவு கஷ்டம்ன்னு புரிஞ்சுது. நாங்க வயசானவங்க, ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுடு. உன்னோட இந்த, 'கடுகடு'ப்பு தான் எங்களுக்கு ஒரு பாதுகாப்புன்னு இப்பதான் தெரியுது,'' என்றாள், கண்களில் நீருடன்.
ரம்யா ஒரு நிமிடம் மவுனமாக இருந்தாள். பிறகு மெல்ல அந்தத் தட்டை வாங்கிக்கொண்டு, ''மாமி... நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்ல. நீங்க எங்க அம்மா மாதிரி. எனக்கும் கொஞ்சம் பொறுமை குறைவு தான். ஆனா, இனிமே நீங்க ஏதாவது தப்பு பண்ணா கண்டிப்பா திட்டுவேன், பார்த்துக்கோங்க!'' என்று லேசான புன்னகையுடன் சொன்னாள்.
பரமசிவம் துாரத்தில் இருந்து இதைப் பார்த்துக்கொண்டிருந்தார். ரம்யாவின் சுபாவத்தைப் புரிந்துகொண்ட, கமலாவுக்கு, அவளது கண்டிப்பே இப்போது பெரும் துணையாகத் தெரிந்தது.
எதிர்த்த வீட்டுப் பெண் இனி, கமலாவிற்கு எதிரி அல்ல; கசப்பு மருந்து போல, ஆரோக்கியம் தரும் தோழி ஆகிவிட்டாள். அந்த, 'பிளாட்' வாழ்க்கை இப்போது, கமலாவுக்கு பிடிக்கத் துவங்கியது.
மாலதி சந்திரசேகரன்
வயது: 74.
சொந்த ஊர்: சென்னை.
படிப்பு: டிப்ளமா(காமர்ஸ்)
பிடித்த விஷயம்: எழுத்துப்பணி. இதுவரை ஏராளமான சிறுகதைகள், கவிதை, கட்டுரைகள் மற்றும் ஆன்மிக கட்டுரைகள் எழுதி, பல்வேறு தமிழ், வார, மாத இதழ்களில் வெளியாகியுள்ளன.
இவர் எழுதிய நுால்கள் பல்வேறு பதிப்பகங்களில் வெளியாகியுள்ளன. சின்னத்திரையிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
எழுத்துப்பணிக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். தன் இறுதிகாலம் வரை எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என்பது, இவரது லட்சியம்.
கதைக்கரு பிறந்த விதம்: சுத்த சைவமாக இருப்பினும், ஒருமுறை கெளுத்தி மீனைப் பற்றி படித்தபோது, மனதில் ஏற்பட்ட தாக்கமே இக்கதை எழுத துாண்டியது.
போன் : 98408 09062.
