தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கோடை மலர்கள்!

கோடை மலர்கள்!

கோடை மலர்கள்!

3


PUBLISHED ON : செப் 13, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 13, 2026

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அம்மாவின் முகத்தில், மெல்ல திரும்பத் தொடங்கியிருந்த பழைய உற்சாகம், என் உயிரை மீட்டுக் கொடுத்தது...

''ராத்திரி நல்லா துாங்கினியா அம்மா? காபி கொடுக்கலாம்ன்னு சொன்னார், டாக்டர். வலி எப்படி இருக்கு?'' என்றபடி, 'பிளாஸ்க்'கில் இருந்து, காபியை கோப்பையில் ஊற்றினான், மகன் ரகு.

''இப்போ, எவ்வளவோ பரவாயில்லேப்பா, ரகு கண்ணா. என்னிக்கு போகலாம் வீட்டுக்கு?''

''அம்மா, 'சர்ஜரி' முடிஞ்சு ரெண்டு நாள் கூட முழுசா ஆகலே. இன்னிக்கு ரூமுக்கு மாத்திடுவாங்கன்னு நினைக்கிறேன். நாளை, 'டிஸ்சார்ஜ்' செய்யலாம்.''

''சரி... சரி,'' என்று ஆர்வமாக காபியை வாங்கிக் குடித்தாள், அம்மா.

''சரிம்மா. டாக்டரை பார்த்துட்டு வர்றேன். நீ படுத்துக்கோ.''

வயிற்றில், 'ஹெரன்யா' அறுவை சிகிச்சை நடந்த இடத்தில், சற்றே பெரிய கட்டு இருந்தது. மெல்ல சாய்ந்தவாக்கில் படுத்தபடி, தலையாட்டினாள், அம்மா.

அழுத்தமான, 'க்ளோரோபார்ம்' வாசனை, 'செடேஷன்' மருந்து வாடை, 'வென்டிலேட்டர்'கள் போன்ற வழக்கமான சூழ்நிலையிலிருந்து வெளியே வருவதே விடுதலை போல இருந்தது.

''தம்பி, ஒரு நிமிடம்,'' என்று, பக்கத்து கட்டிலிலிருந்து மெல்ல ஒரு குரல் கேட்டது.

வெளியே வைத்த காலை உள்ளிழுத்து, அவர் அருகில் போனேன்.

ஐம்பது வயது மனிதர் என்று உடனே கணிக்கக் கூடிய வகையில் இருந்தது, அவர் தோற்றம். வயிற்றில்தான் அறுவை சிகிச்சை ஆகியிருந்தது அவருக்கும். ஆனால், கட்டு சற்று சிறியதாக இருந்தது. முகம் முழுக்க, 'சிடுசிடு'ப்பு.

''சொல்லுங்க சார். ஏதாவது உதவி வேணுமா?'' என்று அருகில் போனேன்.

''தம்பி. வெளில யாராச்சும் பொம்பளை உக்காந்திருக்காளா? உயரமா, ஒல்லியா, கண்ணாடி போட்டுக்கிட்டு?'' என்றார், அவர்.

''ஆமாம். வரும்போது பார்த்த நினைவு,'' என்றான், ரகு.

''பார்த்தியா, பார்த்தியா தம்பி? உள்ளே ஒருத்தன் வயித்தை அறுத்துகிட்டு கெடக்கேன். இவ ஜாலியா வெளில உட்கார்ந்து போன் பாத்துகிட்டிருக்கா.''

''காபி வேணுமா சார்? ஒரு டம்ளர் இருக்கு. தர்றேன்.''

''இல்லல்ல. அதெல்லாம் அஞ்சு மணிக்கே குடிச்சாச்சு. உள்ளே வந்து என்ன ஏதுன்னு விசாரிக்க சொல்லுங்க, அவளை.''

''சரி சார், சொல்றேன்.''

''கூட்டமா இருக்கா வெளில?''

''ஆமாம் சார். அவங்க பேரு?''

''மேகலா. நீங்க தேடவே வேணாம் தம்பி...ஒண்ணு போனை நோண்டிகிட்டு இருப்பா. இல்லேன்னா புத்தகம், பேப்பர்ன்னு படிச்சுகிட்டு இருப்பா. பெரிய கவர்னர் பி.ஏ., மாதிரி.''

''நீங்க, 'டென்ஷன்' ஆகக் கூடாது, சார். இப்பதான், 'சர்ஜரி' ஆகியிருக்கு. 'ரெஸ்ட்'டும், அமைதியும் ரொம்ப முக்கியம். நான் போய் சொல்றேன் அவங்ககிட்ட.''

''ம் கேட்டுட கீட்டுட போறா,'' என்று, அவர் அலுத்துக் கொண்டபோது, நான் நகர்ந்து வெளியே வந்து விட்டேன்.

நோயாளிகளின் உறவினர்கள் வெளியே, 'வெயிட்டிங் ஹால்' முழுக்க இருந்தனர். அவர்களில், மேகலா என்ற அந்தப் பெண்மணியை தேடினேன். இல்லை. காலையில் வரும்போது, அவர் சொன்ன அதே அடையாளங்களுடன் பார்த்திருந்தேன். கையில் இருந்த மொபைல்போனில் மூழ்கியிருந்தார் அப்போது. அதற்குள் எங்கே போய்விட்டார்?

டாக்டர் அறையில் ஆட்கள் இருந்தனர். காத்திருக்கும் வேளையில் அந்த அம்மாவை தேடலாம் என்று வழி எங்கும் பார்த்தேன். படிக்கட்டுகளில், நாற்காலிகள் போடப்பட்ட இடங்களில், 'லேப் ரிப்போர்ட்' வாங்கும் ஹாலில் என்று, எங்குமே இல்லை.

அம்மாவுக்கு இரண்டு இட்லி வாங்கலாம் என்று 'கேன்டீனு'க்குப் போனபோது, அவங்களை பார்த்து விட்டேன்.

மசாலா தோசை, சட்னி, சாம்பார், கொதிக்கக் கொதிக்க காபி என்று வட்டமாக வைத்து, சாப்பிட்டு கொண்டிருந்தார். காதில் மொபைல் போன்; தீவிரமான உரையாடல்.

அருகில் போய், அவர் கணவர் அழைப்பதை சொல்லலாமா என்று யோசித்தபோது, டாக்டரின், 'செகரெட்டரி' மொபைல்போனில் அழைத்தார்.

''ரகு சார். அம்மா நன்றாக இருக்கிறார். இரவு 7:00 மணி வரை, 'அப்சர்வேஷனில்' இருக்க சொன்னார், டாக்டர். நாளை நிலைமை பார்த்து விட்டு, சொல்வார்,'' என்றார்.

''ஓ.கே., மேடம். தாங்க் யூ.''

அதற்குள், மேகலா எழுந்து சென்று விட்டார்.

இட்லி வாங்கிக் கொண்டு திரும்பினேன். அம்மாவுக்கு மெல்ல ஊட்டி, தண்ணீர் அருந்த வைத்தேன்.

''நீயும் சாப்பிடுப்பா, ரகு. நான், 'ரெஸ்ட்' எடுக்கறேன்,'' என்று சொல்லி கண்களை மூடிக் கொண்டாள், அம்மா.

பக்கத்து திரைச்சீலை தாண்டி, அவர் குரல் கேட்டது. கூடவே, கலவையாக இரண்டு, மூன்று பேர் பேசுவதும் கேட்டது...

''நீ கொடுத்து வெச்சது அவ்வளவுதாம்பா, செல்வராஜு. நேத்து ராத்திரி கூட பார்த்தேன். உன் பொண்டாட்டி, ராத்திரி முழுக்க ஏதோ செஞ்சிட்டு இருந்தா. 'கிச்சன்'ல இருந்து ஒரே எண்ணெய் வாசம். காராபூந்தி, வேர்க்கடலைன்னு பொரிச்சுகிட்டு இருக்கான்னு என் பொண்டாட்டி சொன்னா,'' என்றார், ஒருவர்.

''ஓ... ராத்திரி அந்த கூத்தா? பகல்ல நான் என்ன பார்த்தேன் தெரியுமா? அந்தம்மா நல்லா பளிச்சுன்னு புடவை கட்டிகிட்டு, முகத்துல பவுடர் பூசிட்டு ஆட்டோல ஏறி போனா,'' என்றார், இன்னொருவர்.

''நீ, 'அட்மிட்' ஆன அன்னிக்கு, எங்கம்மா போயி உதவி தேவையா, மேகலான்னு கேட்டாங்களாம். தட்டு நிறைய பிரியாணி வெச்சு நீட்டுச்சாம், உன் பொண்டாட்டி. அவ்வளவு வாசனையா, நெய் மணத்துடன் சூப்பரா இருந்துச்சாம்,'' என்றார், மற்றொருவர்.

''இப்ப கூட எங்க போயிட்டா? செத்து பொழைச்ச மாதிரி ஆபரேஷன் பண்ணிகிட்டு கெடக்குற. உன் பக்கத்துலயே இருந்து பாத்துக்க வேணாமா? இப்படி எல்லாம் ஒருத்தி எதுக்கு பொண்டாட்டின்னு,'' என்றனர்.

செல்வராஜு கோபத்துடன் கத்துவது கேட்டது...

''எல்லாம் என் தலையெழுத்து. வேற என்ன சொல்ல? இப்படி அனாதையாட்டம் கெடக்குறேன். அவ எப்பவும் போல பூ, பவுடர், புடவைன்னு அலையுறா. வரட்டும், இன்னிக்கு ஒரு வழி பண்றேன் அவளை.''

''அய்யோ. செல்வராஜு மொதல்ல நீ, நல்லபடியா வீடு வந்து சேருப்பா. அவ எப்படியோ போகட்டும்,'' என்று அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

வீ ட்டிற்கு சென்று, அம்மாவுக்கு ரசம் சாதம், கோஸ் பொரியல் என, காரமில்லாமல் தயார் செய்து, மருத்துவமனைக்கு எடுத்து வந்தேன்.

''கண்ணா. உன் கையால் சாப்பிடறதுக்கே இப்படி, 'சர்ஜரி' பண்ணிக்கிட்டு படுத்துக்கலாம் போல இருக்குப்பா,'' என்று உணர்ச்சிவசப்பட்ட அம்மாவை, செல்லமாக கோபித்துக் கொண்டேன்.

''சார், நான் அம்மாவை சாப்பிட வைக்கிறேன். நீங்க, ரத்ததானம் ஏற்பாடு பண்ணிடுங்க,'' என்றாள், நர்ஸ்.

செல்வராஜை கடந்த போது, ஊசி போட வந்த நர்ஸை நிற்க வைத்து, அவர் பேசிக் கொண்டிருந்தார்...

''மனுஷனுக்கு நோய் வரலாம் போகலாம். ஆனா, அந்த நேரத்துல கூடவே ஒருத்தி இருக்கணும். ஒரு சுடு தண்ணி வெச்சு கொடுக்கணும். அதுக்கு நாதியத்து போன பிறகு, அந்த கழுதை இருந்தா என்ன, செத்தா என்ன?'' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

வெளியில் வந்தேன்.

ஆட்டோ வந்து நின்றது. மேகலா அம்மாள் இறங்கினார். தானாக என் பார்வை அவர் மேல் படிந்தது.

நாற்பத்தைந்து வயது இருக்கலாம். மெலிந்த தேகம், பளிச்சென்ற முகம். அகன்ற விழிகளில் வெறுமையான உணர்வு. மெல்லிய ஆரஞ்சு நிறத்தில் பருத்திச் சேலை. அதை பாங்குடன் உடுத்தியிருந்த நேர்த்தி.

''மேடம். என் பெயர், ரகு. இங்கே செல்வராஜ் சாரின் பக்கத்து, 'பேஷன்ட்' என் அம்மா. ஒரு நிமிடம் பேசலாமா?'' என்று, அவர் எதிரில் போய் நின்றேன்.

ஒரு கணம் தடுமாறி திகைத்தார், அந்தப் பெண்மணி. உடனே சமாளித்து இயல்பாகி, ''சொல்லுங்க, தம்பி, என்றாள்.''

''நான் பேசற விஷயம் அதிகப்பிரசங்கித்தனம் தான். இது, அப்பட்டமான உரிமை மீறல் தான். ஆனாலும், என்னால் அமைதியா வேடிக்கை பார்க்க முடியலே. மேடம், உங்க கணவர், 'ஆபரேஷன்' முடிஞ்சு, படுக்கையில இருக்கிற, 'பேஷன்ட்!' இப்போ அவர் பக்கத்தில் இருந்து கவனமா பாத்துக்கணும், இல்லையா? உங்க தோற்றம் எனக்கு நல்ல மதிப்பை கொடுக்குது.

''ஆனா, உங்க பக்கத்து வீட்டுக்காரங்க, உங்க கணவர் இவங்க எல்லாம் பேசுறது வேற, 'இமேஜை' கொடுக்குது. பக்கத்தில் இல்லாமல் எங்கோ போயிடறது, பலகாரம் செய்வது, பிரியாணி சாப்பிடுவது, அலங்கார உடைகள், ஆட்டோ பயணம்... மேடம் ரொம்ப சாரி. எனக்கு எப்படி கேக்கணும்ன்னு தெரியலே,'' என்று நிறுத்தினேன்.

அவள் ஆட்டோவில் இருந்து இறக்கிய சாமான்களை நகர்த்தி வைத்தாள். வழி அடைக்காமல் நகர்ந்து நின்று, மெல்ல பேசத் தொடங்கினாள்...

''தம்பி, மத்தவங்களைப் போல பின்னால் பேசாமல், நேரிடையாக என்னிடம் பேசினதுக்கு, நன்றி. சொல்றேன்... அவர், என் கணவர் தான். ஈ.பி.,ல 'வயர்மேன்' வேலையில இருந்தவர். மெல்ல மெல்ல குடி, போதை, சூதாட்டம்ன்னு அடிமையாகிட்டார். என்னால் முடிந்தவரை போராடிப் பார்த்தேன். மீட்க முடியலே. அவருக்கு வேலை போயிட்டது. ரெண்டு குழந்தைங்க. அரசு விடுதியில வளர்றாங்க. செலவுகளுக்கு என்ன பண்ணுவேன் தம்பி? எனக்கு சரியான படிப்பு எதுவும் கிடையாது.

''நல்லா சமைக்கத் தெரியும். மூணு கல்யாண, 'காட்டரிங் ஏஜென்சி'ல வேலையில இருக்கேன். கூப்பிடற இடம் எல்லாம் போய் சமைச்சு கொடுத்துட்டு வருவேன். தினம், இவர் குடிச்சுட்டு விழுந்து கிடக்கும் இடம் தேடி போய், கூட்டிட்டு வருவேன். இப்ப, 'லிவர்' கெட்டுப் போக ஆரம்பிச்சு, 'கிட்னி' வரைக்கும் வந்தாச்சு. இது, 'எமர்ஜென்சி ஆபரேஷன்' அரசு மருத்துவமனைக்கு தான் போனேன். அங்கே, 'எமர்ஜென்சி'க்கே பெரிய வரிசை நிக்குது. இங்க செலவு அதிகம் தான், உங்களுக்கே தெரியும். பரவாயில்லை, உயிரோட இருந்தால் போதும்ன்னு சேர்த்து, பணம் கட்டி, 'ஆபரேஷன்' பண்ணியாச்சு.

''இருந்த பணம் எல்லாம் காலி. தினம் பேப்பர்ல விளம்பரம் பார்ப்பேன். அதில் ஒண்ணு கொஞ்சம் சரியா வந்தது. வயதான பாட்டிம்மா கூட, எட்டு மணி நேரம் இருக்கணும். படுத்த படுக்கையாக இருக்கும் அவங்களை கவனிச்சுக்க போயிட்டு வரேன். 'நைட்டு' முழுக்க பாட்டிம்மா கூட தான். ஒரு மசால் தோசை சாப்பிடுவது மட்டும் தான் என் முழு நாள் உணவு. ராத்திரி நேரத்துல, கிலோ கிலோவா, 'மிக்சர்' செஞ்சு, 'பாக்கெட்' போட்டு, 'பேக்கரி'ல கொடுக்கறேன். பிறந்தநாள், 'பார்ட்டி' செய்கிற நடுத்தர குடும்பங்கள் கேட்கும்போது, பிரியாணி செஞ்சு கொடுப்பேன். இதோ இன்னிக்குக் கூட, பொங்கல், சட்னி செஞ்சு, 'டெலிவரி' கொடுத்துட்டுதான் வரேன். பாருங்க... பாத்திரங்களை, வீட்டுக்கு போய்த்தான் தேய்க்கணும்.

''புருஷனுக்கு குணமாகணும்ன்னு கோவிலுக்கு போய் வேண்டிக்கிற பொண்டாட்டிகள் அதிர்ஷ்டக்காரிகள். அந்த வாய்ப்புக்கான நேரம் கூட எனக்கு இல்லே. என்னைப் பொறுத்தவரை செயல்தான் பிரார்த்தனை; உழைப்பு தான் அர்ச்சனை. அவருக்கு இதெல்லாம் புரியாது. புரிஞ்சாலும் ஆண் என்ற மனோபாவம் மற்றும் 50 வருஷ ஆதிக்க சிந்தனை... இதுல இருந்தெல்லாம் அவரால் வெளியே வர முடியாது. என் குழந்தைகளுக்காக நான் கடைசி வரை உழைப்பேன். இவருக்கும் அதில் பங்கு கொடுக்கிறேன். என்னைப் போல எத்தனை பெண்கள், எவ்வளவு கண்ணீர், எத்தனை ஓட்டம்... சரி தம்பி, வரட்டுமா? பணம் கட்டணும்.''

என் கண்களில் பார்வை தெரியவில்லை. நீர்த்திரை அனைத்தையும் மறைத்தது. ஆனால, மனம் முழுக்க கசப்பும், வலியும் பரவியிருந்தன.

செல்வராஜ் படுக்கையை நோக்கி கால்களை எட்டி வைத்தேன்.

வி. உஷா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us