PUBLISHED ON : நவ 29, 2026

''அப்பா, நம், 'பிளாட்' இது தான், வண்டியை ஓரம் கட்டுங்க,'' என்றாள், வித்யா. வண்டியை ஓரமாக நிறுத்தி, தன் 12 வயது மகளுடன் இறங்கினார், ராகவன்.
''யார் நீங்க?'' என்று, அவரை பார்த்து கேட்டான், காவலாளி.
''நாங்க, முதல் மாடிக்கு புதிதாக குடி வந்திருக்கிறோம். சிறிது நேரத்தில் வேன் ஒன்று வரும். உள்ளே விடவும்,'' என்று சொல்லி, இருவரும் மேல் மாடிக்கு சென்றனர்.
மாடி சென்று, தங்கள் வீட்டு கதவை திறந்தார். சத்தம் கேட்டு எதிர், 'பிளாட்' கதவு திறந்து, 12 வயது சிறுமி, பள்ளி சீருடையுடன் எட்டி பார்த்தாள்.
''ஹாய் நீங்க தான் புதிதாக வந்திருக்கிறீர்களா?'' என்றாள்.
''ஆமாம், என் பெயர் வித்யா. இவர் எங்க அப்பா, ராகவன்.''
''வெல்கம், அங்கிள். என் பெயர், ரத்னா. மாலை சந்திப்போம்,'' என்று கூறி, வீட்டை பூட்டி விட்டு சிட்டாக பறந்து சென்றாள், அச்சிறுமி.
சிறிது நேரத்தில் வேன் வந்தது. எல்லா பொருட்களையும் வீட்டிற்குள் அடுக்கி வைத்தனர். 'ஸ்விக்கி' மூலம் சாப்பாடு, 'ஆர்டர்' செய்து இருவரும் சாப்பிட்டனர். அதன்பின், ராகவன், காஸ், 'டிவி' இணைப்பு பெற வெளியே சென்றார்.
வித்யா, ஏழாம் வகுப்பு படிக்கிறாள். ராகவன், பேங்க் மேனேஜர். சென்னைக்கு பணிமாற்றம் ஆகி வந்துள்ளார். மனைவி விபத்தில் இறந்துவிட, இவர் தாயுமானவராக மாறினார். வித்யாவும் அப்பா கஷ்டம் தெரிந்து, ஒத்தாசையாக இருக்கிறாள். அம்மா இல்லாத குறை தவிர மற்ற குறை ஏதும் இல்லாமல் பாசம் கொட்டி வளர்த்தார்.
ம ணியோசை கேட்டு கதவை திறந்தார், ராகவன்.
''வணக்கம், என் பெயர், சந்தியா. எதிர், 'பிளாட்'டில் இருக்கோம். ரத்னாவின் அம்மா,'' என்று அறிமுகம் செய்து கொண்டாள், வந்த பெண். ராகவனும், தங்களை பற்றி விவரித்தார்.
''வித்யா எந்த பள்ளியில் சேருகிறாள்?'' என்று, சந்தியா கேட்டதும், ''ஹாய், ஆன்ட்டி, நான், 'சிந்து மெட்ரிகுலேஷன் பள்ளி'யில், நாளை ஏழாவது வகுப்பில் சேருகிறேன்,'' என்றாள், வித்யா.
''ரொம்ப நல்லதா போச்சு. என் பொண்ணும் அதே பள்ளியில் தான் படிக்கிறாள். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள்,'' என்று சொல்லி, விடை பெற்றாள், சந்தியா.
சென்னை விமான நிலையத்தில், வேலை செய்கிறாள், சந்தியா. அவள் கணவன் சுந்தரம், 'கொரானா' நோய் பாதித்து, இறந்து விட, சந்தியாவுக்கு கருணை அடிப்படையில், இந்த வேலை கிடைத்தது.
வித்யாவும், ரத்னாவும் தோழிகளாக மாறிவிட்டனர்.
ஒ ருநாள் காலை, ரத்னாவின் வீட்டில் இருந்து அழுகுரல் கேட்டது. ஓடிப்போய் பார்த்தாள், வித்யா. ரத்னா தரையில் விழுந்து, அழுது கொண்டு இருந்தாள்.
''வித்யா, கால் தடுக்கி விழுந்து விட்டேன். மிகவும் வலிக்குது,'' என்றாள், ரத்னா. வித்யா, தன் அப்பாவை கூப்பிட, அவர் ஓடிவந்து, ரத்னாவை அலாக்காக துாக்கிக்கொண்டு, தன் காரில், அருகில் இருந்த மருத்துவமனைக்கு விரைந்தார். டாக்டர், 'எக்ஸ்ரே' எடுத்து, ''இது, எலும்பு முறிவு, கட்டு போட்டு, 20 நாட்கள் படுக்கையில் இருக்க வேண்டும்,'' என்றார்.
செய்தி கேட்டு, பதறி ஓடிவந்தாள், சந்தியா.
''ஒன்றும் கவலைப்படாதீர்கள். 20 நாளில் சரியாகி விடும். வித்யா தினமும் பள்ளி பாடங்களை சொல்லி கொடுப்பாள். கவலை வேண்டாம்,'' என்றார், ராகவன்.
பிறகு, அனைவரும் வீடு திரும்பினர். வீட்டிற்கு போகும் போது, ''அம்மா, வித்யா அப்பா என்னை அப்படியே துாக்கி கொண்டு, ஓடினார். எனக்கு அப்பா நினைவு வருது,'' என்று கூறி அழுதாள். அவளை கட்டி அணைத்து ஆறுதல் கூறினாள், சந்தியா.
பள்ளி பாடங்களை, ரத்னா படிக்க உதவினாள், வித்யா. ராகவனும், வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், வித்யாவுடன், ரத்னா வீடு சென்று, அவள் அம்மா வரும் வரை, அவளுக்கு பேச்சு துணையாக இருந்தனர்.
ஒ ரு ஞாயிறு வேலை நிமித்தமாக, ராகவன் அலுவலகம் சென்றார். வழக்கப்படி, ரத்னா வீட்டில் விளையாட சென்றாள், வித்யா. சந்தியாவும் வீட்டில் இருந்ததால், கதை பேசி கொண்டு இருந்தனர். திடீரென, ''ஆன்ட்டி எனக்கு என்னவோ பண்ணுது,'' என, பயந்து, சந்தியாவின் அருகில் வந்தாள், வித்யா.
அவளை, அணைத்து பேச்சு கொடுக்கும் போது, அவள் பிரச்னையை புரிந்து கொண்டாள், சந்தியா.
''கங்கிராட்ஸ், நீ பெரிய மனுஷி ஆகிவிட்டாய்,'' என்று மகிழ்ச்சி பொங்க கூறினாள். ஒரு தாயாக என்ன செய்ய வேண்டுமோ செய்து, அவளுக்கு 'சுடச்சுட' ரவா கேசரி கிண்டி கொடுத்தாள்.
''வித்யா, மாலை உங்க அப்பா வரும்போது, அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்,'' என்றாள், சந்தியா.
மாலை வீடு திரும்பிய, ராகவன், வித்யா இல்லாதது கண்டு, ''ரத்னா, வித்யா எங்கே?'' என்றார்.
''அங்கிள் சீக்கிரம் வாங்க. உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி,'' என்றாள், ரத்னா.
''சார், 'ஸ்வீட்' எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மகள், பெரியவளாகி விட்டாள்,'' என்று கேசரி கொடுத்தாள், சந்தியா.
ராகவன் கண்களில், கண்ணீர் தளும்பியது. ''இதுவரைக்கும் தாயாக என்ன செய்ய முடியுமோ, அதை செய்தேன். இந்த வேளையில் நீங்கள் அந்த தாய் செய்ய வேண்டியதை செய்துள்ளீர்கள். நான் எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை,'' என்றார், ராகவன்.
''இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ரத்னா அடிபட்ட போது, நீங்கள் துாக்கிக்கொண்டு ஓடவில்லையா,'' என்று சமாதானப்படுத்தினாள், சந்தியா.
மகிழ்ச்சியுடன் நாட்கள் கடந்தது.
ஒ ருநாள், 'டிவி'யில், 'சிங்கிள் பேரன்ட்' பிரச்னை பற்றி விவாதம் நடந்ததை, வித்யாவும், ரத்னாவும், பார்த்தனர்.
''வித்யா, உனக்கு அம்மா இல்லை. எனக்கு, அப்பா இல்லை. என் அம்மாவும், உன் அப்பாவும் திருமணம் செய்து கொண்டால், இந்த குறை தீரும்,'' என்றாள், ரத்னா.
''நானும், அதைப்பற்றிதான் யோசித்தேன். நீயும் சொல்லி விட்டாய். நம் பள்ளியில் உள்ள மனநல டாக்டர், லட்சுமியிடம் பேசி பார்க்கலாம்,'' என்று பெரிய மனுஷி தோரணையுடன் கூறினாள், வித்யா.
ப ள்ளி இடைவேளையில், டாக்டர் லட்சுமியிடம் இருவரும் பேசினர். லட்சுமி மிகவும் மகிழ்ந்து, ''இந்த வயதில், இப்படி ஒரு சிந்தனை வந்துள்ளது. மிக நல்ல முடிவு. நான், உங்கள் பெற்றோரை அழைத்து பேசுகிறேன். அதுவரை நீங்கள் அமைதியாக இருங்கள்,'' என்றாள், லட்சுமி.
ம றுவாரம், 'பேரன்ட்ஸ் மீட்டிங்'குக்கு, சந்தியாவும், ராகவனும் சென்றனர். 'மீட்டிங்' முடிந்தவுடன், டாக்டர் லட்சுமி, இருவரையும் தனியாக அழைத்தார்.
''நீங்க இருவரும் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். இந்த சிறுவயதில், முதிர்ந்த சிந்தனை கொண்டவர்கள் உங்கள் செல்வங்கள்,'' என்றாள்.
''நீங்க என்ன சொல்றீங்க. ஒன்றும் புரியவில்லை,'' என்றனர், சந்தியாவும், ராகவனும். டாக்டர் லட்சுமி விளக்கமாக, வித்யா, ரத்னாவின் ஆதங்கத்தை தெரியப்படுத்தினார்.
''ஒரு மனநல மருத்துவராக நான் சொல்கிறேன். உங்களுக்கும், குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் இது மிகவும் நல்லது. யாருக்கும் பயப்படவோ, விளக்கம் சொல்லவோ தேவையில்லை. யோசித்து, ஒரு நல்ல முடிவு எடுங்கள். என், 'அட்வான்ஸ்' வாழ்த்துகள்,'' என்றார்.
சந்தியாவும், ராகவனும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டனர். வீடு திரும்பியவுடன், வித்யாவும், ரத்னாவும், ''நீங்கள் இருவரும் பேசி நல்ல முடிவுக்கு வாங்க,'' என்றனர்.
ம றுநாள், சந்தியா வீட்டிற்கு சென்று, ''மேடம், நாம கொஞ்சம் தனியாக பேச வேண்டும். கோவிலுக்கு வருவீங்களா?'' என்றார், ராகவன்.
அருகில் இருந்த, ராமர் கோவிலுக்கு சென்றனர்.
''நம் செல்லங்கள் இப்படி நினைப்பர் என்று எண்ணவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீங்க?'' என்றார், ராகவன்.
''எனக்கும், இது ஒரு எதிர்பாராத செய்தி. என்ன சொல்வது என்றே தெரியவில்லை,'' என்றாள், ரத்னா.
''நமக்காக இல்லாவிட்டாலும், நம் குழந்தைகளுக்காக, ஒரு முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் மனதில் இப்படி ஒரு எண்ணம் ஏற்பட, தெரிந்தோ தெரியாமலோ நாமும் ஒரு காரணமாகி விட்டோம்,'' என்றார், ராகவன்.
ஒன்றும் பதில் கூறாமல் தலை குனிந்து இருந்தாள், சந்தியா. அப்போது, கோவில் அர்ச்சகர், ''சீக்கிரம் வாங்கோ. திரை போட போகிறது,'' என்று அழைத்து, ''தம்பதியர் பேர், நட்சத்திரம் சொல்லுங்கள்,'' என்றார்.
''கடவுளே, நம் கேள்விக்கு விடை கொடுத்தார்,'' என்று சற்று நாணத்துடன், சந்தியா சொல்ல, முகம் மலர்ந்தார், ராகவன்.
கடவுள் முன்னிலையில், ஒரு புதிய அத்தியாயம் துவங்கியது; மகள்களால் ஒரு புதிய முடிச்சும் போடப்பட்டது.
பி.மூர்த்தி
வயது: 68, படிப்பு: எம்.ஏ.,சொந்த ஊர்: சென்னை. பணி: அஷோக் லேலண்ட் நிறுவனத்தில், உள் தணிக்கை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் எழுதிய முதல் சிறுகதை இது தான். ஆறுதல் பரிசு பெறுவதும் இதுதான் முதல் முறை. நல்ல கருத்துள்ள சிறுகதைகளை எழுத வேண்டும் என்பது, இவரது லட்சியம். கதைக்கரு பிறந்த விதம்: 'சிங்கிள் பேரன்ட்' பற்றிய விவாத மேடை நிகழ்ச்சி ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தபோது, மனதில் தோன்றிய கரு இது. போன் : 99401 58722
