PUBLISHED ON : மே 24, 2026

அதிகாலையிலேயே, சிங்காரம் டீக்கடைக்கு, வாடிக்கையாளர்கள் வரத் துவங்கினர். வானொலியில், சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது. பாய்லரை பற்ற வைத்து, வேகமாக வேலைகளை துவக்கினான், சிங்காரம்.
நெற்றியில் பட்டை, நடுவில் பெரிய குங்குமப் பொட்டு, கையில், 'லெதர்' பை மற்றும் மடிப்பு கலையாத வெள்ளை வேட்டி சட்டையுடன், ரியல் எஸ்டேட் புரோக்கர், ஆறுமுகம், அந்த காலை வேளையிலேயே, டீ கடையை முகாமிட்டிருந்தான். தற்போதைக்கு, அவனுக்கு, சிங்காரம் டீக்கடை தான் அலுவலகம்.
''என்ன சிங்காரம், எவனாவது தேறினாணுங்களா. சென்னையிலிருந்து கம்பெனி முதலாளியின் நச்சரிப்பு தாங்க முடியல. இந்த வாரமாவது நல்ல செய்தி அனுப்புனா தான் பொழச்சேன்,'' என்றான், ஆறுமுகம்.
''என்னண்ணே செய்றது, நானும் அப்படி இப்படி பேசி தான் பாக்குறேன், ஒரு பய மசிய மாட்டேங்குறான். எத்தனை நாளைக்கு தான், பாழாப் போன இந்த நிலத்தை வச்சு, கஷ்டப்பட போறானுங்கன்னு நானும் பார்க்கிறேன்.''
'இங்கு அரசியல் பேசாதே!' என்று எழுதி வைக்கப்பட்டிருந்த அட்டைக்கு கீழ் உட்கார்ந்திருந்த, முதியவர்கள் இருவர், டீ அருந்தியபடியே, அரசியல் பேசிக் கொண்டிருந்தனர். அதனால், எரிச்சலடைந்த, சிங்காரம், வேகமாக டீயை ஆத்த, அது பெஞ்சில் உட்கார்ந்திருந்தோர் மீது தெறித்து விழுந்தது.
''ஏம்பா சிங்காரம், மெதுவா ஆத்துப்பா; டீ, எங்க மேல தெறிக்குதுல்ல,'' என்றார், பெரியவர் ஒருவர்.
''ஓ... உங்களுக்கெல்லாம் சூடு, சொரணை கூட இருக்குதா?''
''என்னப்பா, வார்த்தையெல்லாம் நீளுது.''
''பின்ன என்னய்யா, இதுவரைக்கும் நம்ம கிராமத்துல நாலு விவசாயிங்க தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க. இது போதாதுன்னு நம்ம மேலத்தெரு, கணேசனும், நெஞ்சு வலின்னு ஆஸ்பத்திரிக்கு போயிருக்கான். இன்னும், எத்தனை உயிர் போகப் போகுதோ தெரியல. இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டத்தான், நானும், ஆறுமுகமும் பாடுபடுறோம். நீங்க தான், யாரும் நல்ல பதில சொல்ல மாட்டேங்கிறீங்க,'' என்றபடியே, தன் வேலையை தொடர்ந்தான், சிங்காரம்.
அவனது பேச்சு, ஆறுமுகத்துக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் இருந்தது. எப்படியாவது ஊர் மக்களிடம் பேசி, நிலத்தை வாங்கிட வேண்டும் என்பதிலேயே, இருவரும் குறியாய் இருந்தனர்.
அப்போது, பேப்பர் போடும் சிறுவன், இரண்டு செய்தித்தாள்களை, வேகமாக வீசி சென்றான். அடுத்த சில வினாடிகளில், ஆளுக்கு ஒரு பக்கமாக கையில் வைத்து, அதை புரட்டிக் கொண்டிருந்தனர்.
'அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டமாக அறிவிப்பு; விவசாயிகளுக்கு கடன் தொகை ரத்து!' என்ற தலைப்பு செய்தியை உரக்க வாசித்த விவசாயி, பிச்சமுத்து, ''ஊருக்கே சோறு போடுற விவசாயிங்க, பசிக்கு நடுத்தெருவுல கையேந்தணும். ஆனா, உயிரை குடிக்கிற சாராயம் விக்கறவனெல்லாம், சொகுசா இருக்கணுமா,'' என, ஆறுமுகத்தை முறைத்தபடியே, கையிலிருந்த பேப்பரை, வேகமாக பெஞ்சின் மீது விசினார்.
''ஆறுமுகம் அண்ணே, நீங்க டீ சாப்பிடுங்க. ஆறிடப் போவுது,'' என்றான், சிங்காரம்.
''ஆற விடக்கூடாது, சிங்காரம். ஆறின கஞ்சி பழங்கஞ்சியாயிடும்ன்னு சொல்வாங்க. எப்படியாவது, இவனுங்கள வழிக்கு கொண்டு வரணும்,'' என்று, மெதுவாக அவனிடம் சொல்லி, பிச்சமுத்துவிடம், ''ஐயா, நான் உங்க ஊர் நல்லதுக்கு தான் சொல்றேன். ஆறு, குளங்கள் எல்லாம் துார்ந்து போச்சு; பெய்யுற மழைத்தண்ணி கூட, வீணா எங்காவது போய் சேருது.
''அணைக்கட்டுல தண்ணி வத்தி, ஆடு, மாடுங்க மேய ஆரம்பிச்சுடுச்சு. விவசாய நிலங்கள் எல்லாம் இப்போ, கிரிக்கெட் விளையாடுற இடமா மாறிடுச்சு. போதாக்குறைக்கு, பாசனத்துக்கு மத்த மாநிலத்தை தான் நம்பியிருக்குறீங்க. இதுல இன்னும் இந்த நிலத்தை வெச்சுக்கிட்டு மாரடிக்கணுமா,'' என்றான், ஆறுமுகம்.
''ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுததாம். நிலத்தை வாங்கற எண்ணத்திலேயே பேசாத, ஆறுமுகம். தெரிஞ்ச தொழில விட்டவனும், தெரியாத தொழிலை தொட்டவனும் முன்னேறியதா சரித்திரமே இல்லே.
''விவசாயம் மட்டும் இல்லேன்னா, இந்த நாட்டுல, ஒருத்தனும் சோத்துல கைவைக்க முடியாது. தெரியுமில்லே. மண்ணுல புரண்டு வேலை செய்ற எங்க ஊர் மக்களுக்கு, அந்த மண்ணோட உறுதி போல, திடமான மனசு இருக்கு; பணம் மட்டும் கண்டுபிடிக்காம, முந்தைய காலம் போல, பண்டமாற்றுமுறையா இருந்திருந்தா, உலகத்திலேயே பெரிய பணக்காரன், விவசாயம் பார்க்கறவனா தான் இருப்பான். சும்மா நிலத்தை வாங்கறேன்னு அலையறத விட்டுட்டு, வேற வேலை இருந்தா பாரு,'' என, கோபமாக கத்தினார், பெரியவர் ஒருவர்.
அ ப்போது, கார் ஒன்று வேகமாக புழுதியை கிளப்பியபடி சென்று, கணேசன் வீட்டு வாசலில் நின்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, கணேசனை, கைத்தாங்கலாக, உள்ளே அழைத்து சென்றான், அவரது மகன், சேது.
விவசாயத்தில் முதுகலைப்பட்டம் முடித்திருந்தான், சேது. வேலை தேடி நகரத்துக்கு போனவன், படிப்புக்கேற்ற வேலை கிடை க்காததால், சிறிய கம்பெனி, ஒன்றில் வேலை பார்க்கிறான்.
க ணேசன், ஊர் திரும்பிய செய்தியறிந்து, அவர் வீட்டு முன் கூடினர், ஊர்மக்கள். தந்தையின் உடல் நலனை விசாரிக்க, ஒன்று கூடியிருந்த மக்களை, நெகிழ்ச்சியுடன் பார்த்து, கண் கலங்கினான், சேது.
ஊர் பஞ்சாயத்து தலைவரிடம், ''ஐயா, நான் இனி உங்களோடவே இருக்கப் போறேன்; நம்ம ஊர் மக்களுக்கு, முதல்ல விவசாயத்துல நம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தணும்,'' என்றான்.
''அமாம்பா சேது, நகரத்துல இருக்கற புரோக்கரெல்லாம் கிராமத்தை குறிவெச்சு, வயல்களை எல்லாம் வளைச்சு போட்டு, பிளாட் போட, கழுகு போல வட்டமிடுறானுங்க. 'உழவன் இல்லா நாடு, ஒருநாள் வெறும் சுடுகாடு'ன்னு எப்போ மக்கள் உணர ஆரம்பிக்கிறாங்களோ, அப்போதான்பா ஒரு மாற்றம் வரும்.''
''ஏன்யா விரக்தியா பேசுறீங்க.''
''என்னப்பா செய்யறது. உழவு முதன்மையான தொழிலா இருந்தவரை, விவசாயியை எல்லாரும் மதிச்சாங்க; விளைச்சலும் அதிகமாய் இருந்தது. எப்போ, உற்பத்தியை அதிகரிக்கணும்ன்னு ஆரம்பிச்சாங்களோ, அப்பவே, விவசாயத்துக்கு அழிவு காலம் துவங்கிடுச்சு. நிலத்துக்கும், விவசாயத்துக்கும் உள்ள உறவு அறுந்துடுச்சு,'' என்றார், பஞ்சாயத்து தலைவர்.
''நீங்க சொல்றது உண்மை தான். நாம, இதுவரை அனுபவிச்ச வலியெல்லாம் போதும். இனிமேல், இந்த ஊர்ல, கருகாத பயிர்கள், கண்ணீர் சிந்தாத உழவன் வேண்டும். விவசாயம் செய்ய, வேற ஏதாவது மாற்று வழியைப் பத்தி யோசிப்போம். இன்னைக்கு சாயந்திரம், எல்லாரும் நம்ம ஊர் கோவில் மண்டபத்துக்கு வந்திடுங்க. இதைப்பற்றி பேசி ஒரு முடிவுக்கு வரலாம்,'' என்றான், சேது.
மா லை மண்டபம் நிரம்பி வழிந்தது. அவர்களிடையே பேச துவங்கினான், சேது...
''நாம காலத்துக்கேத்தாற்போல, விவசாயத்துல புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் ஆகணும். குறைந்த தண்ணீரில், 'பசுமைக்குடில் விவசாயம்' என்ற புதிய முறையில், இனி, விவசாயம் செய்யப் போறோம். முயற்சி செய்து, ஒற்றுமையா உழைச்சா, கண்டிப்பா நாம ஜெயிப்போம்.
''சூரிய வெளிச்சத்தை குறைத்து, நிலத்துக்கு அனுப்ப வசதியாக, சில வழிமுறைகளை பயன்படுத்துறது, மிக குறைவாக தண்ணீர் செலவாகும் சொட்டு நீர்ப்பாசனம் செய்யறது, அதோட, இம்முறையில் உரத்தையும், நீரோடு சேர்த்து அனுப்புறது... இதுல, இன்னொரு விஷயம் என்னான்னா, 'குரோபேக்' என்ற நவீன முறையில் நடவு செஞ்சோம்ன்னா, களைகள் முளைக்காது.
''இன்னும் எவ்வளவோ வழிகள் இருக்கு. போதாக்குறைக்கு, இந்த புதுமையான, 'பசுமைக்குடில்' அமைக்க, அரசு இப்போ மானியத்தோட, கடன் உதவியும் செய்யுது. இதுக்கெல்லாம் மேல, நம்ம ஊரை சுத்தி இருக்குற ஏரி, குளங்களை துார்வாரி, மழைக் காலங்களில் நீரை சேமிக்க, வழிமுறைகளை செய்யணும்,'' என்று, சேது சொல்லச் சொல்ல, மக்களுக்கு, புதிய உற்சாகம் பிறந்தது. மக்கள் தெளிவோடும், மகிழ்ச்சியோடும் வீடு திரும்பினர்.
ம றுநாள் காலை -
சிங்காரம் டீக்கடை, வழக்கத்திற்கு மாறாக வெறிச்சோடி கிடந்தது. ஆற்றில் மணல் அள்ள வந்த லாரிகளை, மக்களில் ஒரு பிரிவினர், சிறைப்பிடித்து விரட்டி அடித்தனர். மற்றொரு பிரிவினர், ஏரி மற்றும் குளங்களை துார் வார ஆரம்பித்தனர்.
இப்படியே ஒரு மாதம் கடந்தது. இடைப்பட்ட காலத்தில், ஊர் மக்களுக்கு, 'பசுமைக் குடில்' விவசாய முறையை, சிறிது சிறிதாக சொல்லிக் கொடுத்தான், சேது. இதற்கிடையே, இந்த ஆண்டு ஓரளவு மழை பெய்ததால், ஏரி மற்றும் குளங்களில், சிறிதளவு நீர்ப்பிடிப்பு இருந்தது. குறைந்த நீரில், விவசாயம் செய்யும் பயிர் வகைகளையும், மக்களுக்கு அறிமுகப்படுத்தினான்.
சில நாட்களில், அக்கிராமத்தில், மீண்டும் விவசாயம் களை கட்டியது. இச்செய்தி, பக்கத்து ஊர்களுக்கும் பரவி, 'பசுமைக்குடில்' முறையை ஆர்வமுடன் கற்றுச் சென்றனர், மக்கள்.
ஒ ர் ஆண்டு விரைவாய் கடந்தது.
ஜனவரி, 26ல் நடைபெறும் குடியரசு தின விழாவில், 'பசுமைக்குடில்' விவசாயத்தை, கிராமத்தில் அறிமுகப்படுத்தி, சாதனை படைத்ததற்காக, 'நம்மாழ்வார் விருது' வழங்கவுள்ளதாக, சேதுவுக்கு கடிதம் அனுப்பியது, அரசு.
அந்நாளும் வந்தது.
விழா மேடைக்கு எதிரில் இருந்த முன் வரிசையில், பல துறைகளில், சாதனை படைத்த பலரும் அமர்ந்திருந்தனர். 'நம்மாழ்வார் விருது' பெற, சேதுவின் பெயர் வாசிக்கப்பட்டது.
ஆனால், அந்நேரம், தன் கிராமத்தில், ஆட்களை திரட்டி, அறுவடைக்கு, வயலை நோக்கி, மக்களோடு மக்களாய், மகிழ்ச்சியாய் சென்று கொண்டிருந்தான், சேது.
பூபதி பெரியசாமி
