தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மிதித்துவிடு பாப்பா!

மிதித்துவிடு பாப்பா!

மிதித்துவிடு பாப்பா!


PUBLISHED ON : நவ 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நான் உனக்கு உண்மையில் உதவி தான் செய்கிறேன். இதை யார்கிட்டயும் சொல்லிடக்கூடாது...' என்றான், அக்கல்லூரியின் ஆசிரியர், ராகவன்.

எதுவும் சொல்லாமல் தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தாள் மாணவி, தமிழ்ச்செல்வி.

கல்லுாரியின் ஆய்வகத்தின் உள் அறை அது. அங்கே, இயற்பியல் தராசுகளும், ஆய்வக தேவைக்கான வேதியியல் பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும். ஆசிரியர்கள் ஓய்வெடுக்கவும் அந்த அறையையே பயன்படுத்திக் கொள்வர்.

''நான் சொன்னபடி கேட்டு, பெரியாளா ஆனவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்க இன்னும் நன்றியை மறக்காம, இப்போதும் சொல்வாங்க,'' என்று கூறி, தமிழ்ச்செல்வியை பார்த்துக் கொண்டிருந்தான், ராகவன். அவளின் அமைதி, அவனுக்கு நம்பிக்கையை கொடுத்தது.

''நீ பயப்படுறன்னு எனக்கு தெரியுது. எதுக்கு பயம்? நானென்ன தெரியாத ஆளா. உன் ஆசிரியர். உனக்கு, 'பிராக்டிகல் மார்க்' போடறவன். உன், 'ப்ராஜெக்ட்'டை, 'அப்ரூவ்' செய்யறவன். உன்னை இந்த ஒரு வருஷமா பார்த்துட்டு இருக்கிறவன். நீ, ஏன் என்னை வேறாளா நினைக்கிற,'' என்று சொல்லியவாறு, அவள் முன் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.

மாலை நேர வகுப்பு முடிந்து எல்லாரும் கிளம்பிய நேரம். மாணவர்களும் ஒவ்வொருவராக கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்று விட்டனர். தமிழ்ச்செல்வியை கடைசியாக இருக்க வைத்தான்; திட்டமிட்டபடியே நடந்தது.

அவள் தலை நிமிரவே இல்லை. முதலில், அவளின் தயக்கத்தை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தான்.

''இதோ பார், தமிழ். எல்லாமே தெரிஞ்சுக்கணும். களவும் கற்று மறன்னு படிச்சிருப்ப. எதுவும், கெட்டது இல்லை. நல்லது-கெட்டது எல்லாமே நாமே வச்சிக்கிற பேர் தான். அதனால, முதலில் பயத்தை விடு; என்னை நிமிர்ந்து பாரு.''

அவள் இன்னும் நிமிரவில்லை. மடியில் இருந்த, 'ரெக்கார்ட்' நோட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். அழுகிறாளா என்று யோசனையாக இருந்தது. அவளை கூர்ந்து கவனித்தான். அவள் அழவில்லை. ஆனால், முகத்தில் தயக்கமும், பயமும் இருப்பது மட்டும் தெரிந்தது. 'சிறு பெண்ணின் ஆரம்ப தயக்கம். இதை உடைத்து விட்டால், கண்டிப்பாக அதன்பின், தனக்கே பாடம் எடுப்பாள்...' என்று மனதில் சொல்லி, சிரித்துக்கொண்டான், ராகவன்.

எத்தனையோ பெண்களை சரிகட்டியிருந்தான். சிலர் எழுந்து ஓடிவிடுவர், சிலர் பயப்படுவர், சிலர் தான் பயத்துடன் சிரிப்பர், வேறு வழியில்லை அவர்களுக்கு.

அவன் தேர்ந்தெடுப்பதே வசதி குறைந்த, பயப்படும் இயல்புள்ள பெண்கள் தான். அவர்கள் தான் தன்னோடு ஒத்து வந்தாலும், வராவிட்டாலும் வெளியே எதுவும் சொல்ல மாட்டார்கள்.

வெளியே நல்ல பெயர் சம்பாதித்து வைத்திருந்தான், ராகவன். யாராவது, ராகவனைப் பற்றி ஏதாவது தப்பாக சொன்னாலும், சொல்பவரை அடித்தே விடுவர். உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களிடமும் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்தான். முக்கியமாக பிரின்ஸ்பாலுக்கு வேண்டியவன்; சொந்தக்காரன் என்பது, கூடுதல் தகுதி.

வகுப்பில் நன்றாக பாடம் எடுப்பான். தெளிவாக சொல்லித்தருவான். தன் மனைவி குழந்தைகளை அடிக்கடி கல்லுாரிக்கு கூட்டி வருவான். நல்ல குடும்பஸ்தன் என்றும் பெயர் உண்டு. இதனால், அவனது நடவடிக்கைகள் மிகவும் ரகசியமாகவும், யாருக்கும் தெரியாமலும் இருந்து வந்தன.

''த மிழ்... இன்னும் ஏன் அப்படியே இருக்க. இப்பவும் சொல்றேன் நான். உன்னை கட்டாயப்படுத்தல. நேத்து, 'பீஸ்' கட்ட சொல்லி, 'சர்குலர்' வந்தது. கட்டலேன்னா வகுப்புக்கு வரக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லியிருந்தாங்க. அதில்லாமல் எனக்கு, 'டியூஷன் பீஸ்' கட்டவும் நீ தான் கொஞ்சம்,'டைம்' கேட்ட. உன் குடும்ப நிலவரம் சொல்லி. நீ தான் சட்டுன்னு அழுதுட்ட. சரின்னு நான் உனக்கு உதவி செய்ய வரச் சொன்னேன். நான் சொன்னதை புரிஞ்சுக்கிட்டு தானே வந்த... அப்புறம் என்ன தயக்கம்.''

அவள் அசையாமல் அப்படியே இருந்தாள்.

இன்னும் அவளுக்கு நெருக்கமாக நாற்காலியை தள்ளி போட்டு, உட்கார்ந்தான். அவள் விலகுகிறாளா என்று கவனித்தான். அவள் விலகவில்லை என்பதை மனதில் இருத்திக் கொண்டான். இவளை மடக்குவது எளிது என்பதே, அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இவளை தொடர்ந்து தன் வழிக்கு கொண்டு வர முடியும் என்று முடிவு செய்து கொண்டான்.

எழுந்து மெதுவாக கதவை சாத்தி தாளிட்டான். ஓரக்கண்ணால் அவளை கவனித்தான். தாளிட்ட போதும், அவள் அசையவில்லை. சின்னப்பெண். வாய் திறந்து சம்மதம் சொல்ல பயப்படுவாள். மவுனமாய் தன்னை அங்கீகரித்து விட்டாள் என்பது புரிய, மறுபடி அவள் அருகில் இன்னும் நெருங்கி நாற்காலியை நகர்த்தி உட்கார்ந்தான்.

''பேசு தமிழ்... முதலில், நீ ஏதாவது பேசணும்,'' என்று, அவன் சொல்ல, தலையை நிமிர்த்தினாள், தமிழ்ச்செல்வி. அவள் கண்கள் கலங்கியிருந்தன.

''மாதா, பிதா அடுத்து குருன்னு தானே சார் சொல்வாங்க.''

மெல்லிய தயங்கிய ஆனாலும், தேர்ந்த வார்த்தைகள்.

''ஆமா... அது நிஜம் தான். அதெல்லாம் வெளியில். நான் இப்ப, குரு இல்லை. உன் தோழன். பெரிய ஆளா என்னை பார்க்காதே. இங்கே எனக்கும், உன் வயசுதான்னு நினைச்சுக்கோ.''

''வெளியில எவ்வளவு மரியாதையான பேர் சார் உங்களுக்கு. எத்தனை ஆசிரியர்கள் உங்களை முன் மாதிரியா வச்சிருக்காங்க.''

ராகவனுக்கு, சலிப்பாக இருந்தது, அந்த புகழ்ச்சி வார்த்தைகள். எனினும், புன்னகைத்துக் கொண்டான்.

''அதுக்கென்ன இப்போ? அதை எல்லாம் விடு. நேரம் பொன்னானது. வா இங்க... முதலில் எழுந்திரு நீ.''

எழுந்தாள், தமிழ்ச்செல்வி.

அவன் அருகில் வந்தாள். கைகளை கட்டியபடி நின்றாள். விவேகானந்தரின் பெண் உருவம் போல இருந்தது அவள் நின்ற விதம்.

''எங்களோட பயமும், ஏழ்மையும் தான் உன் முதலீடு இல்லையா?''

''ஏய், என்ன மரியாதை குறையுது?''

''யார்கிட்டயும் சொல்லமாட்டோம்ன்னு தானே ஆட்டு மந்தையில் ஓநாய் மாதிரி உன்னைப்போல சிலர் ஆட்டம் போடறீங்க? எப்பவும் பயந்தே அடங்கிப் போகணுமா நாங்க?''

''வேண்டாம்ன்னா, விருப்பம் இல்லைன்னா ஓடிடு. நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.''

அவன் அருகில் வந்த, தமிழ்ச்செல்வி, அவனை ஓங்கி அறைந்தாள். அந்த அறையில் பொறிகலங்கி போனது, ராகவனுக்கு. ஒரு வலிமையான கடோத்கஜனின் அறை. காது முழுக்க ஜிவ்வென்றிருந்தது. மயக்கம் வருவது போல் இருக்க, கன்னத்தில் கைவைத்தபடி, அவளையே வெறிக்கப் பார்த்தான்.

மெதுவாக நடந்து கதவைத் திறந்தாள், தமிழ்ச்செல்வி. அங்கே, சில மாணவர்கள் கூட்டமாக இருந்தனர். ராகவனை எட்டிப்பார்த்தபடி, அவளிடம் பேசினர். தமிழ், அவர்களிடம் தன் கையில் இருந்த மொபைல்போனை கொடுத்தபடி சொன்னாள்...

''அந்தத் தெரு நாய் பேசினது எல்லாம் இதில் பதிவாகியிருக்கு. அடுத்து, ஆக வேண்டியதை கவனிங்க,'' என்றபடி, கம்பீரமாக நடந்து சென்றாள், தமிழ்ச்செல்வி.

சி.சூடாம்பிகை தேவி

புனைப்பெயர்: சூடாம்பிகை

வயது : 47

படிப்பு: பி.ஏ., இல்லத்தரசி.

சொந்த ஊர்: சேலம்.

இதுவரை, கவிதை மற்றும் சிறுகதை தலா ஒன்று வெளியாகியுள்ளன. நிறைய எழுத வேண்டும் என்பது இவரது லட்சியம்.

கதைக்கரு பிறந்த விதம்: சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை படித்ததில் உருவான கதை இது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us