sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/மூன்றாவது இன்னிங்ஸ்!

மூன்றாவது இன்னிங்ஸ்!

மூன்றாவது இன்னிங்ஸ்!

1


PUBLISHED ON : மே 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2026

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மலை உச்சியில் அந்த பிரமாண்டமான கோட்டை அமைந்திருந்தது. வெகு ஆழத்தில் ஆர்ப்பரிக்கும் கடல்.

கத்தியுடன் கவசஆடை அணிந்த, 'வெல்வெட்' பேரழகி.

வேட்டையாடும் அவளிடமிருந்து தப்பி, கோட்டைக்குள் புகுகிறான், குகநாதன்.

கோட்டையின் ஒவ்வொரு அறைக்குள்ளும் புகுந்தோடினான், குகநாதன். குகநாதனுக்கும், பேரழகிக்கும் கண்ணாமூச்சி விளையாட்டு தொடர்ந்தது.

துரத்தல் தொடர்ந்து மலை உச்சியில் வந்து நின்றான், குகநாதன். கத்தியை, குகநாதனின் நடுநெஞ்சில் பதித்தாள், பேரழகி.

கத்தி நெஞ்சை துளைக்கும் முன், கடலுக்குள் குதித்தான், குகநாதன். பாறைகளில் பட்டு, குகநாதனின் உடல் சிதறியது.

சி று அலறலுடன் கனவிலிருந்து விழித்தார், குகநாதன். வயது, 70. 165 செ.மீ., உயரம். மாநிறம். சவரம் செய்யப்பட்ட மேலுதட்டிலும், இருகன்னங்களிலும் கிழட்டுத்தனம் பாய்ந்திருந்தன. துாங்கும் போது மட்டும் கழற்றி வைக்கும், 'பவர் கிளாஸ்!'

படுக்கையில் படுத்திருந்த, குகநாதன் மெதுவாக தன் இடதுபக்கம் திரும்பினார். மனைவி சண்முகப்ரியா படுத்திருந்தாள். வயது 65. பழைய நடிகை, பண்டரிபாய் சாயல்.

இரவு விளக்கு வெளிச்சத்தில் மனைவியின் முகம் பளபளத்தது.

மனைவி மூச்சு விடுகிறாளா, இல்லையா, நெஞ்சு ஏறி இறங்கவில்லையே? அவளிடமிருந்து எப்போதுமே மெல்லிய குறட்டை சத்தம் கேட்குமே எங்கே காணோம்? அவருள் திடுக்கிடலும், பயமும் கிளர்ந்தது. என் கன்னுக்குட்டிக்கு என்னாச்சு?

மெதுவாக கைகளை கொண்டு போய் மனைவியின் நாசியின் அருகே வைத்தார். எந்த காற்றுப் போக்குவரத்தும் இருப்பதாக தெரியவில்லை. பதட்டமாக மனைவியின் நடுநெஞ்சில் கைவைத்தார். 'லப்டப்' சத்தம் இல்லையே? மனைவியை உலுப்பினார். ''ஷண்! ஷண்! எந்திரி! எந்திரி!''

திடுக்கென கணவனின் கைகளை பற்றி கொண்டு கடிந்து கொண்டாள். ''என்ன நட்டநடுராத்திரில, 'சீன் கிரியேட்' பண்ணிக்கிட்ருக்கீங்க?''

''எப்பா முருகா, என் பொண்டாட்டி உயிரோட இருக்கா!''

''நல்லா துாங்கிட்டிருந்தவளை எழுப்பி, 'என் பொண்டாட்டி உயிரோட இருக்கா, உயிரோட இருக்கா'ன்னு கூவுறீங்க!''

''பயந்துட்டேன் செல்லம்,'' என்று, தான் கண்ட கனவைக் கூறினார், குகநாதன்.

''கனவுல கூட உங்களை பேரழகி தான் துரத்தணுமாக்கும்.''

''செல்லக்குட்டி நமக்கு கல்யாணமாகி எத்தனை வருஷமாகுது?''

''நாற்பத்தியைஞ்சு வருஷமாகுது!''

''நமக்கு எத்தினி பிள்ளைகள்?''

''ரெண்டு. ஆணு ஒண்ணு. பொண்ணு ஒண்ணு. இரண்டையும் படிக்க வச்சு, ஆளாக்கி கல்யாணமும் செஞ்சி வச்சிட்டோம். இரண்டு பேரன், இரண்டு பேத்திகள்!''

''நான் பணி ஓய்வு பெற்று எத்தினி வருஷமாகுது?''

''பதிமூன்று வருஷமாகுது!''

''உனக்கும், எனக்கும் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்குது?''

''உங்களுக்கு, ரத்த அழுத்தமும், சுகரும். எனக்கு சுகர் மட்டும். மாத்திரைகள் மட்டும் தினம், 50 கிராம் விழுங்குறோம்!''

''நாம, 50வது திருமணநாளை கொண்டாட இன்னும் அஞ்சு வருஷம் இருக்குல்ல?''

''ஆமாம்!''

''இந்த அஞ்சு வருஷம் தாக்குப்பிடிப்போமா?''

''யாருக்குத் தெரியும்?''

''நான் ஒரு கோழி சார்ந்த சேவல். ஆங்கிலத்தில் 'ஹென் பெக்டு ஹஸ்பண்டு' எனக் கூறுவர். நாம் ஒரு திருமணத்திற்கு போனாலும், கல்யாண மாப்பிள்ளையை விட என்னை தான் நீ அதிகம் கவனிக்க வேண்டி வரும். நாம் ஒரு இழவு வீட்டுக்குப் போனாலும் இறந்தவரை விட என்னைதான் நீ அதிகம் கவனிக்க வேண்டிவரும். காலையில் எழுந்தால், 'டூத்பேஸ்ட்'டை நீ தான் எனக்கு பிதுக்கி தர வேண்டும். குளிக்கும் போது, முதுகை தேய்த்து விட வேண்டும். குளித்து முடித்த எனக்கு நீ தலை துவட்ட வேண்டும். 'பீடிங்' பாட்டில் வைத்து காபி புகட்ட வேண்டும். இல்லாத நிலவைக் காட்டி காலை சிற்றுண்டி ஊட்ட வேண்டும். ஞாபகமாக மாத்திரைகள் விழுங்க தர வேண்டும். மதிய சாப்பாடு- மாலை சிற்றுண்டி -இரவு உணவு என, நிமிடத்துக்கு நிமிடம் என்னை பராமரித்துக்கொண்டே இருக்க வேண்டும். மொத்தத்தில் நான் உனக்கு, 70 வயது கைக்குழந்தை!''

''விரும்பி போட்டுக்கொண்ட கால் விலங்கு!''

''கால்விலங்கு போட்டுக்கொண்டது நீயா, நானா?''

''இருவரும் தான். நீங்கள் என் விருப்பக் கைதி. நான் உங்கள் ஆயுட்கால பணிப்பெண்.''

''உன்னை இப்படி முழுவதும் சார்ந்து வாழுவது எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது!''

''உலகின், 90 சதவீத ஆண்கள், கோழிகள் சார்ந்த சேவல்கள் தான். சேவகத்தை பெற்றுக்கொள்ள நீங்களும் சேவகத்தை செய்ய நானும், தயாராக இருக்கும்போது வேறென்ன கவலை உங்களுக்கு?''

''நாம் எத்தனை வயது வரை உயிரோடு இருப்போம்?''

''எனக்கு வயது, 65. என் அம்மா, 63 வயது வரைதான் உயிரோடு இருந்தார். நான் வாழ்வது போனஸ் வருடங்கள்.''

''எனக்கு வயது, 70. எங்கள் குடும்பத்தில் யாரும் எழுபது வயதுவரை உயிரோடு இருந்ததில்லை.''

''அதனாலென்ன? இறைவன் அனுமதிக்கும் வரை உயிர் வாழ்வோம்!'' என்றாள், சண்முகப்ரியா.

''நமக்கு முன், மூன்று 'சாய்ஸ்'கள் உள்ளன... ஒன்று, உனக்கு முன் நான் மரணிப்பது. இரண்டு,- எனக்கு முன் நீ மரணிப்பது. மூன்று, -இருவரும் சேர்ந்தே மரணிப்பது!''

'களுக்'கென்று சிரித்தாள், சண்முகப்ரியா. ''புருஷன் பொண்டாட்டி சேர்ந்தே சாகிறது சினிமாக்களிலும், சீரியல்களிலும்தான் நடக்கும். யதார்த்தமா இருங்கப்பா.''

தலையாட்டினார், குகநாதன். ''ஆமா நீ சொல்றது தான் சரி. எதையும் நாடகத்தனமாக அணுகக் கூடாது!''

''ஆமாம்!''

''முதலிரு 'சாய்ஸ்'களில் எது நமக்கு சாதகமானது, ஷண்?''

''நீங்கதான் சொல்லணும்!''

''இரண்டாவது தெரிவு- உனக்கு சாதகமானது. எனக்கு முன் நீ மரணிப்பது. இந்தத் தெரிவு மிகமிக கொடூரமானது. மகனோ மகளோ, மருமகனோ மருமகளோ, பேரன்களோ பேத்திகளோ கவனிக்காது, நாறிப் போய் கிடப்பேன். ஒரு காபி, ஒரு சிற்றுண்டி கேரண்டி கிடையாது. கூப்பிட்டக் குரலுக்கு யாரும் பதில் சொல்ல மாட்டார்கள். நான் ஒரு காலாவதியான பொருள், காயலான் கடை சாமான் ஆகிவிடுவேன். இரண்டிலிருந்து ஒன்றை கழித்தால் ஒன்றுதானே வர வேண்டும். ஆனால், என் கணக்கில் இரண்டிலிருந்து ஒன்றைக் கழித்தால் பூஜ்யமாகி விடும்.''

''இதெல்லாம் ஒரு மாயை, மனப்பிரமை. 'பென்ஷன்' வாங்கும் நீங்கள் எப்படி காயலான் கடை பொருள் ஆவீர்கள்?''

''முதல் தெரிவு- உனக்கு முன், நான் மரணிப்பது. 70 வயது வரை வாழ்ந்து விட்டேன். போதுமான பொருளாதாரம், மகிழ்ச்சிகரமான, 13 ஆண்டு ஓய்வூதிய வாழ்க்கை. பேரன், பேத்திகளுடன் திகட்ட திகட்டக் கொஞ்சல். இன்று எனக்கு மரணம் வந்தாலும் சந்தோஷம்தான்!''

''இறந்தவர்கள், உயிரோடு இருப்பவர்களின் நினைவுகளில் வாழ்கின்றனர். ஒருவர் இறந்தால் அவர் முழுவதும் இறப்பதில்லை. அவரில் ஒரு பங்கு, உலகில் நித்தியமாக வாழ்கிறது. மரணம் இந்த பிரபஞ்சத்தின் மகா பிரமாண்டமான மாயை... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.''

''நீ அறிவார்ந்தவள். 45 ஆண்டுகள் என்னை திருப்திபடுத்த, முட்டாளாய் வாழ்ந்திருக்கிறாய்!''

''சகலத்திலும் முட்டாள் என்று யாரும் இல்லை. ஏதாவது ஒரு விஷயத்தில் அனைவரும் புத்திசாலிகளே. நல்ல துாக்கத்தை கெடுத்து விட்டீர்கள். அமைதியாக துாங்குங்கள். மரணம் வாசல் கதவைத் தட்டினால், கதவைத்திறந்து மரணத்தை கட்டியணைத்துக் கொள்வோம். நடப்பு நொடியை ரசித்து வாழ்வோம்!''

குகநாதனை தட்டிக் கொடுத்தாள், சண்முகப்ரியா.

-வி டியற்காலை மணி, 6:00. இரு கண்கள் திறந்து, வாய் திறந்து மல்லாந்திருந்தார், குகநாதன். உடல் ஜில்லிட்டு இருந்தது.

ஒரு, 'மைக்ரோ' நொடி கண்களை உணர்வுப்பூர்வமாக மூடித்திறந்தாள், சண்முகப்ரியா.

பல் துலக்கி, காபி போட்டு கணவரின் சடலத்தின் முன் அமர்ந்து, காபியை உறிஞ்சினாள்.

நாற்பத்தைந்து ஆண்டு தாம்பத்யம் மனதிற்குள் ஓடின. துக்கத்தை மென்று விழுங்கினாள்.

மகன் ஓடி வந்தான்.

''என்னம்மாச்சு?''

''அப்பா இறந்துட்டார்டா,'' பெரிய இரும்புக்குண்டை கிணற்றுக்குள் போட்டாள்.

கிரிக்கெட் விளையாட்டைப் போன்று, வாழ்க்கை விளையாட்டின் முதல் இன்னிங்ஸ், பெற்றோர் உடன்பிறப்புகளுக்காக. இரண்டாம் இன்னிங்ஸ், கணவர், மகன், மகள், பேரன், பேத்திகளுக்காக. மூன்றாவது இன்னிங்ஸை தனக்கே, தனக்காக விளையாட தீர்மானித்து மட்டையை வீசினாள், சண்முகப்ரியா.

ஆர்னிகா நாசர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us