PUBLISHED ON : ஏப் 12, 2026

கிருஷ்ணவேணி வகுப்பறைக்குள் நுழைந்ததுமே இரு கைகளையும் உயர்த்தி, 'ஹோய்...' என, கத்தினாள். வகுப்பறையில் அரட்டையடித்துக் கொண்டிருந்த மாணவியர் அனைவரும் அவளைப் பார்த்ததும் உற்சாகத்திற்கு மாறினர்.
''யேய், என்னாச்சு?'' என, கேட்டாள், அவள் தோழி, கோமதி.
''ஹேப்பி... இன்று முதல் ஹேப்பி,'' என, உயர்த்திய கையை ஆட்டி ஆட்டி அதற்கு ஏற்ப, இடுப்பையும் ஆட்டி நடனம் ஆடினாள், கிருஷ்ணவேணி.
''ஹேப்பியா? அப்போ, இன்னைக்கு காலேஜ் லீவா?'' என கத்தினர், மாணவியர்.
''இல்லை,இல்லை,'' என்றாள், கிருஷ்ணவேணி.
''கெமிஸ்ட்ரி மேடம் லீவா?'' என கேட்டாள், தேவகி.
''இல்லை,'' என்றாள், கிருஷ்ணவேணி.
''பின்னே, ஹேப்பி யாருக்கு?'' என கேட்டனர், மாணவிகள்.
''ராகிக்கு தான்'' என்றாள், கிருஷ்ணவேணி.
''ராகிக்கா?'' கோரஸாக கத்தினர்.
''ஆமாம், அவளுடைய கனவு நினைவாக போகுது. அவளுடைய லட்சியம் ஜெயிக்கப் போகுது. அவ பெரிய ஸ்டாரா ஆகறதுக்கான நேரம் வந்தாச்சு. நல்ல யோகம் வந்தாச்சு,'' என்றாள், கிருஷ்ணவேணி.
அனைவருடைய முகத்திலும் இதுவரை இருந்த சாதாரண ஆச்சரியம் இன்ப அதிர்ச்சியாக மாறியது. திகைப்பு படர்ந்தது.
''ஏய், என்ன சொல்றே நீ?'' என கேட்டாள், மீனா.
சட்டென, மேசை மீது ஏறி அமர்ந்தாள், கிருஷ்ணவேணி. தோள்களை குலுக்கிக் கொண்டாள்.
''உண்மையைத்தான் சொல்றேன். ராகி பெரிய, நடிகையா ஆகப் போறா. இனிமே, நீங்க அவளை சினிமாவுல தான் பார்க்கணும்,'' என, இமைகளை மூடி கனவு லோகத்தில் மிதப்பதை போல் பாவனை காட்டினாள், கிருஷ்ணவேணி.
தொடர்ந்து, ''இயக்குனர் மற்றும் நடிகை தேவிகலாவோட புதுப்பட, 'ஆடிஷன்' நடக்குது. அதுல நாளைக்கு ராகி, கலந்துக்கப்போறா. 'செலக்ட்' ஆயிடுவா. அவதான் புதுப்படத்தோட ஹீரோயின்,'' என்றவள், மேசையிலிருந்து குதித்து, 'டூயட்' பாடுவதைப் போல் காற்றில் கைகளை கொடியாய் அசைத்தாள், கிருஷ்ணவேணி.
அவள், ராகி என்று குறிப்பிட்டது அவளைத்தான். சினிமாவில் நடிப்பதற்காக, தானே தன் பெயரை மாற்றிக் கொண்டிருந்தாள்.
கல்லுாரியில் அவளுடைய பெயர், கிருஷ்ணவேணி.
இருபத்து நான்கு மணி நேரமும் சினிமா பற்றிய பேச்சுத்தான் அவளுக்கு. பெரிய நடிகையாக வேண்டும் என்பது தான் அவளுடைய கனவு. கல்வித் துறையில் பல உயர் பதவிகளின் மேல் ஆசை கொண்டு அதை லட்சியமாக படிக்கும் மாணவியர் மத்தியில், அவள் மட்டும் சினிமா கனவுகளில் வலம் வந்தாள்.
கோமதி பெஞ்சிலிருந்து எழுந்து அவளுக்கு எதிரே வந்தவள், ''கிருஷ்ணவேணி,'' என, அழைத்தாள்.
''ராகி ராகி,'' என, திருத்தினாள், கிருஷ்ணவேணி.
''ஆமா, ராகி, சேமியா,'' என, கிண்டல் செய்தாள், தேவகி.
''பேரைப் பார்த்தாலே படம் ஓடாது. ஒழுங்கா பேரை மாத்து,'' என்று சிரித்தாள், மீனா.
''ராகி, இதெல்லாம் வேண்டாத வேலை. இந்த கனவையெல்லாம் மூட்டைக் கட்டி வச்சுட்டு படிக்கிற வழியைப் பாரு. ஒழுங்கா ஒரு வேலைக்கு போய்,'' என்று, கோமதி சொல்லும் போதே குறுக்கிட்டாள், கிருஷ்ணவேணி.
''வேலைக்குப் போய் பத்தாயிரம் ரூபாயோ, பதினைஞ்சாயிரம் ரூபாயோ, சம்பாதிச்சுக்கிட்டு பஸ்ல ஓடிக்கிட்டு வாழ சொல்றியா? போங்கடி நீங்களும், உங்க படிப்பும். நீங்களெல்லாம், 10, 20 சம்பாதிக்கற நேரத்துல நான் கோடியில புரளுவேன்.
''காரு, பங்களான்னு சொகுசா வாழுவேன். நீங்களெல்லாம் இன்றைய சினிமா, 'ஹீரோ'களை தியேட்டர்ல பார்த்துத்தானே ஜொள்ளு விடறீங்க? அவங்க கூடவெல்லாம் நான், 'டூயட்' பாடிக்கிட்டு இருப்பேன்,'' என்றாள், கிருஷ்ணவேணி.
''எல்லாம் சரி, இதெல்லாம் உங்க அம்மா, அப்பாவுக்கு தெரியுமா?'' என, கேட்டாள், தேவகி.
''ஐயய்யோ, தெரிஞ்சா அவ்வளவு தான். என்னை வெட்டி பொலிப் போட்டுடுவாங்க,'' திடீரென பயம் அப்பிய முகத்துடன் சொன்னாள், கிருஷ்ணவேணி.
அந்த பாவனைக்கூட பொய்தான். அவள் யாருக்கும் பயந்தவளில்லை. அவளுடைய நடவடிக்கைகளை வீட்டிற்கு தெரியாமல் பார்த்து கொள்வதில் கெட்டிக்காரி.
வே ணியின் அம்மாவும், அப்பாவும், ஆசிரியர்கள். நிறைய சுதந்திரம், செல்லம் கொடுத்தாலும் தனிமனித ஒழுக்கம், கண்டிப்பு என்ற விஷயத்தில் கெடுபிடியாக இருப்பர். ஆசிரியர்களுக்கே உரிய பண்புடன் அவளை வளர்த்தனர்.
அவளை உயர்ந்த படிப்பு படிக்க வைத்து, இந்த சமுதாயத்தில் மதிப்பான பதவியில் உட்கார வைத்து கவுரவமான வாழ்க்கையை அவள் வாழ வேண்டும் என, கனவு கண்டு கொண்டிருந்தனர். அவளோ அவர்களுக்கு எதிரே, திவ்யமாய் நடந்து கொண்டு, மறைமுகமாக சினிமா நடிகையாகும் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். விதவிதமாக புகைப்படங்கள் எடுப்பது, அதற்கான ஆடைகளை வாங்குவது, 'மேக்-அப்' பொருட்கள் வாங்குவது, எடுத்த புகைப்படங்களை ஆல்பமாகப் போட்டு வைப்பது என, சினிமாவில் நுழைவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தாள், கிருஷ்ணவேணி.
''இ தப்பாருடி சினிமாத் துறைங்கறது ஒரு மாயக்கண்ணாடி. அங்கே, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாம எத்தனையோ செய்திகளை தினமும் பார்த்துக்கிட்டிருக்கிறோம். உச்ச நிலைக்கு வரணும்ன்னா நிறைய இழக்கணும். நிறைய இழந்தாலும் நிம்மதியான வாழ்க்கை அமையாது. நம்மை மாதிரியான நடுத்தர வர்க்கத்து பொண்ணுங்களால வலி தாங்க முடியாது. சரியாக படிக்காமல் நிறைய இளம் பெண்கள், சினிமா ஆசையில் நடிக்க வந்து வாழ்க்கையை தொலைச்சுட்டு என்ன செய்யறதுன்னு தெரியாம இருக்கிறதா, பத்திரிகையிலே படிச்சுருக்கேன். இதெல்லாம் வேணாம். தயவு செய்து கேளு,'' என்று, அறிவுரை கூறினாள், தேவகி.
அவளை வெறுப்புடன் பார்த்தாள், கிருஷ்ணவேணி.
'பொறாமை பிடித்தவள்...' என, மனதில் நினைத்து கொண்டாள்.
கருப்பாக, ஒல்லியாக சற்றே பற்கள் எடுப்பாக இருக்கும், தேவகிக்கு ஒளிரும் முகமும், ஓவிய அழகும் கொண்ட தன் மேல் எப்போ தும் அவளுக்கு பொறாமை என்ற நினைப்பு, கிருஷ்ணவேணிக்கு உண்டு.
'என் அழகில் இந்த உலகமே ஒரு நாள் மயங்கப் போகிறது. இன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக நான் வரப் போகிறேன் என்ற வயித்தெரிச்சல்...' என, அவளுடைய பேச்சைப் புறந்தள்ளினாள்.
''எந்த துறையிலதான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கு. இங்க படிக்க வர்றமே, 'பிரின்ஸ்பால்' கெழத்திலிருந்து, 'பியூன்' கெழம் வரை பார்க்கற பார்வை எப்படியிருக்கு? எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு தான் வாழணும்,'' என்றாள், கிருஷ்ணவேணி. இதுவரை எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த, லதா கடைசி பெஞ்சிலிருந்து எழுந்து வந்து...
''இதப்பாருடி உன்னோட ஆசை, லட்சியம் எதுவும் தப்பில்லை. பல நடிகையர் தங்களோட திறமையால உச்ச நட்சத்திரமா வலம் வந்திருக்காங்க. அதுல எந்த சந்தேகமும் இல்லை. சினிமாத் துறைன்னதும் உடனே பயந்துக்க வேண்டிய அவசியமும் இல்லை. எல்லாம் நாம நடந்துக்கற முறையை பொறுத்துத்தான்.
''ஆனா, சினிமாத் துறை மட்டுமல்ல, எந்த துறைக்குப் போனாலும் பெண்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும், எதையும் எதிர்த்து நின்னு சாதிக்கற வலிமையும் தேவை. அந்த வலிமை, தைரியம், தன்னம்பிக்கை எல்லாத்தையும் தர்றது கல்வி தான்.
''அந்த கல்வியை துாக்கி எறிந்துவிட்டு, நீ சினிமாவுல நடிக்கறது தப்புன்னு எனக்கு தோணுது. நீ முதல்ல உன் படிப்பை முடி. ஏன்னா, கல்வி மட்டும் தான் நமக்கு எல்லா காலத்துலேயும் கை கொடுக்கும். சினிமாவுல, 'மார்க்கெட்' போன பின்னாடி பட வாய்ப்பு இல்லாம தெருவுக்கு வந்த நடிகர், நடிகையரை நாம பார்த்திருக்கோம். ஆனா, கல்வி நம்மை ஒருபோதும் தெருவுல நிறுத்தாது.
''அதனால தான் சொல்றேன். நமக்கு பக்குவத்தையும், பலத்தையும் கொடுக்கற கல்வியை உதாசீனப்படுத்தாதே. எந்த வயசுலேயும் நடிக்கலாம். ஆனா, எந்த வயசிலேயும் படிக்க முடியாது. 'இளமையில் கல்' என, அவ்வையார் சொல்லியிருக்காரே,'' என்றாள்.
''ஐயோ சாமி ஆளை விடறியா? விட்டா என்னையும் அவ்வையாரா ஆக்கிடுவே. அவ்வையார் மாதிரி நான் கிழவியான பிறகு, யாரும் எனக்கு படவாய்ப்பு தரமாட்டாங்க. நாளைக்கு நான், 'ஆடிஷனுக்கு' போயே தீருவேன்,'' என, உறுதியாக சொன்னாள் வருங்கால கதாநாயகி, ராகி.
பி ரபல நடிகை, கலாதேவி சொந்தமாக இயக்கப் போகும் படத்திற்கான, 'ஆடிஷன்' நடைபெறும் அலுவலகத்தின் வராண்டாவில் அமர்ந்திருந்தாள், ராகி என்ற கிருஷ்ணவேணி
'பியூட்டி பார்லர் ஒன்றில், ஆயிரக்கணக்கில் செலவு செய்து, 'மேக்-அப்' போட்டு வந்திருந்தாள். அவளைப் போலவே அங்கே வந்திருந்த பெண்களும் மார்டனாகவும் அள்ளிப் பூசிக் கொண்ட, 'மேக்-அப்'புடனும் கவர்ச்சிகரமான ஆடையிலும் இருந்தனர்.
ஒவ்வொருவரின் கண்களிலும் தாங்களே இந்த படத்தின் கதாநாயகி என்ற கனவும், நம்பிக்கையும் பளபளத்துக் கொண்டிருந்தது. ஒருவரை ஒருவர் போட்டியாகவும், பொறாமையாகவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு பெண்ணாக அழைக்க, உள்ளே செல்வதும், சில நிமிடங்கள் கழித்து வருவதுமாக இருந்தனர். தன் முறை வருவதற்குள் தவிப்பு தலைசுற்றலை ஏற்படுத்தி விடுமோ என்ற நிலையில் இருந்தாள், ராகி.
அப்போதுதான் வாசலில் அந்த கார் வந்து நின்றது. அதிலிருந்து அவர்களுடைய வயதை ஒத்த அழகான இளம் பெண் ஒருத்தி மிகவும் ஸ்டைலாக இறங்கினாள். உள்ளே வந்த அவளைப் பார்த்தும், அவளைப் போலவே அனைவரும் திடுக்கிட்டனர். அழகும், உயரமும் என, அவள் எல்லாரையும் மிஞ்சிவிடும் நிலையில் இருந்தாள்.
வந்தவள் அங்கிருந்த மேனேஜரிடம் என்னவோ சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். திக்கென்றது, ராகிக்கு.
'ரெக்கமன்டேஷ னாக இருக்குமோ! அதான் இத்தனை பேர் காத்துக் கொண்டிருக்கும் போது இவள் பாட்டுக்கு நேராக உள்ளே போய் விட்டாள். ஆளும் அழகாக இருக்கிறாள். நிச்சயமாக இவள் தான் இந்த படத்தின் கதாநாயகி...' என்று மனம் தளர்ந்துப் போனது; நம்பிக்கை குலைந்துப் போனது; கனவு கலைந்துப் போனது.
உள்ளே சென்றவள், 15 நிமிடம் கழித்து வெளியே வந்தாள். முகத்தில் சொல்ல முடியாத மகிழ்ச்சி. அதுவே அவள் தேர்வாகி விட்டாள் என்பதை சொல்லியது.
உள்ளுக்குள் ஆத்திரம் பொங்கியது, ராகிக்கு. அழுதுவிடும் நிலையில் இருந்தாள். அவள் மனதில் தோன்றிய கேள்விகள் அனைத்தும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவளின் மனதிலும் எழுந்திருக்க கூடும். ராகி, மேனேஜரிடம் போய்...
''இதென்னது? நாங்க இவ்வளவு பேர் இங்க காத்துக்கிட்டிருக்கும் போது, அந்த பொண்ணை மட்டும் வந்ததும் உள்ள விட்டுட்டிங்க இது சரியா?'' என, வெடித்தாள்.
''என்னம்மா சொல்றே. அது யாருன்னு நினைச்சே? கலாதேவி மேடத்தோட பொண்ணு. டாக்டருக்கு படிச்சிக்கிட்டிருக்கு. அம்மாவை பார்க்கணும்ன்னு வந்துட்டுப் போவுது,'' என்றார், மேனேஜர்.
'டாக்டர்' என்ற அந்த வார்த்தை, ராகியை திடுக்கிட வைத்தது.
''டாக்டரா? இவங்க இவ்வளவு பெரிய நடிகை. அவங்க பொண்ணு அவங்களை விட அழகாயிருக்கு. அந்த பொண்ணையே இந்த படத்துல, 'ஹீரோயின்' ஆக நடிக்க வச்சிருக்கலாமே,'' என்று, கேட்டாள்.
அதற்கு அந்த மேனேஜர் சிரித்தார்...
''அவங்களுக்குத் தெரியாதா? இந்த சினிமா துறையில எத்தனை பிரச்னை, எத்தனை வேதனை இருக்கும்ன்னு. திரையில சிரிக்கற பல நடிகையருக்கு, பின் எவ்வளவு சோகம் இருக்கு தெரியுமா? நாளைக்கே, 'மார்க்கெட்' போயிட்டா நேத்து, 'ஹீரோயினா' நடிச்ச நடிகையை இன்னைக்கு அம்மாவா நடிக்க கூப்பிடுவாங்க. இதான் சினிமா உலகம்.
''ஆனா படிப்பு, சினிமா மாதிரி இல்லை. நல்லா படிச்சா, நம்மை சாகறவரைக்கும் தலைநிமிர்ந்து கவுரவமாக வாழ வைக்கும். அதை உணர்ந்ததால தான் பொண்ணை படிக்க வைக்கிறாங்க,'' என, மேனேஜர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், ராகியை, 'பளார் பளாரென' அறைந்ததை போலிருந்தது.
பிரபல நடிகையே தன் மகளுக்கு கல்வி தான் முக்கியம், என நினைக்கும் போது, ஊருக்கே கல்வியை புகட்டும் ஆசிரிய பெருமக்களின் பெண்ணான நான் கல்வியைத் துாக்கி எறிந்துவிட்டு, இப்படி சினிமா நடிகையா ஆக வேண்டும் என்று எண்ணினோமே... என, வருத்திய, ராகி, கிருஷ்ணவேணியாக அங்கிருந்து வெளியேறினாள்.
ஆர்.சுமதி
