தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நீல வண்ணப் புறாக்கள்!

நீல வண்ணப் புறாக்கள்!

நீல வண்ணப் புறாக்கள்!


PUBLISHED ON : மே 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சார்...' வாசலில் ஒலித்தக் குரல், தேவநாதனுக்கு மிக நன்றாக தெரிந்த குரல். அது, அவர்கள் தெரு தபால்காரரின் குரலாயிற்றே! ஆனால், அன்றைய தினம் அந்தக் குரல், தேவநாதனுக்கு ஆச்சரியம் அளித்தது. இது, மாதத்தின் முதல் வாரம் கூட இல்லையே!

அப்படியென்றால், வெங்குவின் மாதம் தவறாத, நீல வண்ணப் புறா ஒன்று, துாது வந்திருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு நீல வண்ணக் கடிதத்தை, தேவநாதனிடம் கொடுத்துவிட்டு சைக்கிள் மணியொலிக்க கடந்து போனார், தபால்காரர்.

பார்த்ததுமே, தேவநாதனின் மனதுக்குள் சிறகுகள் முளைத்தன. நீல வண்ணக் கடிதம் என்றாலே, உள்ளே, வெங்குவின் தோழமை மனசு இருக்கிறதென்று அர்த்தம்.

கொள்ளை ஆர்வத்துடன் கடிதத்தைப் பிரித்தார், தேவநாதன். பாசத்தை அள்ளிக் கொட்டிய வாழ்த்து வார்த்தைகள், தேவநாதனை அன்போடு எட்டிப் பார்த்தன.

அவரே மறந்துவிட்ட, அவரது பிறந்தநாளுக்கு மறக்காமல் வாழ்த்துகள் தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்த, வெங்குவின் அன்பில் நெகிழ்ந்து மகிழ்ந்தார், தேவநாதன்.

நேசத்தை சுமந்திருந்த அந்தக் கடிதத்தை தொட்டுத் தடவியதும், தேவநாதனை கசிந்துருகச் செய்தது, விளக்க முடியாத உணர்ச்சிப் பெருவெள்ளம் ஒன்று.

நண்பர்கள் இருவரது பேரன்பும் சங்கமிக்கும் காகிதக் கடலாகத் திகழ்ந்தது, அந்த நீல வண்ண மடல்.

வெங்குவின் மனசு ஒரு பூ. வாசனை கொட்டும் பூ இல்லை. நட்பைக் கொட்டும் அன்பூ. இல்லையென்றால், தேவநாதனின் பதில்களை கூட எதிர்பார்க்காமல், அவர்பாட்டுக்கு நீல வண்ணக் கடிதங்களை தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பாரா?

ஆனால், ஒரு கடிதத்தில் கூட, 'ஏன் பதில் போடவில்லை?' என கேட்டு, தேவநாதன் மேல் எரிச்சல் கொள்ளாமல், 'இந்தக் கடிதத்திற்கு பதில் போடவில்லை என்றால், இனி உனக்கு கடிதமே போட மாட்டேன் போ...' என்று உரிமையோடு மிரட்டும்.

ஆனால், எந்த மிரட்டலுக்கும், தேவநாதன் பணிந்ததே இல்லை. வெங்குவும் மிரட்டுவாரே தவிர, மாதத்தின் முதல் வாரத்து, நீல வண்ணப் புறாக்களை துாதனுப்பாமல் விட்டதில்லை.

'என்னடா வெங்கு இது? அலைபேசி இணையம்ன்னு உலகம் பரபரன்னு பறக்கிற காலத்தில் கடிதம், லெட்டர், அது இதுன்னு உயிரை வாங்குற?' எப்போதாவது, வெங்குவிடம் அலைபேசியில் உரையாடும் போது அங்கலாய்ப்பார், தேவநாதன்.

'உண்மையைச் சொல்லு. உனக்கு, என் அலைபேசி குறுஞ்செய்தி பிடிக்குதா? இல்லை என் நீல மடல்கள் பிடிக்குதா?' தேவநாதனை மடக்குவார், வெங்கு.

'அன்பு வார்த்தைகளை எழுதுகிற என் விரல்பட்ட காகிதத்தை, வாசிக்கிற உன்னோட கரமும், வருட செய்கிற மந்திரப் பாலம்டா கடிதம்...' என்று அவரும் உருகி, நண்பனின் நெஞ்சத்தையும் உருக வைத்து விடுவார், வெங்கு.

தேவநாதனின் இதயம் ஒத்துக்கொள்ளும் தான். ஆனாலும், வாசிக்கும் பொழுது கல்லுாரி நாட்களை நினைவுக்கு கொண்டுவரும், வெங்குவின் நீல நிறக் கடிதங்களில் நெகிழ்வாரே அன்றி, பதில் எழுத மட்டும் அவருக்கு நேரம் அமையாது.

அலைபேசி, மடிக்கணினி என, உருளும் வாழ்க்கையில் காகிதமும், பேனாவும் தேடி, ஒரு கடிதம் எழுத, காலம் வாய்க்காது, தேவநாதனுக்கு.

போதாக் குறைக்கு, 'ஆமாம், இந்த மின்னஞ்சல், முகநுால் காலத்தில் லெட்டராம் கடுதாசியாம். இந்த, வெங்குவுக்கு வேற வேலையில்லை...' என்று, மூளை முணுமுணுக்கும்.

இப்படியான முணுமுணுப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், தேவநாதனின் நட்பு மனசு என்னவோ, 'வெங்குவுக்கு இந்தக் கடிதத்துக்காவது பதில் எழுத வேண்டும்...' என்று நினைப்பதும், ஆசைப்படுவதும் மறுக்க முடியாத உண்மை.

ஆனாலும், அது என்னவோ பதில் எழுத முடியாமல் போகும் அவருக்கு. அலைபேசி அழைப்புகள் குறுக்கிடும். பதில் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள், வெங்குவுக்கான பதில் மடலை விட அதிக முக்கியத்துவம் பெற்று விடும்.

இப்படியாக, தேவநாதன் நினைப்பதும், விரும்புவதும், வெறும் நினைப்பும், விருப்பமுமாகவே நின்று விடும்.

ஆண்டுக்கணக்காக தன்னை ஊர் விட்டு, நாடு விட்டு தொடர்ந்து வரும், வெங்குவின் கடிதங்களுக்கு இனியாவது பதில் எழுத வேண்டும் என்று, தேவநாதன் தீர்மானித்த போதுதான், அது மாதிரி நடந்து விட்டது.

வெங்கு இறந்து விட்டான் என்ற செய்தி, தேவநாதனை புரட்டிப் போட்டது.

எழுதாத பதில்களுக்கெல்லாம் ஈடுகட்டும் விதமாக, துாரமாக இருந்த, வெங்குவின் ஊருக்கு, ரயிலில் ஒருநாள் முழுக்க பயணம் செய்து, சென்று சேர்ந்தார், தேவநாதன்.

வயதானவர்கள் சாவு, மற்றவர்களுக்கு அதிகம் வருத்தம் தருவதில்லை.

'நன்றாக வாழ்ந்து முடித்து விட்டவர்தானே?' என்று சமாதானமடைவர். வெங்குவின் மரணமும் இந்த வகை சார்ந்ததாகவே உணரப்பட்டது, பெரும்பாலானவர்களால்!

ஆனால், வெங்குவின் நீல வண்ணக் கடிதங்கள் கிடைக்கப்பெற்ற மற்றவர்கள் அனைவருக்கும், அவரின் மரணம் சொல்லவொணாத மாபெரும் சோகத்தை கொடுத்தது.

ஒருவர் பாக்கியில்லாமல் நண்பர்கள் எல்லாருமே, வெங்குவின் இறுதி பயணத்துக்கு அன்போடும், மரியாதையோடும் வந்து குவிந்து விட்டனர்.

'செல்வமா இது? நரைச்ச தலையில அடையாளமே தெரியலை...'

'பூசணிக்காய் மாதிரி இருப்பே, பசுபதி. இப்ப என்ன இப்படி இருக்கே? மருமக சோறு போடறாளா இல்லையா?'

மூக்குகண்ணாடி 'ப்ரேம்'மை மாத்திப் போடுடா, அனந்தராமா. காலேஜ்ல போட்ட, அதே கண்ணாடியைத்தான் இன்னும் போட்டுகிட்டு இருக்கியோ?'

முகம் மற்றும் அங்க அடையாளங்கள் மாறிக் கிடக்க, மாறாத நட்பின் அடையாளங்களை கண்டு கொண்டனர், அந்த முதியவர்கள்.

இத்தனை ஆண்டுகள் கடந்து, அத்தனை பேரும் ஓரிடத்தில். ஒரு புள்ளியில் சங்கமித்திருந்தனர்.

அதிசயமாக தெரிந்தது, தேவநாதனுக்கு. வெங்குவின் மகனிடம் விசாரித்தார்...

''எப்படி எல்லாருக்கும் தகவல் தெரிவித்தாய்?''

''அப்பாவோட, 'அட்ரஸ் புக்' இருந்துது, அங்கிள். அப்பாவுக்கு ஏதாவது ஒண்ணுன்னா எல்லாருக்கும் தெரிவிச்சிடணும்ன்னு உசுரோட இருக்கும் போதே எனக்கு உத்தரவு போட்டிருந்தார். நானும் அப்படியே செஞ்சேன். ஆனா, 50 வருஷத்துக்கு முந்திய, 'ப்ரெண்ட்ஸ்' வந்து, அப்பாவை கவுரவிப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலை, அங்கிள்,'' என்ற, வெங்குவின் மகனுக்கு கண்கள் கசிந்தன.

நீல வண்ணக் கடிதங்கள் என்னென்ன மாயம் செய்யும் என, அவற்றைக் கைகளால் வருடி, கண்களால் வாசித்து, உள்ளத்தால் உணர்ந்து, அதன் பேரன்பு பெருமழையில் நனைந்தவர்களுக்குத்தானே தெரியும், அதன் அருமை.

வெங்குவின் சிதை எரிகையில், அந்த முதியவர்களின் விழிகளில் சிந்திய துளிகளில் ஒன்று கூடப் பொய்யில்லை.

'ஒலி கடத்தி, ஒளி கடத்தி, மின் கடத்தி போல, உன் மடல்கள் அன்புக் கடத்தி, வெங்கு. உன் கடிதம் உணர்வுகளின் நிஜம் நண்பனே!'

உறவையும் மிஞ்சும் நட்பை பேசிய நீலக் கடிதங்களின் அதிசயத்தை அறிவித்தன, அந்த முதியவர்களின் கண்ணீர் முத்துக்கள்.

''உ ங்கப்பா ஞாபகமா எனக்கு ஏதாவது வேணும்,'' என்று, வெங்குவின் மகனை கேட்டார், தேவநாதன்.

''எது வேணுமோ எடுத்துக்குங்க, அங்கிள்,'' என்றான், வெங்குவின் மகன்.

விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், அலங்கார பொருட்கள், மதிப்புமிக்க ஓவியங்கள் என, ஒரு கலைக்கூடமாகவே திகழ்ந்தது, வெங்குவின் அறை.

பண மதிப்பு மிக்க அவற்றில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள சொன்ன, வெங்குவின் மகன், அவன் தன் அப்பாவின் மகன் என்பதை நிரூபித்தான்.

பொக்கிஷங்கள் நிரம்பிய, வெங்குவின் அறையில், மாயம் செய்கிற நீலக் கடிதங்களை, தோழமை இதயங்களுக்கு கொண்டு சேர்த்த அந்த முகவரி புத்தகம், தேவநாதனை இனம் புரியாமல் மயக்கியது. அதை மட்டும் எடுத்துக்கொண்டார்.

வெங்குவின் மறைவுக்குப் பிறகு, கடிதங்களற்ற மாதத்தின் முதல் வாரங்கள், தேவநாதனை அலைக்கழித்தன.

ஒலியெழுப்பாமல் வெறுமனே கடந்து போகிற, தபால்காரர் அவருக்குள் ஏக்கத்தை எழுப்பினார்.

அச்சமயங்களில், அவர் நண்பன், வெங்குவின் இழப்பை அதிக துயரத்தோடும், சோகத்தோடும் அனுபவித்தார், தேவநாதன்.

வெங்குவின் பழைய கடிதங்களை தேடிப் பிடித்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டார், தேவநாதன். வெங்குவே அவரோடு பேசுவது போல இருந்தது.

'எவ்வளவு ஆனந்தங்கள் எங்களுக்கு நீ பரிசாக தந்து சென்றாய் தோழா?' தேவநாதனின் உள்ளம் நன்றியால் நிரம்பித் ததும்பியது.

அன்பும் பாசமும், சினேகமும் நேசமும் உந்தித்தள்ள, அன்றைக்கு தபால் நிலையம் சென்று, நிறைய நீல வண்ணக் கடிதங்களை கொள்முதல் செய்து வந்தார், தேவநாதன்.

அவர் எழுதப் போகும் மடல்களை, அவரின் நெஞ்சுக்கு நெருக்கமானவர்களுக்கு சுமந்து செல்ல இருக்கவே இருக்கிறது தபால் சேவை.

நாளைக்கு எப்படியோ? இன்று, இப்போது வரை மரணிக்காமல் மனங்களை துாதனுப்ப பறந்து கொண்டு தான் இருக்கின்றன, இதயங்களை இணைக்கும், நீல வண்ணப் புறாக்கள்.

கல்பனா சன்யாசி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us