தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நேர்மையின் முகவரி!

நேர்மையின் முகவரி!

நேர்மையின் முகவரி!

5


PUBLISHED ON : ஜூலை 19, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2026

5


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதிய வெயில், சென்னையின் தார் சாலைகளை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தது. ஏ.சி., காரின் உள்ளே அமர்ந்திருந்தும் எனக்குள் ஒருவித அயர்ச்சி பரவியிருந்தது. ஐம்பது வயதைக் கடந்த உடலுக்கே உரிய சில உபாதைகளும், சலிப்பும் என்னைச் சூழ்ந்திருந்த நேரம் அது. காரின் எரிபொருள் தீரப் போவதை அறிந்து, கிண்டியில் இருந்த அந்த பரபரப்பான பெட்ரோல் பங்கிற்குள் காரைத் திருப்பினேன்.

வழக்கமான வாகன நெரிசல், 'ஹாரன்' சத்தங்கள், பெட்ரோல் வாசனை. காரின் கண்ணாடியை இறக்கி, ''புல் டேங்க் போடுங்க,'' என்று சொல்லி, பணப்பையை திறந்தேன்.

''சரிம்மா,'' என்றபடி, கையில் பெட்ரோல் பைப்புடன் காரை நெருங்கினார், அந்த ஊழியர்.

வயதான குரல். நிமிர்ந்து பார்த்த எனக்கு துாக்கிவாரிப் போட்டது. கையில் பெட்ரோல் கறையோடு, அந்த வெயிலில் நீல நிற சீருடை அணிந்து நின்றிருந்த முதியவரின் முகத்தைப் பார்த்தபோது, நெஞ்சுக்குள் ஏதோ ஒரு பழைய கதவு பலமாகத் திறந்துகொண்டது.

அவரா இவர்? சுருக்கங்கள் விழுந்த முகம், நரைத்த தலைமுடி, முதுமையின் பாரத்தால் சற்றே வளைந்த முதுகு... ஆனால், அந்த அசையாத நேர்மை ததும்பும் கண்கள்! காலத்தின் பெருவெள்ளம் அத்தனையையும் மாற்றிவிட்ட போதிலும், அந்தக் கண்கள் மட்டும் மாறவேயில்லை.

''சுந்தரவதனன் சார், நீங்களா?'' என் குரல், காரின் ஏ.சி., குளிரையும் மீறி நடுங்கியது.

அவர் சட்டென்று நிமிர்ந்து என்னை உற்றுப் பார்த்தார். சுருங்கிய கண்களை மேலும் சுருக்கி, நினைவலைகளை பின்னோக்கி ஓட்டினார். அடுத்த நொடி, அவரது உதடுகளில், 30 ஆண்டுகளுக்கு முந்தைய அதே கள்ளமில்லாத புன்னகை அரும்பியது.

''அடடே... நம்ம மல்லுக்கட்டியா இது?'' என்றார், அதே அன்பான குரலில்.

என் கண்களில் கண்ணீர் முட்டியது. 'மல்லுக்கட்டி!' 30 ஆண்டுகளாக இந்த வார்த்தையை நான் கேட்கவேயில்லை.

க ன்னியாகுமரியின் அந்த அரசு அலுவலகம் என் மனக்கண்ணில் விரிந்தது... நான், 20 வயதுப் பெண்ணாக, முதன்முதலில் அங்கே தட்டச்சராக வேலைக்கு சேர்ந்தபோது, சுந்தரவதனன் சார் அங்கே சீனியர் கிளார்க்காக இருந்தார்.

அரசு அலுவலகம் என்றாலே லஞ்சமும், சோம்பேறித்தனமும் மண்டியிருக்கும் என்ற பிம்பத்தை உடைத்த மனிதர் அவர். ஒரு பைசா லஞ்சம் வாங்க மாட்டார். ஏழை எளிய மக்கள் தங்களின் சான்றிதழ்களுக்காக அலைந்தால், தன் சொந்த வேலையை கூட தள்ளி வைத்து, அதிகாரிகளிடம் சண்டை போட்டு வாங்கிக் கொடுப்பார்.

அலுவலகத்தில் எதற்கெடுத்தாலும் சட்டப்படியும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளிடமும், சக ஊழியர்களிடமும் நான் மல்லுக்கட்டிக்கொண்டே இருப்பேன். அதை பார்த்துவிட்டு, ஒருநாள் அவர் தான் எனக்கு செல்லமாக இந்த பெயரை வைத்தார்...

'ஏம்மா மல்லிகா, உனக்கு, 'மல்லுக்கட்டி'னு பேரு வெச்சிருக்கலாம். எப்பப் பாரு யார்கிட்டயாவது நியாயத்துக்காக மல்லுக்கட்டிக்கிட்டே இருக்கே...' என்று சிரிப்பார். அன்றிலிருந்து அலுவலகத்தில் எல்லாருக்கும், நான், மல்லுக்கட்டி தான்.

அவர், எனக்கு வெறும் மேலதிகாரி மட்டுமல்ல, நேர்மையின் முன்மாதிரி. ஏழெட்டு ஆண்டுகள் அந்த அலுவலகத்தில் என் வாழ்க்கை ஓடியது. பிறகு எனக்கு திருமணமாகி, என் கணவர் வசித்த செங்கல்பட்டிற்கு மாறுதலாகி வந்துவிட்டேன். குடும்பம், குழந்தைகள், பிள்ளைகளின் படிப்பு என்று என் வாழ்க்கை சக்கரம் சுழலத் தொடங்கியதில், கன்னியாகுமரி நினைவுகளும், சுந்தரவதனன் சாரும் காலத்தின் ஏடுகளில் பின்தங்கிப் போயினர்.

இப்போது, 30 ஆண்டுகளுக்கு பின், அவரை, கிண்டி பெட்ரோல் பங்கில், இந்த கோலத்திலா பார்க்க வேண்டும்?

கா ரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அவரிடம் ஓடினேன். அவரது கைகளை பற்றிக்கொண்டேன்.

''என்ன சார் இது? நீங்க ஏன் இந்த வயசுல, இந்த வெயில்ல வேலை பார்க்குறீங்க? உங்க பசங்க என்ன பண்றாங்க? ஏன் உங்களை இப்படி விட்டுட்டாங்க?'' என் தொண்டையை அடைத்த ஆதங்கத்தில் கேள்விகள் அடுக்கடுக்காக வந்தன.

மெதுவாகச் சிரித்தார், சுந்தரவதனன் சார். அந்தச் சிரிப்பில், ஏழ்மையின் வலியோ, பிள்ளைகள் மீதான கோபமோ இல்லை. அது ஒரு ஞானியின் சிரிப்பைப் போல இருந்தது.

''உட்காரும்மா மல்லுக்கட்டி,'' என்று அங்கிருந்த ஒரு சிறிய சிமென்ட் திண்ணையை காட்டினார்.

''எல்லாரும் ஆபீஸ்ல இருந்து தான் வி.ஆர்.எஸ்., வாங்குவாங்க, மல்லிகா. ஆனா, நான் கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சேன். என், 58வது வயசுல, 'ரிட்டையர்ட்' ஆனேன். ஆனா, என் 65வது வயசுல என் குடும்ப வாழ்க்கையில இருந்து, குடும்ப நிர்வாகத்துல இருந்து, வி.ஆர்.எஸ்., வாங்கிட்டேன்!'' என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ''குடும்பத்துல இருந்து வி.ஆர்.எஸ்.,ஸா? அப்படின்னா?''

''ஆபீஸ்ல இருந்து வந்த பி.எப்., பணம், 'கிராஜூட்டி' பணம், 'சேவிங்ஸ்' எல்லாத்தையும் அப்படியே என் ரெண்டு பிள்ளைகளுக்கும் சமமா பிரிச்சுக் கொடுத்துட்டேன். கன்னியாகுமரியில நான் கஷ்டப்பட்டு கட்டுன ஒரு வீடு இருந்துச்சே, நினைவிருக்கா? அந்த வீட்டையும் அவங்ககிட்டயே குடுத்து, 'நீங்களே இதை வித்து சமமா பிரிச்சுக்கங்கப்பா...'ன்னு சொல்லிட்டேன். சட்டப்படி எல்லாத்தையும் அவங்க பேருக்கு மாத்திட்டு, வெறும் கையோட வெளில வந்துட்டேன்,'' என்றார், சாதாரணமாக.

என் நெஞ்சு பதறியது. ''ஏன் சார்? பெத்த பிள்ளைகளே ஆனாலும், வயசான காலத்துல நாம அவங்களை நம்பிதானே இருக்கணும்? எல்லாத்தையும் குடுத்துட்டு, நீங்க எங்க போவீங்க? உங்க மனைவி எங்கே?''

''அவளும் என் முடிவுக்கு சம்மதிச்சாமா. இப்போ நானும், என் மனைவியும் வடபழனியில ஒரு சின்ன வீட்டுல, வாடகைக்கு குடியிருக்கோம். ஒரு ஹால், ஒரு சமையலறை. அவ்வளவு தான் எங்களோட உலகம். பிள்ளைகளோட ஆடம்பர தேவைகளுக்கும், அவங்களோட குடும்ப சண்டைகளுக்கும் நடுவுல ஒரு சுமையா இருக்க நாங்க விரும்பல. அவங்களுக்கு கடமையை செஞ்சாச்சு, அத்தோடு எங்க கணக்கு முடிஞ்சது.''

''சரி சார், அதுக்காக இந்த வயசுல இந்த வெயில்ல, பெட்ரோல் பங்க்ல வேலை பார்க்கணுமா? அவங்க குடுத்த பணத்துல கொஞ்சத்தை நீங்க வச்சிருக்கலாமே?'' என்றேன் ஆதங்கத்துடன்.

''இங்கதான் நீ தப்பு கணக்கு போடுறே, மல்லுக்கட்டி,'' என்று என் தலையில் தட்டாத குறையாக சொன்னார். ''இந்த வேலை எனக்கு பிடிச்சிருக்கு. சும்மா வீட்ல உட்கார்ந்தா உடம்பும், மனசும் கெட்டுப் போயிடும். இங்க மாசம் எனக்கு சம்பளம் கிடைக்குது. என் மனைவி வீட்ல சும்மா இல்லாம, அப்பளம், ஊறுகாய் இதெல்லாம் போட்டு, பக்கத்து கடைகளுக்கு விக்கிறா. அதுல, அவளுக்கு வருமானம் வருது.''

''இந்த வயசுல எதுக்கு சார் இந்த ஓட்டம்?''

''நமக்கு எப்பவாவது மருத்துவச் செலவு வந்தா, அதுக்காக பிள்ளைகள்கிட்ட போய் கையேந்தி நிக்கக் கூடாது பாரு, அதுக்குத்தான் இந்தச் சேமிப்பு. அதைவிட முக்கியமா...'' என்று நிறுத்தியவர், சாலையைப் பார்த்தபடி தொடர்ந்தார்... ''எங்களை விட வசதி குறைஞ்ச ஏழைங்க எத்தனையோ பேர் இருக்காங்க, மல்லிகா. இங்க கிடைக்கிற காசுல, எங்க செலவு போக மீதிய வச்சு மாசம் ரெண்டு ஏழைப் பிள்ளைகளோட படிப்பு செலவை ஏத்துக்குறோம். எங்களால முடிஞ்ச ஒரு சின்ன உதவி.''

அவர் பேசி முடித்தபோது, எனக்குள் இருந்த, 50 வயது சோர்வும், வாழ்க்கையின் மீதான சலிப்பும் எங்கே போ னது என்றே தெரியவில்லை.

நாம் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கிறோம். இன்னும் பணம் சேர்க்க வேண்டும், இன்னும் பெரிய வீடு கட்ட வேண்டும், பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்ற பேராசையில் உழல்கிறோம். ஆனால், தன் அத்தனை சொத்துகளையும் பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு, எதிர்பார்ப்புகள் இல்லாத ஒரு துறவியைப் போல, சுயமரியாதையோடு உழைத்து வாழும் இந்த மனிதர் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்!

அலுவலகத்திலிருந்து வி.ஆர்.எஸ்., வாங்குவது எளிது; ஆனால், பாசம், பந்தம், சொத்து என்ற உலகியல் மாயையிலிருந்து, 'குடும்ப வி.ஆர்.எஸ்.,' வாங்குவதற்கு எவ்வளவு பெரிய மனப்பக்குவம் வேண்டும்!

''சரிம்மா, வண்டிங்க நிக்குது. நான் வேலைக்கு கிளம்புறேன். செங்கல்பட்டு பக்கம் போனா கண்டிப்பா உங்க வீட்டுக்கு வர்றேன்,'' என்று சொல்லி, மீண்டும் பெட்ரோல் போடும் இயந்திரத்தை நோக்கி நடந்தார், அவர்.

நான், என் காரை நோக்கி நடந்தேன்.

காரை எடுத்துக்கொண்டு, பரபரப்பான சென்னை சாலையில் மெதுவாக நகரத் தொடங்கினேன்.

என் கண்கள் கண்ணீரால் மங்கலாகியிருந்தன. சாலையில், அரசியல்வாதிகளுக்கும், சினிமா நடிகர்களுக்கும் பிரமாண்டமான, 'கட்-அவுட்'டுகள் வைக்கப்பட்டிருந்தன. காசைக் கொடுத்து, புகழுக்காக வைக்கப்படும், 'கட்-அவுட்'டுகள் அவை.

ஆனால், என் மனக்கண்ணில், அந்தப் பெட்ரோல் பங்கின் வாசலில், வெயிலில் நின்றுகொண்டிருந்த அந்த நீல நிற சீருடை மனிதருக்கு ஒரு பிரமாண்டமான, 'கட்-அவுட்' மானசீகமாக எழுந்து நின்றது. அதன் கீழே எழுதப்பட்டிருந்தது:

நேர்மையின் முகவரி, சுயமரியாதையின் உச்சம், சுந்தரவதனன்!

இவர்களைப் போன்ற மனிதர்களால் தான், இந்த உலகமே இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது!

விஜயநிலா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us