PUBLISHED ON : மார் 01, 2026

பஸ்சிலிருந்து கனத்த மனதோடு இறங்கினார், மாதவன். 'இதை எப்படி சொல்லப் போகிறோம்? சொல்லாவிட்டால், ஒரு விதத்தில் நண்பன் சிவகுருவிற்கு, துரோகம் செய்தது போல் ஆகாதா? சரி, 100 கி.மீ., துாரம் கடந்து வந்தாச்சு...' என்றெண்ணி, நண்பனின் குடும்பம் இருந்த சன்னதி தெரு நோக்கி நடக்க ஆரம்பித்தார், மாதவன். அவர் தெருவை அடைவதற்குள், அவரது நினைவுகள் பின்னோக்கி சென்றன.
நா ன்காண்டுகளுக்கு முன், மாதவன் மும்பையில்தான் வேலை பார்த்து வந்தார். சொந்த ஊர் மதுரை. அந்த தனியார் வங்கியில் மேலாளராக பதவி உயர்வு பெற்று, மும்பைக்கு சென்றவர், ஒரு தொடர் விடுமுறையில் காசிக்கு சென்றிருந்த போது, அந்த சம்பவம் நடந்தது எதிர்பாராத ஆச்சரியம்.
காசியில்... 'இங்கு, 'வெஜிடேரியன் சவுத் இன்டியன் மீல்ஸ்' எங்க கிடைக்கும்?' என, அரைகுறை ஹிந்தியில், சாது ஒருவரிடம் கேட்க, அவர், 'உதர்ஜாவ்...' என்று கையால் வடதிசையை காட்டினார். 300 மீட்டர் துாரம் நடந்து, ஒரு பழைய வீட்டின் முன், 'சைவம்' என, எழுதியிருந்ததை கண்டார், மாதவன்.
உள்ளே நுழைந்து, மரபெஞ்சு ஒன்றில் அமர்ந்தார். அருகில், சிலர் தமிழில் பேசியது கொஞ்சம் சந்தோஷத்தை கொடுத்தது. ஒரு விடலை பையன், மாதவனிடம் வந்து, 'என்ன வேண்டும்?' என்று ஹிந்தியில் கேட்டான். பிறகு, இட்லி கேட்டதும், கிச்சனை நோக்கி சென்றான், அந்த பையன்.
மாதவனுக்கு இறந்து போன தன் மனைவி ஞாபகம் வந்தது. பாவம், காசி நகரை பார்க்க வேண்டும் என்பது அவளது ஆசை. என்ன செய்வது? என்று நினைத்தார்.
டிபன் சாப்பிட்டு கை கழுவ சென்றவர், எதேச்சையாக கிச்சனை பார்த்தார். கண்கள், அப்படியே இமைக்க மறந்து நின்றன.
உள்ளே, அந்த நபர், மாதவனின் மூளை முழுவீச்சில் செயல்பட்டது. அந்த நீண்ட மூக்கு, மேல்நோக்கி வாரப்பட்ட தலைமுடி இதுவரை சந்தித்த மனிதர்களுடன் பொருத்திப் பார்த்தது. கடைசியில், மின்னல் போல், அந்த நபரின் பெயர், 'ப்ளாஷ்' ஆனது. அவன், சிவகுருவே தான். கல்லுாரி நண்பன். மதுரை அமெரிக்கன் காலேஜ்மேட். அவன் கல்யாணத்துக்கு சென்றது தான் கடைசி சந்திப்பு. பிறகு, 25 ஆண்டுகளாக தொடர்பு இல்லை. இதோ பழைய நினைவுகள் குவிய ஆரம்பித்தன. கமல், ரஜினி படங்கள் பார்த்தது, ரசித்தது என்று இளைஞர்களுக்கே உரிய சேட்டைகளின் போது, சிவகுருவும் ஒருவனாக இருந்திருந்தான்.
'இவன் எப்படி காசியில், ஒரு ஹோட்டலில் சமையல்காரனாக...' குழம்பினார், மாதவன். ராமநாதபுரத்தில் உள்ள சொந்த வீடு, மனைவி, குழந்தைகள் என்னவாயிற்று?
அவரது ஆர்வத்திற்கு தடைபோட முடியவில்லை. 'சிவகுரு...' என, சத்தமாக கிச்சனை பார்த்து கூப்பிட்டார். திரும்பினார், சிவகுரு. மாதவனை சுத்தமாக தெரியவில்லை.
பார்வையை மீண்டும் வேலைகளில் செலுத்தினார்.
'சிவகுரு, நான் மாதவன். மதுரை அமெரிக்கன் காலேஜ்...' மீண்டும் கத்தினார், மாதவன். சிவகுரு கண்களில் ஒரு வியப்பு. அப்படியே வேலையை விட்டு வெளியே வந்தார். மாதவனை தீர்க்கமாக பார்த்தார். லேசாக கண்களில் நீர்.
'சிவகுரு இன்னுமா என்னைத் தெரியல. நான் மாதவன். சரி, நீ எப்படி இங்க...' என, கேட்டார், மாதவன். அருகில் வந்த, சிவகுருவால் பேச முடியவில்லை. ஒரு பதைபதைப்பு முகத்தில் தெரிந்தது.
பிறகு, 'கொஞ்சம் வாசல்ல இரு. வந்திடறேன்...' என்று சொல்லி, உள்ளே சென்றார்.
வாசலில் வந்து காத்திருந்தார், மாதவன். 10 நிமிடத்தில் வெளியே வந்தார், சிவகுரு. மாதவனின் தோள்களை கட்டிப்பிடித்து, 'நல்லா ஞாபகம் வச்சிருக்க, மாதவா...' என்று நெகிழ்ந்தார், சிவகுரு.
'சரி, நீ எங்க இங்க?' என்ற, மாதவனால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.
'அது பெரிய கதை, மாதவா. நீ சொல்லு உன்னைப்பத்தி. இங்க ஆன்மிக பயணமா?' என்று கேட்டார், சிவகுரு.
மாதவன் தன்னைப் பற்றி சொல்லி முடித்து, சிவகுருவின் கதையை கேட்க ஆர்வமானார்.
'என்னத்த சொல்றது, மாதவா. இந்த மனசுல பாசம்ன்னு ஒண்ணுகிடந்து பாடாப்படுத்திச்சு. அதோட விளைவு தான், இந்த தலைமறைவு வாழ்க்கை!' என்றார், சிவகுரு.
'என்னது தலைமறைவு வாழ்க்கையா?' என்று பதற்றப்பட்டர், மாதவன்.
'ஏன் பதற்றப்படுற... ஆமாம். பொண்டாட்டி மேல, மகன் மேல, தங்கச்சி மேல... இப்படி எல்லார்மேலேயும் அன்பா இருந்தேன். ஆனால், நான் தான் ஏமாந்திட்டேன். பொறுமையா கேளு, புரியும். எனக்கு ஒரே மகன். வினோத்ன்னு பேரு. நல்லா படிச்சான். நல்ல வேலையும் கிடைச்சது. என் தங்கச்சி புருஷன் இறந்துட்டார். அவளுக்கு ஒரே பொண்ணு. பாவம் அவ குடும்பத்தையும் கவனிக்கணும்ன்னு நான் மனசுல நினைச்சேன். அதனால, 'உன் பொண்ணை மருமகளாக்கிக்கறேன்'னு தங்கச்சிக்கு வாக்கு கொடுத்தேன். அது தப்புன்னு இப்ப புரியுது.
'ஆனா, நடந்தது வேற. வினோத் ஆபிஸ்ல ஒரு பொண்ணை விரும்பறதா குண்டை துாக்கி போட்டான். எனக்கு பெரிய, 'ஷாக்.' நம்ப குடும்பத்துக்கு ஒத்து வராதுன்னு சொன்னேன். ஆனா, ஒரு நாள், 'ரெஜிஸ்டர் ஆபிஸ்ல' கல்யாணம் செஞ்சுகிட்டான்னு செய்தி வந்திச்சு. உண்மையான்னு போய் பார்த்தேன். மாலையும் கழுத்துமா, வினோத்தும், அந்த பொண்ணும் நின்னுக்கிட்டிருந்தாங்க. அதைவிட பெரிய அதிர்ச்சி, அங்க என் மனைவியும் இருந்தா. அப்பத்தான் புரிஞ்சுது. ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஏமாத்தியிருக்காங்க. இதை எப்படி, என் தங்கச்சிக்கிட்ட சொல்ல முடியும்? அவ கண்ணுக்கு நான் கையாலாகாதவனாக தான் தெரியும்!
'எதுவும் பேசல. வீட்டுக்கு வந்தேன். மனைவி மன்னிப்பு கேட்டா. பையனும், பொண்ணும் ஒரு, 'லாட்ஜ்ல' இருக்காங்க. நான் சம்மதிச்சா, வீட்டுக்கு வருவாங்கன்னு சொன்னா.
'ஆனா, என் சிந்தனையெல்லாம், இந்த உலகத்துல வாழ எனக்கு தகுதி இல்ல. சரி, அம்மாவும், பையனும் சந்தோஷமா இருக்கட்டும்ன்னு சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டேன். ஒரு சராசரி அப்பாவா, கணவனாக இருந்திருக்கலாம் தான். அந்த நேரத்துல ஒரு விரக்தி. ஏமாற்றத்துல உலகம் வெறுத்து, கால் போன திசையில கிளம்பினேன். ஆச்சு... பல ஆண்டுகள் ஓடிப்போச்சு. ஏனோ, ஊருக்கு போகணும்ன்னு தோணல. ஆனா, உன்னை பார்த்ததும் நல்லதாப் போச்சு. உன் நம்பரை கொடு. மும்பை வந்தா உன்னை பார்க்கறேன். அப்புறம் ஒரு விஷயம், நீ என்னை பார்த்தது, பேசியது பத்தி எங்கயும் சொல்லாத. மறுபடியும் குடும்பசாகரத்துல மாட்டிக்க நான் விரும்பல...' என, கனத்த குரலில் சொல்லி முடித்தார், சிவகுரு.
கொஞ்ச நேரத்துக்கு பின், 'இதுல என்னோட கருத்து, நீ அவசரபட்டுட்டே, சிவகுரு. இது, எந்த குடும்பத்துலயும் நடக்காத விஷயமில்லை. ஆனா, யோசிச்சு பலனில்ல. காலம் கடந்து போச்சு...' என்றார், மாதவன்.
'எஸ், நீ சொல்றதுல கொஞ்சம் உண்மையிருக்கு. நான் அப்ப துவண்டு போனது, என் மனைவியும், மகனும் கல்யாணத்தை என்கிட்ட மறைச்சது தான்...' என்றார், சிவகுரு.
'உனக்கு தெரிஞ்சா நீ கோபப்படுவேன்னு நினைச்சிருக்கலாம். அப்புறம் தாய்ப்பாசமும் ஒரு காரணம்...' என்று மாதவன் சொல்ல, 'சரி ஆனா, எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம்?' என்று, சிவகுரு கேட்க, மாதவனால் பதில் சொல்ல முடியவில்லை.
ஒருவித சோகத்தோடு விடைபெற்றார், மாதவன்.
இ து நடந்து ஒரு ஆண்டு ஆகியிருக்கும். ஒருநாள் அவருக்கு ஒரு போன் அழைப்பு. 'உங்க நண்பர், மிஸ்டர் சிவகுரு, 'ஆக்ஸிடென்ட்ல' அடிபட்டு 'ஐசியுல' இருக்காரு. அவர்கிட்ட இந்த ஒரு போன் நம்பர் தான் இருந்தது. நீங்க வந்தா, நல்லா இருக்கும்...' என்றது அந்த அழைப்பு.
சொன்ன உடனே, மாதவனால் அங்கு செல்ல முடியவில்லை. மறுநாள் தான் சென்றார். அதற்குள் விதி தன் வேலையை முடித்திருந்தது. சிவகுருவின் சில உடமைகளும், கொஞ்சம் பணமும் மாதவனிடம் அளிக்கப்பட்டது. வேறு என்ன செய்ய முடியும்? காசியிலேயே எளிமையாக சடங்குகளை முடித்தார், மாதவன். மும்பை திரும்பி, தன் வேலைகளில் ஈடுபட்டார். சிவகுரு விரும்பியபடி அவர் குடும்பத்தை கண்டுபிடித்து அவர் இறந்த விஷயத்தை சொல்ல விரும்பவில்லை.
மும்பையில், அவர் பணி ஓய்வு பெற்று, சொந்த ஊர் திரும்பி, வேறு சில நண்பர்களிடம் இதுபற்றி பேசும்போது, 'அவர் இறந்ததை பற்றி, நீங்க கண்டிப்பா அவரு வீட்ல சொல்லித்தான் ஆகணும். ஏன்னா, திதி கொடுப்பது, சாஸ்திரம், சம்பிரதாயம் எல்லாம் செய்ய வேண்டாமா? சிவகுரு ஆன்மா சாந்தி அடையணும். யோசிச்சு பாருங்க...' என்றான் நண்பன் ஒருவன்.
சி ல நாட்களுக்கு பின், உண்மையை சொல்லத்தான் வேண்டும் என்ற முடிவோடு, ராமநாதபுரம் கிளம்பினார், மாதவன்.
இதோ, சன்னதி தெருவில், சிவகுரு வீட்டு வாசலில், மாதவன். அழைப்பு மணியை அழுத்தினார். ஒரு பெண்மணி கதவை திறந்தாள். எப்போதோ கல்யாணத்தில் பார்த்திருந்தாலும், உடனே தெரிந்து கொண்டார். அது, சிவகுருவின் மனைவி என்று. நெற்றியில் அகலமான பொட்டு.
''நான், உங்க கணவரோட, 'காலேஜ் மேட்!' என் பெயர், மாதவன்,'' என்றார்.
அவள் முகத்தில் ஆச்சரியம், சோகம் தோன்றி மறைந்தது.
''உங்க மகன், மருமகள் இருக்காங்களா?'' என்றார், மாதவன்.
''ஆபிஸ் போயிருக்காங்க. ஒரே பேத்தி, ஸ்கூல் போயிருக்கா. உங்க, நண்பர் இங்க இல்ல, தெரியுமா?'' என்றாள், சிவகுருவின் மனைவி.
மாதவனுக்கு சட்டென்று எந்த முகபாவத்தை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.
''அப்படியா?'' என்றார்.
அப்போது வேறு ஒரு பெண்மணி, வீட்டினுள் வந்தாள்.
''ரோஹினி... சொன்னபடி சாயந்தரம் வந்துடு. கொலுவுல சுமங்கலிகளுக்கு கொடுக்கும் முதல் வெத்தலபாக்கு உனக்கு தான். ஞாபகப்படுத்த வந்தேன்,'' என, சொல்லி சென்றாள்.
''ஏதாவது சாப்பிடறீங்களா?'' என கேட்டாள், ரோகினி.
''வந்து, சிவகுரு...'' என, மாதவன் ஆரம்பிக்க கண்கலங்கினாள், ரோகினி.
''நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். மகனுக்காக ஒரு விஷயத்தை மறைச்சேன். அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? ஆனா, என்னைக்காவது ஒருநாள் வருவார். அவரை நினைக்காத நாளில்லை. தேடித்தேடி ஓஞ்சு போயிட்டோம். பேத்திக்கு கூட, அவர் தங்கச்சி பேர் தான் வச்சிருக்கோம்,'' என்றாள்.
தான் சொல்ல வந்ததை எப்படி ஆரம்பிப்பது என்று விழித்தார், மாதவன். நேரம் ஆக ஆக, சொல்ல வேண்டுமா? என, யோசித்தார். 'இப்போது சொன்னால் என்னவாகும்? வீடு சோகமாக மாறும். சுமங்கலி விதவையாவாள். எங்கோ இருக்கிறார் என்ற ஒரு ஆறுதல், துன்பமாக மாறி மனதை வாட்டும். அதே நேரம் மறைப்பதால் எந்த பெரிய தீமையும் ஏற்பட போவதில்லை.
'மனைவி, கணவனிடம் மகன் காதலை மறைத்தாள். கணவன், தன் இருப்பிடத்தை மறைத்தார். நாம் நண்பனின் மறைவை மறைக்கிறோம், அவ்வளவு தான். மறைக்கும் விஷயங்களே இவர்கள் குடும்பத்தை வழி நடத்துகிறது. இதில், தனி மனிதனாக ஏதும் செய்ய வேண்டாம்...' என, நினைத்து விடைபெற்றார், மாதவன்.
பல குடும்பங்களில் இது போலவே சின்ன விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்கள் வரை ஏதோ ஒரு காரணத்திற்காக உறவுகளில் ஒருவருக்கொருவர் உண்மையை மறைக்கத்தான் செய்கின்றனர். அப்போதெல்லாம் உண்மைகளும் ஒளிந்து கொள்ளத்தான் செய்கிறது.
கீதா சீனுவாசன்

