PUBLISHED ON : ஜூலை 26, 2026

கயலை பெண் பார்க்க, மாப்பிள்ளை வீட்டார், வருவதாக இருந்தனர். அலங்கரிக்கப்பட்டு, காத்திருந்தாள், கயல். மாப்பிள்ளை யுவனின், அப்பாவும்-அம்மாவும் வந்து விட்டனர். கிளம்பும்போது, யுவனுக்கு ஒரு போன் வர, 'நீங்க போங்க. நான் கொஞ்ச நேரத்தில் வந்து விடுகிறேன்...' என்று சொல்லியதாக, கயலின் பெற்றோரிடம் கூறினாள், யுவனின் அம்மா.
''சரிதாங்க. நாம பேசிட்டிருப்போம். நீங்க காபி சாப்பிடறீங்களா?'' என்று கேட்டார், கயலின் அப்பா ஜெயராஜ்.
அண்ணன் சங்கரும், கயலைப் பார்த்து, 'கொஞ்சம், 'வெயிட்' பண்ணு. இதோ வந்துடுவாரு!' என்று கிண்டலாக சொன்னான்.
''போண்ணே... இப்படி, 'டிரஸ்' பண்ணிட்டு பொம்மை மாதிரி எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது?'' சிணுங்கினாள், கயல்.
இரவு 8:00 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. வேறு வழியின்றி காபி, பிஸ்கட்டை சாப்பிட்டு நேரத்தை கடத்தினர். கயல் பெருமையை இவர்களும், யுவன் பெருமையை அவர்களும் பேச நேரம் கடந்தது.
நடுவில், யுவனுக்கு அவன் அப்பா போன் செய்தார். யுவன் எடுக்கவில்லை; ஒரு, 'மெசேஜ்' மட்டும் அனுப்பியிருந்தான். 'இங்கு வேலை முடிந்தது; கிளம்பிவிட்டேன்...' என்று!
கயலுக்கும், கொஞ்சமாக எரிச்சல் வந்தது. தனக்குன்னு வரப்போற பொண்ணை பார்க்க இவ்வளவு, 'லேட்'டா?
அப்போது, வாசலில் சத்தம் கேட்க, யுவன் வேகமாக நுழைந்து, 'சாரி சாரி...' என்று சொல்லி, தன் பெற்றோர் அருகில் அமர்ந்தான்.
மிதமான உடல்வாகுடனும், அடர்த்தியான தலைமுடியுடனும், வெள்ளை சட்டையில் சிரித்த முகத்தோடு காணப்பட்டான், யுவன்.
''என்னடா, 'ப்ளூ ஷர்ட்' போட்டிருந்தியே... இப்ப வேற 'ஷர்ட்' போட்டுட்டு இருக்கியே?'' என்று கேட்டாள், அம்மா.
''அப்புறமா சொல்றேன்,'' என்று 'கிசுகிசு'த்தான், யுவன்.
தொடர்ந்து, யுவனே பேசினான்...
''மறுபடியும் சாரி சொல்லிக்கறேன். இங்க வர கிளம்பும்போது, 'அர்ஜன்ட்' போன் வந்துடுச்சு. அப்பா, அம்மாகிட்ட சொன்னா, 'சென்டிமென்ட்டா பீல்' பண்ணுவாங்க. அதான், விபரமா சொல்லல. இப்ப எல்லாம் ஓ.கே., டீ, பிஸ்கட் கூட வேண்டாம். மொதல்ல பொண்ண வரச் சொல்லுங்க,'' என்றான், யுவன்.
''அதனாலென்ன, பரவால்ல,'' என்று சொல்லி, 'கயல்...' என்று அழைத்தார், அவளது அப்பா.
கயல், அறைக்குள் அம்சமாக பிரவேசித்தாள். அவள் கையில், யுவனுக்கான காபி டம்ளர் இருந்தது.
டம்ளரை கொடுக்கும்போதே, ஒரு பார்வையை, யுவன் மீது படரவிட்டு அமர்ந்தாள், கயல்.
காபியை அருந்திவிட்டு, ''எனக்கு காபியும் பிடிச்சிருக்கு,'' என்று தன் அம்மா-அப்பாவை பார்த்து சொன்னான், யுவன்.
சில நொடிகள் சுதாரித்த பின், அனைவரும் புரிந்து கொண்டனர். வெட்கப்பட்டாள், கயல். அந்த இடம், சகஜ நிலைக்கு வந்தது.
கயலின் அம்மாவுக்கு மகிழ்ச்சி.
இப்போது, யுவனின் அப்பா சங்கர் பேசினார்...
''அப்ப மத்த விஷயங்கள பேசிடலாமா?'' என்றார்.
கயலின் அப்பா, ஜெயராஜ் குறுக்கிட்டார்...
''இப்ப நல்ல நேரம் போயிடுச்சு. வர்ற ஞாயிற்றுக்கிழமை நாங்க, உங்க வீட்டுக்கு வர்றோம். அப்ப பேசலாமே,'' என்றார்.
யுவனின் பெற்றோருக்கு, பெரிதாக இதில் ஆட்சேபனை இல்லையென்பதால், அவர்கள் தலையாட்டினர். அப்போது, ''நான் கயல்கிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா?'' என்று கேட்டான், யுவன்.
கயல் வீட்டார் சம்மதிக்க, கொல்லை புறத்தில் இருவரும் தனித்து விடப்பட்டனர்.
''நான், 'லேட்'டா வந்தது பற்றி யாரும் பெருசா கேக்கல. அதுல ஒரு விஷயம் இருக்கு. நமக்கு நல்லபடியா திருமணம் முடிஞ்சா, பின்னாடி இந்த விஷயத்தால் கருத்து வேறுபாடு வரக்கூடாது இல்லையா? அதனால, நான் ஒரு விஷயத்தை சொல்லி விடுவது என்று முடிவு செய்துள்ளேன்.''
கொஞ்சம் ஆர்வமாக பார்த்தாள், கயல்.
''என்னோட ஆபிஸ்ல சீனியர் ஒருவர் சமூக சேவை செய்துக்கிட்டிருந்தார். ஒருநாள், என்னோட, 'ஹெல்ப்' தேவைன்னு கேட்டாரு. நானும் போனேன். அது, ஆதரவில்லாத பிணங்களை, அடக்கம் பண்ற வேலை. 'ஹாஸ்பிட்டல்'ல, 'ஆக்ஸிடென்ட்'ல, யாருமில்லாம இறந்து போறவங்க மற்றும் அங்கு இங்க கிடக்கற, 'டெட்பாடி'களை போலீஸ், 'பர்மிஷனோட' அடக்கம் செய்யற ஒரு சேவை. இது தேவையா... நாம இல்லேன்னா, 'கவர்மென்ட்'டே ஒரு வழி வெச்சிருப்பாங்களேன்னு யோசிக்கலாம். ஆனா, வாழ்க்கையில கஷ்டப்பட்டாலும் இறந்த பிறகு, அந்த இறந்த உடலுக்கு மரியாதையோட ஈமகாரியம் செய்யறதுல, ஒரு திருப்தி இருக்கும். அதை நான் புரிஞ்சுகிட்டேன்.
''அப்புறம், எனக்கும் அதில் ஆர்வம் வந்து, 'பார்ட் டைமா' நானும், சில நண்பர்களும் சேர்ந்து செய்து வர்றோம். மறுபடியும் சொல்றேன். இது முழுவேலை இல்ல. இப்ப கூட அது விஷயமா தான் போய், ஏற்பாடுகளை பண்ணிட்டு வந்தேன். வரும்போது மறக்காம குளிச்சிட்டும் வந்தேன். அதான், 'லேட்!' கல்யாணத்துக்கு அப்புறம் இதுக்கு, 'பர்மிஷன்' கொடுக்கணும். இது, 'ரிக்வஸ்ட்' மட்டும் தான்.''
யுவன் சொன்னதும், அதிர்ந்தாள், கயல்; ஆனால், அதை வெளிக்காட்டவில்லை. ''நான் கண்டிப்பா இதுபத்தி யோசிக்கிறேன். அப்பா, உங்க வீட்டுக்கு வரும்போது, பார்த்துக்கலாம்,'' என்றாள், கயல்.
மாப்பிள்ளை வீட்டார் விடைபெற்று சென்றதும், விஷயத்தை உடைத்தாள், கயல்...
''அப்பா, இது சரிப்படாதுப்பா. மாசத்துக்கு ரெண்டு பிணமாவது வரும். இவரு பாட்டுக்கு காரியத்துக்கு போயிட்டு வருவாரு. இன்னிக்கு நடந்த மாதிரி, நாளைக்கு ஒரு நல்ல விஷயத்துக்கு போகும்போது, அழைப்பு வரும். பிரச்னைதான். வேண்டாம்பா,'' என்றாள், கயல்.
''பொறுமையா யோசி, கயல். இது கொஞ்சம் சங்கடமான விஷயம் தான். இப்படி உதவும் மனப்பான்மை உள்ளவரு நல்லவராதான் இருப்பாரு. அந்த கோணத்துல பாரு. அவசரப்படாதே!'' என்றார், அப்பா.
ஆனால், கயலின் அம்மா, ''இது யோசிக்க வேண்டிய விஷயம். அனாதை பிணத்தை வாங்கி புதைக்கிறது, எரிக்கிறது புண்ணியமா, இல்ல பாவமான்னு சரியா சொல்ல தெரியல. இவருக்கு ஏன் இந்த வேலை? ஏதோ பண உதவி செய்யலாம். இப்படி இழவு காரியத்தை, பொது சேவைன்னு செஞ்சுகிட்டு, அதுவும் இந்த வயசுல! இவரு அப்பப்ப நேரம் கெட்ட நேரத்துல போனாருன்னா, கயல் வீட்ல தனியா இருக்கணும். இதெல்லாம் சரி வராது,'' என்றாள்.
''யோசித்து முடிவு செய்வோம்,'' என்று அப்போதைக்கு அந்த பேச்சை முடித்தனர்.
அலுவலகத்தில், அவளுடையை நெருங்கிய தோழி, கலாவிடம் இதை சொல்ல, ''ஒரு விதத்துல இது நல்ல விஷயம் தாண்டி. புண்ணியமும் கூட. ஆனா, நீ தான் கூட இருக்கப்போற. யோசிச்சுக்க,'' என்றாள்.
இந்த ஒரு விஷயம் தவிர, மற்ற அனைத்தும், 'ப்ளஸ் பாயின்ட்'டாக இருந்ததால், வேண்டாம் என்றும், கயலால் ஒதுக்க முடியவில்லை. ஞாயிறுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன.
அடுத்தநாள், அந்த சம்பவம் நடந்தது. கயலுக்கு, அவள் தோழி, கலாவிடமிருந்து போன்...
''கயல், எங்க வீட்டு பணிப்பெண் மல்லிகான்னு பேரு. 55 வயசு இருக்கும். இன்னிக்கு காலையில், வீடு பெருக்கும்போது, கீழே விழுந்துட்டா. போய் பார்த்தா, மூச்சு பேச்சில்ல. உடனே, டாக்டரை கூப்பிட்டு பார்த்தேன். உயிர் போய், 10 நிமிஷம் ஆச்சாம். அவ இருப்பிடத்துக்கு போய் பார்த்தா, அவ மட்டும் தனியா ஒரு, 'ரூம்'ல இருந்திருக்கா. சொந்தம் பந்தம்ன் னு யாருமில்லையாம். சமீபத்தில் தான், அங்க குடிவந்துள்ளாள். யாரும், 'கேர்' எடுத்துக்க மாட்டேங்குறாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. அப்ப தான் உன்னை பொண்ணு பார்க்க வந்த, யுவன் ஞாபகம் வந்தது, அவர் நம்பர் கிடைக்குமா?''
தன் அப்பாவை அழைத்தாள், கயல். அவரிடம், யுவன் நம்பர் வாங்கி, தோழிக்கு, 'மெசேஜ்' செய்தாள்.
அடுத்த அரைமணியில், கலா வீட்டில் ஆஜரானான், யுவன்.
''டோன்ட் ஒர்ரி மேம். நான் போலீஸ், டாக்டர் 'சர்டிபிகேட்' மற்றும் ஈமச்சடங்கு எல்லாத்தையும் பார்த்துக்கறேன். நீங்க ஒரு 'லெட்டர்' மட்டும் கொடுங்க,'' என்றான்.
நிம்மதியானாள், கலா. யுவன் வேண்டாம் என, சொல்லியும், ''உங்க சேவைக்கு இது தேவைப்படும்,'' என்று சொல்லி, கொஞ்சம் பணம் தந்தாள்.
பின்னர், மல்லிகாவின் சடங்கு, யுவனின் நண்பர்களால் அன்று மதியத்திற்குள் முடிந்தது. இறப்பு சான்றிதழ் கிடைக்க மட்டும் ஒரு வாரம் ஆகும் என்றனர்.
யுவனுக்கு காலில் விழாத குறையாக நன்றி சொன்னாள், கலா.
''சார், நீங்க மட்டும் இல்லேன்னா, எனக்கு எதுவும் புரிஞ்சிருக்காது. இது, உதவி மட்டுமில்ல, கடவுள் உங்கள் மூலமா இந்த உலகத்துல அனாதைன்னு யாரும் கிடையாதுன்னு எங்களுக்கு உணர்த்தியிருக்காருன்னு தான் சொல்லணும்,'' என்று புகழ்ந்தாள்.
இதுபோன்று நிறைய புகழ் வார்த்தைகளைக் கேட்ட அனுபவத்தால், புன்சிரிப்போடு விடைபெற்றான், யுவன்.
கலாவிடம், ''நல்லபடியா முடிஞ்சுதா. யுவன், உதவி செய்தாரா?'' என்று கேட்டாள், கயல்.
''என்ன கேட்ட, உதவியா இருந்தாருன்னா... போடி இவளே... இவரை மாதிரி லட்சத்துல ஒருத்தர் தான் இருப்பாங்க. மல்லிகாவுக்கு ஒரு மகன் இருந்தா கூட, இப்படி செஞ்சிருப்பானான்னு சொல்ல முடியாது. ஆனா, எவ்வளவு தியாக உணர்வோடு பொறுப்பா, கடமையாக நெனச்சு செஞ்சாருடி. இப்படிப்பட்டவர் உனக்கு கிடைச்சா, நீ அதிர்ஷ்டக்காரி. மத்தவங்க மாதிரி, குடும்பம், பொண்டாட்டி, குழந்தை, வீடுன்னு ஒரு சராசரி ஆள கட்டிட்டு, சராசரியாத்தான் வாழப்போறேன்னா, அது உன் இஷ்டம். ஆனா, இந்த உலகத்துல கொஞ்சமாவது மழை பெய்யுதுன்னா, அது, இவரை மாதிரி மனித தெய்வங்க இருக்கறதாலதான்டி,'' என்றாள், கலா.
க யலுக்குள், யுவன் பற்றிய பிம்பம் மாறியது. தொடர்ந்து யோசித்தாள்.
'ஊருக்கு உழைக்கும் இந்த யுவன், குடும்பத்தை கவனிக்கமாட்டாரா என்ன? குடி, சூதாடும் குணம் போன்றதா இது? மற்றவர்கள் கஷ்டத்தில் பங்கெடுத்து, எல்லாரின் ஆசீர்வாதம் மற்றும் நல்லெண்ணம் பெறுவது சாதாரண விஷயமா? யாருமே அனாதையாக போகக்கூடாது என்ற எண்ணம் எவ்வளவு உயர்ந்தது? சுயநலமாக யோசித்து, இந்த தெய்வ குணம் உடையவரை இழக்க நினைத்தது பெரிய தவறன்றோ? இவருக்கு மனைவியாக இருப்பது கூட ஒரு வரம் தான்...' என்றே, கயலுக்கு தோன்றியது.
அப்பா-அம்மாவிடம் இந்த விஷயத்தை சொல்லி, ''அப்பா எனக்கு இந்த பிறவியில், யுவன் தான் கணவர்,'' என்றாள்.
அவர்கள் ஆச்சரியப்பட்டனர். ''ஏம்மா நல்லா யோசிச்சு தானே சொல்றே?'' என்றனர்.
அவர்கள் தலை மீது கை வைத்தாள், கயல்.
யுவன்-கயல் இணைவதற்கான நாள் குறிக்கப்பட்டது.
கீதா சீனிவாசன்
