PUBLISHED ON : மே 17, 2026

அழைப்பு மணியின் ஓசை கேட்டது. வாசலில் பால்கார தாத்தா நின்று கொண்டிருந்தார். பாலை வாங்கிக் கொண்டு, கதவை மூட போன என்னை அவருடைய குரல் தடுத்தது. ''இந்த மாச பால் பணம் தரலை, சார்.''
ஊருக்கு கிளம்பும் போது, மனைவி பார்கவி, மாதப் பட்டுவாடா பணம் எல்லாவற்றையும் சாமி அறையில், வைத்திருப்பதாக சொல்லி சென்றது, நினைவிற்கு வந்தது. மாதம் பிறந்தவுடன், மாதப் பட்டுவாடா செய்ய வேண்டியவைகளை தனித்தனியாக கணக்கு பார்த்து, தனித்தனி கவரில் பணம் போட்டு கவரை ஒட்டி, யாருக்கு எவ்வளவு தர வேண்டும் என்று கவர் மேலேயே எழுதி, வைத்து விடுவாள்.
இதுவரை ஊருக்கு போனால் மூவருமாகத் தான் போவோம். இந்த முறை ஆபிஸில் முக்கியமான தவிர்க்க முடியாத வேலை. மனைவியின் அத்தை மகளின் திருமணம். அவளால் போகாமல் இருக்க முடியாது. அதனால், மகனை அழைத்துக் கொண்டு, அவள் கிளம்பி விட்டாள்.
பால் என்று எழுதி இருந்த கவரை எடுத்துப் பார்த்தேன். 2 ஆயிரத்து 450 ரூபாய் என, எழுதி இருந்தாள். எண்ணி பார்க்கவில்லை. சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை.
''இந்தாங்க,'' அப்படியே கவரை கொடுத்து விட்டுத் திரும்பிய போது தான் பார்த்தேன். அவர் பின்னால் ஒரு குட்டி பையன், ஐந்து வயது இருக்கும்.
''யார் இது, பேரனா?''
உடனே அவர் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
''ஆமா சார்! பொண்ணோட பையன். லீவுக்கு வந்திருக்காங்க.''
''சாருக்கு, வணக்கம் சொல்லு,'' என்றார், பேரனிடம்.
அவனும், ''குட் மார்னிங் சார்,'' என்றான்.
''ஊருல, 'இங்கிலீஷ்' பள்ளிக்கூடத்தில் படிக்கிறான் சார்,'' என்ற, பால்காரரின் முகத்தில் பெருமை பொங்கியது. கவரில் இருந்த பணத்தை எடுத்து ஒருமுறை எண்ணினார். ஏனோ சற்றுத் தயங்கியது போல் தோன்றியது.
''என்னாச்சு? கணக்கு சரியா இருக்கு தானே?''
''ஆமா சார், சரியா இருக்கு. வரேன் சார்.''
அவசரமாக பேரனை இழுத்துப் போய் சைக்கிளில் துாக்கி உட்கார வைத்தார்.
''தாத்தா, பசிக்குது,'' சிணுங்கினான், பேரன்.
''வாடா கண்ணு, நம்ம முனை கடையில் ஏதாச்சும் வாங்கி தரேன்,'' என, வேகமாக சைக்கிளில் ஏறி மிதித்தார்.
பெரிய, 'பிளாஸ்டிக்' டப்பாவை சைக்கிள் கேரியரில் வைத்து, கயிற்றால் கட்டி இருப்பார். பால் 'பாக்கெட்'கள் நிறைத்து வழியும் அந்த டப்பாவை வலது கையால் பிடித்தபடி, 'ஹேண்டில் பாரை' இடது கையால் பிடித்தபடி அந்த சைக்கிளை தள்ளியபடியே அவர் வீடு வீடாகச் சென்று பால் போடுவதை பார்க்கும் போது, மெல்லிய உடல்வாகு கொண்ட இவரால் எப்படி அத்தனை பெரிய பால் டப்பாவுடன் இந்த சைக்கிளை லாவகமாக, 'பேலன்ஸ்' செய்ய முடிகிறது என்ற ஆச்சரியம் ஏற்பட்டதுண்டு.
முதன்முறையாக, முழு சக்தியுடன் வேகமாக ஏறி சைக்கிள் ஓட்டும் அவரை ஆச்சரியமாக பார்த்தபடியே கதவை சாத்தினேன்.
அதற்கு, மறுநாள் காலையில் ஊரில் இருந்து வந்து விட்டாள், பார்கவி.
''என்ன மாச பட்டுவாடா எல்லாம் முடிஞ்சுதா? எங்க அந்த டப்பா? அதைக் கொடுங்க கொஞ்சம்,'' என, பார்கவி கேட்க எடுத்து வந்து கொடுத்தேன்.
டப்பாவை திறந்தவள், ''என்ன இது? பால் பணத்தில், 50 ரூபாய் மிச்சம் இருக்கணுமே. எங்க காணோம்?'' எனக் கேட்டாள், பார்கவி.
''இல்லையே, நீ சரியா கணக்கு பண்ணித்தானே பணத்தை வச்சுட்டு போனே; எழுதி வேற வச்சிருந்தாய். அதை அப்படியே கவரோட பால்காரர்கிட்ட கொடுத்துட்டேன்.''
''அட கடவுளே! போகும் போது, பால் பணத்தில், 50 ரூபாய் கூட இருக்கும். சில்லரை இல்லை. 2 ஆயிரத்து 500 ரூபாய் வைக்கிறேன். அதனால் அவர்கிட்ட மீதம், 50 ரூபாய் வாங்கிடுங்கன்னு சொல்லிட்டு தானே போனேன்? மொபைலை பார்த்துக்கிட்டே தலையாட்டினா இப்படித்தான்,'' அவள் குரலில் கோபம் எட்டி பார்த்தது.
பால்கார தாத்தா சற்றுத் தயங்கி நின்றது, அவசரமாக பேரனை சைக்கிளில் ஏற்றிவிட்டு, வேகமாக அவரும் ஏறி சைக்கிளை மிதித்து சென்றது என, எல்லாம் மனத்தில் ஒரு நொடி தோன்றி மறைந்தது.
''விடு பார்கவி. 50 ரூபாய் தானே!'' என்று சொன்ன என்னை, எரிச்சலாகப் பார்த்தாள்.
''அது எப்படி விட முடியும்? 50 ரூபாய்னாலும் அதுவும் பணம் தானே? இன்னைக்கு, 50 ரூபாய் ஏமாத்தறவர் நாளைக்கு, 100, 200 ரூபாய்ன்னு ஏமாத்துவார். தெரிஞ்சே ஏமாந்து போறோம்ன்னா நம்மை விட முட்டாள், இந்த உலகத்தில் இருக்கவே முடியாது,'' என, இடைவெளி விடாமல் பேசினாள்.
நான் மவுனமாக இருப்பதை பார்த்து, ''என்ன?'' என்றாள்.
''ஒண்ணுமில்லை. ஊருல இருந்து அவர் பேரன் வந்திருக்கான். அவனுக்கு ஏதாவது தின்பண்டம் வாங்கி கொடுக்க கூட அவர் சில்லரை தராமல் போயிருக்கலாம்.''
அவர் பேரனிடம் பேசியது என் மனதில் நிழலாடியது.
நிமிர்ந்து என்னை ஒரு நிமிடம் யோசனையுடன் பார்த்தாள். பிறகு அழுத்தமாக சொன்னாள்.
''நாளைக்கு அவர் பால் போட வரும்போது, கொஞ்சம் இருக்க சொல்லுங்க. அப்படியே அனுப்பிடாதீங்க.''
வயதானவரிடம், 50 ரூபாய்க்காக போய் ஏதேனும் மனம் நோகப் பேசி விட போகிறாள் என்று மனம் பதைத்தது.
மறுநாள் காலை வழக்கம் போல வந்த பால்கார தாத்தாவிடம், ''பேரன் ஊருக்கு போய்ட்டானா?'' என்று விசாரித்தேன்.
''வீட்டில் துாங்கிட்டு இருக்கான் சார். நாளைக்கு எல்லாரும் போறாங்க,'' என்று அவசரமாக பதில் சொல்லி, கிளம்ப முற்பட்டார்.
''கொஞ்சம் இருங்க,'' என்று அவரிடம் சொல்லி, உள்ளே திரும்பி, ''பார்கவி, பால்காரர் வந்திருக்கார்,'' என்று, அவளை அழைத்தேன்.
சட்டென்று ஏதோ புரிந்தவராக, கண் கலங்க, ''சார், மன்னிச்சிடுங்க. இரண்டு நாளைக்கு முன், நீங்க கொடுத்த பால் பணத்தில், 50 ரூபாய் கூட இருந்தது. பேரன் வந்ததுல இருந்து நல்லதா அவனுக்கு சாப்பிடக்கூட ஒண்ணும் கொடுக்க முடியலை. நான், என் பையன் கூட தான் இருக்கேன். பால் போட்டு கிடைக்கற வருமானம் முழுவதும் அவன்ட்ட கொடுத்துடணும். அவனும், அவன் பொண்டாட்டியுமா பார்த்து மனசு வந்து, ஏதாவது எனக்குன்னு கொடுப்பாங்க. அவங்களை சொல்லியும் குத்தமில்லை. அவங்களும் இருக்கிறதை வெச்சுதானே குடும்பம் நடத்தணும்,'' என்று மகனையும், மருமகளையும் விட்டுக் கொடுக்காமல் பேசினார்.
''இரண்டு, மூணு மாசமா எனக்கு ஒரே சளித் தொந்தரவு. சேர்த்து வச்சிருந்த காசு எல்லாத்தையும் மருத்துவம் பார்க்கவே செலவு பண்ணிட்டேன். வந்த புள்ளைக்கு வாய்க்கு சுவையா செஞ்சு போட என் பொண்டாட்டியும் இல்லை. அதுதான் அன்னைக்கு அந்த, 50 ரூபாய்க்கு, அவனுக்கு வடை ரெண்டும், தேங்காய் பண்ணும் வாங்கி கொடுத்தேன்,'' என தயக்கமாகச் சொன்னார். ஆனாலும், பேரனுக்கு தன்னால் முடிந்ததைச் செய்த திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது.
''அம்மா கணக்குல ரொம்ப சரியாக இருப்பாங்க. அடுத்த மாசம் கண்டிப்பா கொடுத்துடறேன், சார். அம்மாட்ட சொல்லிடுங்க,'' என்று கூறி கிளம்ப எத்தனித்தார்.
''நில்லுங்க,'' என பின்னாலிருந்து வந்த, பார்கவியின் குரல் நிறுத்தியது.
'ஐயோ, மாட்டிக்கிட்டோமே!' என்பது போல் விழித்தார். எனக்கும் அவரைப் பார்க்க, பரிதாபமாக இருந்தது.
''பார்கவி, அவர் வேணும்ன்னே அப்படி பண்ணலை,'' என்று நான் முடிக்கும் முன்பே, ''கொஞ்சம் தள்ளுங்க,'' என்று என்னை இடித்து தள்ளி விட்டு, அவள் கையில் இருந்த பையை அவரிடம் கொடுத்தாள்.
''இதில் கொஞ்சம் இனிப்பு, காரம் அப்புறம் ஒரு புடவையும் இருக்கு. பெண்ணையும், பேரனையும் சந்தோஷமா ஊருக்கு அனுப்பி வைங்க,'' என்றவளை ஒன்றும் புரியாமல் பார்த்தார், பால்காரர்.
''வாங்கிக்கோங்க,'' என, மெல்லிய புன்னகையுடன், அவள் சொல்லவும், சட்டென்று கையெடுத்துக் கும்பிட்டார்.
''என்ன இதெல்லாம்? நீங்க கிளம்புங்க. பேரன் ஊருக்கு போறதுக்குள்ள சந்தோஷமா அவன் கூட நேரத்தை செலவு பண்ணுங்க.''
''மன்னிச்சிடுங்க அம்மா. அடுத்த மாசம் அந்த பணத்தை கண்டிப்பா கொடுத்திடறேன்,'' கண் கலங்கியவாறே சொன்னவர், தன்னுடைய சைக்கிளை நோக்கி போனார்.
நடந்த எல்லாவற்றையும் ஆச்சரியமாகப் பார்த்த நான், ''என்ன நடக்குது இங்க?'' என, உள்ளே செல்ல எத்தனித்தவளிடம் கேட்டேன்.
''எனக்கும் தாத்தா இருந்தாருல,'' என்று மெல்லிய குரலில் சொன்னவளின் இமைகள் நனைந்து இருந்தது...
''கூட்டுக் குடும்பமாக இருந்த என் தாத்தாவோட அண்ணன், தம்பிகளுக்கு, குடும்ப தொழிலான விவசாயத்தை என் தாத்தாவும் பார்க்கணும்ன்னு ஆசை. ஆனா, அந்த காலத்திலேயே பி.யூ.சி., வரை படிச்சிருந்த என் தாத்தா, வெளியூரில் சின்ன கம்பெனியில் கணக்கு எழுதற வேலைக்கு போயிருக்கார். அதனால், குடும்பத்தில் மனஸ்தாபம்.
''அந்த சமயத்தில் தாத்தாவுக்கு பக்கவாதம் வந்து வீட்டோட முடங்கிட்டார். வேலைக்கும் போக முடியலை. எந்த வருமானமும் இல்லாத தாத்தாவும், பாட்டியும் ஒரு சுமையாக தான் அவங்க குடும்பத்துக்கு தெரிஞ்சாங்க. இதில், தாத்தாவுக்கு மருத்துவ செலவு வேற. என்னோட அம்மாவுக்கு கல்யாணம் கூட, வேண்டா வெறுப்பாதான், அம்மாவோட பெரியப்பாவும், சித்தப்பாவும் பண்ணி இருக்காங்க.
''கல்யாணத்துக்கு பிறகு, என் அம்மா அவங்க ஊருக்கு அதிகம் போனதில்லை,'' என்று கூறிய, பார்கவியின் குரல் உடைந்திருந்தது!
மெல்ல தொடர்ந்தாள், பார்கவி...
''என் அப்பா பண உதவி பண்ண முன்வந்தும், மாப்பிள்ளை கிட்ட வாங்குவதான்னு, மறுத்துட்டார், என் தாத்தா. எப்போவாச்சும் தாத்தா, பாட்டியை பார்க்க நானும், அம்மாவும் ஊருக்குப் போகும் போது, எங்களுக்கு ஏதாவது செய்யணும்ன்னு தாத்தாவும், பாட்டியும் தவியாய் தவிப்பாங்க. அவங்க ரெண்டு பேராலயும் எங்களுக்கு எதுவும் செய்ய முடியாது.
''இவர் சொன்ன மாதிரி, அம்மாவுக்கும், எனக்கும் பிடித்த சாப்பாட்டை கூட பண்ணித் தர முடியாது. அவங்களோட தவிப்பு, இயலாமை, கண்களில் துளிர்க்கும் கண்ணீர் அதையெல்லாம் என்னால் என்னைக்கும் மறக்க முடியாது.''
அவள் உணர்வுகள் எனக்கு புரிய, தோளில் அவளை மெல்ல சாய்த்து, கண்களில் துளிர்த்திருந்த கண்ணீரை துடைத்து விட்டேன். சற்று சமாதானமானாள்.
''அது சரி, அவர் அடுத்த மாசம் அந்த, 50 ரூபாயை தரேன்னு சொன்னாரே?'' என, மெல்ல அவளைச் சீண்டினேன்.
''அவர் கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன்.''
''எனக்கு எல்லாமே சரியா இருக்கணும். யாரும் என்னை ஏமாத்த விடமாட்டேன். கணக்குனா கணக்குதான்னு பிரமாதமா பேசுவாயே?''
என் குரலில் இருந்த கிண்டலை உணர்ந்தவள், என் கன்னத்தை லேசாக கிள்ளி, மெல்லிய புன்னகையுடன், ''உங்களுக்கு இந்த கணக்கு புரியாது. இது, பாசக்கணக்கு,'' என்றாள்.
நித்யா பாலாஜி
