PUBLISHED ON : ஜூலை 12, 2026

குழந்தை ஜனனியின் பக்கத்தில் உட்கார்ந்து, குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள், ஜெயா.
'எவ்வளவு அழகான குழந்தை. நான், 10 மாதம் சுமந்து பெற்ற உயிர்...' மனதில் பெருமை பொங்கியது.
''ஜெயா! குழந்தை துாங்கும் போதே குளிக்கக் கூடாதா? அவ எழுந்துட்டா உன்னை குளிக்க விடமாட்டா.'' அவளுடைய மாமியாரின் குரல் கேட்டது.
மனசில்லாமல் அந்த அறையை விட்டு வெளியே வந்தாள், ஜெயா.
ஜனனி இப்பதான் பிறந்த மாதிரி இருக்கு. அதற்குள் அவளுக்கு, மூன்று வயசாகப் போகிறது. ஜெயாவின் உயிரே அவள் தான். திருமணமாகி, ஆறு ஆண்டுகள் குழந்தையில்லாமல், தவமிருந்து பெற்ற குழந்தை அவள்.
ஜெயாவின் கணவர், மணியும் குழந்தையிடம் உயிரையே வைத்திருந்தான். ஆனால், ஜெயா அளவு பைத்தியம் இல்லை. காலையில் பல் தேய்ப்பதிலிருந்து, இரவு படுக்கும் வரை, ஜனனிக்கு அம்மா வேண்டும். ஜெயாவும், அவளை யாரிடமும் விட மாட்டாள்.
''ஜெயா! இந்த மாதிரி அவளை, 'அம்மா கோண்டாக' வளர்க்காதே. உனக்கும் சரி, அவளுக்கும் சரி நல்லதில்லை. நாலு பேரிடம் பழக விடு,'' என்பாள், ஜெயாவின் மாமியார்.
ஆனால், ஜெயாவுக்கு எந்த அறிவுரையும் காதில் ஏறவில்லை. ஜனனி, விளையாடப் போனால், மற்ற பெற்றோர், தங்கள் குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு உட்காருவர். ஆனால், ஜெயா மட்டும், ஜனனி பின்னாலேயே ஓடுவாள். கண்மண் தெரியாமல் ஓடினால், குழந்தை விழுந்துவிடுமோ என்ற பயம்.
'குழந்தையை, 'ப்ரீ'யாக விளையாட விடுங்கள். அப்போது தான் தைரியம் வரும். நீங்க வந்து உக்காருங்க...' என்று மற்ற பெற்றோர், 'அட்வைஸ்' செய்வர்.
இந்த பேச்செல்லாம், ஜெயா காதில், செவிடன் காதில் சங்கு ஊதினாற்போலதான் இருந்தது.
ஜ னனியை நல்ல ஸ்கூலில் சேர்த்தனர். ஜெயாவுக்கு பிடித்த ஸ்கூல் தேடுவதற்குள் மணிக்கு பைத்தியமே பிடித்து விட்டது. குழந்தை, முதல் முறையாக ஸ்கூல் போகும் ஏற்பாடு தடபுடலாக நடந்தது.
''மணி! நாளைக்கு ஆபீஸுக்கு லீவு சொல்லிடுங்க. முதல் நாள், ஜனனியை நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான் கொண்டு விடணும்.''
''எனக்கு நாளைக்கு முக்கியமான, 'மீட்டிங்' இருக்கு. லீவு போடறது ரொம்ப கஷ்டம். இரண்டு மணி நேரம், 'பர்மிஷன்' வேணும்ன்னா போடறேன்,'' என்றான், ஜெயாவின் கணவன் மணி.
ஸ் கூலுக்கு முதன் முதலாக கிளம்பும் தினமும் வந்தது. காலை நேரம் வீடே அமர்க்களப்பட்டது. ஜனனியை ஒருவழியாக கிளப்பி காரில் ஏற்றினர்.
''நீ, அம்மாவை விட்டுட்டு தனியே இருப்பியா, அழ மாட்டியே?'' என்று கேட்டுக் கொண்டே இருந்தாள், ஜெயா.
''அவ அழாட்டா. உனக்கு தான் ஏமாத்தமாயிருக்கும் போல இருக்கு. குழந்தையை தொந்தரவு பண்ணாதே.'' பொறுக்க முடியாமல் சொன்னான், மணி.
ஜனனியை இறக்கி விட்டதும், அவள் ஒரே ஓட்டமாக ஓடினாள். ஜெயாவும் பின்னாலேயே ஓடினாள்...
''அம்மா! நான் அழ மாட்டேன்... நீ போ,'' என்றாள், ஜனனி.
கண்களிலிருந்து மறையும் வரை, ஜனனியையேப் பார்த்துக் கொண்டு நின்றாள், ஜெயா. காரில் ஏறியவுடன் கவலையாக இருந்த அவளைப் பார்த்து, ''இப்போ, நீ அழ ஆரம்பிக்காதே,'' என்று சிரித்தான், மணி.
''உங்களுக்கு ஒரு அம்மாவோட மனசு புரியாது,'' என்றாள், ஜெயா.
ஜனனி ஸ்கூலிலிருந்து வந்தவுடனே, பல ஆண்டுகள் பார்க்காதது மாதிரி, குழந்தையை கட்டிக் கொண்டாள், ஜெயா. ஜனனி ஸ்கூலில் கற்றுக்கொண்ட, 'ரைம்ஸ்' எல்லாம் சொல்லிக் காண்பித்தாள். ஒரு வாரம் ஓடியது. ஜனனி சந்தோஷமாக ஸ்கூல் போய் வந்தாள்.
''ஜனனிக்கு இந்த ஸ்கூல் பிடிக்குதான்னு தெரியலை. இல்லன்னா வேற ஸ்கூல் தேடணும்,'' என்றாள்.
''சும்மா இரு. இந்த ஸ்கூல் கிடைக்கவே தவம் செய்ய வேண்டியிருந்தது,'' என்றான், மணி. ஜெயா விடவில்லை.
''உனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கிறதாம்மா?'' என்று, ஜனனியிடம் கேட்டாள்.
''அம்மா! இந்த ஸ்கூல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,'' என்றாள், ஜனனி.
நிம்மதியாக மூச்சு விட்டான், மணி. ஜனனியை ஸ்கூலுக்கு கொண்டுவிடுவதற்காகவே, தன் ஸ்கூட்டரை 'சர்வீஸ்' செய்தாள், ஜெயா.
'ஸ்கூல் பஸ்ஸில் அனுப்பக்கூடாதா'ன்னு கேட்டதுக்கு, ''பஸ் ரொம்ப சீக்கிரமா வருது. குழந்தை, ஆறு மணிக்கே எழுந்திருக்கணும்.'' இது, அவள் சொல்லும் சமாதானம்.
குழந்தையை ஸ்கூல் நாட்களில் சீக்கிரமாகவே துாங்க வைக்கலாம் என்ற அவளுடைய மாமியாரின், 'அட்வைஸை' அலட்சியம் செய்தாள், ஜெயா. இரவு, 10:00 மணிக்கு, ஜெயா துாங்கும் போதுதான், ஜனனியும் துாங்குவாள்.
''ஜெயா! இந்த அளவுக்கு குழந்தையை சுற்றி உன் வாழ்க்கையை அமைச்சுக்காதே. அவள் பெரியவளாகி உன்னை விட்டு விலகி போகும்போது, உன்னால் தாங்க முடியாது,'' என, அடிக்கடி சொல்வாள், அவள் மாமியார்.
ஆ ண்டுகள் உருண்டோடின. ஜெயாவின் உலகமே, ஜனனி தான். எட்டு வயது பெண்ணை, ஜெயா மூன்று வயது குழந்தையாகவே நடத்தினாள்.
''அம்மா! என்னை ஸ்கூலில் இறக்கி விட்ட பிறகு தயவு செஞ்சு முத்தம் கொடுக்காதே. என் 'ப்ரெண்ட்ஸெ'ல்லாம் கேலி பண்றாங்க,'' என்றாள், ஜனனி.
''நீ என் குழந்தை தானே? யார் என்ன சொல்றது,'' என்று கோபத்துடன் கேட்டாள், ஜெயா.
''அம்மா! உன்னுடைய ஆசையையெல்லாம் வீட்டிலே வெச்சுக்கோ. நான் பாப்பா இல்லை,'' என்றாள், ஜனனி.
ஜெயாவின் மாமியாருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அதைப் பார்த்ததும், ஜெயாவுக்கு இன்னும் கோபம் வந்தது.
''அப்பா! எனக்கு நீச்சல் கத்துக்கணும். நீச்சல் கிளாசில் சேர்த்து விடுங்கள்,'' என்று ஒருநாள் கேட்டாள், ஜனனி.
''நாளைக்கே ஆரம்பிக்கலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நானோ, அம்மாவோ அழைத்து கொண்டு போறோம்,'' என்றான், மணி.
அன்று இரவு, அவனுடன் சண்டை போட்டாள், ஜெயா.
''அவளுக்கு, எட்டு வயசு தான் ஆகிறது. இவ்வளவு சீக்கிரம் நீச்சல் அவசியமா? என்னை கேக்காம எப்படி முடிவெடுக்கலாம்?''
''இரண்டு வயசிலேயே குழந்தைகளுக்கு நீச்சல் கத்துக்கொடுக்கின்றனர். நீ, எட்டு வயது பெண்ணுக்கு சீக்கிரம் என்கிறாய்,'' சிரித்தான், மணி.
சைக்கிள் கத்துக்கொடுக்க ஒரு தகராறு, ஸ்கூலில் ஓட்டப் பந்தயத்தில் கலந்துக்க ஒரு தகராறு, 'ப்ரெண்ட்ஸுடன்' வெளியே அனுப்ப ஒரு தகராறு, இப்படி நாளொரு சண்டையுடன் வளர்ந்தாள், ஜனனி.
ஜனனிக்கு, பத்து வயதாகியது. என்ன, 'டிரெஸ்' போட்டுக்கணும், ஸ்கூலுக்கு என்ன, சாப்பாடு கொண்டு போகணும், எல்லாமே, ஜனனியே முடிவு செய்ய ஆரம்பித்தாள்.
''அப்பா! எனக்கு பத்து வயசாகுது. நான் இன்னும் சின்ன பாப்பா இல்லை. அடுத்த மாசத்திலிருந்து நான் ஸ்கூல் பஸ்ஸில் தான் போகப்போறேன். என், 'ப்ரெண்ட்ஸோட' போறது எவ்வளவு ஜாலி தெரியுமா?'' என்றாள், தன் அப்பாவிடம்.
''நீ ரொம்ப சீக்கிரம் எழுந்துக்கணும். உனக்கு துாக்கம் போறாது,'' என்றாள், ஜெயா.
''அம்மா! என், 'ப்ரெண்ட்ஸெல்லாம்' வரலியா? என் வயசுதானே அவங்களுக்கும். என்னை மட்டும் ஏன் குழந்தை மாதிரி நடத்தறே,'' என்று கேட்டாள், ஜனனி.
ஜெயாவால் பதில் சொல்ல முடியலை. இப்படி பல நிகழ்வுகள்.
ஜ னனி, பன்னிரெண்டாம் வகுப்பை எட்டினாள். 'ஸ்போர்ட்ஸ்', பாட்டு மற்றும் படிப்பு சம்பந்தப்பட்ட எல்லா போட்டிகளிகளிலும் பங்கெடுத்துக் கொண்டாள். 'ப்ரெண்ட்ஸு'டன் வெளியே போனாள்.
அவள் நேரம் கழிந்து வந்தால், அவள் வரும் வரை வாசலிலேயே நிற்பாள், ஜெயா. சில விஷயங்களை, ஜனனி அவளிடம் சொல்ல மாட்டாள். அப்பாவிடம் மட்டும் சொல்வாள்.
''அம்மா அநாவசியமா கவலைப்படுவா. அதனால தான் அவகிட்ட சொல்ல வேண்டாம்,'' என்பாள்.
அவள் தன்னை விட்டு விலகிப் போவதாக வேதனைப்பட்டாள், ஜெயா.
''நீ ஏன் அப்படி நினைக்கிறே? நம்ம பெண் தைரியசாலியா, தன்னம்பிக்கையோட இருக்கறதை நினைச்சு, நீ பெருமைப்படணும். என்னிக்குமே அவள் உன் குழந்தை தான்,'' என்றான், மணி.
பனிரெண்டாவது முடித்ததும், டாக்டருக்கு படிக்கணும்ன்னு ஆசைப்பட்டாள், ஜெயா. ஆனால், தீர்மானமாக மறுத்து விட்டாள், ஜனனி.
''நான் டாக்டராகணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டேன். முடியலை. நீயாவது ஆகணும்ன்னு எனக்கு ஆசை,'' என்றாள், ஜெயா.
''அம்மா! உன்னுடைய விருப்பத்தை என் மேல் திணிப்பது நியாயமில்லை. எனக்கு என்ஜினியரிங் தான் சேரணும்,'' என்றாள், ஜனனி.
கடைசியில், ஜனனி தான் ஜெயித்தாள். அவள் ஐ.ஐ.டி.,யில் சேர்ந்தாள். 'ஹாஸ்டல்' வாழ்க்கை ஆரம்பித்தது. சேர்ந்த முதலில், வாரா வாரம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தவள், பிறகு, பதினைந்து நாளுக்கு ஒரு முறை வர ஆரம்பித்தாள். ஜெயாவின் புலம்பல் அதிகரித்தது.
''ஜெயா! அவள், 'பிஸி'யா இருப்பா. தினமும் போன் பண்றாளே, உன்கிட்ட ஆசை இல்லாமலா தினமும் பேசறா?'' ஆறுதல் சொன்னான், மணி.
படிப்பும் முடிந்தது. என்ஜினியரிங் முடித்து, வெளிநாடு போக தேர்வும் எழுதி முடித்தாள். நல்ல யூனிவர்சிட்டியில், 'அட்மிஷனும்' கிடைத்தது. ஜெயா, எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை.
''நீ, எங்களுக்கு ஒரே குழந்தை. அமெரிக்கா போகாமல் இங்கேயே மேல் படிப்பு படிக்க முடியாதா? உன்னைப் பிரிந்து நாங்க எப்படி இருக்க முடியும்?'' என்று கெஞ்சினாள், ஜெயா.
''அம்மா! நான் குழந்தையில்லை. மேல் ப டிப்புக்கு அமெரிக்காவில் இன்னும் வசதி அதிகம். என்னுடைய எதிர்காலம் சிறப்பா இருக்கணும்ன்னு நீதானே ஆசைப்பட்டே. இப்போ ஏன் தடுக்கறே? அம்மா! உனக்குன்னு நேரத்தை ஒதுக்க கத்துக்கோ. உனக்கு பிடிச்சதை செய். பாட்டு கேள். உனக்கு சங்கீத ஞானம் நிறைய இருக்கு. என்னைச் சுற்றியே, உன் வாழ்க்கையை வீணடித்துவிட்டாய். யார் சொல்லியும் நீ கேக்கலை. நான் கிளம்பி போனதும் உன்னுடைய வாழ்க்கையை சூனியமாக விடாதே,'' என்றாள், ஜனனி
அ வள் புறப்படுவதற்கான ஏற்பாடுகளை, ஜெயா முழு மனசோட செய்தாலும், இரவெல்லாம் சரியாக துாங்காமல் கவலைப்பட்டாள். ஜனனி புறப்படும் நாளும் வந்தது. ஜெயாவை கட்டிக் கொண்டு, ''அம்மா! நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும். நான் தினமும் போன் பண்றேன். கவலைப்படாமல் இரு.''
அவளை விமானத்தில் ஏற்றி அனுப்பி விட்டு காரில் அமர்ந்த, ஜெயா சொன்னாள்...
''தந்தைக்கு உபதேசம் செய்த, முருகப் பெருமானைப் போல, ஜனனி எனக்கு உபதேசம் செஞ்சுட்டா. அளவுகடந்த பாசம் என் கண்களை மறைச்சிடுச்சு. அந்தக் குழந்தைக்கு இந்த வயசிலேயே புரிஞ்ச விஷயம், எனக்கு இவ்வளவு வயசாகிதான் புரிஞ்சுது. அவளை நினைச்சா பெருமையாயிருக்கு. அவள் நிறைய சாதிக்கணும். எங்கே இருந்தாலும் அவ சந்தோஷமாயிருக்கணும்.''
அவள் கண்ணில் நீர் மல்கியது. எப்போதும் போல அமைதியாக சிரித்தான், மணி.
பானு சந்திரன்
