
கணவர் இருந்தவரை, ஜனகம் மாமிக்கு, திருவல்லிக்கேணியில், ஒண்டுக்குடித்தனத்தில் ஒற்றை அறை வாசம் தான். இப்போது, இந்த, மூன்று படுக்கையறை, 'ப்ளாட்'டிலும், கடந்த ஒரு மாதமாக ஒற்றை அறை வாசம் தான். ஆனால், கொஞ்சம் வசதியான வாசம்.
மூன்றாவது மாடியிலுள்ள 'ப்ளாட்'டில், காலை நேர வானத்தின் இளம் நீலப் பரவலையும், கிளிகளையும் பார்த்து ரசித்தபடி, பால்கனியில் நின்று கொண்டிருந்தாள், ஜனகம்.
அங்கன்வாடியில் உதவியாளராக, பின்னர் சூப்பர்வைசராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர், ஜனகம். மாந்தோறும் வரும் ஓய்வூதிய பணத்தில் தன் தேவைகளை சமாளித்து வந்தாள்.
ஆ பீஸ் கிளம்பும் முன், ''அத்தை, சாப்பாடு, டிபன் எல்லாம், சமையலறையில், 'ஹாட் பேக்'லே வச்சிருக்கேன்,'' என்றபடி, சிறு பேப்பரை நீட்டினாள், மருமகள் பிரியா.
''கேஸ், 'புக்' பண்ணிருக்கேன். இன்னிக்கி வந்திரும். அதுக்கு என்னோட போன்ல வந்த ஓ.டி.பி., நம்பர் இது. 'டெலிவரி' ஆள்கிட்ட சொல்லுங்க. எங்கிட்ட இப்ப சில்லரை இல்லே. நீங்க பணம் கொடுங்க. சாயங்காலம் வந்து தரேன்,'' என்றபடியே கிளம்பினாள்.
''அதற்கென்னம்மா? நான் கொடுக்கிறேன்,'' என, ஜனகம் சொல்லும் போதே, அவளது மொபைல் போன் ஒலித்தது.
போனை எடுத்து பெயரைப் பார்த்ததுமே உற்சாகமானாள். வெளியே, பிரியாவின் ஸ்கூட்டர் கிளம்பும் சத்தம் கேட்டது.
''சொல்லு, விஜயா. எப்படி இருக்கே. எனக்கும் உங்க எல்லார் ஞாபகம் தான்,'' என, பேச ஆரம்பித்தாள்.
''யாரு,'' என, ஜாடையில் கேட்ட மகன் முரளியிடம், ''என்னோட, 'ப்ரண்டு!' முன்பு குடியிருந்த வீட்டின் முன் போர்ஷனில், இருக்கும், விஜயா,'' என, கிசுகிசுப்பாகச் சொன்னாள்.
''ஓ அந்த வடகம் மாமியா?'' என்றவனிடம் தலையசைத்துவிட்டு, ''நானா, நல்லா இருக்கேன். மகன், மருமகள் எல்லாம் நல்லா இருக்காங்க. பேரன், எட்டாவது படிக்கிறான். பேத்தி, ஆறாம் கிளாஸ். இதுவா, மூணு படுக்கையறை ப்ளாட், விஜயா.
''எனக்கு தனியா ஒரு அறை கொடுத்திருக்காங்க. ஆமாமா அதிலேயே, பாத்ரூம் இருக்கு,'' என பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தாள், ஜனகம்.
''அம்மா, நான் ஆபீஸ் கிளம்பறேன்...'' என, மெதுவான குரலில் சொல்லி கிளம்பினான், முரளி.
பேச்சைத் தொடர்ந்தாள், ஜனகம்...
''சரி, நாங்க முன்பு இருந்த போர்ஷன்லே யாரு வந்திருக்காங்க இப்ப?'' ஆவலாகக் கேட்டாள், ஜனகம்.
''கல்யாணம் செய்து கொள்ளாத, 60 வயதுப் பெண்மணி. ஏதோ தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர், தற்காலிகமாக குடி வந்திருக்கிறார்,'' என்றாள், விஜயா.
ம தியம் சாப்பிட உட்கார்ந்த போது, சிலிண்டர்காரர் வர, ஓ.டி.பி., சொல்லி, சிலிண்டரை வாங்கி வைத்து பணத்தைக் கொடுத்தாள்.
பர்ஸில், 1,000 ரூபாய் தான் இருந்தது. சிலிண்டர் பணத்தை சாயங்காலம், பிரியா கொடுத்து விடுவாளா? அங்கே திருவல்லிக்கேணியில் வீட்டின் அருகில் தான் வங்கி இருந்தது.
கோவிலில் பார்த்தசாரதியை தரிசனம் செய்து விட்டு, வங்கிக்கு போய், 'பென்ஷன்' பணத்தை எடுத்துக் கொண்டு, அப்படியே காய்கறிகள் வாங்கி மெல்ல நடந்தே வீட்டுக்கு வந்து விடுவாள், ஜனகம்.
'எங்க ஆபீஸ் பக்கத்திலே தான், உங்க வங்கியின் ஏ.டி.எம்., இருக்கு, அத்தே. நீங்க, உங்க, 'டெபிட் கார்டை' கொடுத்தா, நானே பணத்தை மாதா மாதம் எடுத்து வந்துடறேன். நீங்க அலைய வேண்டாம்...' என்ற பிரியா, இந்த மாசம் சரியாக, 2ம் தேதியே பணம் கொண்டு வந்து கொடுத்து விட்டாள்.
எப்படி செலவாயிற்று?
பேரன் பிறந்தநாள் வந்தபோது, பிரியா வாங்கிய உடை தவிர, ஜீன்ஸ் பேன்ட் வேண்டும் என, பிடிவாதம் பிடித்து, அழுதான். அப்போது, 700 ரூபாய் கொடுத்தாள். உடனே பேத்தி, 'எனக்கு ஒண்ணும் கிடையாதா, பாட்டி...' என, கண்ணைக் கசக்கியதும், அவளுக்கு, 600 ரூபாய் கொடுத்து, சுடிதார் வாங்கிக் கொள்ள சொன்னாள்.
புக்ககத்து கல்யாணத்துக்காக, மதுரையிலிருந்து தன் குழந்தைகளை அழைத்து கொண்டு வந்த மகள், அம்மாவுக்கு ஒரு சுங்கடிப் புடவை கொடுத்தாள். அவளது குழந்தைகளுக்கு துணி எடுக்க, பணம் கொடுக்க வேண்டியிருந்தது.
மரியாதைக்காக கல்யாணத்துக்கு, ஜனகம் மட்டும் சென்றவள், 500 ரூபாய் மொய் எழுதிவிட்டு வந்தாள்.
அ ழைப்பு மணி ஒலித்தது.
முகமே மறைகிற மாதிரி அடுக்கிய துணிகளோடு, தெரு முனையில் கடை வைத்திருக்கும், இஸ்திரிக்காரர்.
''இப்படி வைப்பா.''
சோபாவில வைத்து விட்டு, ''150 ரூபாய் தாங்கம்மா,'' என்றான்.
''அவ்வளவா?''
''ஆமாம்மா. புடவையெல்லாம் இருக்குல்லே.''
பிரியாவின் புடவைகள், முரளி மற்றும் குழந்தைகளின் துணிகள். இதுநாள் வரை, தன் எந்தப் புடவையையும், ஜனகம், 'அயர்ன்' செய்ததில்லையே. மடித்து அலமாரி பலகைக்கு அடியில் வைத்து தான் பழக்கம்.
''சில்லரை இல்லேன்னா பரவால்லம்மா, 'ஜீ-பே' பண்ணிடறீங்களா? நம்பர் சொல்லவா?'' என்றான், இஸ்திரிகாரன்.
அவளுக்கு இந்த, 'ஆப்' விஷயங்களே தெரியாது.
''இல்லப்பா. பணமே தரேன் இரு,'' என்றவள், பணத்தைக் கொடுத்து விட்டு சாப்பிட அமர்ந்தாள்.
'இதை எப்படி, முரளி சாப்பிடுகிறான்...' என்று தோன்றியது. நிதானமாக, பிரியாவுக்கு சமையல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அடுத்து வந்த இரண்டு நாட்களில், கேபிள்காரர், தண்ணீர் கேன்காரர், அம்மாவுக்கு புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும் என, முரளி ஏற்பாடு செய்திருந்த, 'சர்குலேஷன் லைப்ரரிக்காரர்' என, பணம் எடுத்து எடுத்துக் கொடுத்தாள், ஜனகம். கையிருப்பு குறைந்தது.
பிரியா மட்டும் ஒரு முறை, ''நீங்க செலவழிச்சதுக்கு எல்லாம் கணக்கு வச்சிக்கோங்க, அத்தே. எனக்கு சம்பளம் வந்ததும் தந்துடறேன்,'' என்றாள்.
முதல் மாதமே, ''இந்த மாசம், ஈ.எம்.ஐ., - எல்.ஐ.சி., ப்ரீமியம்னு நிறைய செலவும்மா,'' என்றபடி அலுப்புடன் வந்து உட்கார்ந்து கொண்டான், முரளி.
''பசங்க எப்பப் பாரு கார்ட்டூன் தான் பார்க்கும். உங்க அறையில் சுவரோடு, எல்.ஈ.டி., 'டிவி' வச்சிடறேம்மா. நீங்க சீரியல் பார்க்கலாம்.''
அப்போது வாங்கப்பட்ட, 14 அங்குல, 'டிவி'க்கு, ஈ.எம்.ஐ., கட்ட, அந்த மாதம் பணம் இல்லை என்றான். ஜனகம் தான் எடுத்துக் கொடுத்தாள்.
எப்படி திருப்பிக் கேட்பது?
அடுத்த மாசம் கண்டபடி உயர்ந்து விட்ட, 'கரன்ட்' செலவு. அப்புறம் தண்ணீர் வரி, பொதுவான மோட்டார், 'ரிப்பேர்' செலவு.
ஸ்கூட்டர் கீழே விழுந்து, ரிப்பேர் செலவு. பிரியாவுக்கு வயிற்று வலி வந்து ஏகப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்து, ஒன்றும் பிரச்னை இல்லை என, கண்டுபிடித்த செலவு...
ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு ஏதோ செலவு இருந்தது. கார் வேறு வாங்கப் போகிறானாம்.
முப்பது நாட்களுக்குள், கேஸ் தீர்ந்து போகுமா? அதுவும், அவர்கள் இல்லாத போது தான், மாற்று சிலிண்டர் வரும்.
இதுவரை ஜனகம், 'கேஸ்' வைத்துக் கொள்ளவில்லை. ஸ்டவ், குமட்டி அடுப்பு தான். ரேஷன் அரிசி, பருப்பு, சர்க்கரை, புளிக்குழம்பு, கீரை, கடை இட்லி மாவு, இரண்டு ஜீவன்களின் சாப்பாட்டுக்குப் போதுமானதாக இருந்தது.
பேரனை கராத்தே வகுப்பிலும், பேத்தியை நடன வகுப்பிலும் சேர்த்தனர்.
''நாங்களே கொண்டு விடலாம். ஆனா, நீங்க வீட்டுல அடைஞ்சு கிடக்க வேண்டாம், அத்தை. ஆட்டோக்காரர் மணியை வரச் சொல்றேன். ரெண்டு நாள் பேரனோட கராத்தே வகுப்பு போங்க. இன்னும் ரெண்டு நாள் பேத்தியோட நடன வகுப்புக்கு போங்க. இருந்து கூட்டிட்டு வந்திருங்க.
''எங்களுக்கும் பசங்க துணையோட போயிருக்குதுங்கன்னு நிம்மதி. கையிலே, 'புக்' கொண்டு போங்க. உங்களுக்குத்தான் புஸ்தகம் இருந்தா பொழுது போயிடுமே,'' என்றாள், பிரியா.
ஆனால், ஆட்டோக்காரர், ''அன்னன்னைக்கு பைசா கொடுத்திருங்கம்மா. எனக்கும் இதான் பொழப்பு,'' என்றதால், அவருக்கு பணம் கொடுக்க வேண்டியதாயிற்று.
'கடைசியில், பர்ஸ் அனேகமாக காலியாகி விடுகிறதே. இப்படி இருந்ததே இல்லையே...' என, யோசித்தார், ஜனகம்.
பழைய வீட்டில், சாமி அலமாரி டப்பாவில், 500 ரூபாய் எப்போதும் இருக்கும்.
செயற்குழு உறுப்பினராக, ஜனகம் பல ஆண்டுகளாக இருந்து வரும், இலக்கிய அமைப்பிலிருந்து செயலர் கூப்பிட்டார்.
நலம் விசாரித்த பின், ''சார் போனப்பறம் நீங்க எந்த, 'மீட்டிங்'கும் வரலே. அடுத்த, 12ம் தேதி, 'மீட்டிங்' வச்சிருக்கோம். வரீங்களாம்மா? ரைட்டர் பாலாகவுரி வர்றாங்க,'' என்றார், செயலர்.
அவளுக்குப் பிடித்த எழுத்தாளர்.
முரளியிடம், 'மீட்டிங்' பற்றி சொன்ன போது, ''அய்யோ, இந்த சமயத்தில் போகவே வேண்டாம்மா. எல்லாருக்கும் எதோ, 'வைரல் பீவர்' வருதாமே. போன வாரமே இருமிக்கிட்டு இருந்தே,'' என்றான்.
ஏதோ சொல்ல முயன்ற போது, ''அத்தே, உங்க பேரனுக்கு போன வருஷம், 'டெங்கு' வந்திச்சே. அதிலிருந்தே, 'வீக்கா' இருக்கான். எந்த, 'வைரஸ்'னாலும் உடனே அவனுக்கு வந்திடுது. அதுக்குத்தான் உங்கள ஜாக்கிரதையா இருக்கச் சொல்றோம்,'' என்றாள், பிரியா.
கடைசியில் இலக்கிய கூட்டத்துக்கு போக முடியாமல் போயிற்று.
க ணவர் இருந்த வரை, ஜனகத்தின், 'பென்ஷன்' பணத்தில் அவரது மருத்துவ செலவு, 1,200 ரூபாய் வாடகையில், சிறு சமையலறை, ஒரே அறை, ஒற்றை பேன், ஒற்றை 60 'வாட்ஸ் பல்பு' என்று தானே வாழ்க்கை போயிற்று.
பணம் ஒரு பக்கம் என்றால், வீட்டை விட்டு செல்ல முடியாமல் எதற்காகவோ வீட்டிலேயே இருக்க வேண்டியிருக்கிறதே.
அப்பாவின் முதல் ஆண்டு காரியங்களை, மகன் - மருமகள் இருவரும், நாலு நாள், 'லீவு' போட்டு சிரத்தையாகச் செய்தனர்.
அவ்வப்போது, 'அம்மா, சில்லரையா ரெண்டு, 100 இருக்கா? அத்தே, 500 வச்சிருந்தாக் கொடுங்க...' என, கேட்டு வாங்கத் தவறவில்லை.
அந்த மாதம், ஜனகத்துக்கு கையில் எதுவும் மிஞ்சவில்லை.
அதற்கடுத்த மாதம், பிரியாவின் சொந்தக்காரப் பெண் ஒருத்தி, 'இன்டென்ஷிப்' என, வந்து, இரண்டு மாதம் தங்கினாள்.
அந்த வீட்டின் அறைகள் எல்லாமே, 10க்கு 10 அடி, சின்னது தான். ஏற்கனவே, ஜனகத்தின் அறையிலிருந்த பரண் முழுவதும் சாமான்கள். மருமகளின், பீரோ வேறு ஓரமாக...
ஜனகத்தின் அறையில் தங்கிய பெண், கொஞ்சம் கூட சுத்தமாக இருக்கவோ, ஒழுங்காக பொருட்களை வைக்கவோ, பழகவே இல்லை போலும். 'டிவி'யிலும் விடாமல், ஹிந்தி சினிமா அல்லது குத்தாட்ட நடனம் பார்த்தாள்.
அறையை, பாத்ரூமை, தினம் சுத்தம் செய்தே ஓய்ந்து போனாள், ஜனகம்.
அவள் கிளம்பிப் போனதும், பெங்களூரிலிருந்து பிரியாவின் அப்பா, அம்மா வந்தபோது, குழந்தைகள் அறையில் ஒண்டிக் கொண்டாள், ஜனகம். இடம் போதாமல் மூச்சடைத்தது அவளுக்கு.
ஒவ்வொரு மாதமும் பற்றாக்குறை. 30 நாளுக்கு முன்பாகவே, 'பென்ஷன்' பணம் தீர்ந்து போகிறது.
இவர்கள் தெரிந்தே செய்கின்றனரா அல்லது புரியாமல் இருக்கின்றனரா? இல்லை, உரிமையோடு தன்னை செலவழிக்க விடுகின்றனரா? நான் வருவதற்கு முன் என்ன செய்தனர்? புரியவே இல்லை ஜனகத்துக்கு...
சம்பாதித்த நாளிலும், தன் சின்ன ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் கடமைகள் தடுத்தன.
கடைசிக் காலத்திலாவது, தன் விருப்பம் போல், 'பென்ஷன்' தொகையை செலவழிக்க முடியாமல் இருக்கிறதே!
ஒரு முடிவுக்கு வந்தவளாக, தோழி விஜயாவை போனில் அழைத்தாள், ஜனகம்.
''உங்க பிள்ளை என்னை திட்டப் போறார்,'' என, பயந்தாள், விஜயா.
''அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ பயப்படாதே, விஜயா.''
விஷயத்தைச் சொன்னதும், முரளியும், பிரியாவும் திகைத்துப் போயினர்.
''என்னம்மா, இங்கே உங்களுக்கு ஒரு குறையும் நாங்க வைக்கவில்லையே. அன்பாகத்தானே பழகறோம். ஒரு நாளும் மரியாதைக் குறைவா நடக்கலியே. குழந்தைகளும் ஆசையாகத்தானே இருக்காங்க,'' என்றான், முரளி.
''கோச்சுக்காதீங்க. உங்க மேலே எனக்கு எந்த குறையும் இல்லே. தங்கமாத்தான் என்னைப் பார்த்துக்கறீங்க. என்னவோ உங்க அப்பா ஞாபகம். நான் அங்கே போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வர்றேனே. திரும்பி உங்க கிட்ட தான் வருவேன். தப்பா நினைச்சுக்காதீங்க,'' எனக் கூறி, தன் முடிவில் உறுதியாக இருந்தாள், ஜனகம்.
விஜயாவுக்கு இப்போது நிறைய வடகம் கேட்டு, 'ஆர்டர்'கள் வருவதாக கூறியிருந்தது, நினைவுக்கு வந்தது.
அவள் இருக்கும் போர்ஷன், மிகவும் சிறியது. தயாரித்த வடகங்களை பாதுகாப்பாக அடுக்கி வைக்க இடமில்லை. ஜனகம் போர்ஷனில் குடியிருந்த பெண்மணி காலி செய்து விட, அதை உபயோகப்படுத்தலாம். ஆனால், வாடகை கொடுக்க வேண்டும். ஒருநாள் போனில் புலம்பியிருந்தாள், விஜயா.
''நானே அங்கு வந்துடறேனே... என் போர்ஷனில் வச்சுக்கோ, விஜயா. வாடகை, 'ஷேர்' பண்ணிக்கலாம்,'' என்றாள், ஜனகம்.
''ஏற்கனவே உங்க அடுப்பு, சில பாத்திரம் எல்லாம் எங்கிட்டேதானே கொடுத்துட்டுப் போனீங்க.''
''தேவையானதை திருப்பி வாங்கிக்கறேன். 'ஹவுஸ் ஓனர்'கிட்ட சொல்லிட்டே இல்லே.''
எல்லாம் முடிவாகி பிடிவாதமாக கிளம்பினாள். வாசலில் ஆட்டோ காத்திருக்க, பெட்டி, பைகளுடன் ஏறிக் கொண்டாள், ஜனகம்.
'வேற ஒண்ணுமில்லே. அம்மாவுக்கு கையிலே, 'பென்ஷன்' வருகிற தைரியம் தான்...' என, பின்னால் பிரியாவின் குரல் கேட்டது.
'அதை என் மனசுக்குப் பிடிச்ச மாதிரி செலவழிப்பேன்...' என, நினைத்துக் கொண்டாள், ஜனகம்.
பத்மினி பட்டாபிராமன்

