PUBLISHED ON : நவ 01, 2026

சற்றே சிலீரிட்ட இளங்குளிர் மெலிதாக உடலை ஊடுருவியது. கனகாம்பர நிற விளிம்புகளுடன் மேகக்கூட்டம் மெதுவாகக் கொட்டாவி விட, சூரியன் சோம்பல் முறித்தவாறே வெளிவந்தது.
பிரதான சாலையிலிருந்த டீக்கடையில், கருமமே கண்ணாய் பாலைக் கொதிக்க விட்டு, 'பளிச்'சென்று துலக்கி வைத்த அலுமினியக் குண்டானில் தேயிலையைப் போட்டான், பென்னி குயிக் என்றழைக்கப்படும் பெஞ்சமின்.
தே னி மா வட்டத்தில், அநேக வீடுகளில் முல்லை-பெரியாறு அணை கட்டிய, பென்னிகுயிக் போட்டோ இடம்பெறும் என்றாலும், இந்த பெஞ்சமினின் பெயர் காரணம் அலாதியானது. நுாறு ஆண்டுகளுக்கு முன், அந்த ஆங்கிலேய பொறியாளர் தமிழ்நாட்டுக்குச் செய்த பேருதவியை கூடவே இருந்து பார்த்ததுபோல், இஞ்ச் இஞ்சாக விவரிப்பான், பெஞ்சமின். அதைக்கேட்டு ரசித்தவாறே, டீ குடிக்கும் வாடிக்கையாளர்கள் அங்கே ஏராளம்.
பிஸ்கட், முறுக்கு, கேக், தேன் மிட்டாய் பாட்டில்களை பலகையின் மேல் வரிசையாக அடுக்கி விட்டு, துடைப்பத்தால் முன்வாசலைப் பெருக்கி, மஞ்சள் கலந்த நீர் தெளித்து, மர பெஞ்சுகளை, 'ப' வடிவில் போட்டாயிற்று. சற்றே சரிந்திருந்த செம்பருத்தி செடியை இழுத்து, முருங்கை மரத்துடன் சேர்த்து ஒரு கட்டுப் போட்டான். பலகையின் ஆணிகளில் கயிறை இழுத்து மாட்டி அன்றைய நாளிதழ்களை மடித்து தொங்க விட்டான்.
'பென்னி... ரெண்டு இஞ்சி டீ போடு...' என்றவாறு, பொன்னுச்சாமி கவுண்டரும், மகாலிங்கமும் வந்து பெஞ்சில் உட்கார்ந்தனர்.
''கவுண்டரே... 'லோயர் கேம்ப்' ஏலத்தோட்டம் முடிச்சாச்சா?'' என்றான், பென்னி குயிக். எட்டு மாதங்களுக்கு முன், இதே டீக்கடையில் வைத்துப் பேரம் பேசி, ஆறு மாதங்களுக்கு பின் பணம் கைமாறுவதாய் போட்ட ஒப்பந்தம். இப்போது ஞாபகமாய்க் கேட்கிறான், பென்னி. அப்படி ஒரு அபார ஞாபக சக்தி, அவனுக்கு.
தெருவிலும், சுற்றுப்புறத்திலும் உள்ள அனைவரையும், அவர்களது குடும்பத்தையும் பற்றி தெரிந்து வைத்திருப்பதோடு, அவர்களது தேவைகளையும் தெரிந்து உதவும் பரோபகாரி, பென்னி.
அரசின், குரூப் 1 தேர்வு அறிவிப்பு வந்தவுடன், அரசு வேலைக்கு காத்திருக்கும், முருகன் மகனுக்கும், ஞானவேலின் சகோதரிக்கும் நினைவுபடுத்துவான். டபரா டம்ளரில் நுரை பொங்க டீ ஆற்றிக் கொண்டே, காதில் விழும், பிறந்தநாள், திருமண தினங்களை நினைவில் வைத்திருந்து, மறவாமல் அடுத்தடுத்து வரும் ஆண்டுகளிலும், அறுபதாம் பிறந்த நாளிலும் வாழ்த்துச் சொல்லி, அசரடிக்கும் அபார ஞாபக சக்தி கொண்டவன், பென்னி குயிக். மதிய உணவுக்கு பின், ஆட்களின் நடமாட்டம் குறையும். அந்த நண்பகல் நேரத்தில், நாளிதழ்களை புரட்டியவாறே கொஞ்சம் நாட்டு நடப்புகளையும், மூளை நரம்புகளில் புதைய விடுவான்.
'ஜெயபாண்டி எங்க காணுமே...' என்ற விஸ்வநாதனிடம், 'ஜூலை மாசம் காசிக்குப் போகணும்ன்னு சொல்லிக்கிட்டிருந்தாரே...' என்றும், 'மழை வர்ற மாதிரி இருக்கு. குடையை எங்க வச்சேன் தெரியல...' என்ற, சீனிவாசனிடம், 'போன வாரம் ராவுத்தருக்கு குடுத்துட்டு வீட்டுக்குப் போனீங்களே...' என்றும் நினைவுப்படுத்த, பென்னியால் முடிந்தது.
அத்தனை பேருக்கும் ஒரு ஆச்சரியமான பிறவியாகத் தெரிந்தான், பென்னி.
அதுமட்டுமல்ல, நாளிதழில் வரும் குறுக்கெழுத்தில், ஆறாவது மேலிருந்து கீழ், நான்கெழுத்து என்று முடிப்பதற்குள், விடை சொல்லி, கைதட்டு வாங்குவான். அதேசமயம், 'ஹாரிஸன்' தேயிலை தோட்ட தொழிலாளி செல்லையனிடம், 'குமுளி கறார்' கடையில் சீருடைத்துணி சரக்கு வந்ததையும் சொல்லி, சரியான நேரத்தில், 'லோடு' எடுக்க உதவுவான்.
எல்லாவற்றுக்கும் மேலாக, கம்பமெட்டுத் தெரு, செல்வியின் கணவன் நோய்வாய்பட்டபோது, 'சேட்' கடையில், அவன் நகை அடமானம் வைத்ததை நினைவுபடுத்தி, செல்விக்கு உதவினான்.
ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில், ஜெயந்தியின் கணவன் வேலை பார்ப்பதைச் சொல்லி, சேவியர் மகனை அங்கு ஹாஸ்டலில் சேர்த்து மருத்துவம் படிக்க காரணமாய் இருந்ததும், பென்னிகுயிக்கின் நினைவாற்றல் தான்.
'ரிட்டயர்டு' வாத்தியார், நடேசன் அவனிடம், 'உறங்கும்போதும், எல்லாரைப் பத்தியும் யோசிச்சுக்கிட்டே இருப்பியோ...' என்று விளையாட்டாக கேட்கும்போது, குலுங்கச் சிரிக்கும் கூட்டத்தால் பெஞ்சு அதிரும்.
ச ற்றே கூட்டம் கலையத் துவங்கி, மரபெஞ்சுகள் மெதுவாகக் காலியாயின. துாரத்தே, அவன் மனைவி, சில்வியா, பால் துாக்குடன் வருவது தெரிந்தது. மழையால் நனைந்திருந்த தார் ரோட்டில் வந்த, மூணாறு பஸ், மணி 12:00 என்பதை மவுனமாய் சொன்னது.
முன்நெற்றி வியர்வையை முந்தானையால் துடைத்தவாறே, மர பெஞ்சில் உட்கார்ந்தாள், சில்வி. வீட்டுக் கறவை மாடுகளில், ரோஸ்மேரி மட்டும் சினை மாடு. மற்றவை வஞ்சனையின்றி பால் கொடுத்தன.
''பிள்ளைங்க ஸ்கூல் போயாச்சாடீ?'' என்றான், பென்னி.
தலையாட்டிய, சில்வி, ''தலைவலி பரவால்லியா? கொஞ்சநேரம் படுக்கலாம்ல,'' என்றாள்.
சமீபகாலமாகத்தான் இந்தத் தலைவலி இம்சை. வலது காதின் மேற்புறம் துவங்கி, முன்நெற்றி வழியே பயணித்து, நடுமண்டையில் நங்கூரமிட்டு அமரும் தலைவலி. இப்போதெல்லாம் சமய சந்தர்ப்பம் இல்லாமல் வருகிறது. சில நேரம் கவனம் தப்புகிறதும் கூட நடக்கும்.
''அதெல்லாம் ஒண்ணுமில்ல... பார்த்துக்கிடலாம்,'' என்று, சில்வியை சமாதானப்படுத்திய, பென்னி, சிகப்பு குற்றாலம் துண்டை நனைத்துப் பிழிந்து பலகைகளை பளிச்சென்று துடைக்க ஆரம்பித்தான். பாத்திரங்களையும், வடிகட்டிகளையும் துலக்கி வைத்தாள், சில்வி.
ஓலை வேய்ந்த தட்டியை, வாயிலை மறைப்பதுபோல் சார்த்தி விட்டு, வீட்டை நோக்கி நடக்கும்போது, சட்டென கண் இருண்டு, கீழே விழுந்தான், பென்னி. சில்வியின் வீறிட்ட குரல்கேட்டு கிராமமே திரண்டு வந்து, பென்னியை சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்றது.
தேனி பெரியாஸ்பத்திரியில் மாறி மாறி மருத்துவர்கள் சோதித்தும், நினைவு தப்பிக் கிடந்தான், பென்னி. கட்டப்பனை, போடி மெட்டு, சின்னமனுார், கூடலுார், ஏன் மதுரையிலிருந்து கூட, அவனுக்குத் தெரிந்தவர்கள் வந்து பார்த்துச் சென்றனர்.
அத்தி பூத்தாற்போல் சில நேரம் விழிப்பு வந்தாலும், வெற்றுப் பார்வைதான், பென்னியிடம். யாரையும் ஞாபகம் வந்தது போல் தெரியவில்லை. மகள் எஸ்தருக்கும், மகன் வினுவுக்கும், அப்பாவை இப்படிப் பார்க்க தாங்க முடியவில்லை. விட்டுச் செல்ல மனமேயின்றி, பள்ளி சென்றனர். அவர்கள் சென்றதும், வீட்டைப் பூட்டிவிட்டு, மருத்துவமனைக்கு வந்து விடுவாள், சில்வியா.
'வென்டிலேட்டர்' வைத்து, சுவாசத்திற்கு மாற்று செய்தாலும், விழிகள் உருள்வது தவிர, உடலில் சிறு அசைவும் இல்லை. டாக்டர்களுக்கும் நம்பிக்கை போய்விட்டது. ஊரே பரிதவித்தது. தெருக்காரர்கள் ஒருவர் மாற்றி ஒருவராக மருத்துவமனையில், பென்னிக்கு துணையாக தங்கினர்.
எவ்வளவு நாள்?
முடிவு தான் என்ன?
பென்னி பிழைத்தாலும், காய்கறியைப் போல் கட்டிலோடு கிடப்பானேயன்றி, எதுவும் நினைவில் வராது; பேச்சும் வராது என்று கைவிரித்தது, மருத்துவம்.
கட்டப்பனைக்குச் செல்லும் கடைசி பஸ் நேரமும், சுருளி அருவிக்குச் செல்ல சுருக்கு வழிகளும், சீலையம்பட்டி புளியமர நிழலில் விற்கும் இளநீர் விலையும் இனி, யாருக்கு யார் சொல்லப் போகின்றனர்!
இடிந்து போனது, குடும்பமும், கிராமமும்.
எ லும்பு துருத்திய உடலும், முகமெல்லாம் தாடியுமாக வற்றிப் போய் கிடந்தான், பென்னி. இனிமேலும், அவனைக் கட்டிப் போட்டு கஷ்டப்படுத்தாமல், வீட்டிற்கு அழைத்து செல்ல அறிவுறுத்தினார், டாக்டர்.
அதைப்பற்றி யோசித்தபடியே, பென்னியின் காலடியில் அமர்ந்திருந்தாள், சில்வியா.
ந ள்ளிரவு தாண்டி சுவர்க்கோழிகள் முனகிக் கொண்டிருந்த கருக்கல். ஜெபமாலையை உருட்டியவாறே கண்களை மூடி அமர்ந்திருந்தாள், சில்வி.
நினைவு வராவிட்டால் என்ன? கணவன் வீட்டில் கட்டிலோடு கிடந்தால் கூடப் போதும், யானைப் பலம் எனக்கு. இன்னும், இரண்டு நாட்களுக்கு பின் வீட்டுக்கு அழைத்து சென்று விடலாம் என்று எண்ணியவாறே தன்னையுமறியாமல் சற்றே கண்ணயர்ந்தாள், சில்வியா.
'ரகுமான் பாய் பொண்ணு, நஸ் ரீனுக்கு பேறுகாலம். ரோஸ்மேரியின் கன்றுக்கு போக, மீதி சீம்பாலை பாய் வீட்ல குடுத்துரு, சில்வி...'
அமைதியாக இருந்த ஆறாம் வார்டு சுவர்களில் முட்டி மோதி எதிரொலித்தது, பென்னியின் தீனக் குரல்.
கோழியின் கூவலுக்கிடையே, மேகத் துணுக்குகளைக் கிழித்தவாறே வெளிவந்து, விடியலைக் கொட்டினான், காலைக் கதிரவன்.
பென்னிக்கும், அது நற்காலை பொழுதாகவே விடிந்தது.
கீதா மகாதேவன்
வயது: 53, படிப்பு: இளங்கலை - இயற்பியல்.
பணி: பாரத ஸ்டேட் வங்கியில், சிறப்பு உதவியாளர்.
சொந்த ஊர்: மதுரை.
'வாரமலர்' இதழில், கவிதை மற்றும் இது உங்கள் இடம் பகுதிக்கு நிறைய எழுதியுள்ளார். வங்கி ஊழியர்களுக்கான உள்சுற்று இதழில், இவரது சிறுகதை மற்றும் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. தமிழில் நிறைய எழுத வேண்டும், திருக்குறள் மற்றும் பாரதியார் படைப்புகளின் சிறப்புகளை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என்பது, இவரது லட்சியம்.கதைக்கரு பிறந்த விதம்: நான் சந்திக்கும் மனிதர்களையும், அவர்களின் இயல்புகளையும் ஆர்வமாய் கவனிப்பேன். என் படைப்புகளை படிப்பவர்கள், சில நிமிடங்களாவது, அவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், நான் சந்தித்த ஒரு மனிதரின் பிரதிபலிப்பு தான் இக்கதை. போன்: 97895 73817
