sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஓய்வூதியம்!

/

ஓய்வூதியம்!

ஓய்வூதியம்!

ஓய்வூதியம்!

3


PUBLISHED ON : மார் 01, 2026

Google News

PUBLISHED ON : மார் 01, 2026

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்.

பெண் நீதிபதி, மாலா மாதவன், மெதுவாக குணசேகரன் பக்கம் திரும்பினார்.

''அய்யா உங்கள் பெயர்?''

''ஆர். குணசேகரன்!''

''வயது?''

''தொண்ணுாத்தி ஒன்று நடக்கிறது.''

''எங்கு பணிபுரிந்தீர்கள்?''

''மத்திய தபால்துறையில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்தேன்!''

''எப்போது பணி ஓய்வு பெற்றீர்கள்?''

''1994ல், ஓய்வு பெற்றேன். 31 ஆண்டுகளாக ஓய்வூதியம் பெற்று வருகிறேன்...''

''உங்களின் ஓய்வூதியத்தொகை எவ்வளவு?''

''அறுபதாயிரம் ரூபாய்!''

''உங்களின் மனைவி?''

''என்னுடன், 51 ஆண்டுகள் குடும்பம் நடத்திய என் மனைவி, 18 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்...''

''உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?''

''ஒரு மகன். பெயர், ஆதித்யன். தனியார் பள்ளியில் ஆசிரியனாக இருந்து ஓய்வு பெற்றவன். அவனுக்கு வயது, 65. அவனுக்கு, இரு மகள்கள். அவர்களுக்கு திருமணமாகி, நல்ல நிலையில் இருக்கின்றனர். நாலு கொள்ளுப்பேரன்கள் எனக்கு மகன் வழியே உண்டு,'' என்றார், குணசேகரன்.

''இதோ நிற்கிறாரே... இவர் தானே உங்கள் அன்பு மகன்?''

''மகன்... அவ்வளவே.''

''உங்கள் மகள் பத்தி சொல்லுங்கள்!''

''என்னுடைய மகளின் பெயர், வடிவுக்கரசி. வயது, 60. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றாள். அவளது கணவர் ஒரு ஆட்டோ மெக்கானிக். என் மகள் கணவர், மகன், மகள் குடும்பத்தாரோடு இருக்கிறார்...''

''இதோ நிற்கிறாரே... இவர் தானே உங்கள் மகள், வடிவுக்கரசி!''

''ஆம்!''

''பெரியவரே! நீங்கள் சொந்த வீட்டில் வசிக்கிறீர்களா, வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா?''

''வாடகை வீட்டில் வசிக்கிறேன். சொந்த வீட்டை விற்று இருபங்குகளாக பிரித்து, மகன், மகளுக்கு சமபங்குகளாக கொடுத்து விட்டேன்!''

''நீங்கள் சமைத்து சாப்பிடுவீர்களா அல்லது கடையில் வாங்கி சாப்பிடுவீர்களா?''

''பெரும்பாலும் சமைத்து சாப்பிடுவேன்!''

''சைவமா, அசைவமா?''

''பெரும்பாலும் சைவம் தான்!''

''குடிப்பழக்கம் உண்டா?''

''இல்லை!''

''சிகரட்?''

''ஐம்பது வயதுக்கு முன் புகைத்தேன். இப்போது இல்லை!''

''அறுபதாயிரம் ரூபாய், 'பென்ஷன்' வருகிறது. உங்கள் மனைவி இறந்தவுடன் நீங்கள் மறுமணம் செய்திருக்கலாமே, ஏன் செய்யவில்லை?''

''என் மனைவியுடன், 51 ஆண்டுகள் குடும்பம் நடத்தி விட்டேன். திருப்திகரமான தாம்பத்யம். மறுமணம் செய்து, என் மனைவியுடன் இருந்த பொழுதுகளை காயப்படுத்த விரும்பவில்லை. நான் காமத்தை தாண்டிவந்து நீண்ட நாட்கள் ஆகின்றன...''

''உங்களுக்கு பி.பி., சுகர் இருக்கிறதா?''

''பி.பி., இல்லை. சுகர் பார்டர் லைன்.''

''உங்கள் பற்களின் ஆரோக்கியம் எப்படி?''

''முப்பத்திரெண்டில், முப்பது உறுதியாக நிற்கின்றன.''

''கடவுள் நம்பிக்கை உண்டா?''

''உண்டு.''

''வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டதுண்டா?''

''இல்லை. என் ஆயுளின் ஒவ்வொரு ஆண்டையும் இயல்பாக கடந்து போகிறேன். நுாறு வயது எனக்கு இலக்கல்ல. தற்போதைய என் இலக்கு, 92. அவ்வளவே.''

''உங்கள் மீது உங்கள் மகனும், மகளும் என்ன வழக்கு போட்டிருக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?''

''என் பென்ஷனில் பங்கு கேட்டிருக்கின்றனர்...''

''என்ன காரணம் கூறி இருக்கின்றனர் தெரியுமா?''

''தொன்னுாறு வயதுகாரனுக்கு தேவைகள் குறைவு. மாதம், 20 ஆயிரம் ரூபாய் அவருக்கு போதும். தேவையில்லாமல் ஊர் சுற்றுகிறார். முகநுால் தோழிகளுக்கு செலவு செய்கிறார். இன்ஸ்டாகிராமில், 'ரீல்ஸ்' போடுகிறார். தனியாக வெளிநாடு போகும் எங்கள் தந்தைக்கு, போன நாட்டில் எதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? எனவே, அவர் வெளிநாடு செல்ல தடை போடுங்கள். பென்ஷனை மூன்று பங்குகளாய் பிரித்து, இரண்டு பங்குகளை எங்களுக்கு அளிக்க உத்திரவிடுங்கள்- என, கேட்டிருக்கின்றனர், ஜட்ஜம்மா!''

''ஒரு ஓய்வூதியரின் ஓய்வூதியத்துக்கு யாரார் உரிமை கொண்டாடலாம் என, உங்களுக்கு தெரியுமா, குணசேகரன் சார்?''

''ஒரு ஓய்வூதியரின் விதவை மனைவி அல்லது விதவன். திருமணமாகும் வரை அல்லது சம்பாதிக்கும் வரை, 25 வயதுக்குட்பட்ட தத்து மகன். உடல் மற்றும் மனதால் ஊனமுற்ற பிள்ளைகள். கணவரை இழந்த, விதவை அல்லது விவாகரத்து பெற்ற மகள். ஓய்வூதியரை சார்ந்திருக்கும் அவரது பெற்றோர் முதலில் தாய் அடுத்து தந்தை. திருமணமாகாத ஓய்வூதியரின் ஊனமுற்ற சகோதரர் அல்லது சகோதரி...''

''உங்கள் மீது வழக்குபோட்ட உங்கள் மகனும், மகளும் இந்த கேட்டகிரியின் எதாவது ஒன்றின் கீழ் வருகின்றனரா?''

''இல்லை.''

''உங்கள் மகன், மகளின் மனுவை விசாரிக்காமலேயே நான் தள்ளுபடி செய்திருக்கலாம். ஆனால், நான் இந்த வழக்கின் மூலம், சமுதாயத்திற்கு சில செய்திகளை சொல்ல விரும்புகிறேன். 'பை தி பை' நான் குணசேகரன் சாரின் முகநுால் பதிவுகளை பின் தொடர்கிறேன்,'' என்றார், பெண் நீதிபதி.

வடிவுக்கரசியும், ஆதித்யனும் நெளிந்தனர்.

அவர்களின் வழக்கறிஞரை பார்த்து, ''நீங்களாவது மனுவை தாக்கல் செய்யாது அவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி அனுப்பி இருக்கலாம்,'' என்றார், பெண் நீதிபதி.

''அவங்க பிடிவாதமா இருக்காங்க, மை லார்டு!'' என்றார், வழக்கறிஞர்

''ஓய்வூதியம் என்பது ஓய்வூதியருக்கு தரப்படும் அன்பளிப்போ, நன்கொடையோ, தேவையற்ற வீண்செலவோ அல்ல. ஒரு ஓய்வூதியர், பணி ஓய்வுக்கு பின், தன்மானத்துடன், சுதந்திரமாய் சொந்தக்காலில் நிற்க ஓய்வூதியம் பயன்படுகிறது. அவருக்கு மாதம், 20 ஆயிரம் ரூபாய் போதும் என, முடிவு செய்ய நீங்கள் யார்?

''உங்களிருவரையும் வளர்த்து ஆளாக்கி, படிக்க வைத்து, திருமணம் செய்வித்து, முழு குடும்பஸ்தன் ஆக்கியது உங்கள் தந்தை. அந்த விதத்தில், அவர் ஒரு நல்ல தந்தை. உங்கள் தாயாருடன், 51 ஆண்டுகள் குடும்பம் நடத்தி, மனைவியின் நினைவுடனேயே வாழும் அவர் ஒரு நல்ல கணவர்.

''முகநுாலில் உங்கள் தந்தைக்கு, 5000 முகநுால் நண்பர்களும், ஒரு லட்சம், 'பாலோயர்சும்' இருக்கின்றனர். முகநுால் பெண்கள் உங்கள் தந்தையை, 'அப்பா' என்று தான் அன்பொழுக அழைக்கின்றனர்.

''உங்கள் தந்தை கடந்த, 30 ஆண்டுகளில் எனக்குத் தெரிந்து, 24 நாடுகள் சுற்றி வந்திருப்பார். அவர் உங்களைப்போல கிணற்றுத்தவளை அல்ல. பயணம், ஒரு மனிதனை ஒரு சர்வதேச மனிதனாக்கும்.

''யாருக்கும் எதுவும் சாசுவதம் அல்ல. 20 வயதிலும் மரணம் வரலாம். 40 வயதிலும் மரணம் வரலாம். மரணத்தை எதிர்பார்த்து ஒரு மனிதன் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க சொல்கிறீகளா? உங்கள் தந்தையின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை அ வரது முகநுால் அன்பு நெஞ்சங்கள் பாதுகாப்பாக்கின்றனர்.

''இந்திய ஆண்களின் சராசரி வயது, 67. இந்த வயதுக்கு மேற்பட்டவர்களை முதுமக்கள் தாழியில் போட்டு மூடி விடலாமா?

''உங்கள் தந்தை ஓய்வூதியம் பெறாதவராக இருந்தால், அவரை உங்களில் யார் பாதுகாப்பீர்கள்? அது ஒரு மிகப்பெரிய கேள்வி.

''அவரிடத்தில் நான் இருந்திருந்தால் வீட்டை விற்று உங்களுக்கு பங்கு கொடுத்திருக்க மாட்டேன். முழு பணத்தையும் வைத்து உலக சுற்றுலா கிளம்பி இருப்பேன்.

''யாரை பார்த்து பொறாமைப்படுவது? பெற்ற தந்தையை பார்த்தா? லட்சத்தில் ஒருவருக்கு கோடியில் ஒருவருக்குதான், 90 வயதை தாண்டி ஆரோக்கியமாய் வாழும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரை பார்த்து பெருமைப்படுங்கள்.

''மிஸ்டர் ஆதித்யன்... நீங்களும் உங்கள் தந்தையைப் போலொரு பென்ஷனர். உங்கள் பென்ஷனை இரண்டாக பிரித்து, ஒரு பங்கை உங்கள் தந்தைக்கு தருவீர்களா?

''உங்கள் மனுவின் மீது நான் இரண்டு அம்சங்கள் கொண்ட தீர்ப்பை அளிக்கிறேன். குணசேகரன் அப்பா! இன்னும் நீங்கள் போகாத கனவு தேசம் எது?'' என்று கேட்டார். பெண் நீதிபதி.

''சுவிட்சர்லாந்து!'' என்றார், குணசேகரன்.

''நீங்கள் ஏஜென்ஸி மூலம் ஸ்விஸ் போய்வர எவ்வளவு செலவாகும்?'' என்று கேட்டார். பெண் நீதிபதி.

''இரண்டு லட்சம் ரூபாய்!'' என்றார், குணசேகரன்.

''உங்கள் கை செலவு சேர்த்து, இரண்டரை லட்சம் ரூபாய். ஒண்ணேகால் லட்சம் ரூபாய் உங்கள் மகனும், ஒண்ணே கால் லட்சம் ரூபாய் உங்கள் மகளும் அபராதம் கட்டி உங்களை, ஒரு விருப்ப தேதியில், ஸ்விஸ் நாட்டுக்கு அனுப்ப இந்த நீதிமன்றம் உத்திரவிடுகிறது. மேலும், ஐம்பதாயிரம் ரூபாயை இரண்டாவது அபராதமாக விதிக்கிறேன். மகள் 25 ஆயிரம் ரூபாய், மகன் 25 ஆயிரம் ரூபாய் எதாவது ஒரு முதியோர் இல்லத்திற்கு செலுத்த உத்தர விடுகிறேன். குணசேகரன் அப்பா! நேற்றைய உங்கள் பதிவுக்கு விருப்பக்குறியீடும், பின்னுாட்டமும் இட்டிருக்கிறேன், பாருங்கள்!'' என்றார், பெண் நீதிபதி.

நீதிமன்ற பார்வயாளர்கள் ஆர்ப்பரித்தனர்.

வடிவுக்கரசியும், ஆதித்யனும் வெட்கித் தலைகுனிந்தனர்.

தலைக்கு மேல் இரு கையுயர்த்தி பெண் நீதிபதியை வணங்கி, 'நன்றி மகளே...' என்றார், குணசேகரன்.

ஆல்ப்ஸ் மலை.

'ஆல்பஸ் மலையின் சிகரத்தில் அழகிய, ரைன்நதி ஓரத்தில் மாலைப்பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல...' சிவந்த மண் பட சிவாஜி கணேசன் போல் பாடிக் கொண்டு, பனிச்சறுக்கு செய்தார், குணசேகரன்.

காலம் களிநடனம் புரிந்தது.

ஆர்னிகா நாசர்






      Dinamalar
      Follow us