தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பின் தொடரும் காலம்!

பின் தொடரும் காலம்!

பின் தொடரும் காலம்!


PUBLISHED ON : ஜூலை 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 05, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலில் நடைப்பயிற்சிக்கான காலணிகளை அணிந்தார், வேணுகோபால். உள்பக்கம் பார்த்து குரல் கொடுத்தார்.

''திலகா. 'வாக்கிங்' கிளம்பறேம்மா. நீயும் வரியா?'' என்று, தன் மனைவியை அழைத்தார்.

''என்ன புதுசா கேக்கறீங்க? அதெல்லாம் உங்க ஏரியா. நான் வரலே.''

''வரும்போது அருகம்புல் ஜூஸ் இல்லேன்னா, வாழைத்தண்டு சூப் வாங்கிட்டு வரவா?''

''எனக்கு, 'செகண்ட் டோஸ்' காபி குடிச்சாத்தான், நல்ல நாளா இருக்கும். இது, உங்களுக்கும் தெரியும். இருந்தாலும், தினம் இந்தக் கேள்வி தேவையா? போயிட்டு வாங்க.''

அவர் புன்னகையுடன் கிளம்பினார்.

ச மையல் செய்து முடித்தாள், திலகா. வற்றல் குழம்பு, கத்திரிக்காய் காரக்கறி, பூண்டு ரசம். சட்டென்று சமையல் அறையை விட்டு வெளியில் வந்து, ஹாலில் உட்கார்ந்து கொண்டாள். கொஞ்சம் படுக்கலாமா என்று தோன்றியது.

அறைக்குள் இருந்து, வேணுகோபாலின் குரல் கேட்டபடியே இருந்தது. யாரோ நண்பர் ஒருவருடன் வெத்து அரட்டை. போன் அழைப்பு வரவில்லையென்றால், மொபைலை நோண்டிக் கொண்டிருப்பார்.

''திலகு, சூப்பரா ஒரு, 'இங்கிலீஷ்' படம் வந்திருக்கு. போகலாமா? 'டிக்கெட் புக்' பண்ணவா?'' என்று, இவள் பக்கம் திரும்பி கேட்டார்.

''கிண்டல்தானே உங்களுக்கு? எனக்கு என்ன புரியும், 'இங்கிலீஷ்' படத்துல?''

''சரி, தமிழ்ப்படம் ஏதாவது, 'புக்' பண்றேன். நாளைக்கு போகலாமா?''

''அதெல்லாம் ஒண்ணும் வேணாம். இந்த வாரம், 'நெஞ்சுக்குள் ரோஜா' சீரியல் முடியுது. என்னால், 'மிஸ்' பண்ண முடியாது. நீங்க போயிட்டு வாங்க.''

அவளுடைய போன் மணி அடித்தது.

மகன் பரத் அழைத்தான்.

அவனையே நேரில் பார்த்தது போல பரவசமாக இருந்தது.

பாய்ந்து எடுத்தாள்.

''எப்படிம்மா இருக்கே, என்ன பண்றே?'' என்றான்.

''நல்லா இருக்கேன்பா. இப்பதான் சமையலை முடிச்சேன். மணத்தக்காளி போட்டு வத்தக்குழம்பு. உன்னைத்தாண்டா கண்ணா நெனச்சேன். ரொம்பப் பிடிக்குமே உனக்கு. எப்படிடா கண்ணா இருக்கே?'' என்றாள்.

''நல்லா இருக்கோம்மா எல்லாரும். மிருணாவுக்கு, 'டீம் லீடர் புரமோஷன்' வருகிற மாதிரி இருக்கு. குட்டீஸ் ரெண்டு பேருக்கும், 'டான்ஸ் காம்படீஷன்'ல முதல் பரிசு கிடைச்சிருக்கு. எனக்கும், 'டார்கெட் அச்சீவ்ட்!' ரொம்ப சந்தோஷமா இருக்கு,'' என்றான்.

''எனக்கும் சந்தோஷம் கண்ணா. ஒரு நடை வந்துட்டுப் போகக் கூடாதா? ஒரு மாசமாச்சே உன்னை பார்த்து.''

''அதைச் சொல்ல தான், 'கால்' பண்ணேன், அம்மா. நாளைக்கு, சென்னை வர்றேன். 'சடனா' ஒரு செமினார். ஆபிஸ்ல, 'டிக்கெட்' போட்டுட்டாங்க. அரைநாள்ல முடிஞ்சுடும். ராத்திரி திரும்பிடணும், பெங்களூரு. மதியம் உன் கையால சாப்பாடு. ஓ.கே.,யா?''

''அப்படியா? ரொம்ப சந்தோஷம்டா தங்கம். எல்லாரையும் பாக்கணும்னு ஆசை தான். சரி, நீ வறயே... அதுவே சந்தோஷம் தான். வா கண்ணா.''

''அப்பா எப்படிம்மா இருக்காரு; என்ன பண்றாரு?''

''அவருக்கென்னப்பா? எப்ப பாரு சின்னப்பையன் மாதிரி, 'ஷார்ட்ஸ்' போட்டுகிட்டு, 'ஜாகிங், வாக்கிங்'ன்னு போயிக்கிட்டு இருக்கார். எப்பவும், 'வாட்ஸ்-ஆப்'பில் அரட்டை. சும்மாவே சாயங்காலம் வெளில போய் சுத்திட்டு வர்றது. இஷ்டத்துக்கு துாங்கறது, என்னவோ போப்பா.''

''சரிம்மா நாளைக்கு நேர்ல பார்க்கலாம். 'பை' அம்மா.''

''சரிடா கண்ணு. பத்திரமா வா.''

போனை வைத்து எழுந்தபோது, அவர் பெரிய 'ஜோக்' கேட்டவர் போல, விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

எரிச்சலாக வந்தது, அவளுக்கு.

அ டுத்த நாள், மகன் வந்ததும் கண்கள் நனைந்து விட்டன. துடைத்துக் கொண்டு அவனுக்கு ஆசையாகப் பரிமாறினாள்.

''செம்ம 'டேஸ்ட்'மா. புடலங்காய் பொரிச்சகுழம்பு, தக்காளி கொத்சு. நீதான், 'பெஸ்ட்'மா இதுல. 'தாங்க்ஸ்'மா. அப்பா எங்க போயிருக்கார்?'' என்று அள்ளி அள்ளி போட்டு சாப்பிட்டான், மகன் பரத்.

''மாடி அறையை, 'க்ளீன்' பண்றேன்னு போனார். கையில் ஒரு புத்தகம் வேறு; படிச்சுட்டு தான் வருவார்.''

''வரட்டும்மா. பாவம் படிச்சுட்டு வரட்டும்.''

''என்ன... பாவமா?'' என்று முகத்தை சுளிக்காத குறையாக, 'படபட'த்தாள்.

''சகிக்கலே பரத், அவர் பண்றதெல்லாம். நேரத்தை அப்படி, 'வேஸ்ட்' பண்றார். சும்மா போனில் அரட்டை, கடைத்தெருவுல அலைவது, டீயை கைல வெச்சுகிட்டு வானத்தை பார்ப்பது, 'ஷூ' எல்லாம் போட்டுக்கிட்டு சின்னப்பையன் மாதிரி, 'ஜாகிங்' செய்றதுன்னு ரொம்ப ஓவரா இருக்கு அட்டகாசம்.''

அவன் சிரித்தபடியே போய், கை கழுவி வந்து உட்கார்ந்தான். அம்மாவையும் அருகில் உட்கார வைத்து பேசினான்...

''எப்படி இருந்த அப்பா அவர், சொல்லு? பெரிய நிறுவனத்துல நல்ல பதவில இருந்தவர். அவரது ரெண்டு தங்கைகளுக்கு கல்யாணம் செய்யணும், என்னையும், தங்கை லீலாவையும் படிக்க வைக்கணும், வீடு கட்டணும், பணம் சேர்க்கணும், வயதான தாத்தாவை பாத்துக்கணும்... இப்படி எவ்வளவு பொறுப்புகளோட, அவர் இளமைக்காலம் கழிஞ்சதே, அம்மா?

''அப்போ, அவர் கையில் இருந்ததெல்லாம் சுய முன்னேற்ற புத்தகங்கள். வெற்றி பெறணும் என்ற வேகத்தில் ஓட்டம். அப்பாவுக்கு புத்தகங்கள் படிக்கணும்ன்னு அவ்வளவு ஆசை. ஆனால், வாழ்வின் தேவைக்காக அவர் படிச்சதெல்லாம் ஆபிஸ் தொடர்பான, 'டெக்னிகல்' படிப்பு. 4:00 மணிக்கே எழுந்து, 'பைல்'கள் பார்ப்பார். தொடர்ந்து, 'கால்' வந்துகிட்டே இருக்கும். ஆபிஸ்லயும் தொடர் சவால்கள், வேலைகள். வீட்டில் அவ்வளவு பொறுப்பான விஷயங்கள். எல்லாம் நல்லபடியாக செஞ்சு முடிச்சார், அப்பா.

''இப்போ ஓய்வுக்காலம். தனக்குப் பிடித்த புத்தகங்கள் படிக்கிறார். காலை நேரத்தில் நடைப்பயிற்சி, பறவைகள் பாடுவதை கேட்கிறார். சாயங்காலம் கடைத்தெருவில், 'வாக்கிங்' செல்லும்போது, உற்சாக மனிதர்களைப் பார்க்கிறார். இந்தப் பணத்தை எங்கே, 'இன்வெஸ்ட்' பண்ணலாம், எங்கே அதிக வட்டி கிடைக்கும் போன்ற பரபரப்புகள் இல்லாமல், வாசலில் வந்து நிற்கும் யாசகக்காரர்களுக்கு மனம் நிறைய கொடுக்கிறார்.

''இப்போ தான் அப்பா தன் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார். ஒரு கப் டீயை கையில் வெச்சுகிட்டு வானத்தைப் பார்க்கிறார்ன்னு சொன்னாயே. அது, அவருக்கு அருமையான அனுபவம் இப்போ. காலை வேளையில், நடைப்பயிற்சி செய்வது நல்ல நாளின் ஆரம்பம். ஆசைப்பட்ட, 'இங்கிலீஷ்' சினிமா பார்ப்பது சின்ன வயசு ஆசை. 30 வருஷ உழைப்பு அவரை சக்கையாக, பிழிந்து விட்டாலும், இப்போ தன்னை மெல்ல மீட்டு எடுத்து விட்டார், அப்பா.

''நண்பர்களிடம் பேசுவது, 'ஜோக்' அடித்து சிரிப்பது, தனியாக புத்தகம் வாசிப்பது, இது எதுவும் வீணாகும் நேரமில்லை, அம்மா. இந்த ஓய்வுக் காலத்தில், வாழ்க்கையை ரசித்து வாழும் நேரம் இது. அப்பா அப்படியே இருக்கட்டும். நீ, சரியாகப் புரிந்து கொண்டால் போதும்,'' என்று கூறி முடித்தான், மகன் பரத்.

திலகாவுக்கு ஏனோ கண்ணீர் வந்தது. மகன், பரத்தின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

- வி. உஷா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us