PUBLISHED ON : அக் 18, 2026

இரவு 10:00 மணி.
‛தம்பி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், பக்தர் ஒருவர் அன்னதானம் செய்ற வீடியோ ஒண்ணு, ‛யூடியூப்' ‛ஆப்'ல பார்த்தேன். அதுல நம்ம அம்மா, கோவிந்தம்மாள் வரிசையில நிக்கறது போல் தெரியுது. அதை உடனே பாரு....' என்று தன் தம்பி, தினேஷூக்கு போன் செய்தாள், அக்கா வித்யா.
தினேஷ் - வித்யாவின் அம்மாவும், அப்பாவும் காணாமல் போய் இன்றுடன், நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. தெரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சொல்லி, பல இடங்களில் விசாரித்தும் எந்த பயனும் இல்லை.
அம்மா, கோவிந்தம்மாளுக்கும், மருமகளுக்கும் ஒத்துவரவில்லை. மதுரையில் வசிக்கும் மகள், வித்யாவின் வற்புறுத்தலின் பேரில், அவளுடன் கொஞ்ச நாள் இருந்தனர். மகளுக்கு நான்கு வயதில், பனிமலர் என்று ஒரு மகள் உள்ளாள். மகள் வித்யா, அன்பானவள் தான். ஆனால், சில சமயம், ஆத்திரத்தில் அறிவிழந்து கடுமையான சொற்களால் காயப்படுத்துவது அவளுக்கு இயல்பாகி விட்டது. தான் செய்வது தவறு என்பதை பின்னர் நினைத்து வருந்துவாள்.
ஒருநாள், மதியம் 3:00 மணியளவில் சாப்பாட்டை முடித்து சற்று கண் யுர்ந்தாள், அம்மா கோவிந்தம்மாள். அந்த சமயத்தில், நடக்கத் துவங்கியிருந்த குழந்தை, பனிமலர், அருகிலிருந்த சோபாவிலிருந்து கீழே இறங்க முயற்சித்து, விழுந்து அலுறியது. உதட்டில், லேசாக ரத்தம் வடிந்தது. உடனே சமையலறையிலிருந்து ஓடிவந்த, வித்யா, தன் அம்மாவை மிகவும் கடிந்து கொண்டாள்...
‛தின்ன உடனே படுத்து தூங்கணுமா? நீ பிள்ளைய பாத்துக்குற லட்சணமா இது? உன்னால முடியலைன்னு சொல்லு. இனிமே நான் பாத்துக்குறேன். இதனால தான் உன் அருமை மகன் உன்னை துரத்திட்டான். நீ செத்து தொலையவும் மாட்டேங்குற....' என, தன்னிலை மறந்து, தன் தாயை திட்டி தீர்த்தாள்.
இந்த சத்தம் கேட்டு தனியறையில் படுத்திருந்த அப்பா, ரகுராம் வேகமாக வெளியே வந்து, என்ன என்று பார்ப்பதற்குள், ‛என்னப்பா, நீங்களாவது பாப்பாவை வச்சிருக்க கூடாதா? உங்க ரெண்டு பேருக்கும் சாப்பிட்ட உடனே படுத்து தூங்கணுமா?'
நடந்ததை புரிந்து கொண்டு, ரகுராம், ‛ஒண்ணுமில்லைம்மா, ஈரத்துணிய உதட்டுல வச்சா சரியாயிடும். சின்னப் பிள்ளைகள் நடை பழகுற சமயத்துல கீழே விழுறது சகஜம் தான். இதுக்குப் போய், ஏன் இப்படி கத்துற? கண்ணு, தாத்தாகிட்ட வா...' என்று குழந்தையை தூக்க முயன்ற தந்தையை நோக்கி ‛யாரும் என் புள்ளைய தொடாதீங்க. நானே பாத்துக்கிறேன்...' என சட்டென்று குழந்தையை தூக்கிக் கொண்டு சென்று விட்டாள்.
ஸ்தம்பித்து நின்ற, கோவிந்தம்மாளை பார்த்த, ரகுராம், ‛சரி விடுடி. இது என்ன நமக்கு புதுசா என்ன? நம்ம புள்ள தானே!'
கொடும் வார்த்தைகள், தீயை விட, அதிகமாக சுட்டெரிக்கும் என, வித்யாவிற்கு அப்போது தெரியவில்லை.
லேசான தூக்கத்திலிருந்த வித்யா, தம்பி தினேஷின், போன் அழைப்பை கேட்டு எழுந்தாள்.
‛அக்கா, நீ சொன்னது சரிதான். ‛யூடியூப்'ல நீ பார்த்த அந்த வீடியோவை வெளியிட்ட வசந்தன்கிட்ட பேசினேன். ரெண்டு நாளைக்கு முன்னால எடுத்ததாம், வழக்கமா வருணலிங்கம் திருக்கோவில் பக்கத்துல தான் அன்னதானம் போடுவதாக சொன்னார். இப்ப என்ன செய்யலாம்?'
‛நாங்க நாளைக்கு, ‛நைட்டு' கிளம்பி சென்னைக்கு வர்றோம். நாம நேரா திருவண்ணாமலை போயிடுவோம், தம்பி,' என்றாள், வித்யா.
‛வேண்டாம் அக்கா. நீங்க சென்னைக்கு வரவேண்டாம். விழுப்புரத்துல இறங்கிடுங்க. நான் கார்ல விழுப்புரம் வந்து, ‛பஸ் ஸ்டாண்டுல வெயிட்' பண்றேன். சேர்ந்து போயிடுவோம்.'
திட்டமிட்டபடி, கணவன் வினோத் மற்றும் மகள் பனிமலருடன் மதுரையிலிருந்து கிளம்பினாள் வித்யா.
பஸ் விடியற்காலை 5:00 மணியளவில் விழுப்புரம் பேருந்து நிலையம் அடைந்தபோது, தம்பி தினேஷ் தயாராக காத்திருந்து வரவேற்றான்.
அண்ணாமலையார் கோவிலில் பெரிய அளவில் கூட்டம் இல்லாமல் இருந்தது. தரிசனம் முடிந்து வெளிவந்து, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவரிடம், ‛கிரிவல பாதையில வருணலிங்கம் கோவில் எங்க இருக்கு?' என்று கேட்டு வண்டியை கிளப்பினான், தினேஷ்.
ஒரமாக வண்டியை நிறுத்திய போது, அங்கு, உணவுப் பொட்டலங்களை வரிசையில் நின்றவர்களிடம் வழங்கிக் கொண்டிருந்தார், அன்னதான ஆர்வலர் வசந்தன். அருகில் சென்று, வசந்தனிடம், தன்னை பற்றிய விபரங்களை கூறினான், தினேஷ்.
‛தம்பி, இங்க சாப்பாடு வாங்க வர்றவங்களோட ஊர், பேர் எனக்குத் தெரியாது. தினசரி நூறு பேருக்காவது, காலை அன்னதானம் செஞ்சுடுவேன். நீங்க தேடி வந்தவங்க, இந்த வரிசையில இருக்காங்களான்னு பாருங்க. இல்லாட்டி கொஞ்ச நேரம், ‛வெயிட்' பண்ணி பாருங்க. இன்னும் நிறைய பேர் வருவாங்க,' என்றார்.
வித்யாவும், அவளது கணவன் மற்றும் குழந்தையும் காரிலிருந்தபடியே, அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வீட்டில் இருக்கும் போது, அம்மா எப்போதும், ‛காட்டன்' சேலையுடன், கழுத்தில் தங்கத் தாலி மற்றும் கைகளில் வளையல்களுடன் மங்களகரமாக இருப்பாள். அப்பாவும், வீட்டிலிருந்தாலும் சரி, வெளியே சென்றாலும் சரி, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுமாக கம்பீரமாக இருப்பார்.
தினேஷ் அருகிலிருந்த, ‛சிமென்ட்' பலகை ஒன்றில் உட்கார்ந்து, போவோர் வருவோரை கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால், வரிசையில் நின்ற ஒல்லியான உடல்வாகு கொண்ட ஒரு பெண், தினேஷ் மீது வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தினேஷின் பார்வை தன் மீது விழுந்ததும், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். இதை எதேச்சையாக கவனித்த, தினேஷ் அருகில் சென்று அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்த மாத்திரத்தில், ‛அம்மா' என்றபடி கையைப் பிடித்து அழைத்து வந்து பெஞ்சில் உட்கார வைத்து, தானும் அருகில் அமர்ந்தான்.
மர நிழலில் நிறுத்தப்படிருந்த காரிலிருந்து இதை கவனித்த, வித்யா வேகமாக வந்து அருகில் அமர்ந்து கண் கலங்கினாள். தொடர்ந்து அவள் கணவரும், குழந்தையும் வந்து அருகில் நின்றனர். அம்மாவின் முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லை. குழந்தையை பார்த்து புன்னகைத்தாள்.
அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் மிகவும் மெலிந்திருந்தது. பொட்டு இல்லை, பூ இல்லை, கைகளில் ரப்பர் வளையங்கள் மட்டும் இருந்தன. கழுத்தில் மஞ்சள் தாலிக் கயிறும் இருந்தது. இரண்டு, மூன்று நிமிடங்கள் மவுனம் காத்த நிலையில், ‛அப்பா எங்கம்மா?' என்று ஆரம்பித்தாள் வித்யா.
அம்மாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
இந்த நிகழ்வை சற்று தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த, பெண் சந்நியாசி ஒருவர், இவர்களது அருகில் வந்து நின்றாள்.
‛நீங்க அவங்களோட, பெண்ணும், பையனுமா,' என்று கேட்டதற்கு, தலையை மட்டும் அசைத்தனர்.
அந்தப் பெண்ணே பேசத் துவங்கினாள்...
தன் பெயர் ராஜேஸ்வரி, ஊர் திருநெல்வேலி என்றும், அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து, ஓய்வுபெற்று, ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலை வந்து தங்கிவிட்டதாகவும், கணவர் இறந்துவிட்டதாக கூறி, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
‛இவங்க ரெண்டு பேரும் இங்க வந்து நாலு வருஷமாகுது. கட்டின துணியோட தான் வந்தாங்க. ஒரு வாரமா யாரோடையும் பேசல. எப்போ பார்த்தாலும் எதையோ பறி கொடுத்தது போல இருந்தாங்க. யாராவது சாப்பாடு கொடுத்தா மட்டும், வாங்கி சாப்பிடுவாங்க. அதோ அங்க இருக்கே தேவஸ்தானம் போட்டுக் கொடுத்த, ஷெட். அதுல தான் எல்லாரும் படுப்போம்.'
ஒருநாள் நானே இவங்ககிட்ட பேச்சு கொடுத்தேன். முதல்ல பேச தயங்கினாங்க. அப்பறமாக தான் நடந்ததை சொன்னாங்க. நாலு வருஷத்துக்கு முன்னால உங்க வீட்டுல நடந்த சம்பவத்தன்று, இந்தம்மா மனசு வெறுத்துப் போயி தூக்குப் போட்டு சாகப் போனதாகவும், பக்கத்துல படுத்திருந்த அய்யா சத்தம் கேட்டு எழுந்திரிச்சு, திட்டிட்டு, வீட்டை விட்டு போகும் முடிவை எடுத்து இங்க வந்துட்டாங்கன்னு சொன்னாங்க..
மறுபடியும், ‛அப்பா எங்கம்மா? ராஜேஸ்வரியம்மா நீங்களாவது சொல்லுங்க. எங்க அப்பா எங்கே?' என்று கேட்டாள், வித்யா.
‛வாங்க போவோம்' என்ற, ராஜேஸ்வரியின் பின்னால், வித்யாவும், தினேஷூம் சென்றனர். சற்று தூரத்தில் இருந்த கீத்துக் கொட்டைகை முன் நின்ற, ராஜேஸ்வரி, ‛உள்ள தான் தூங்குறாரு, போய் பாருங்க' என்றார்.
உடல் குறுகி, கருகிய மரக்கட்டை போல உடலில் சதையே இல்லாமல், எலும்புக் குவியல் போல படுத்திருந்தார், தினேஷின் அப்பா.
‛இல்ல, இது எங்க அப்பா இல்ல.. நீங்க வேற யாரையோ காட்டுறீங்க,' என்று, வித்யா, சத்தம்போட்டு அழ, தினேஷ் மட்டும் கொட்டகையின் உள்ளே சென்று புரட்டிப் பார்த்தான். ‛அப்பா' என்று கத்தியவன், அந்த உடலை அப்படியே தன் இரு கைகளாலும் தூக்கிச் சென்று, காரின் உள்ளே வைக்க முயன்றான். ஏதோ உணர்வு தட்டி, தன் பூஞ்சை அடைந்த கண்களால், தினேஷை அடையாளம் கண்ட மாத்திரத்தில், அவன் கையிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொண்டு, சொத்தென்று கீழே விழுந்தார்.
‛அய்யோ அப்பா...' என, வித்யா போட்ட சத்தம், அங்கிருந்த சன்னியாசிகளை அதிர வைத்தது. இப்போது கோவிந்தம்மாள் பேசினாள்...
‛ராஜேஸ்வரி, அவரும், நானும் எங்கேயும் வர்றதா இல்லை. எங்களோட இறுதிப் பயணம் இந்த அண்ணாமலையார் காலடியில் தான். அவரைத் தூக்கி மறுபடியும் அந்த கொட்டகையில் போட சொல்லுங்க' என்றாள்.
அங்கிருந்த சன்னியாசிகள் இருவர் சேர்ந்து மீண்டும் அப்பாவை, அதே கீத்துக் கொட்டகையினுள் சேர்த்தனர்.
வித்யா, தன் அம்மாவின் கால்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, ‛அம்மா வாம்மா. அடம் புடிக்காதேம்மா. எங்க உயிரே நீங்கதாம்மா. உன் பேத்திய பாரும்மா. மனசு மாறி வாம்மா. வண்டியிலே ஏறும்மா. அப்பாவ ஆஸ்பத்திரியில சேர்ப்போம். வாம்மா,' என்று, கெஞ்சினாள். எனினும் அசைந்து கொடுக்கவில்லை, கோவிந்தம்மாள்.
நீண்ட யோசனைக்கு பின், ‛இவங்களை நாளைக்கு வர சொல்லுங்க, ராஜேஸ்வரி. நான் என்னோட முடிவை சொல்றேன்' என்றாள் கோவிந்தம்மாள்.
‛தம்பி, உங்க அம்மாவுக்கு யோசிக்க ஒருநாள், ‛டைம்' கொடுங்க. நாளை காலையில, இதே நேரத்துக்கு இங்க வாங்க. நானே வழியனுப்பி வைக்கிறேன்,' என்றாள், ராஜேஸ்வரி.
பேத்தியை தன் அருகே அழைத்து தலை மீது கை வைத்து ஆசீர்வதித்தாள், பாட்டி கோவிந்தம்மாள்.
சென்னைக்கு போய், தினேஷ் வீட்டில் இரவு தங்கிவிட்டு, மறுநாள் விடியற்காலை ஐந்து மணிக்கு மீண்டும் திருவண்ணாமலை புறப்பட்டனர்.
மிக சரியாக, 8:30 மணிக்கு, கிரிவலப் பாதையில் நேற்று சந்தித்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். வழக்கம் போல சமூக ஆர்வலரின் அன்னதான நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அருகில் இருந்த, ‛சிமென்ட்' பலகையில், ராஜேஸ்வரி மட்டும் அமர்ந்திருந்தார். ஆனால் அங்கு அம்மா இல்லை.
‛வணக்கம், ராஜேஸ்வரியம்மா,' என்ற வித்யாவின் குரல் கேட்டு நிமிர்ந்தாள், ராஜேஸ்வரி.
‛வாங்க கண்ணுங்களா. உட்காருங்க.'
தம்பி தினேஷ்தான் முதலில் ஆரம்பித்தான். ‛அம்மா இன்னும் வரலையா, மேடம்? இப்ப எங்கிருப்பாங்க? அப்பாவோட குடிசையிலா? வாங்க போவோம்.'
ராஜேஸ்வரியிடமிருந்து எந்த பதிலும் வராததால், குடிசை இருந்த இடத்திற்கு வேகமாக நடந்தான். வித்யாவும் பின் தொடர்ந்தாள். ஆனால், அங்கு யாரும் இல்லை. ‛டென்ஷன்' ஆன, தினேஷ், ராஜேஸ்வரியிடம், ‛ஒழுங்கா உண்மையை சொல்லுங்க. எங்க அம்மா, அப்பா எங்கே? சொல்லாட்டி போலீஸ்ல புகார் பண்ணுவேன்,' என்றான்.
வித்யாவும், ‛ராஜேஸ்வரியம்மா உங்க கால்ல விழுந்து கும்பிட்டு கேக்குறோம் ப்ளீஸ்! அவங்க எங்க?'
நீண்ட யோசனைக்கு பின், பேசினாள் ராஜேஸ்வரி...
‛இனிமேலாவது பிள்ளைகளோட சேர்ந்து சந்தோஷமா இருன்னு நான் எவ்வளவோ எடுத்து சொன்னேன். முதல்ல சரின்னு சொல்லிட்டு, உங்கப்பாவுக்கு சாப்பாடு கொடுத்திட்டு படுத்திட்டோம். ‛நைட்' ரெண்டு மணி வாக்குல ஒரு ஆட்டோவை கூப்பிட்டு உங்கப்பாவையும், துணி பையும் எடுத்துக்கிட்டு கிளம்பி போயிட்டாங்க. போகும் போது, ‛யாராவது வந்தா எங்களைத் தேடாதீங்கன்னு சொல்லிடுங்க, ராஜேஸ்வரி'ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க தம்பி. இந்த விஷயம் இங்க உள்ளவங்களுக்கு எல்லாருக்கும் தெரியும்.'
‛தம்பி என்னால முடியலடா. கடவுள் கொடுத்த வைரங்களை சாக்கடையில் போட்டுட்டு. இப்ப தேடி என்ன பிரயோஜனம்? அவ்வளவுதாண்டா,' என்று வெறுத்துப் போய் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள், வித்யா.
‛தம்பி எங்களை விழப்புரம் பஸ் நிலையத்திற்கு சென்று, மதுரைக்கு பஸ் ஏத்தி விட்டுடுடா' என்றாள், வித்யா.
காரை விழுப்புரம் நோக்கி ஓட்டினான், தினேஷ்.
அதே நேரத்தில், ஒரு கேரி பேக்கில் இரண்டு உணவுப் பொட்டலம் மற்றும் ஒரு தண்ணீர் பாட்டிலுடன் மெயின் ரோட்டைக் கடந்து, வருணலிங்க திருக்கோவில் பின்புறம் உள்ள வேறொரு குடிசை வாசலில் இருந்த கம்பியில் மாட்டிவிட்டு, இரண்டு முறை கதவை தட்டி விட்டு, திரும்பிப் பார்க்காமல் நடந்தாள் ராஜேஸ்வரி.
அந்த மென்மையான இரு சிறகுகள், அண்ணாமலையாரின் மலை முகடுகளிலேயே வலம் வரட்டும்.
எம்.ஜி.விஜயராகவன் கோபால்சாமி
வயது: 67
படிப்பு: பி.ஏ., வரலாறு, டிப்ளமா இன் பிசினஸ் ஆண்டு எக்ஸ்போர்ட்ஸ்.
பணி: நூல் வியாபாரம்
சொந்த ஊர்: சிவகாசி.
இவர் எழுதிய சிறுகதைகள் பல தமிழ் வார இதழ்களில் வெளியாகியுள்ளன. தான் எழுதி சிறகதைகளை தொகுத்து, சிறகதை தொகுப்பு நூலாக வெளியிட வேண்டுமென்பதும், சிறவர்களுக்கான சிறகதைகள் எழுதுவதும் தன் லட்சியம் என்கிறார்.
கதைக்கரு பிறந்த விதம்: திருவண்ணாமலை கிரிவல பாதையில் இருக்கும் சன்னியாசிகளின் நிலையை பார்த்ததிலும் கேட்டதிலும் பிறந்த கரு இது.
போன்: 94433 75025
