
காலை, நேரம்... வேப்ப மரத்தில் இருந்த பறவை ஜன்னல் அருகே வந்து நின்று மெல்லிய ராகம் எழுப்பியது.
மெல்ல எழுந்து கண்களை லேசாக கசக்கி, கைநீட்டி ஜன்னலை திறந்தாள், புவிதா.
'உன் புதிய தினத்தை அழகாக துவங்கி வைத்து விட்டேன்!' என்று சொல்லாமல் சொல்லி, விருட்டென பறந்தது, அந்தச் சின்னஞ்சிறு வண்ணப்பறவை.
காபி அருந்தியபின், கணவன், அருணுக்கு பிடித்த, கொள்ளு ரசம், கீ ரைஸ், கத்திரிக்காய் கிரேவி என்று சமையலறை, புவிதாவுக்கு புது உற்சாக உலகமாக மாறியது. 'இன்று ஆரஞ்சு நிற குர்த்தி போட்டுக் கொள்ளலாம். அருணுக்கு பிடிக்கும்...' என்று அவள் நினைக்கும் போது, மொபைல் போன் ஒலித்தது...
''மிஸ் புவிதா, அந்த, 'வியன்னா புராஜெக்ட்' இந்த வாரத்துக்குள்ளே முடிக்கணும். உங்க, 'டீம் மெம்பர்ஸ்' மூணு பேர் கிட்டேயும், 'ஸ்ட்ரிக்ட்'டா இருங்க. கம்பெனி இதை ரொம்ப கவுரவ பிரச்னையா பாக்குது. கண்டிப்பாக செய்து முடிச்சுடணும்,'' என்றார், கம்பெனி மேலதிகாரி.
'' ஓ.கே., சார்.''
'' புவி, இது பர்சனலா, உங்களுக்கு லாபகரமாக கூட இருக்கலாம். தென்மாநில தலைமை பொறுப்பும் உங்களுக்கு கிடைக்க கூடும்,'' என்றார்.
''அப்படியா? 'தாங்க் யூ, சார்!' நிச்சயமா இதில் ஜெயிக்கிறேன்,'' என்று சொல்லி மொபைலை கீழே வைத்தாள், புவி.
அப்போது கட்டிலிலிருந்து எழுந்து வந்தான், கணவன், அருண்.
''குட் மார்னிங், அருண்,'' என்று இவள் சொன்னதை காதில் வாங்காதது போல கொட்டாவி விட்டுக் கொண்டே குளியலறைக்கு போனான்.
''காபி, அருண்.''
''ம்...''
''இன்னிக்கு சமையல் செய்யும் தேவி அக்கா லீவு. சமையலை நான்தான் செய்தேன்,'' என்றாள், புவி.
''ஓ, சாப்பாட்லே உப்பை அள்ளிக் கொட்டலையே,'' என்று சிரித்தான், அருண்.
''கொள்ளு ரசம் ரொம்ப நாளா கேட்டீங்களே. இன்னிக்கு, செய்திருக்கேன், அருண்.''
''ம்... கொள்ளு ரசம் சரி, வேற என்ன
சமைச்சே.''
''கீ ரைஸ், வித் கத்திரிக்காய் கிரேவி,'' என்றாள், புவிதா.
'' ஓ.கே. , ஓ.கே. , ஆமா... ராத்திரி ஏன் ரொம்ப நேரம், ரூம்லே, லைட் எரிஞ்சுது?''
''அதுவா அருண்... எங்க 'டீம்' கைல, 'வியன்னா புராஜெக்ட்' இருக்கு. கொஞ்சம், 'சென்சிடிவ்'வான, அதே சமயம் ரொம்ப, 'ரிச் புராஜெக்ட்.' அதான், 'ஒர்க்' பண்ணிக்கிட்டிருந்தேன்.''
''வெளியே, 'ஹால்'ல உக்காந்து பண்ண வேண்டியது தானே? வெளிச்சம் என்னை தொந்தரவு செஞ்சது. துாக்கம் சரியா இல்லே; இன்னும் கொஞ்ச நேரம் துாங்கிட்டு, கம்பெனிக்கு லேட்டாதான் போகப் போறேன், புவி.''
''சரி, 'கேஸ் சிலிண்டர்' வரும்,'' என்றாள்.
''புவி, அதுக்காக முழிச்சுகிட்டு காத்திருக்க சொல்றியா?''
''சரி, நாளைக்கு, 'டெலிவர்' பண்ண சொல்றேன். இன்னொரு விஷயம், அருண்.''
''என்ன, சொல்லு,'' என்று இரைந்தான்.
''நம்ம, 'கார்டு பேமென்ட்' இன்னும் வங்கி கணக்குக்கு வரலேன்னு சொல்றாங்க. நான் பணம் கட்டியாச்சுன்னு சொல்லியும், அவங்க ஒத்துக்கவே இல்லே. கொஞ்சம் நீ, அவங்க கிட்ட பேசணும், அருண்.''
சட்டென்று அவளை, முறைப்பது போல பார்த்து, ''கொஞ்சம் துாங்கிட்டு போறேன்னு சொன்னது உனக்கு பொறுக்கலே. அதானே? இவ்வளவு தானா, இன்னும் எதாவது வேலை இருக்கா?'' என்று கோபமாக கேட்டான்.
''ஏன் திடீர்ன்னு இப்படி கத்தறீங்க, அருண்? என்னால் செய்ய முடிஞ்சத எல்லாம் செஞ்சுக்கிட்டுதானே இருக்கேன்? என் 'கன்ட்ரோல்'ல இல்லாத விஷயத்தை தானே உங்களுக்கு சொல்றேன்? இவ்வளவு கோபம் எதுக்கு இப்போ?'' என்றாள், புவி.
''ஓகோ, நான் கத்தறேன், சோம்பேறியா இருக்கேன், செய்ய முடிஞ்சதைக் கூட செய்யாம இருக்கேன். அதுதானே, நீ சொல்ல வர்றே! தெரியும் எனக்கு. கம்பெனில உன்னை தலையில துாக்கி வெச்சுகிட்டு ஆடறாங்க இல்லையா? அந்த திமிரை வீட்டுலயும் காட்டுவேன்னு தெரியும் எனக்கு,'' என்று எரிந்து விழுந்தவன், சடாரென காபி டம்ளரை வைத்து விட்டு, அறைக்கதவை அறைந்து சாத்தி, கட்டிலில் விழுந்தான், அருண்.
புவிக்கு கடுப்பாக இருந்தது. 'என்றைக்கு தான் இவர், நான் சொல்ற விஷயங்களை சரியாகப் புரிந்து கொள்ள போறாரோ...' என்ற கேள்வி எழுந்து, மெல்ல இரு சொட்டு கண்ணீரை உண்டாக்கி விட்டது.
அ லுவலக வளாகத்தில் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே போனாள், புவிதா.
'டீம்' ஆட்கள் வந்திருந்தனர். மூவரும் வேலையை உற்சாகத்துடன் ஆரம்பிப்பதை பார்த்தபோது, அவளுக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.
ஆனந்தி வந்து, ''இந்த குர்த்தி உடையில, நடிகை, தீபிகா படுகோன் மாதிரியே இருக்கே, புவி,'' என்று கிசுகிசுத்து விட்டுப் போனாள்.
மதியம் 1:00 மணி. பெரும்பான்மையான வேலைகளை முடித்து, சாப்பிடும் ேபாது, 'கீ ரைஸ்' கத்திரிக்காய் கிரேவி காம்பினேஷனை சுவைத்த, உடன் சாப்பிட்டவர்கள், புவிதாவை புகழ்ந்தனர். ஆனாலும், காலையில், அருண் காட்டிய உடல்மொழி மற்றும் வாய்மொழி அவள் நினைவில் வந்து கசப்பை கொட்டியது.
கணவன் அருண், எப்போது நக்கல் செய்வான், எப்போது காலை வாருவான், எப்போது கத்துவான் என்று கண்டுபிடிக்கவே முடியாது. இவ்வளவு படிப்பும், பதவியும், ஊதியமும், மதிப்பு மரியாதையும் அவனிடம் மண்டியிட்டு நிற்பது மாதிரியே இருக்கிறது. அவளை கீழே தள்ளி மிதித்து விட்டுப் போகிற அந்த அலட்சியம். 'எல்லாம் தெரியும், போயிட்டு போ...' என்ற அகம்பாவம். பாறையிலிருந்து நீர் கசிந்து கொண்டே இருப்பதை போல, உள்ளே கண்ணீர்த்துளி பெருகிக்கொண்டே இருந்தது அவள் மனதில்.
அப்ேபாது, அவள் மொபைல் போன் சிணுங்கியது. அவள் தோழி மிருதுளாவிடமிருந்து அழைப்பு...
''ஹலோ மிருதுளா, நீயா? ஆறு மாசம் ஆச்சே உன்னைப் பார்த்து. எப்படி இருக்கே? சர்ப்ரைஸ்,'' என்றாள், புவி.
''நெதர்லாந்து நாட்டில், மூணு மாதம், 'மென் சைக்காலஜி ஸ்பெஷல் கோர்ஸ்' படித்து முடித்து, சென்னை வந்து, நாலு நாள் தான் ஆச்சு, உன்னைப் பார்க்கணும்ன்னு ஒரே ஆர்வம். கிளம்பி வந்துட்டேன். உன், ஆபிஸ், 'ரிசப்ஷன்'ல தான் இருக்கேன், புவி.''
''என்ன, என் ஆபிஸ்லயா? இதோ வந்துட்டேன், மிருதுளா,'' என்றபடி விரைந்து வந்தாள்.
அவளை பார்த்ததும், அணைத்துக் கொண்டாள், மிருதுளா. சடாரென, நான்கு ஆண்டு கல்லுாரி நட்பு பூ வாசனையாய் வந்து குளிர வைத்தது.
''வா, கேன்டீன்ல, 'ப்ளாக் டீ' நல்லா இருக்கும். ஒட்டின மாதிரி காரிடார்ல நிறைய பன்னீர் பூக்களும் கொட்டிக் கிடக்கும், பார்க்க அழகா இருக்கும்,'' என்றபடி, தோழியின் விரல்களைப் பற்றிக்கொண்டு நடந்தாள், புவி.
''நீ மாறவே இல்லே, புவி. எ ப்பவும் மரம், பூ, செடி, வானம்ன்னு ரசனை,'' என்றாள், மிருதுளா.
''இல்லே, மிரு. நான், பழைய புவியா இல்லே,'' என்றாள், சோகத்துடன்.
''ஏன், அப்படி சொல்றே? புவி.''
''உன்கிட்ட சொல்றதுக்கு என்ன? என் மண வாழ்க்கையில் எனக்கு மனநிறைவு கிடைக்கலே. சின்ன விஷயத்திலும் அதிக மகிழ்ச்சி அடைகிற குணம் தான் எனக்கு. அப்படிப்பட்டவளை வாழ்க்கை குதறிப் போடுகிற மாதிரி இருக்கு, மிருதுளா.''
''உன் கணவன், அருண் பற்றி சொல்லு, புவி.''
''அருண், 'பேசிகலி' நல்ல மனிதர்ன்னு சொல்லலாம், 'யூனிவர்சிடி ராங்க் ஹோல்டர்!' நல்ல வேலை, எப்ப பார்த்தாலும் 'மீட்டிங்ஸ்!' வேலையை பிடிச்சு தான் செய்கிறார். நானும் அவரை ஊக்கப்படுத்தி, சந்தோஷப்படுகிற மாதிரி தான் நடந்து கொள்வேன். ஆனால், எப்பவும் ஏதோ, 'ஸ்ட்ரெஸ்'ஸாகவே இருக்கார். அதை என்கிட்ட, 'ஜஸ்ட் லைக் தட்' வெளிப்படுத்தறார். என் வேலையை மட்டந்தட்டிப் பேசுவது, ஏதாவது சொன்னா, கோபமாக பேசுறது. எனக்கு மட்டும், 'ஸ்ட்ரெஸ்' இல்லையா, மிரு?'' என, அவள் கொட்டி தீர்த்தாள், புவிதா.
''ம், ஓ.கே., ஓ.கே.,'' என்று சமாதானமாக சொல்லி, மெல்ல தொடர்ந்தாள், மிருதுளா...
''புவி, காலேஜ் காலத்தில் படிப்பை தாண்டி உனக்குப் பிடிச்சது, எது?''
''விளையாட்டு, மிரு. அதில் முக்கியமா, 'ஹர்டில்' ஓட்டப்பந்தயத்தில் தடைகளை தாண்டி ஓடுவது.''
''சரியா சொன்ன... ஏன், புவி அது உனக்கு பிடிக்கும்?''
''வெறுமே ஓடும் ஓட்டப்பந்தயத்தில் எனக்கு சவால்கள் இல்லைன்னு தோணும். தடைகளைத் தாண்டி, குதித்து, வேகம் குறையாமல் ஓடி, முதல் இடத்தைப் பிடிக்கும் போது கிடைக்கும் மனநிறைவே தனி, மிரு,'' என, தன்னை மறந்து சொன்னாள், புவி.
''சரியா சொன்னே. வாழ்க்கையிலும் அப்படித்தான். பெண்ணுக்கு சவால்கள் அதிகம். உலகம் பூராவும் பெண்களுக்கு இதே நிலைமை தான். குடும்பத்தையும் அரவணைத்து, நம் கனவையும் விடாமல், வாழ்க்கைத் துணையுடன் காதலும் செய்து, குழந்தைகளுடன் உ ற்சாகமாக ஓடி... இப்படி எத்தனை சவால்கள் பெண்ணுக்கு? பெண் சமுதாயத்துக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட, ஏற்பட பெண்ணுக்கான சவால்களும் அதிகமாகுது.
''இயல்பான வாழ்வில் கடினமானவை தான் என்றாலும், ஒவ்வொன்றையும் சந்தித்து வெற்றி பெறும்போது, அவளுக்கு கிடைக்கும் திருப்தி, அற்புதமான உணர்வு. சின்னச் சின்ன யோசனைகள், திட்டங்கள், செயல்கள் என்று அவள் ஒவ்வொன்றையும் தடைகளை தகர்த்து ஜெயித்து வரும்போது மனப்பூர்வமாக அவள் மகிழ்ந்து போகிறாள். ஆனால், ஆணுக்கு அந்த வாய்ப்பே இல்லை. தெரியுமா உனக்கு?'' என்றாள், மிருதுளா.
''என்ன சொல்கிறாய், மிரு? அவர்களுக்கு தான் எல்லாமே சுலபமாக கிடைத்து விடுகிறதே, தடையே இல்லாமல்?''
''அதுதான், பிரச்னையே, புவி. போராடிக் கிடைக்கும் வெற்றிக்கு தான் மதிப்பு. காத்திருந்து ஒன்றை அடைவதில் தான் திருப்தி. இரவு பகலாக உழைத்துப் படித்து முதல் வகுப்பில் தேர்வானால் தான் நிறைவு. ஆணுக்கு எல்லாமே, சுலபமாக கிடைத்து விடுகிறது. சோம்பேறித்தனம், இலக்கின்றி அலைதல், அவர்களே தங்களை கெடுத்துக் கொண்டால் தான் உண்டே தவிர, பெரும்பாலும் அவர்களுக்கு தடையற்ற வழிகளில் தான் நடை. அதுதான் சோர்வை கொடுக்கிறது; 'ஸ்ட்ரெஸ்'ஸாக மாறுகிறது.
''என்னடா இவள், நம் கூடவே இருக்கிறாள், ஆனால், அமைதியான வெற்றியாளராக இருக்கிறாள். எப்படி இது சாத்தியமாகிறது என்ற குழப்பம் ஆணுக்கு ஏற்படும். தடைகளைத் தாண்டி ஒவ்வொருத்தியும் வர முடியும் என்பதே அவனுக்கு ஆயாசமாக இருக்கிறது. சுயநலமாகவே இருந்து பழக்கப்பட்டவன், 'மல்டி போகஸ்'டாக ஒருத்தி கூடவே இருந்து ஜெயிப்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இந்த 'சைக்காலஜி'யை புரிந்து கொண்ட பெண்கள்...'' என்று, மிருதுளா சொல்லி நிறுத்தியபோது, அவள் கையைபிடித்து, ''குழந்தையைப் போல ஆணை கையாண்டு, புரிதலுடனும், புன்னகையுடனும் வாழ்வைக் கடப்பாள், பெண் சரியா?'' என்றாள், புவிதா.
இருவரும் சிரித்தனர்.
புவிக்கு, இப்போது பன்னீர்மரம் கூடுதலாக தன் மேல் மலர்களை சொரிவதைப் போல இருந்தது.
வி.சம்யுக்தா

