sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பிரார்த்தனை!

/

பிரார்த்தனை!

பிரார்த்தனை!

பிரார்த்தனை!


PUBLISHED ON : டிச 28, 2025

Google News

PUBLISHED ON : டிச 28, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனைவி போட்ட நிபந்தனை கடுமையாக இருந்தது. எந்தக் கணவனாலும் சரிபடுத்த முடியாது. அவள் நிபந்தனை விதித்து விட்டு போய், இரண்டு நாட்களாகி விட்டது.

இன்னும் அந்த வார்த்தைகள், காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

'இந்தாங்க, உங்கம்மாகிட்டே சொல்லி வையுங்க. நான் யார்கிட்டேயாவது பேசிக்கிட்டு இருக்கும்போது, தேடி வந்து வம்பு செய்வது, கையை நீட்டி, அடிப்பது போல பாவனை செய்வது, காதிலே கேட்க முடியாத அளவுக்கு திட்டுவதுமாக இருக்கிறார்.

'அதுக்கு மேல உங்க அக்கா வந்தா, 'சிவப்புத்தோலைக் காமிச்சி மயக்கிட்டா'ன்னு சுருக்குன்னு பேசுறாங்க. விட்ட குறைக்கு உங்க தங்கச்சி வேற வந்தா, 'புடிச்சாலும் புடிச்சா நல்ல புளியங்கொம்பைப் பார்த்து புடிச்சிட்டா...' என்று என் ஏழ்மை நிலையை குத்தி காமிக்கிறாங்க. என்னால தாங்க முடியல.

'நான் வேணும்ன்னா தனிக்குடித்தனம் வாங்க. அம்மாவும் வேணும்ன்னா வேற கல்யாணம் செஞ்சுக்கோங்க. நான் தடை சொல்லல. என்னைக்கு நான் சொல்றதை நிறைவேத்துவீங்களோ அன்னைக்கு நான் வர்றேன்...' என சொல்லி, பெட்டியில் துணிமணிகள் எடுத்து வைத்துப் போனவள் தான். ஒரு தகவல் இல்லை. போனில் பேசினாலும் எடுப்பதில்லை.

அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பதை உணர்ந்தான், பத்மநாபன். இருந்தாலும் பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை.

ப த்மநாபன் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை; மருத்துவமனையில் தான் நிச்சயிக்கப்பட்டது.

அதிக வேகம் ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ளாமல், பைக்கில் செல்லும் போது, விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். மயக்க நிலையிலிருந்து விடுபட்டு, கண் விழித்தவன், அங்கிருந்த செவிலியைதான் முதலில் பார்த்தான். அவ்வளவு தான்.

கனிவான பார்வைகள் பரிமாறின. அடிக்கடி, 'இந்தாங்க சிஸ்டர்...' என்று இவன் அழைக்க, 'என்னங்க மிஸ்டர்' என்று அவள் ஓடிவர, திருமண நிச்சய ஏற்பாடு வரை மனதளவில் காதல் வளர்ந்தது.

நாளடைவில், 'சிஸ்டர்' என்ற வார்த்தை மாறி, ராணி என்ற பெயரை உரிமையுடன் அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

அம்மா, சகோதரிகளிடமிருந்து எதிர்ப்பலைகள் வரும் என்று தெரிந்து, பதிவு திருமணம் செய்து கொண்டான்.

அதில் ஏற்பட்ட பூகம்பம் தான் இந்த பிரச்னைக்கு மூலக் காரணம். சீர்வரிசை பெற்று, கவுரவமாக மகனுக்கு திருமணம் செய்ய நினைத்த அவன் அம்மா, அகிலாண்டத்துக்கு, வேறு பிரிவை சேர்ந்த, ஏழை வீட்டுப் பெண்ணை திருமணம் செய்தது பிடிக்கவில்லை; உடன் பிறப்புகளுக்கும் பிடிக்கவில்லை.

பத்மநாபனின் காதல் ராணி, மற்றவர்களுக்கு எதிரியாகத் தென்பட்டாள். ராணியும், பத்மநாபனும் இந்த, ஐந்தாண்டுகள் முள்மேல் போட்ட பட்டுத் துணி போல வாழ்க்கை நடத்தினர்.

வறுமையில் பிறந்தாலும், தன்மானம் உண்டல்லவா. ஒரு கட்டத்தில், ராணிக்கு வெடித்து விட்டது. பத்மநாபனின் அன்புக்கு கட்டுப்பட்டு, வாழ்ந்து வந்தவள், மாமியார் மற்றும் நாத்தனார்களின் கொடுமை எல்லை மீற, பத்மநாபனுக்கு, நிபந்தனை விதித்து, தாய் வீட்டுக்கு போய் விட்டாள்.

கா லதேவன் இருவரையும், இரண்டு மாதங்கள் பிரித்து வைத்து விட்டான். இந்தப் பிரிவினை காலத்தில், தன் மனைவியை, முழுவதுமாக புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

முதல் வாரத்தில், குடும்பத்தில் சமையல் பிரச்னை ஆரம்பமானது. வீம்புக்கு, அம்மா சமைத்துப் போட்டாள். வெளியில், சந்தோஷமாக செய்தாலும், வேலை பளு அதிகரிக்க, துவண்டு போனாள்.

மகள்கள் இருவரும் அடிக்கடி வந்து, சிறு சிறு உதவிகள் செய்வது போல் செய்து விட்டு, சொத்து பாகம் பிரிப்பது எப்போது, என்று கேட்டு போயினர்.

மகன், மருமகள் மற்றும் மகள்கள் குணம் பற்றி ஆராயத் துவங்கினாள், அகிலாண்டம். இதில், தன்னுடைய பிடிவாதமான அரக்கத்தனமான குணம் வெளிப்பட்டது.

மருமகளை அழைத்து வர, அவளது தன்மானம், கவுரவம் இடம் கொடுக்கவில்லை. பத்மநாபனும், மனைவியாவது நிம்மதியாக இருக்கட்டும், அவளாக வரட்டும் என்று இருந்து விட்டான். நாத்தனார்கள் இருவரும் நாம் ஏன் வேலை செய்யணும் என்று ஒதுங்கி கொண்டனர்.

அகிலாண்டத்துக்கு நெருக்கடி. வேலை செய்ய முடியவில்லை. யோசித்து, யோசித்து, மயக்கம் வருவது போலிருந்தது. சமையல் கட்டில் பாத்திரங்கள் உள்ள பகுதியில், 'டமால்' என்று விழுந்தாள்.

சத்தம் கேட்டு, சமையலறைக்கு ஓடினான், பத்மநாபன். அங்கே வாயில் நுரை தள்ளி, மயங்கிய நிலையில் தரையில் விழுந்து கிடந்தாள், அகிலாண்டம்.

அவ்வளவு தான்...

குடும்ப டாக்டர், செவிலியர் மற்றும் சகோதரிகள் அனைவரும் ஒரு மணி நேரத்தில் கூடி விட்டனர்.

''பத்மநாபா, விஷயம், 'சீரியஸ்!' 'ஸ்ட்ரோக், பிரெயின் அட்டாக்' பக்கவாதம்ன்னு சொல்ற மாதிரியான, 'லிஸ்ட்'ல இருக்காங்க. மருத்துவமனையில், உடனே, 'அட்மிட்' பண்ணுங்க. ஒரு கால், ஒரு கை, செயல் இழந்த நிலை, பேசவும் முடியாது. சீக்கிரம் முடிவு எடுங்க,'' என்று சொல்லி, போய் விட்டார், டாக்டர்.

உடன் பிறந்த சகோதரிகள் இருவரும்,''டாக்டர் சொல்றபடி செய்யணும். உன் பொண்டாட்டிய வரச்சொல்லி பார்த்துக்கோப்பா,'' என்றனர்.

சற்றும் தயங்காமல் முடிவு எடுத்தான், பத்மநாபன். மனைவி ராணியை போன் செய்து கூப்பிட்டான். உடனே, பதில் வந்தது.

''இப்ப தான் என் ஞாபகம் வந்ததா?'' ஆதங்கத்தோடு கேட்டாள், ராணி.

''ராணி எப்பவும் உன் ஞாபகம் தான். ஆனா, இப்ப நீ வீட்டுக்கு உடனே வரணும்,'' என, கெஞ்சினான், பத்மநாபன்.

''உங்கம்மா கூப்பிட்டாங்களா, நீங்களே கூப்பிடுறீங்களா?'' என்று வைராக்கியத்துடன் கேட்டாள், ராணி.

''அம்மா தாண்டி கூப்பிட்டாங்க. நீ போட்ட நிபந்தனைக்கு கட்டுப்பட்டுட்டாங்க. இனிமே உன்னை திட்ட மாட்டாங்க. பக்கவாதத்திலே, கால், கை வராம, பேச முடியாம படுத்துக்கிடக்கறாங்க. வாடி சீக்கிரம்,'' என, மேற்கொண்டு பேச முடியாமல் வேதனையில் அழுதான், பத்மநாபன்.

''அடக்கடவுளே, இப்படியொரு தண்டனையா! இதோ வந்துட்டேங்க,'' என்றாள், ராணி.

ஒ ரு மணி நேர த்தில், தன் தோழியுடன் வீட்டிற்குள் நுழைந்தாள், ராணி.

கணவன், சோபாவில் படுத்தபடி, அரை துாக்கத்தில் இருந்தான். தன் தோழியுடன் அத்தை படுத்திருந்த அறை பக்கம் போனாள், ராணி.

அறையில் துர்நாற்றம் வீசியது. மூக்கைப் பொத்தியபடி, உள்ளே நுழைந்தனர். 'டிரிப்ஸ்' ஏறிக் கொண்டிருந்தது. படுக்கையில், மல ஜலம் கழித்து, மாமியார் அலங்கோலமாக கிடக்க, பதறி விட்டாள், ராணி.

தன், செவிலி பணியை உடனே ஆரம்பித்து விட்டாள். 'ஹீட்டர்' போட்டு, அறையிலிருந்த குப்பைகளை அகற்றி, பினாயில் போட்டு துடைத்தாள். பொருட்களை ஒழுங்குபடுத்தி, மாமியாரின் உடம்பை வெந்நீரால் துடைத்து, புது துணி மாற்றினாள். உடன் வந்த தோழியும், வேண்டா வெறுப்பாக பணி செய்தாள்.

''ஏன்டி உன்னை கொடுமைப்படுத்தின மாமியாருக்கு இப்படி பணிவிடை பண்ணனுமா?'' என்று கேட்டாள், தோழி.

''மாத சம்பளத்துக்கு தினசரி, 10 பேருக்கு பணிவிடை செய்யறோம். இப்போ, மனைவி, மருமகள் என்ற அந்தஸ்த்தில், வாழுற இடத்தில் பகைமையைப் பார்த்து பணி செய்யக்கூடாதுடி,'' என்று பொறுமையாக சொன்னாள், ராணி.

அரை மயக்கத்தில் இருந்த, அகிலாண்டம் சிறிது கண் விழித்து, மருமகள் செய்யும் பணிவிடைகளைப் பார்த்து கண்ணீர் பெருக்கினாள்.

''நான், கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். என் மாமியார் திட்டக்கூடாது, அடிக்கக் கூடாதுன்னு. ஆனா, இப்படியொரு தண்டனை கொடுத்திட்டாரே, கடவுள்,'' என்று முணுமுணுத்தாள், ராணி.

''ஏன்டி மக்கு, நம்ம டாக்டர், பாஸ்கர பாண்டியன் நோயாளிக்கு, 'அட்வைஸ்' பண்ணுனதை மறந்துட்டியா! அதிக உணர்ச்சி வசப்படுற, கோபம், பொறாமை, பிடிவாதம், கவலை, எதிர்வாதம் பண்ணுறவங்களுக்கு, 'ஸ்ட்ரோக், பிரெயின் அட்டாக், ஹார்ட் அட்டாக்'ன்னு பல வியாதிகள் சங்கிலித் தொடர்போல வரும்ன்னு சொல்வாரே. அந்தக் குறையெல்லாம் உன் மாமியாருக்கு இருக்கு, அதனாலே வந்தது தான்,'' என்றாள், தோழி.

இருவரும், அகிலாண்டத்தை பார்த்தனர். அகிலாண்டம், கண்களில் நீர் வழிய, ராணியைப் பார்த்து, தன் கோண வாயால், ''மன்...னி...ச்சு...டு...மா,'' என்றார்.

ராணி பாசத்துடன், மாமியார் கைகளைப் பிடித்து, ''அத்தே, உங்களுக்கு ஒண்ணும் ஆகாது, பயப்படாதீங்க. இன்னும், கொஞ்ச நாளிலே உங்களை குணமாக்கிடுவேன்; நான் பக்கத்திலே இருந்து பார்த்துக்கிறேன்,'' என்றாள்.

அருகில் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்த கணவனிடம், ''இனி நீங்க மனம் சங்கடப்படாம வேலைக்கு போங்க,'' என்றாள்.

மனைவியின் மனிதநேயத்தை எண்ணி, கண்கலங்கினான், பத்மநாபன்.

பெ.கிருஷ்ணன் புனைப்பெயர்: பாமா மணாளன், வயது : 83. படிப்பு : பி.யூ.சி., பணி : ஜோதிடம் மற்றும் கைத்தொழில். சொந்த ஊர் : ஸ்ரீவில்லிபுத்துார். இவர் எழுதிய சிறுகதைகள், பல்வேறு தமிழ் வார, மாத இதழ்களில் வெளியாகியுள்ளன. டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், இவர் எழுதிய சிறுகதை, முதல் மூன்று பரிசுக்குள் இடம் பெற வேண்டும் என்பது இவரது லட்சியம். க்ஷகதைக்கரு பிறந்த விதம்: உறவினர் ஒருவருக்கு நேர்ந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து, எழுதப்பட்ட சிறுகதை இது.






      Dinamalar
      Follow us