தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/புனையா ஓவியம்!

புனையா ஓவியம்!

புனையா ஓவியம்!

3


PUBLISHED ON : செப் 27, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2026

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்த மனநல மருத்துவமனையின், வார்டு எண் 9ன், இரும்பு கதவு திறக்கப்படும்போதெல்லாம், பினாயில், குளோரின் மற்றும் மனிதர்களின் தீராத வியர்வை வாசனை வெளியேறும்.

இங்கு நிலவும் மரண அமைதியும், சில சமயம் அதீத அலறல்களும், வெளி உலகத்தால் மறக்கப்பட்ட மனிதர்களின் எஞ்சிய அடையாளங்களாக காற்றில் மிதந்து கொண்டிருக்கும்.

அங்குள்ள ஒவ்வொரு இரும்பு கட்டிலுக்கும் ஒரு கதை உண்டு. ஆனால், அங்கே நோயாளிகள் வெறும், 'கேஸ் ஷீட்' எண்களாக மட்டுமே சுருக்கப்பட்டிருந்தனர்.

மா தத்தின் முதல் சனிக்கிழமை நோயாளிகளை, பார்வையாளர்கள் சந்திக்கும் நாள். வார்டின் மையத்திலிருந்த பெரிய இரும்பு ஜன்னலின் மறுபுறம் கூட்டம் அலைமோதியது.

உறவினர்கள், கொண்டு வந்த உணவுடன், ஒருவித குற்ற உணர்ச்சியும், கடமையும் கலந்த முகத்தோடு நின்றிருந்தனர்.

கட்டிலில் அமர்ந்திருந்த, மதிவாணன் மெல்ல எழுந்தான். ஒரு காலத்தில் நுண்கலை கல்லுாரியில் பேராசிரியராக இருந்தவன். அவனது கூர்மையான பார்வையும், கலைந்த தலைமுடியும், தாடியும் கம்பீரமாக இருந்தன.

அவனது இடது கையில் எப்போதும் ஒரு கற்பனையான துாரிகை காற்றில் சுழன்று கொண்டே இருக்கும். அதுதான், அவனது உலகத்தை அவனோடு பிணைத்திருந்தது.

அவனைக் காண்பதற்காக அவனது தம்பியும், அவன் மனைவியும் வந்திருந்தனர். ஜன்னலின் வழியே அவர்கள் கொடுத்த இட்லி பார்சலை வாங்கினான், மதிவாணன்.

''அண்ணே... டாக்டர்கிட்ட பேசினோம். குணமாக கொஞ்ச நாள் ஆகும்ன்னு சொல்றாங்க. மருந்து கரெக்டா சாப்பிடுங்க,'' என்ற, தம்பியின் குரலில் பாசத்தை விட, நிம்மதியே அதிகமாக இருந்தது.

அவனது தம்பி மனைவி, மதிவாணனை ஏதோ ஒரு விசித்திரமான மிருகத்தை பார்ப்பது போலத் தள்ளி நின்றபடி, பார்த்துக் கொண்டிருந்தாள்.

தம்பியின் கைகளைப் பார்த்தான், மதிவாணன். அவனது கையில், பளபளப்பான தங்கக் கடிகாரம் இருந்தது. அது, இவர்களது அப்பா, மதிவாணனுக்கு பரிசளித்தது. அதைத் தம்பி கட்டியிருந்ததைக் கண்ட கணத்தில், மதிவாணனின் கண்களில் ஒரு மின்னல் வெட்டி, மறைந்தது.

தம்பி தந்த பார்சலை அப்படியே தம்பியின் முகத்தின் மீது வீசிவிட்டு, தன் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி பயங்கரமாகச் சிரிக்கத் துவங்கினான், மதிவாணன்.

''பைத்தியம், இன்னும் அப்படியே தான் இருக்கு. கொஞ்சம் கூட, தெளியல. போலாம் வா...'' என, தன் கணவனை இழுத்துக் கொண்டு, அவசரமாக அங்கிருந்து நகர்ந்தாள், தம்பி மனைவி.

மதிவாணன் சிரிப்பை நிறுத்தி, சுவரை நோக்கி திரும்பிய போது, அவனது கண்கள் கலங்கியிருந்தன. ஆனால், அதை அங்கே பார்ப்பதற்கு எவருக்கும் மனமும் இல்லை; நேரமும் இல்லை.

பா ர்வையாளர்கள் நேரம் முடிந்து இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டதும், வார்டின் நிஜமான நரகம் தன் கொடூர முகத்தை மெல்ல வெளிப்படுத்த துவங்கியது.

அரசு மருத்துவமனையின் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததும், ஊழியர்களின் பற்றாக்குறையும் அந்த வார்டின் ஒவ்வொரு மூலையிலும் அப்பட்டமாக தெரிந்தன.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, செவிலியர்கள் இல்லாததால், ஒவ்வொருவரையும் மனிதநேயத்தோடு தனிப்பட்ட முறையில் கவனிப்பது, அங்கே சாத்தியமில்லாமல் இருந்தது. இந்த நிர்வாக நெருக்கடியால், ஊழியர்களின் கனிவு முற்றிலும் மறைந்து, வன்முறையும், அதிகாரமும் மட்டுமே அந்த இடத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன.

அ ந்த வார்டில், கவிதா என்ற பெண் மணி இருந்தாள். பிரசவத்திற்கு பிந்தைய கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட, இளம் தாய் அவள்.

தன் இரண்டு கைகளையும் ஏதோ ஒரு தொட்டில் போல அணைத்தபடி, 'என் பாப்பா அழுகுது. கொஞ்சம் பால் குடுத்துட்டு வந்திடுறேன்... என்னை விடுங்கடா...' என்று கதறி கொண்டிருந்தாள்.

அவளுக்கு ஆறுதல் சொல்லவோ, அவளது கைகளைப் பிடித்து தேற்றவோ அங்கே யாருக்கும் நேரமில்லை. வார்டு பாய்கள் அவளை ஒரு மனிதப் பிறவியாக கூட நினைக்கவில்லை.

இரண்டு தடித்த வார்டு பாய்கள், அவளை கரடுமுரடாக இழுத்து சென்று, இரும்புக் கட்டிலில் துாக்கிப் போட்டு, அவளது பிஞ்சு போன்ற கைகளையும், கால்களையும் கட்டிலின் இரும்புச் சட்டங்களோடு சேர்த்து, தடிமனான அழுக்குத் துணியால் இறுக்கிக் கட்டினர்.

வலி தாங்க முடியாமல் அலறினாள், கவிதா. 'ஏய் சத்தம் போடாம கெட...' என்று அதட்டியபடி, அவளது முகத்தில் அறைந்தான், ஒரு வார்டு பாய்.

அறை விழுந்த அதிர்ச்சியில், அவளது அலறல் அடங்கியது. அவளுக்கு ஒரு வீரியமிக்க அமைதி ஊசியை கனிவின்றி செலுத்திவிட்டு சென்றார், நர்ஸ்.

அடுத்த சில நிமிடங்களில், அவளது கண்கள் செருகி, உமிழ்நீர் உதட்டோரம் வழிய, உறக்கத்தில் வீழ்ந்தாள்.

இதுதான் அங்குள்ளவர்களின் தினசரி அவலம். உணர்வுகளின் கொந்தளிப்பை அன்பாலோ, உளவியல் ஆலோசனையாலோ தணிக்க இங்கே எந்த வசதியும் செய்யப்படவில்லை.

அதற்கு பதிலாக, மூளையின் நரம்புகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யும் ரசாயன மாத்திரைகளும், உடலை ஒடுக்கும் சங்கிலிகளுமே அதிகாரப்பூர்வமான தீர்வுகளாக இருந்தன.

ம திய உணவு நேரம் வந்தபோது, வார்டில் மற்றுமொரு அவலம் அரங்கேறியது. துத்தநாகத் தட்டுகளில் கொண்டுவரப்பட்ட உணவு, மனிதர்கள் உண்பதற்கேற்றதாக இல்லை. வேகாத அரிசிச் சாதமும், நிறமற்ற சாம்பாரும் தட்டுகளில் ஊற்றப் பட்டபோது, பல நோயாளிகள் அதை உண்ண மறுத்து, தட்டுகளை தட்டி விட்டனர்.

அவ்வாறு தட்டியவர்களை தடிமனான பிரம்பால் தாக்கினர், வார்டு பாய்கள். அடிக்கு அஞ்சி, பலர் தரையில் சிந்திய உணவை அள்ளி உண்ணும் கொடூரமும் நிகழ்ந்தது.

மதிவாணன் தன் தட்டில் இருந்த உணவை தொடவே இல்லை. அவனது உள்ளம் வெளியில் நடந்த துரோகத்தையும், உள்ளே நடக்கும் அராஜகத்தையும் எண்ணி வெந்து கொண்டிருந்தது. ஒரு மனிதன் தன் புத்தியை இழப்பதை விட, தன் சுயமரியாதையையும், மனித உரிமைகளையும் இந்தச் சுவர்களுக்குள் இழப்பது தான் மிகப்பெரிய கொடுமை என்பதை உணர்ந்தான், அவன்.

மா லை நேரம் வந்தபோது, வார்டுக்குள் வாராந்திர மின்வெட்டு ஏற்பட்டது. மாற்று மின்சார வசதி இல்லாததால், வார்டு முழுவதும் இருளில் மூழ்கியது.

இருள் சூழ்ந்ததும் நோயாளிகளின் பயம் பன்மடங்கானது. சிலர், இருட்டைக் கண்டு அலறினர். சிலர் விசித்திரமான ஒலிகளை எழுப்பி அழத் துவங்கினர்.

இரவு உணவு கூட வழங்கப்படாமல், பல நோயாளிகள் பசியோடும், பயத்தோடும் தங்கள் கட்டில்களில் சுருண்டு கிடந்தனர்.

மதிவாணன் இருட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கண்கள் இருளுக்குப் பழகியிருந்தன. அவனுக்குள் இருந்த கலைஞன் இப்போது மெல்ல விழித்துக் கொண்டான். மருந்துகளின் வீரியத்தால், அவனது மூளை மழுங்கடிக்கப்பட்டிருந்தாலும், அவனது ஆன்மாவில் எஞ்சியிருந்த கலை உணர்வு, அவனுக்குள் ஒரு புரட்சியைத் துாண்டியது.

அவன் மெதுவாக தன் கட்டிலிலிருந்து எழுந்து, வார்டின் மூலையில் இருந்த கழிவறைக்கு சென்றான்.

அங்கே சுவர்களில் இருந்த பழைய சுண்ணாம்புக் கட்டிகளையும், தரையில் கிடந்த ஒரு கரிக்கட்டையையும், உடைந்த, 'பிளாஸ்டிக் ஸ்பூன்' ஒன்றையும் தேடி எடுத்தான்.

அவனிடம் இப்போது துாரிகை இல்லை, வண்ணங்கள் இல்லை. ஆனால், அவனது இதயத்தில் தேங்கிக் கிடந்த துயரமே, அவனுக்குத் தேவையான சிறந்த வண்ணமாக மாறியது.

அவன் வார்டின் பிரமாண்டமான வெள்ளைச் சுவரின் முன் போய் நின்றான். நிலவொளி ஜன்னல் வழியே வந்து, அந்தச் சுவரை பளப்பளப்பாக காட்டியது.

மதிவாணனுக்கு அந்த சுவர், சாதாரண சுவராகத் தெரியவில்லை; பிரமாண்டமான ' கேன்வாஸ்' துணியாக தெரிந்தது.

அவன், தன் கையில் இருந்த கரிக்கட்டையை சுவரில் பதித்தான். அவனது மனதில் இருந்த ஓவியத்தின் வடிவம் வெளிப்பட்டது.

அந்த கூண்டுக்கு வெளியே, மனிதர்கள் விதவிதமான முகமூடிகளை அணிந்தபடி, உள்ளே இருப்பவர்களைப் பார்த்து, எள்ளி நகையாடுவது போல வரைந்தான்.

முகமூடிகளுக்கு பின்னால் இருக்கும் மனிதர்களின் போலித்தனத்தையும், சுயநலத்தையும் அப்பட்டமாக சுவரில் கொண்டு வந்தான்.

அடுத்து, அந்த இரும்புக் கூண்டுக்கு உள்ளே இருக்கும் மனிதர்களின் ஆன்மாக்களை அவன் வரையத் துவங்கினான்.

சிறகுகள் உடைந்த, குருதி வழியும் பறவைகளைப் போல அந்த ஆன்மாக்கள் கூண்டின் கம்பிகளுக்குள் சிறைபட்டுக் கிடப்பது போல வரைந்தான், மதிவாணன்.

அதன் நடுவே, கட்டிலில் கை கால்கள் பிணைக்கப்பட்டு கிடக்கும், கவிதாவின் வடிவத்தை, அவளது வறண்ட கண்ணீர் துளிகளோடு தத்ரூபமாக வரைந்தான்.

அவளது மார்பில் இருந்து, பால் சுரந்து, தரையில் வீணாகக் கொட்டுவது போலவும், அதை ஒரு காகம் குடிப்பது போலவும் வரைந்த ஓவியம் பார்ப்பவர் நெஞ்சை உலுக்குவது போலிருந்தது.

அடுத்து, தன் கையில் இருந்த தங்கக் கடிகாரத்தை வெறித்துப் பார்த்தபடி, அண்ணனைப் பைத்தியம் என்று முத்திரை குத்தும், ஒரு தம்பியின் துரோக முகத்தை வரைந்தான்.

அவன் வரைய, வரைய, அவனது விரல் நகங்கள் உடைந்து, அதிலிருந்து ரத்தம் கசிந்து சுவரில் வழியத் துவங்கியது.

ஆனால், அந்த வலியை உணரவே இல்லை, மதிவாணன்.

வார்டின் மற்ற நோயாளிகள் துாக்கத்தில் முனகிக் கொண்டிருக்க, இவன் மட்டும் உறங்காமல் வரைந்து கொண்டிருந்தான்.

விடியற்காலை, 5:00 மணிக்கு அவன் தன் ஓவியத்தை முடித்தான். சுவரில் ஒரு முழுமையான நரக லோகம், கலை வடிவமாக உயிர்பெற்று நின்றது.

தன் ரத்தம் படிந்த கைகளைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தான், மதிவாணன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவனுக்குள் ஒரு நிம்மதி ஏற்பட்டது. தன் கட்டிலுக்கு திரும்பி சென்று படுத்துக் கொண்டான். அவனது மனதின் பாரம் முழுவதும் அந்தச் சுவரில் இறங்கியிருந்தது.

கா லை 6:00 ம ணிக்கு வார்டின் பிரமாண்டமான இரும்புக் கதவுகள் திறக்கப்பட்டன. பகல் நேர ஊழியர்களும், செவிலியர்களும் உள்ளே நுழைந்தனர்.

வழக்கம் போலத் தலைமை மருத்துவர், ராகவன், இரண்டு உதவி மருத்துவர்களுடன் வார்டை ஆய்வு செய்ய உள்ளே வந்தார்.

அவர் வார்டின் மையப்பகுதிக்கு வந்தபோது, சுவரில் இருந்த அந்த பிரமாண்டமான ஓவியத்தை பார்த்து, அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.

அது வெறும் ஒரு பைத்தியக்காரனின் கிறுக்கல் அல்ல. அது, அந்த வார்டில் அடைப்பட்டிருக்கும் நுாற்றுக்கணக்கான ஆன்மாக்களின் ஒட்டுமொத்த அவலத்தின் சா ட்சியம். மருத்துவமனையின் உடைந்த கட்டமைப்பையும், ஊழியர்களின் வன்முறையையும், உறவினர்களின் துரோகத்தையும் அந்த ஓவியம் எந்தப் பயமுமின்றி உலகிற்கு பறை சாற்றியது.

ஓவியத்தின் ஒவ்வொரு பகுதியையும் உற்று நோக்கினார், மருத்துவர் ராகவன்.

கட்டிலில் பிணைக்கப்பட்டிருக்கும் பெண்ணின் ஓவியத்தை பார்த்தபோது, அவருக்கு தன் வார்டில் நடக்கும், கொடுமைகள் அப்பட்டமாக புரிந்தன.

''யார் இதை வரைந்தது?'' என, அதட்டலாக கேட்டார், மருத்துவர்.

ரத்தம் படிந்த கைகளோடு, தன் கற்பனைத் துாரிகையைக் காற்றில் சுழற்றியபடி, தன் கட்டிலிலிருந்து எழுந்து, கம்பீரமாக முன்னோக்கி வந்தான், மதிவாணன்.

அவனது கண்கள் மருத்துவரின் கண்களை நேராகப் பார்த்தன.

''நான் தான் வரைந்தேன். இதுதான் எங்கள் உலகம். இதை வெளியிலிருக்கும், புத்திசாலிகளுக்கு காட்ட முடியுமா உங்களால்?'' என்று அமைதியாக கேட்டான்.

அந்த ஓவியத்தையும், மதி வாணனின் ரத்தம் கசிந்த விரல்களையும் மாறி, மாறிப் பார்த்தார், மருத்துவர் ராகவன். அவருக்குள் இருந்த மனிதநேயம் விழித்துக் கொண்டது.

இந்த மனிதர்களுக்கு தேவை சங்கிலிகளும், மூளையை முடக்கும் ரசாயன மருந்துகளும், ஊழியர்களின் காட்டு மிராண்டித்தனமான வன்முறையும் அல்ல என்பதை உணர்ந்தார்.

தங்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு வடிகாலும், சக மனிதனின் கனிவான பார்வையும், முறையான மருத்துவ கட்டமைப்பும் தான் இவர்களுக்கு தேவை என்பதை அறிந்தார்.

''சார்... இதை உடனே வெள்ளையடித்து அழிச்சிடவா?'' என்று பிரம்போடு முன்னே வந்து, மருத்துவர் ராகவனிடம் கேட்டான், ஒரு வார்டு பாய்.

''இதை அழிக்க கூடாது; அப்படியே இருக்கட்டும். நம் தவறுகளை நமக்கு உணர்த்தும் கண்ணாடியாக இது இங்கேயே இருக்கட்டும்,'' என்றார் உறுதியாக, மருத்துவர்.

அவர் வார்டு பாய்களைப் பார்த்து, ''இனிமேல் எந்தவொரு நோயாளி மீதும் வன்முறை பிரயோகிக்கப்படக் கூடாது. மீறினால், வேலை நீக்கம் செய்யப்படுவீர்கள்,'' என்றும் எச்சரித்தார்.

மனநல மருத்துவமனையின் அந்தச் சுவரில், மதிவாணன் வரைந்த ஓவியம், அங்குள்ளவர்களின் மவுன அலறலையும், சிதைந்த வாழ்வையும் சொல்லும் அழியாத சாட்சியமாக மாறியது.

கு.மணி

சொந்த ஊர்: ஆண்டிப்பட்டி, தேனி மாவட்டம்.படிப்பு: எம்.காம்., பி.எட்., பி.லிட்., பணி விபரம்: ஆசிரியராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். தற்சமயம், எழுத்துத் துறையில் ஈடுபட்டிருப்பதோடு, மாணவர்களுக்கு போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறார். கதைக்கரு பிறந்த விதம்: பள்ளியில் இயங்கிய, இளம் செஞ்சிலுவை அமைப்பின் ஆலோசகராக இருந்தபோது, முதியோர் காப்பகம், ஆதரவற்றோர் இல்லம் மற்றும் சிறார்களின் அன்பு இல்லம் ஆகியவற்றுக்கு மாணவர்களை அழைத்து செல்வது வழக்கம். அப்படி ஒருமுறை, மனநல மருத்துவமனை ஒன்றுக்கு சென்றபோது, அங்கு காணப்பட்ட அவலங்களை பின்புலமாக கொண்டு இக்கதையை எழுதியாக குறிப்பிட்டுள்ளார், கதாசிரியர்.

இதுவரை, கதை, கட்டுரை மற்றும் கவிதை நுால்களை எழுதி, வெளியிட்டுள்ளார். எழுத்துப் பணிக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

நிறைய எழுத வேண்டும் என்பது இவரது லட்சியம்.

90438 32278

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us