PUBLISHED ON : ஜூலை 19, 2026

'டக் டக்...'
கதவை லேசாக தட்டும் சத்தம் கேட்டது.
என் அறைக்கதவையா தட்டுகின்றனர்? என் அறைக்கதவை தட்டும் அளவிற்கு, இங்கு யாருக்கு தைரியம் இருக்கிறது?
ஆச்சரியத்துடன் யோசித்த, நிர்வாக இயக்குனர், கதிர்காமன், 'எஸ் கம் இன்...' என்றார்.
படு ஸ்டைலாக உள்ளே நுழைந்த, ராணா என்கிற ரங்கநாதன், 'குட் மார்னிங்!' என்றான்.
ஆறடி உயரம்; உடற்பயிற்சி செய்யும் அளவான தேகக்கட்டு; மிக நேர்த்தியாக உடையணிந்து, மிடுக்காக இருந்தான்.
''ஓ... 'வாட் எ சர்ப்ரைஸ்' ராணா,'' என்றார்.
ராணா, அந்த கம்பெனிக்கு நிர்வாக இயக்குனராக, புதிதாக பொறுப்பேற்க போகும், இளைஞன்.
முன்னறிவிப்பு ஏதுமின்றி, திடீரென்று நேரடியாகவே ஆபிசுக்கு வந்து விட்டான், ராணா.
அவன் உட்கார்ந்திருந்த விதமே அவனுடைய தன்னம்பிக்கையையும், ஆளுமையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. கதிர்காமனின் முன், கால் மீது கால் போட்டு நாற்காலியில் சாய்ந்தவாறு மிகவும், 'ரிலாக்ஸ்'டாக அமர்ந்திருந்தான், ராணா.
'ஹும். இளைய தலைமுறை... மரியாதை தெரியவில்லை...' தனக்குள் நொந்து கொண்டார், கதிர்காமன்.
''சொல்லுங்கள் ராணா. எப்போது பொறுப்பேற்க போகிறீர்கள்?''
''இப்போதே, உங்கள் ஒத்துழைப்புடன்.''
ஒரு நிமிடம் பேச்சு நின்று போனது, கதிர்காமனுக்கு.
''இப்போதேவா?''
''ஏன்? ஏதாவது பிரச்னையா, கதிர்காமன்.''
''ஒன்றுமில்லை.''
அவசரமாக தன், 'செகரெட்டரி'யை கூப்பிட்டார், கதிர்காமன்.
''நம், புதிய எம்.டி., ராணா இப்போதே பொறுப்பெடுத்துக்கொள்ள வந்திருக்கிறார். நம், ஜி.எம்., 'செக்ரட்டரி' மற்ற துறை தலைவர்களை எல்லாம் கூப்பிடுங்கள். இவருக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும்,'' என்றார்.
''நாமே போய் அவர்களையெல்லாம் பார்த்து விடலாம்,'' என்றான், ராணா.
''சரி நாமே போகலாம்,'' என்றவர், தன் உதவியாளரின் பக்கம் திரும்பி, ''நான் அவரை அழைத்துக்கொண்டு போய் நம் அலுவலகத்தை சுற்றிக் காட்டி விட்டு வருகிறேன்,'' என்றவாறு, ராணாவிடம் திரும்பினார்.
''நாம் முதலில், 'செக்யூரிட்டி'யிலிருந்து ஆரம்பிக்கலாமே,'' என்றவன், நேரே, 'கேட்' அருகே சென்று விட்டான்.
'என்ன கஷ்டம் இது. போயும் போயும், 'செக்யூரிட்டி'யிடம் போயா முதலில் நிற்க வேண்டும்? இந்த, 20 வருஷத்துல ஒரு நாளாவது, நான் இந்த, 'கேட்' அருகே நடந்து வந்ததுண்டா? எல்லாம் என் நேரம்...' என்று நினைத்துக் கொண்டார், கதிர்காமன்.
குனிந்து நோட்டில் ஏதோ எழுதிக் கொண்டிருந்த, 'செக்யூரிட்டி' ஆபீசரை, 'ஹலோ' என்று தோளில் தட்டி, தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.
அடுத்து, 'ஹவுஸ் கீப்பிங்' மற்றும் 'டெஸ்பாட்ச்' உதவியாளர்கள் என்று வரிசையாக கீழ்மட்டத்திலிருந்து தொடங்கி, 'ஜெனரல் மேனேஜர்' வரை ஒருவர் விடாமல் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான்.
எழுந்திருக்க முயன்றவர்களை, உட்காரவைத்தே பேசினான். எல்லாருக்குமே இது முற்றிலும் புதிதாக இருந்தது.
''யாருக்கு என்ன பிரச்னையென்றாலும், எப்போது வேண்டுமானாலும், என்னிடம் நேரிலேயே முறையிடலாம்,'' என்றான், ராணா.
புன்னகையுடன் தான் சொன்னான். எனினும், அதில் ஓர் அழுத்தம் தெரிந்தது.
அப்பாடா, ஒருவழியாக முடிந்தது. ''போகலாமா?'' என்று கேட்டார், கதிர்காமன்.
''இங்க,'கேன்டீன்' இருக்கில்ல? அங்க போகலாம்,'' என்றான், ராணா.
'கேன்டீனில்' மதிய உணவு தயாராகிக் கொண்டிருந்தது. 'கேன்டீன்' உரிமையாளரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர் பெயரைக் கேட்டான்.
''காசி, சார்,'' என்றான்.
''குட், காசி. நான் சமையல் அறைக்குள் போய் பார்க்கலாமா?''
''எஸ் சார்.''
நேரே சமையல் அறைக்குள் நுழைந்தான். மதிய உணவுப் பட்டியலை வாங்கிப் பார்த்தான்.
''எல்லாவற்றிலும் கொஞ்சம் தட்டில் போட்டுக் கொடுங்கள்,'' என்றான்.
அரண்டு போயிருந்த, காசி புரியாமல் பார்க்க, கதிர்காமனின் விருப்பத்தையும் கேட்டு, ''நாங்கள் இங்கே மதிய உணவு சாப்பிடப் போகிறோம்,'' என்றான்.
இரண்டு தட்டுகளில் இருவருக்கும் உணவு வந்தது.
சாப்பிட்ட பின், காசியை அழைத்து, ''எப்போதும் இதே தரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 'கேன்டீன்' இதே மாதிரி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். ஓ.கே.,?'' என்று, தோள்மேல் கைபோட்டு, மனதாரப் பாராட்டி, கி ளம்பினான்.
காசிக்கு, தலைகால் புரியவில்லை; முகம் முழுவதும் மத்தாப்பு.
அ றைக்கு திரும்பிய கதிர்காமனிடம், ''யூனியன் மக்களை வரச்சொல்லுங்கள்,'' என்றான், ராணா.
''இப்பவேவா?''
''ஆமாம். தீபாவளி நெருங்குகிறதே... 'போனஸ்' பற்றி பேச வேண்டும்.''
'என்னது, 'போனஸ்' பற்றி, 'யூனியன்' மக்களுடன் பேசணுமா... அவர்களாக வந்து, பத்து முறை நேரம் கேட்டபின், கொஞ்சம் அலைய வைத்து, கடைசியில் கேட்பதில் பாதியைத் தர வேண்டும். இதெல்லாம் தெரியாமலே பதவியேற்க வந்து விட்டானே!'
''அது வந்து, மிஸ்டர் ராணா. 'யூனியன்' மக்களைக் கூப்பிடுவதற்கு முன் நாம், 'போனஸ்' பற்றிக் கொஞ்சம் பேசினால் நல்லது.''
''ஓ... நான் சேர்மனிடம் எல்லாவற்றையும் பேசிவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.''
'சேர்மனிடம் பேசியாச்சா... எப்ப, என்ன நடக்கிறது இங்க? அப்ப நான் எதுக்கு? இத்தனை நாள் நான் இருந்ததற்கு என்ன மதிப்பு, என்ன மரியாதை?'
உள்ளே நுழைந்த, 'யூனியன்' மக்களிடம் அவனாகவே முந்திக்கொண்டு, ''ஹாய்,'' என்று தன்னை அறிமுகப்படுத்தி, 'போனஸ்' அறிவிப்பை வெளியிட்டான், ராணா.
ஒவ்வொருவருடனும் கை குலுக்கினான். இன்ப அதிர்ச்சியில் பேச வாய் எழாமல் நின்றிருந்தவர்களை தட்டிக் கொடுத்து, ''எனக்கு உங்கள் ஒத்துழைப்பு எப்போதும் தேவை. ஏதாவது பிரச்னை என்றால், என்னிடம் நேரில் முறையிட வேண்டும். தேவையற்ற போராட்டம் எல்லாம் வேண்டாம்,'' என்று லேசான எச்சரிக்கை கலந்த குரலில் அழுத்தமாக கூறினான்.
''நிச்சயம் சார். எப்போதும் உங்கள் பக்கம் இருப்போம்,'' என்று கூறி, அவர்கள் விடைபெற்றனர்.
மொத்தம் பத்து நிமிடங்களில், 'யூனியன் மீட்டிங்' முடிந்தது.
''இ ங்கே நமக்கு மருத்துவ நிலையமும், மருத்துவரும், செவிலியர் இருவரும் இருக்கின்றனர் அல்லவா? அங்கே போய் பார்க்கலாம்,'' என்றவன், தரைத்தளத்திலிருந்த மருத்துவ நிலையத்திற்கு சென்றான். கூடவே ஓடினார், கதிர்காமன்.
எல்லாரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, எல்லா விஷயங்களையும் விபரமாக கேட்டறிந்தான்.
ஆண்டுக்கு ஒருமுறை எல்லா ஊழியர்களுக்கும், அவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். மலிவு விலையில் மிக முக்கியமான மருந்துகளை மட்டும் மருத்துவமனை மூலம் வாங்கி கொடுக்க வேண்டும். ஒரு 'ஆம்புலன்ஸ்' வாங்கப்போகிறோம். அவசிய, அவசரத் தேவைகளுக்கு ஊழியர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் உபயோகித்துக் கொள்ளலாம்.
அடுத்தடுத்து, நுால் நிலையம் அமைப்பது, கோடை விடுமுறையில் கலைநிகழ்ச்சி நடத்துவது என்று பல திட்டங்களை கூறினான், ராணா.
மீ ண்டும் அறைக்கு திரும்பி, கதிர்காமனிடம் சில கோப்புகளை கேட்டு வாங்கிப் பார்த்தான். அவரின் மொத்த பொறுப்புகளை கேட்டறிந்தான். அவரின் உதவியாளர்களை அழைத்து, ''எனக்கும் இனி எல்லாரையும் போல வழக்கமான ஆபீஸ் நேரம் தான். அதனால், என்னுடன் கூட வரவோ, வரவேற்கவோ, யாரும் வரத்தேவையில்லை. நானே, காரை ஓட்டி வருவேன்; டிரைவர் வேண்டாம். உங்கள் டிரைவருக்கு வேறு ஏற்பாடு செய்து விட்டேன். நம் மருத்துவ நிலையத்திற்கு ஒரு, 'ஆம்புலன்ஸ்' வாங்கப்போகிறோம். அதற்கு அவர்தான் டிரைவர்,'' என்றவன், ''உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி. நான் கிளம்புகிறேன்,'' என்று, கதிர்காமனிடம் விடைபெற்று அட்டகாசமாக வெளியேறினான்.
குறுகிப் போய் அமர்ந்திருந்தார், கதிர்காமன். உதவியாளர்களை பார்க்கவே கூசியது. ஒரே நாளில் அவரின் பதவி சுகத்தையெல்லாம் காணாமல் போகச்செய்து விட்டானே! அவரின் ஆளுமை என்ன, திறமை என்ன, அனுபவம் என்ன! எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிவிட்டுப்போய் விட்டானே!
ரா ணா வெளியேறிய மூன்றாவது நிமிடம், அவருக்கு, அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது...
''எனக்கு இரண்டு உதவியாளர்கள் வேண்டாம். ஒருவர் போதும். அந்த இளைய உதவியாளரை வேறு துறைக்கு மாற்ற ஏற்பாடு செய்து விட்டேன். நா ளை அவருக்கு, 'ஆர்டர்' கொடுத்து விடலாம். இப்போதுதான், சேர்மனிடம் பேசினேன். அதனால்தான் உடனே சொல்கிறேன்,'' என்று போனை வைத்து விட்டான்.
'நாளையிலிருந்து மற்றவர்களைப் போல அதே நேரத்திற்கு வந்து விடுவானே! நம் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், நாமும் அதே நேரத்திற்கு, முடிந்தால், ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே போய்விட வேண்டும். சீக்கிரமே பொறுப்புகளை முழுவதுமாக ஒப்படைத்து விட்டு வெளியில் வந்து விட வேண்டும்!'
ம றுநாள், 9:00 மணி ஆபீசுக்கு, எட்டே முக்காலுக்கே கதிர்காமனின் கார், அலுவலக வாசலில் நுழைந்தது. எதேச்சையாக நிமிர்ந்து பார்த்த, 'செக்யூரிட்டி' மட்டும் வணக்கம் சொல்லிப் புன்னகை புரிந்தார். அவரின் கார் கதவைத் திறந்து விடவோ, கைப்பையை வாங்கிக்கொள்ளவோ ஒருவரும் வரவில்லை. ஓரக்கண்ணால், ராணாவின் கார் வந்து விட்டதா என்று பார்த்துக் கொண்டார்.
நல்லவேளை இன்னும் வரவில்லை. 'லிப்ட்'டில் ஏறி, தன் தளத்தை அடைந்து, அறைக்கதவைத் திறந்தவர், அதிர்ந்து போனார்... உள்ளே ராணா.
''குட் மார்னிங்,'' என்றவர், என்ன செய்வதென்று புரியாமல், ''உங்கள் காரைக் காணோமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்,'' என்று ஏதோ பேசினார்.
''ஆமாம். நான், 'பைக்'கில் வந்தேன்.''
'சரி தான். அசுர வேகமாக இருக்கிறதே! இப்ப நான் என்ன செய்ய வேண்டும்? இப்படியே திரும்பி விட வேண்டியது தானா? உட்காரக்கூட சொல்லவில்லையே இவன்?'
அப்போதுதான் கவனித்தார். அவர் அறையில் அவருக்குரிய இருக்கையில் அமர்ந்திருந்த, ராணாவுக்கு எதிரில் ஒரே ஒரே நாற்காலி மட்டுமே போடப்பட்டிருந்தது. அவர் இருக்கும்போது, நான்கு நாற்காலிகள் போடப்பட்டிருக்கும்.
''உட்காருங்களேன்,'' என்றான். அப்போது, உதவியாளர் கதவைத் தட்டி உள்ளே வந்தார்.
''சார், 'யூனியன்' மக் கள் உங்களை பார்க்கணுமாம்.''
''வரச்சொல்லுங்கள்,'' என்றான், ராணா.
உள்ளே வந்தவர்களின் கைகளில், பெரிய பெரிய மாலைகள் இருந்தன.
''வணக்கம் சார். நேற்று உங்களை முறையாக வரவேற்க முடியவில்லை. அதான்!''
'' நோ, நோ இந்த வழக்கமெல்லாம் எனக்குப் பிடிக்காது. நாமெல்லாரும் இந்த ஆபீசில் ஒன்றாய் பணிபுரிபவர்கள். ஒருவரை ஒருவர் மாலை போட்டெல்லாம் வரவேற்க வேண்டியதில்லை. நேர்மையாகவும், ஒற்றுமையாகவும் வேலை செய்தால் போதும். நன்றி.''
'யூனியன்' மக்கள் வருகின்றனர் என்று தெரிந்த, கான்டீன் காசி, உடனடியாக எல்லாருக்கும் காபி, டீ அனுப்பியிருந்தார். அத்தனையையும் திருப்பி அனுப்பினான், ராணா.
வந்தவர்களின் முகங்களில் ஈயாடவில்லை.
''ஒரு விஷயம். தீபாவளிக்கு முதல் நாள், உங்களுக்கு இரண்டு மணி நேரம் முன்னதாக வீட்டுக்கு கிளம்ப அனுமதி கொடுத்திருக்கிறேன். தீபாவளி பண்டிகைக்காக, உங்கள் எல்லாருக்கும் கம்பெனி சார்பாக இனிப்பு பெட்டிகள் வழங்கப்படும்,'' என்றான்.
குபீரென்று மகிழ்ச்சி பரவியது அவர்களின் முகங்களில். எல்லாமே புதுமையாக இருந்தது.
போராடி பெற வேண்டியதெல்லாம் கேட்காமலே கிடைக்கிறதே!
''ரொம்ப சந்தோஷம் சார். இந்த வருஷம்தான் முதல்முறையாக எங்களுக்கு இந்த மாதிரி அனுமதி கிடைத்திருக்கிறது. நன்றி சார்,'' கைகளைக் கூப்பி, விடை பெற்றனர்.
அப்போது தான், கதிர்காமனை மீண்டும் திரும்பிப் பார்த்த, ராணா, ''ஓ, நீங்கள் இன்னும் நிற்கிறீர்களா?'' என்றான்.
''இல்லை. உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிய வேண்டுமானால் சொல்லிவிட்டு போகலாமென்று வந்தேன்,'' என்று இழுத்தார்.
''அடடா, எதற்கு வீண் சிரமம்? ஏதாவது தேவையானால், நானே, உங்களை தொடர்பு கொள்கிறேன்.
''ஓய்விற்கு பின் அமைதியான வாழ்க்கைக்கு வாழ்த்துகள்,'' என்று எழுந்து, அவரின் கைகளை பிடித்து குலுக்கினான், ராணா.
காலையில் காரில் உள்ளே நுழையும்போதிலிருந்து, ஐம்பது வணக்கங்களையாவது ஏற்றுக்கொண்டு பந்தாவாக உள்ளே நுழையும், கதிர்காமன், இப்போது தன் கைப்பையைத் தானே துாக்கிக் கொண்டு மெதுவாக வெளியில் வந்தார்.
மனம் மிகவும் வெதும்பி போயிருந்தார், கதிர்காமன். இனி, கூப்பிட்டாலொழிய கம்பெனியில் யாரையும் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற எண்ணம் வலுப்ப ட்டது.
ஆனால், கம்பெனியைப்பற்றி அவ்வப்போது செய்தி வந்து கொண்டிருந்தது அவருக்கு.
சரஸ்வதி பூஜையன்று எல்லாருக்கும் சமபந்தி போஜனம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச சினிமா டிக்கெட்டுகள். தவிர, குடும்பத்துடன் சிறிய சுற்றுலா, கோடை விடுமுறையில் குழந்தைகளுக்காக சிறப்பு வகுப்புகள், என்று ஏகப்பட்ட அறிவிப்புகள்...
'எல்லாம் சரிதான். இவன் சொல்வதற்கெல்லாம் சேர்மன் தலையாட்டுகிறாரே... நஷ்டப்பட்டால், தானே தெரியும். இவனெல்லாம் என்ன படிச்சு, என்ன பயன்? ஒரு மரியாதை தெரியவில்லை. என்ன பெரிதாக சாதித்து விடப்போகிறான்?' பொருமினார், கதிர்காமன்.
'எங்கிட்ட வராமலா போயிடுவான்? வரட்டும், இவனோட படிப்பெல்லாம் என்னோட அனுபவத்துக்கு முன் நிக்குமா?'
ஆனால், அவரின் அத்தனை நினைப்புகளும் பொய்யாகிப்போயின. அடுத்த காலாண்டில், அந்தக் கம்பெனி, 57 சதவீதம் நிகர லாபம் அதிகரித்துள்ளதை செய்தித்தாள்களில் படித்தபோது, மயக்கம் வராத குறையாக செயலற்றுப் போனார், கதிர்காமன்.
உஷா பாலசுப்ரமணியன்
