sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சங்கீத சங்கமம்!

/

சங்கீத சங்கமம்!

சங்கீத சங்கமம்!

சங்கீத சங்கமம்!

2


PUBLISHED ON : அக் 05, 2025

Google News

PUBLISHED ON : அக் 05, 2025

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கா தென வா ரெவரூ கல்யாண ராமா.... நீ தயராதா...' அந்த சிறிய ராமர் கோவிலை நெருங்கும் போது, காற்றில் மிதந்து வந்த குரல், வசந்த பைரவி. அதன் குழைவு, வேண்டாம் என்று உன்னை தடுப்பவர் யார்? கல்யாண ராமா... உன் தயை வராதா...' என்று உருகும் அந்த பாவம், சுருதி சுத்தம், தாளக்கட்டு... 'யார் பாடுவது?' என்ற ஆவலுடன் கோவிலுக்குள் நுழைந்த, சாருவையும், சந்துருவையும், பிரமிக்க வைத்தாள், அந்த சிறுமி.

'என்ன, 10 வயது இருக்குமா இந்த பெண்ணுக்கு? மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதுன்னு... இவளுக்குள் இப்படி ஒரு ஞானமா!' என வியந்த சாரு, அந்த சிறுமியின் அருகில் அமர்ந்து, ''ரொம்ப நன்னா பாடினேம்மா... உன் பெயர் என்ன?'' என்றாள், சாரு.

''வித்யா, ஸ்ரீவித்யா,'' என்றாள், அச்சிறுமி.

''பொருத்தமான பெயர். இன்னொரு பாட்டு பாட முடியுமா?'' என்று கேட்டான், சந்துரு.

அச்சிறுமியின் முகத்தில் ஒரு மலர்ச்சி. என்ன பாடுவது, என யோசிப்பது போல மேலே பார்க்க, ''பாரதியார் பாட்டு ஏதாவது,'' என, சாரு சொல்லி முடிப்பதற்குள், ''எனக்கு தமிழ் பாட்டே தெரியாது,'' என்ற, வித்யாவின் குரலில் ஒரு இயலாமை.

''அதனால் என்ன. உனக்கு தெரிந்ததை பாடு,'' என்றான், சந்துரு.

'தீட்சதர் க்ருதி...' என்று கூறி, 'அகிலாண்டேஸ்வரி...' என்று ஆரம்பிக்க, அதன் துவக்கமே அவர்களை கட்டிப் போட்டது.

''யார்கிட்டம்மா பாட்டு கத்துக்கிறே?'' என, கேட்டாள், சாரு.

''எங்கப்பாகிட்டத்தான்,'' என, குரலில் ஒரு பெருமிதத்துடன் கூறினாள், வித்யா.

''ஓ, உங்கப்பாவும் பிரமாதமா பாடுவார்ன்னு சொல்லு,'' என்றான், சந்துரு.

''ஊஹும், இப்பெல்லாம் எங்கப்பாவால ரெண்டு நிமிஷத்துக்கு மேலே தொடர்ந்து பாடவே முடியலை. தொண்டையில கட்டி வந்து ஆபரேஷன் பண்ணினப்புறம் எனக்கு சொல்லித் தரக்கூட முடியலை,'' என, கண் கலங்கியவாறு கூறினாள், வித்யா.

''வித்யா நீ பாடினதுக்கு உனக்கு என்ன, 'கிப்ட்' தரலாம்ன்னு யோசிச்சேன். நாங்க சென்னை போனதும் உனக்கு ஒரு, 'பர்ஸ்ட் கிளாஸ்' வயலின் வாங்கி அனுப்பறேன், சரியா,'' என்று உற்சாகமாக கூறினான், சந்துரு.

''அதெல்லாம் வேண்டாம், சார். எங்கப்பாவுக்கு பிடிக்காது. இருட்டிடுத்து, அப்பா தேடுவார், நான் வரேன்,'' என்று அவசரமாக கிளம்பியவளை நிறுத்தினாள், சாரு.

''உன் அப்பா பெயர் என்ன?'' என கேட்டாள், சாரு.

''ஸ்ரீனிவாசன், எம்.ஒய்.ஸ்ரீனிவாசன்,'' என கூறி ஓடிவிட்டாள்.

எம்.ஒய்.ஸ்ரீனிவாசன். சீனு! அட அவனே தான், சந்துரு,'' என, சாரு பரபரப்பாக கூற, அப்போது தீபாராதனை தட்டுடன் வந்த அர்ச்சகர், ''உங்களுக்கு சீனுவை தெரியுமா?'' எனக் கேட்டார்.

''ஹும் தெரியும். அந்தப் பெண் தொண்டையில் ஏதோ கட்டின்னாளே, என்னாச்சு?'' என்றான், சந்துரு.

''தைராய்டுன்னு சொல்றாங்க. ஆபரேஷனாகி ரெண்டு மூணு மாசம் ஆச்சு. இப்பத்தான் சன்னமா பேசறான். பெரிய ஞானஸ்தன். இவனோட பாட்டைப் பாராட்டாதவாளே கிடையாது. நான் இதைத்தான் பாடுவேன், அதைத்தான் பாடுவேன் அப்படின்னு ஒரு வரட்டுப் பிடிவாதம். ரசிகனை மதிக்க வேண்டாமா. பக்க வாத்தியக்காராள்ளாம் முசுடுன்னு ஒதுங்கிட்டாங்க. கச்சேரி எல்லாம் குறைஞ்சு போச்சு. இப்ப இந்த கட்டி வேற. இனிமே பாட்டெல்லாம் எங்கே? பூரணி, வித்யாவோட அம்மா உத்தமமான பொண்ணு. பேங்க்ல வேலை பார்க்கறா. குடும்பம் ஓடறது,'' என, சந்துருவின் ஒரு கேள்விக்கு, சீனுவின் சரித்திரத்தையே கூறி விட்டார், அர்ச்சகர்.

''அடப்பாவமே! அந்த சீனு இன்னும் அப்படியே தான் இருக்கானா. மாறலையா.''

சாருவின் மனதில் அந்தப் பழைய நாட்களின் நிழல்...

எ ங்கு இசைப்போட்டி என்றாலும், சீனு - சாரு இருவருக்கும் தான் முதல் பரிசு என்று எழுதப்படாத சட்டமாக இருந்த இனிய நாட்கள். மேல்ஸ்தாயியும், கீழ்ஸ்தாயியுமாக அவர்கள் குரல் இணைந்து ஒலிக்கையில் கரகோஷம் அதிரும். அவர்களுக்கு சங்கீத விற்பன்னர், நாராயண ஐயங்காரிடம் தான் சிட்சை. நாராயண ஐயங்கார் பழங்காலத்து மனிதர். கர்நாடக சங்கீதம் என்றால், அது மும்மூர்த்திகளின் கீர்த்தனைகள் தான் என்ற ஆணித்தரமான எண்ணம் கொண்டவர்.

அப்படியே அவர் ஜெராக்ஸ் காப்பி, சீனு. அவர் காலம் வேற, இப்ப நம்ம காலம் வேற. இப்பல்லாம் சுருதி சுத்தம், ராக சஞ்சாரம், தாளக்கட்டு எல்லாம் அருமையாக இருந்தாக்கூட, பாட்டோட அர்த்தமும் தெரிஞ்சா தேவலை. ஒரு லயிப்பு இருக்கும்ன்னு நினைக்கறாங்க. அதனால், நாலு தமிழ் கீர்த்தனைகளும் கத்துக்கணும்ன்னு, சீனுவை கூப்பிட்டாள், சாரு.

'போடி ஞான சூன்யம்...' என்று கூறிட்டான். அதனால், அவர்கள் சேர்ந்து பாடுவது கூட விட்டுப்போச்சு.

சாருவுக்கு திரைப்படத்தில் பின்னணி பாடும் வாய்ப்பு கிடைத்ததும், மிக்க மகிழ்ச்சியுடன் சீனுவிற்குத்தான் முதலில் போன் செய்தாள். ஆனால், சீனு உடனே நேரிலேயே வந்து, 'அவள் திரைப்பத்திற்கெல்லாம் பாடக்கூடாது. குரல் கெட்டுவிடும். கர்நாடக இசையின் மகிமையே மாறிவிடும்...' என்று சண்டை போட்டான்.

திகைத்து போய், 'இதை எல்லாம் சொல்ல நீ யார்?' என்றாள், சாரு.

'சாரு, நாம கல்யாணம் பண்ணிண்டு ஒண்ணா சேர்ந்து கச்சேரி எல்லாம் பண்ணலாம்ன்னு நான், 'ப்ளான்' பண்ணிட்டிருக்கேன். நீ என்னடான்னா...' என்றான், சீனு.

அடக்க மாட்டாமல் சிரித்தாள், சாரு.

'லுாசாடா நீ. நீ, 'ப்ளான்' பண்ணினா. நான் அதை ஒத்துக்க வேண்டாமா. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. மியூசிக் டைரக்டர் சந்திரசேகருக்கும், எனக்கும் அடுத்த மாதம் கல்யாணம். 'இன்விடேஷன்' அனுப்பறேன் வந்து ரெண்டு அட்சதையை போட்டுட்டுப் போ...' என, சாரு கூறியதும், திகைத்து, அறைபட்டவன் போல் நின்றவனை பார்க்க, சாருவிற்கு பாவமாகத்தான் இருந்தது.

அன்று போனவன் தான்.

திரைப்படம், மேடைகள், இசை விழாக்கள் என்று, சாரு, சாருபாலா சந்திரசேகரனாக கொடிகட்டிப் பறந்ததில், சீனு, சீனுவின் நினைவு எப்போதாவது எழும். பாவம் எப்படி இருக்கிறானோ என்று நினைத்துக் கொள்வாள்.

இ ன்று, 'சாட்சாத் கலைவாணியை போல அந்த வித்யா. அப்படியே சீனுவின் அச்சாக. அந்த தெய்வீக குரல், ஞானம் எல்லாருக்கும் கிடைக்குமா? அது வீணாகக் கூடாது. உடனே, ஏதாவது செய்தாகணும்...' என்று பரபரத்தாள்.

''பாரேன், சந்துரு. நம்ம கார் டயர் பஞ்சராகி இங்க நின்னது. டயர் மாற்றும் வரைன்னு நாம் இந்த சின்னக் கோவிலுக்கு வந்தது. வித்யாவை சீனுவின் பெண்ணாக பார்த்தது. எல்லாமே ஏதோ சொல்லி வெச்சாப்பல இருக்கு. நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ,'' என, ஆச்சரியமும், வருத்தமுமாய் கவலைப்பட்டாள், சாரு.

வி த்யா படிக்கும் பள்ளித் தலைமை ஆசிரியையைத் தொலைபேசியில் அழைத்து பேசினான், சந்துரு.

அதன் பலனாக, அன்று பள்ளியின் பாட்டு டீச்சர், வித்யாவை அழைத்து, ''வித்யா, உனக்கு நான் தனியாக பாட்டு கிளாஸ் எடுக்கிறேன் கற்றுக்கொள்கிறாயா?'' என கேட்டார்.

தன்னையும் அறியாமல், ''அப்பா... அப்பாவுக்கு,'' என்று இழுத்தாள், வித்யா.

வித்யாவை அணைத்தவாறு, ''வித்யா எனக்கு எல்லாம் தெரியும். உன் அப்பாவுக்கு தொண்டை சரியாகி உனக்கு சொல்லி கொடுக்கிற வரைக்கும், இங்க நீ பாட்டு கத்துக்கலாம் இல்லையா. பாடிட்டே இருந்தா தான் குரல் நல்லாருக்கும். நீ நாளைக்கே வந்துரு என்ன,'' என்றார், பாட்டு டீச்சர்.

''டீச்சர், அதுவந்து, பீஸ்,'' என்றாள்.

''அடடா உன்னைப்போல் குரலும், திறமையும் உள்ள சுட்டிப் பெண்ணுக்கு சொல்லித்தர பீஸ் வாங்குவேனா என்ன? நாளை வந்துடு,'' என்றார், பாட்டு டீச்சர்.

வித்யாவிற்கு ஒருபுறம் மகிழ்ச்சியாகவும், மறுபுறம் அப்பா என்ன சொல்வாரோ அவருக்கு அவரைத்தவிர வேறு யார்கிட்ட பாட்டு கற்றுக்கொண்டாலும் பிடிக்காதே என பயமாகவும் இருந்தது.

''நீ பாட்டு கிளாஸில் சேர்ந்துடு. இப்ப அப்பாட்ட சொல்ல வேண்டாம். நானே சமயம் வரப்ப சொல்றேன்,'' என்று தைரியம் கொடுத்தாள், வித்யாவின் அம்மா.

எது எப்படி இருந்தாலும், மாலை மணி 6:00 ஆனதும், சுருதிப் பெட்டியை வைத்துக்கொண்டு, பாட்டு நோட்டில் அப்பா சுட்டிக்காட்டும் பாட்டை மிக கவனத்துடன் பாடுவதை தவிர்க்கவே மாட்டாள். அப்பா என்றால் அவளுக்கு உயிர். அம்மா பூரணிக்கும் தான்.

அவள் குழந்தையாக இருந்த போது, அவளைத் தொட்டிலில் போட்டு, 'ஜோ ஜோ...' என்று பாடி அவர் தாலாட்டியதையும், அவள் சாப்பிடும் போதும், விளையாடும் போதும், ஏதோ ஒரு கீர்த்தனை பாடுவார்.

அதுதான், வித்யாவிற்குள் அப்படி ஒரு ஞானத்தை விதைத்தது என்று அம்மா உருகி உருகி கூறும் போது, அவளுக்கு அழுகை வரும். இப்படிப்பட்ட அப்பாவுக்கு தமிழ் பாடல்கள் மீது என்ன கோபம்?

'தமிழ் பாட்டா? சும்மா வீட்டுல முணுமுணுக்கத்தான் லாயக்கு. கச்சேரிகளில் எல்லாம் அதுக்கு அங்கீகாரம் கிடையாது...' என்று விதண்டாவாதம் செய்துள்ளார், அப்பா.

அம்மா பூரணி, அப்பா அளவு இல்லாவிட்டாலும், நன்றாகப் பாடுவாள். கவிதைகள் எழுதுவாள். ஆனால், எல்லாவற்றையும் நிறுத்தி விட்டாள். அப்பா இப்படி நோயாளியான பின், யாருடைய சொல்லும், செயலும் அவரைக் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள், பூரணி.

'அப்படிப்பட்ட அப்பாவுக்கு, தான் இப்போது தமிழ் பாடல்களில் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருப்பது தெரிந்தால், என்ன ஆகும்?' அவ்வப்போது இதை எண்ணி கலங்கினாள், வித்யா.

ஆனால், எப்படியோ இந்த விஷயம் சீனுவிற்கு தெரிந்து விட்டது. 'வித்யா ஸ்கூல்ல பாட்டு க்ளாஸ் கம்பல்சரியாம்....' என்று கூறி சமாளித்தாள், பூரணி. அத்துடன் நின்று விடவில்லை. வித்யாவின் பாடலை பலரும் பாராட்டுவதை ஓரிரு வார்த்தைகளாக சொல்லிக்கொண்டும் இருந்தாள்.

ஆனால், வித்யாவிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை, சீனு.

அ ன்று, பாரதி கலா சங்கம் நடத்திய இசைப்போட்டியில் கலந்து கொண்ட, வித்யாவிற்கு இறுதிச்சுற்று. பரிசு, 10 ஆயிரம் ரூபாய். எப்படியாவது இதில் வெற்றி பெற்று விட்டால், அந்தப் பணம் அப்பாவின் வைத்திய செலவிற்கு உதவும் என்ற நம்பிக்கையுடன் கிளம்பிக் கொண்டிருந்தாள், வித்யா. அன்று, ஏனோ அப்பாவிடம் சொல்லி ஆசி பெற வேண்டும் என்று தோன்றியது.

ஒரு நிமிடம் தயங்கியவள், சட்டென்று அப்பாவின் காலைத்தொட்டு, ''அப்பா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா. நான்...'' என்று அவள் முடிக்கும் முன் சட்டென தன் காலை இழுத்துக் கொண்டு, அடுத்த அறைக்குள் சென்று கதவை, 'படார்' என்று சாத்தி கொண்டான், சீனு.

'சே, என்ன மனிதர் இவர்...' என்ற நினைப்புடன், ''வித்யா, நான் அப்பாவை சமாதானம் பண்ணி உன் பாட்டைக் கேட்க அங்கேயே கூட்டிண்டு வரேனா இல்லையா பாரு,'' என, ஆறுதல் கூறி, வித்யாவை தேற்றி அனுப்பினாள், பூரணி.

போ ட்டி நடைபெறும் விழா அரங்கம்.

வித்யாவின் முறை வந்து அவள் பாடத் துவங்கியது வரை அவள் கண்கள் அம்மா, அப்பாவை தேடி அலை பாய்ந்தது.

ஊஹும். அவள் கண்களுக்கு அவர் தென்படவே இல்லை. அதை பெரிதுபடுத்தாது, எடுத்ததை முடிக்க வேண்டுமென்று தன்னைத் தேற்றிக்கொண்டு மேடை ஏறினாள்.

'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா. தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு. நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம். நின்னை சரணடைந்தேன்...' என்று பொருளும், இசையுமாக பொங்கிப் பிரவகித்த, புன்னாகவராளியில், உருகிக் கரைந்து, அவையோரையும், உருக வைத்தாள். பாடி முடித்ததும், விண்முட்டும் கரவொலி கண்டு மயங்கி சரிந்தாள், வித்யா.

பூ ர்ணிமா மருத்துவமனை! ஒரு வாரமாக கண்ணே திறக்காது வாழ்விற்கும், சாவிற்குமாகப் போராடித் துவண்டு கிடக்கும் அந்தச் சிறுமிக்காக, 'ஓ... பிரமாதமாகப் பாடுமே, அந்தப் பெண்ணா....' என்று ஊரே பிரார்த்தனை செய்தது.

'தாங்கள், 'ரமணாலயா' பள்ளியை தொடர்பு கொண்டு, வித்யாவின் இசைப் பயிற்சிக்கு ஆவன செய்ததெல்லாம் தவறோ. அப்பாவே உலகம் என்றிருந்த அந்தக் குழந்தையை அந்தப் பெற்றோரிடமிருந்து பிரித்து விடாதே, இறைவா...' என, தவித்தாள், சாரு.

சீனு, ஊன் உறக்கமின்றி, வித்யாவின் அருகிலேயே தவம் கிடந்தான். தான் பெரிய சங்கீத மாமேதை. தனக்கு தெரியாதது எதுவுமில்லை என்ற அந்த அகந்தை, மூடத்தனம் எல்லாம் நிழலாகிப் போய், நிஜம் எது என்று உணர்ந்து, மெல்லிய குரலில், வித்யாவிற்கு பிடித்த, பாரதியின் வரிகளை ஒரு மந்திரம் போல் தன் குரலில் இசைத்தால், அது வித்யாவை அசைக்கும் என்ற அவனது நம்பிக்கையில் மெதுவாக பாடினன். அது வீண் போகவில்லை.

'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே...

உன் கண்ணீல் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ...'

படிப்படியாக, சீனுவின் அந்த உன்னத குரல், வரிகள், வித்யாவுக்கு உணர்வு தர, கண் விழித்தாள்.'அப்பா...' என்று உதடுகள் அசைய, சீனுவின் கையை இறுகப்பற்றிக் கொண்டாள், வித்யா.

ஜெயா ராஜாமணிவயது 85, பள்ளிப்படிப்பு வரை படித்தவர். இல்லத்தரசி.

சொந்த ஊர்: மதுரை.

தமிழில் வெளியாகும் முன்னணி வார, மாத இதழ்களில் கதை, கவிதை, கட்டுரை என நிறைய எழுதியுள்ளார்.

இவர் எழுதிய பல நாடகங்கள் நெல்லை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. இவரது பல ஆன்மிக புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

எழுத்துப் பணிக்காக, பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.

இறுதிவரை எழுத வேண்டும், பாடவேண்டும் என்பது இவரது லட்சியம்.

கதைக்கரு பிறந்த விதம்: பிற மொழிப் பாடல்களில் பொருள் புரியாமல் பாடும்போது ஏற்படும் நெருடலில் பிறந்த கதை இது என்கிறார்.






      Dinamalar
      Follow us