
செ ன்னை, அம்பத்துார் தொழிற்பேட்டையில் உள்ள பிரபலமான, 'மங்கள் பார்க்' ஏரி. இது, நாளடைவில் குறுகி, தற்போது நடைப்பயிற்சி மேற்கொள்ளும் அளவுக்கு உள்ளது. அதன், நடுவே, பெரிய குளம், அதை சுற்றி, பல்வேறு வகையான மரங்கள், பூத்துக்குலுங்கும் பூச்செடிகள் மற்றும் மதிற்சுவர் வரை செடிகளும் நிறைந்திருந்தன. அதன் அருகே, 'டைல்ஸ்' பதிக்கப்பட்ட நடைப்பயிற்சிக்கு தேவையான இடம். அங்கே நடைப்பயிற்சிக்கு வந்த பாபு...
''ராஜா சார், வாங்க. வழக்கமா உங்கக்கூட வருகிற, மீசைக்கார நண்பரை எங்கே காணோம்? நீங்க மட்டும் தனியா வந்திருக்கீங்க? நீங்களுமே ரொம்ப நாளா, 'வாக்கிங்' வர்றதில்லையே?'' என, ஆர்வமாக கேட்டார்.
''ஆமா சார், காலையில அவருக்கு போன் பண்ணினேன் எடுக்கல. நான் மட்டும் கிளம்பி வந்துட்டேன். இங்க கூட்டம் அதிகமாயிடுச்சு அதான் அடிக்கடி வர்றதில்லை,'' என்று, சிடுசிடுத்தார், ராஜா.
அவர் பதில், 'பக்'கென்று இருந்தது, பாபுவுக்கு.
''அங்கப் பாருங்க... அந்தப் பொம்பளைக்கு என்ன வயசிருக்கும். அதுபோய், 'லெக்கின்ஸ்' 'டைட்' பனியன், போட்டுக்கிட்டு, 'வாக்கிங்' வந்திருக்கு. இவள சொல்லக்கூடாது, இவ புருசன சொல்லணும். வீட்டுல சமைச்சிட்டு இருப்பான் போல,'' என்றார், பாபுவிடம் ராஜா.
''சார், நாம எப்படி, 'டைட்'டா ட்ரெஸ் போட்டுக்கறோமோ, அதுபோலத்தான் அந்தப் பெண்ணும் போட்டிருக்கு. அதிலென்ன தப்பு,'' என்றார், பாபு.
''அடப்போங்க, சார். எதிரே ஒரு ஜோடி வருது பாருங்க. அவ, எவ்ளோ அழகா இருக்கால்ல, பக்கத்துல வந்ததும், அவ பேசுவதை கொஞ்சம் கேளுங்களேன்,'' என்றார், ராஜா.
'என்னங்க அடுத்த வாரம் லீவு வருதுல்ல, நாம, 'பேமிலி'யோட ஊருக்கு போயிட்டு வரலாமா?' என்று பேசிய படி, எதிர்திசையில் நடந்து வந்த இளம் ஜோடி, பாபுவையும், ராஜாவையும் கடந்து சென்றது.
''பாத்தீங்களா, நான் சொன்னது சரியாப்போச்சா. அந்தப் புள்ள குரலைக் கேட்டீங்களா, கர்ண கொடூரமா இல்லே,'' என, நக்கலாக கூறினார், ராஜா.
''என்ன சார், குரலுக்கும், அந்தப் பெண்ணோட அழகுக்கும் என்ன சம்பந்தம். பாவம் சார் அந்தப் பொண்ணு. இப்போ எத்தனையோ, 'ரேடியோ ஜாக்கி'களோட குரல்கள் நல்லா இருக்கும். ஆனா, அவங்க பார்க்குறதுக்கு சுமாராத்தான் இருப்பாங்க.
''ஏன் எத்தனையோ பாடகர்கள், பாடகிகள் கூட, அவங்களோட குரல்கள் நல்லாயிருக்கும். அதே சமயத்தில அவங்க பார்ப்பதற்கு சுமாராகத்தான் இருப்பாங்க. குரலுக்கும், அழகுக்கும் என்ன சார் சம்பந்தம். திறமையை தான் பார்க்கணும். நீங்க சொல்றத பார்த்தா, அழகாக இருக்கிறவங்க தான் பாடணும்னா, பாடகி ஸ்ரேயா கோஷல் போல் இருக்கிறவங்க மட்டும் தான் பாட முடியும்,'' என்றார், பாபு.
''என்னடா இவன் நடக்க ஆரம்பிச்சதிலிருந்து குறை சொல்லிட்டு இருக்கானேன்னு நினைக்காதீங்க. எனக்கு மனசுல பட்டதை அப்படியே சொல்லிவிடுவேன். எதிரே பாருங்க, பொதுவா, 'க்ளாக் வைசு'லத்தான் நடக்கணும்ன்னு சொல்லுவாங்க. ஆனா, ஒரு குரூப், 'ஆன்டி க்ளாக் வைஸ்'ல நடந்து வர்றாங்க. இவங்க ஏதாவது குறைந்தபட்ச, 'டிசிப்ளின்' கடைப்பிடிக்கிறாங்களா. இதனால தான் சார், எனக்கு இந்த பார்க்குக்கு வரவே பிடிக்க மாட்டேங்குது,'' என, அலுத்துக் கொண்டார், ராஜா.
எதிரே கடந்து சென்ற வாலிபனிடமிருந்து, 'குப்'பென்று சென்ட் வாசனை. 50 அடி துாரம் கடந்து சென்றப் பிறகும் குறையவில்லை.
ஐயய்யோ, இதுக்கென்ன இந்த ஆளு சொல்லப்போறான்னு பயந்தார், பாபு. பயந்ததைப் போலவே, அவரிடம்...
''பார்த்தீங்களா, இந்தப் பயல... ஏன் காலையிலேயே சென்ட் அடிச்சுட்டு வந்து, 'வாக்கிங்' போகணும். நாத்தம் குடலைப்புடுங்குது. இங்க, 'வாக்கிங்' வர்ற ஏதாவது ஒரு ஆன்ட்டியை, 'கரெக்ட்' பண்ணத்தான் இவன் இந்த பார்க்குக்கே வர்றான் போல,'' என, சிடுசிடுத்தார்.
வியர்த்துக் கொட்டிய நெற்றியை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார், பாபு.
'நீயென்ன பெரிய ஆளா. உன்னோட வேலைய நான் எதுக்குச் செய்யணும். நான் வரலைன்னா நீ என்னோட வேலைய செய்யறியா?' என, பார்க்கில் உள்ள, பாத்ரூமை கழுவி விடுவதில் அங்கே வேலைப்பார்க்கும், கார்ப்பரேஷன் ஆட்களுக்குள் சண்டை நடந்து கொண்டிருந்தது.
'வாய மூட்டிட்டு வேலை செய்யுங்கம்மா' என்றார், சூப்பர்வைசர்.
தண்ணீர் வரும் பைப்பில் ஆங்காங்கே சிறு சிறு துவாரங்கள் வழியாக தண்ணீர் வீணாக நடைபாதையில் கொட்டிக் கிடந்தது.
பூத்துக்குலுங்கிய பூச்செடிகளுக்கு அருகே 'ஜூஸும், சூப்பும்' விற்கும் கடை இருந்து, அதன், அருகில், 'உஷ் உஷ்' என்று சத்தம். திரும்பி பார்த்தால் மூச்சுப் பயிற்சியை மும்முரமாக செய்து கொண்டிருந்தார், ஒருவர்.
இதை எல்லாம் பார்த்ததும், 'என்னடா ஒண்ணும் பேசாமல் வருகிறாரே...' என்று பாபு நினைக்கும்போது மீண்டும் ஆரம்பித்தார் ராஜா...
''தினமும், 'ஜூஸும், சூப்பும்' இங்க விக்கிறாங்களே, அதை வாங்கி எப்படி குடிக்கறாங்கன்னு தெரியல? அங்கப்பாருங்க பார்க்குல உள்ள பெஞ்சுல உட்கார்ந்து உறியறதை. சாரயத்துக்கு, 'சைடு-டிஷ்' வச்சிட்டு குடிக்கிறா மாதிரி, இடது கையில சுண்டல், வலது கையில சூப். எதை, எப்படி, எப்ப குடிக்கணும்ன்னு கூட நம்ம ஆட்களுக்கு தெரியறது இல்ல, சார்.
''சராசரியாக நாள் ஒன்றுக்கு, குறைந்தது, 2 ஆயிரத்தில் இருந்து, 3 ஆயிரம் ரூபாய் வரைக்கும் காசு பார்த்துவிடுவான் போல, இங்கே, 'ஜூஸும், சூப்பும்' விற்கிறவன்,'' என்றார்.
''நீங்க சொல்றது கேக்கறதுக்கு ஈசியா இருக்கும். விடியற்காலை மூணு மணிக்கே எழுந்து, மூணு, நாலு வகையான சூப்புகளை ரெடி பண்ணணும். அப்புறம், ஜூஸ்களுக்கு தேவையான மூலிகைகளை, கோயம்பேடு மார்க்கெட்டு போய், வாங்கியாந்து, 'கட்' பண்ணி, தனித்தனியா டப்பாக்கள்ல போட்டு எடுத்துட்டு வரணும்.
'' இந்த வியாபாரம் செய்யிற ஒருத்தருக்கு பின்னாடி பல பேர் வேலை செய்வாங்க. மூவாயிரம் ரூபாயையும் இவன் ஒருத்தனா எடுத்துட்டு போகப் போறான்,'' என, பாபு கூறியதும், எதிர்முனையில், 'கப் சிப்' ஆனார், ராஜா.
''என்ன சார், குளத்து கரையோரமா படித்துறையில் கூட்டமா இருக்காங்க. பார்த்துட்டு வரலாம் வாங்க,'' என, பாபுவை அழைத்தார், ராஜா.
''வாங்கண்ணே, நீங்களும் வாங்க. எல்லாரும் சேர்ந்து வாங்க குளத்துல விடலாம்.'' என்றார், அங்கிருந்த ஒருவர்.
''இவனுக என்னத்த சார் குளத்துல விடப் போறானுங்க?'' என்றபடியே அவர்கள் அருகில் சென்றார், ராஜா.
''சார், நானும் உங்க கூடத்தானே நிக்கிறேன். 'வெயிட்' பண்ணுங்க, பார்ப்போம்,'' என்றார், பாபு.
கருப்பு நிறமும், சாம்பல் நிறமும் கலந்த, 10 வாத்துக்களை, அந்த ஏரியா கவுன்சிலரும், நடைப்பயிற்சி சங்கத்தின் தலைவரும் இைணந்து, குளத்தில் விட்டனர்.
வாத்துக்கள் பச்சை நிற தண்ணீரில், அழகாக மிதந்து செல்ல ஆரம்பித்தன. நடைப்பயிற்சி மேற்கொண்ட ஒரு சிலர், மொபைல் போனில் போட்டோ எடுத்தனர்.
''பாபு சார், நீங்க தினமும், 'வாக்கிங்' வந்துடுவீங்களா?'' என்று கேட்டார், அங்கு நின்னுகிட்டிருந்த, ஒருவர்.
''ஞாயிற்றுக்கிழமை உட்பட எல்லா நாட்களும் வந்திடுவேன். அது என்னன்னே தெரியல சார். இங்க வந்து குறைஞ்சது, அஞ்சு ரவுண்ட் நடந்தா தான் காலையில, அஞ்சு இட்லி சாப்பிடணும்ன்னு நானே எனக்கொரு கட்டுப்பாட்ட விதிச்சு, கடந்த அஞ்சு வருஷமா இங்கு வந்துட்டு இருக்கேன்.'' என்றார், பாபு.
''வாரத்துல ரெண்டு நாள் வர்றதே எனக்கு கஷ்டமா இருக்கு. நீங்க எப்படி சார், இந்த முகங்களை ஏழு நாளும் பார்க்கிறீங்க?'' என்றார், ராஜா.
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது. அப்போது...
''சார், நமக்கு எதிரே கணவன், மனைவியா ரெண்டுப்பேரு வர்றாங்களே... அவங்களுக்கு நான் போன வருஷம் ஒரு, 'ப்ராஜெக்ட்' பண்ணிக் குடுத்தேன். கடைசியில பணம் கொடுக்காம ஏமாத்திடாங்க. நீங்களா இருந்தா என்ன பண்ணுவீங்க?'' என்று கேட்டார், பாபு.
''சட்டையப் புடிச்சி கேட்பேன். பணம் கொடுக்கல்லேன்னா ரெண்டுப்பேரு முகத்திலேயும் முழிக்க மாட்டேன்,'' என்று கூறினார், ராஜா.
''கரெக்ட் சார். நானும், எவ்ளோ முயற்சி பண்ணிட்டேன். ஆனா, பணத்தை வாங்க முடியல. ஏன்னா, பிறக்கும்போதே மத்தவங்களை ஏமாத்திதான் பொழைக்கணும்ன்னு அவங்க தலையில எழுதியிருக்குன்னு நினைக்கிறேன். ஏமாத்தினவங்களே எனக்கு எதிரே நெஞ்ச நிமிர்த்திட்டு நடந்து வரும்போது, நேர்மையா இருக்கிற நாம ஏன் சார் அவங்களை கண்டுக்கணும். அவங்க பாட்டுக்கு போகட்டும், நாம, பாட்டுக்கு போவோம். கடவுள் அவங்களை பார்த்துப் பார்.
''இதேபோல, 'பேச்சிலராக' இருக்கும் போது, என்னோட நண்பன் ஒருத்தன் ரூம்ல இருந்த என்னோட வாட்ச், பணம் எல்லாத்தையும் திருடிட்டு ஓடிட்டான். பழகின நண்பனே இப்படி திருடுவான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல, அதோ, எதிரே அந்த ஆளு வர்றாரு பாருங்க... அவனை போல தான் இருப்பான். இப்படி என்னவெல்லாமோ உலகத்தில நடக்குது, என்ன பண்றது, வாழ்க்கை ஒரு வட்டம் சார், எல்லாத்தையும் மறந்திட்டு எப்பவும் சந்தோஷமா இருக்க பழகிகணும்.
''இங்க தினமும் நான் நடக்கும் போது, ஒவ்வொருத்தரும் பேசிக்கறதை கேட்கும் போது, ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் இவ்வளவு பிரச்னைகள் இருக்குதா, கடவுளே, எனக்கு அந்த அளவுக்கு பிரச்னைகள் இல்லாம நல்லா வச்சிருக்கியேன்னு, இதோ, இங்கே இருக்கிற இந்த அம்மனுக்கு நன்றி சொல்லிட்டு வீட்டுக்கு போவேன்.
''இந்த உலகத்தில நாம யாரையும் விட்டு விலகி, வாழ முடியாது, விரும்பினாலும், விலகினாலும் , வெறுத்தாலும் நமக்கு நடக்குறது நடந்துட்டுத்தான் இருக்கும். இத ஏத்துக்கிட்டு, சகிப்புத்தன்மையோட வாழறது தான் வாழ்க்கை. இங்க நடக்கற எல்லாருமே நம்மள மாதிரியான கலவையான மனிதர்கள் தான், சார்,'' என, பாபு சொல்லிக்கொண்டிருக்கும் போதே, இடைமறித்தார், ராஜா...
''சார், ஒரு நிமிஷம். இன்னிக்கு, 'நைட்டு' ஊருக்குப் போகணும், டிக்கெட், 'புக்' பண்ண போறேன்,'' என்றார்.
''என்ன சார், திடீர்ன்னு, ஏதாவது விசேஷமா?'' என, கேட்டார், பாபு.
பாபுவின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு, ''நான் இதுவரைக்கும் எவ்ளோ மனிதர்களை சந்திச்சு இருக்கேன். ஆனா, எனக்கு வாழ்க்கையோட தத்துவத்தை இவ்ளோ எளிமையா யாரும் எனக்கு புரிய வச்சதில்லை, சார்.
''நா எப்பவும், யாரை பார்த்தாலும் தேவையில்லாம குறை கண்டுபிடிச்சு பேசுவேன். ஏன், என்னோட மனைவிக்கிட்டக் கூட, இப்படித்தான் பேசுவேன். அதனாலே அவ, அவங்க அம்மா வீட்டுக்கு கோபிச்சுட்டு போயிட்டா, சார். நான் இப்ப தனியா தான் இருக்கேன்.
''இன்னையிலிருந்து, ஏன் இந்த நிமிஷத்திலிருந்து நான், யாரைப் பத்தியும் குறை பேசவேமாட்டேன்னு சபதம் எடுக்கிறேன். அதோட, என்னோட மனைவிய கூட்டிட்டு வர்றதுக்கு ஊருக்கு போகப்போறேன்,'' என்று மனம் திருந்தியவராக கூறினார், ராஜா.
இருவரின் கைகளிலும், குளிர்ச்சியான கத்தாழை ஜூஸ் இருந்தது.
பெருமாள் நல்லமுத்து வயது : 50. படிப்பு : பி.டெக்., (சிவில்) பணி : கட்டடப் பொறியாளர். சொந்த ஊர்: மணல்மேடு, மயிலாடுதுறை மாவட்டம். இவர் எழுதிய, 'துாய்மை இந்தியா' மற்றும் 'வேலி' என்ற, இரு சிறுகதை தொகுப்புகளும், 'வரம்' எனும், ஒரு பக்கக் கதை தொகுப்பும் வெளியாகியுள்ளது. இவரது படைப்புகளுக்கு, பல விருதுகளும் கிடைத்துள்ளன. சிறந்த எழுத்தாளராக வர வேண்டும் என்பது இவரது லட்சியம். கதைக்கரு பிறந்த விதம்: நடைப்பயிற்சி சென்ற போது, கிடைத்த ஒரு சம்பவமே, இக்கதை பிறக்க காரணமானது.

