PUBLISHED ON : அக் 25, 2026

சித்திரை மாதம், வள்ளியம்மைக்கு திருமணம். வீட்டு வாசலில் பந்தக்கால் நட்டாயிற்று. உற்ற உறவுகள், நலங்கு வைத்துக் கற்பூரம் சுற்றிய நீரை ஊற்ற, வீட்டு வாசலுக்கு வந்த வள்ளியம்மையின் தாய், பார்வதி, தடாலென்ற சத்தத்தைக் கேட்டு அதிர்ந்து கையிலிருந்த தாம்பாளத் தட்டை கீழே நழுவ விட்டாள்.
வீட்டின் எதிரே, தார் ரோட்டில் 'மொபட்'டில் போய்க் கொண்டிருந்த, பெரியவர் ஒருவர், திடீரென்று வண்டியுடன் உருண்டு, வீட்டு வாசலில் வந்து விழுந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தரையில் விழுந்து கிடந்த பெரியவரைத் துாக்கி, பார்வதி வீட்டுத் திண்ணையில் கிடத்தினர். வீட்டுக்குள் ஓடிய, பார்வதி, ஒரு சொம்பில் தண்ணீருடன் திரும்பி வந்தாள். கூட்டத்தில் ஒருவர் தண்ணீரை வாங்கி பெரியவரின் முகத்தில் தெளித்தார்.
சில்லென்ற நீர் முகத்தில் பட்டதும், கண் விழித்து, சுற்றும் முற்றும் பார்த்து, “எனக்குக் கொஞ்சம் தலை சுத்தலா இருக்கு. கொஞ்ச நேரம் இந்த திண்ணையிலேயே படுத்திருந்துப் போறேன்,' என்றார்.
“அதனாலென்ன கொஞ்ச நேரம் ஓய்வா படுங்க,” என்று, பார்வதி ஆறுதலாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மகள் வள்ளியம்மை, ஒரு பாயையும், தலையணையையும் கொண்டு வந்து திண்ணையில் விரித்தாள். பெரியவர் அதில் வசமாகச் சுருண்டு படுத்துக் கொண்டார். வீட்டு வேலைகளில் மூழ்கிப்போன பார்வதிக்கு, பெரியவர் பற்றிய சிந்தனையே இல்லாமல் போயிற்று.
அப்போது, வீட்டுக்குள் நுழைந்த, பார்வதியின் கணவர் வேங்கடபதி. திண்ணையில் துாங்குபவர் பற்றி, விசாரிக்க, நடந்தவற்றை கூறினாள், பார்வதி.
வேங்கடபதிக்கு ஏதோ சந்தேகம் வர, பெரியவரின் அருகில் சென்று அவரைத் தட்டி எழுப்பினார். பெரியவர் எழவில்லை. பதற்றத்துடன் பெரியவரை புரட்டிப் பார்த்தார்; அவரிடம் எவ்விதச் சலனமும் இல்லை. ஒருவித கவலையும், துக்கமும் அவரை ஆட்கொள்ள, சுவரில் சாய்ந்து உட்கார வைத்தபோது, தலை தொங்கிப் போனதிலிருந்து, பெரியவர் இறந்துவிட்டார் என்பது உறுதியாகி விட்டது. மகள் வள்ளியம்மையின் திருமணத்திற்கு இன்னும் சரியாக, 10 நாட்கள் கூட
இல்லாத நிலையில், எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாத யாரோ ஒருவரின் மரணம் அவர் வீட்டில் நிகழ்ந்துள்ளதையும், அதன் பின்விளைவுகளையும் நினைத்து கலங்கினார்,
வேங்கடபதி. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில், வாய்விட்டுக் கதறினார். வேங்கடபதியின் குரல் கேட்டு, ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், பெரியவர் இறந்து விட்டார் என்பதைப் புரிந்து கொண்டனர்.
வந்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்பதில் முனைப்பாக இருந்தனர். ஒருவர், பெரியவரின் சட்டைப் பையில் கையை விட்டு அடையாள அட்டை ஏதும் இருக்கிறதா என்று துழாவிப் பார்த்தார். அவர் ஓட்டிவந்த வண்டிப் பெட்டியையும் சோதனை செய்தனர். அதிலும், அவர் தொடர்பான தடயம் ஏதுமில்லை.
இறுதியாக, 'காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டால், அவர்கள், வண்டியின் எண்ணை வைத்து பெரியவரின் முகவரியைக் கண்டுபிடித்து, உரியவர்களிடம் உடலை ஒப்படைத்து விடுவர்...' என்று உருப்படியான யோசனையை ஒருவர் கூற, பக்கத்திலிருந்த, காவல் நிலையத்திற்கு தகவல் தெரித்தனர்.
அரை மணி நேரத்தில், வேங்கடபதியின் வீட்டின் முன், போலீஸ் ஜீப்பும், அமரர் ஊர்தியும் வந்து நின்றன. ஜீப்பிலிருந்து இறங்கினர், இன்ஸ்பெக்டர் மற்றும் இரு கான்ஸ்டபிள்கள்.
பார்வதி - வேங்கடபதியின் வாக்குமூலத்தை பதிவு செய்து, சாட்சிகளாக அக்கம்பக்கத்தினரின் கையெழுத்தையும் பெற்றுக்கொண்டு, பெரியவரின் உடலை, அமரர் ஊர்தியில் ஏற்றிச் சென்றனர்.
பிரச்னை இதோடு முடிந்தது என்று நிம்மதியாக, திருமண வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த, வேங்கடபதிக்கு மூன்று நாட்களுக்கு பிறகு, பேரிடி ஒன்று காத்திருந்தது. இன்ஸ்பெக்டர் அழைத்ததாகக் கூறி, வேங்கடபதியையும், பார்வதியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார், கான்ஸ்டபிள் ஒருவர்.
“ரெண்டு பேரும் சேர்ந்து எல்லா தகவலையும் அப்படியே சத்திய வாக்கா நம்பும்படி சொன்னீங்க. ஆனா, ஒரு விஷயத்தை மட்டும் மறைச்சிட்டீங்களே,” என்று கேட்டு, பார்வையால் அளந்தார், இன்ஸ்பெக்டர்.
வேங்கடபதியும், பார்வதியும் இன்ஸ்பெக்டர் கூறுவது புரியாமல், ஒருவரை ஒருவர் பார்த்தபடி, அமைதியாக நின்றனர்.
“பெரியவர் சின்னசாமியிடமிருந்து நீங்க எடுத்த, அஞ்சி பவுன் தங்க வளையல் எங்கே?” என, கேட்டார், இன்ஸ்பெக்டர்.
இன்ஸ்பெக்டரின் கடுமையான குரலும், அவர் கேட்டக் கேள்வியும், இருவரையும் திடுக்கிட வைத்தது.
“ஐயா, தங்க வளையலா? நாங்க அதை பார்க்கவே இல்லையே,' என்று கண்கலங்க சொன்னாள், பார்வதி.
“இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட வேணாம். மரியாதையா வளையலைக் கொடுத்துட்டா ஆச்சி. இல்லேன்னா, ரெண்டு பேர் மேலயும், எப்.ஐ.ஆர்., போட்டு உள்ளே தள்ளிடுவேன்,' என்ற, இன்ஸ்பெக்டரின் பார்வையிலும், வார்த்தையிலும் கடுமை கூடியது.
“சத்தியமா வளையல் எதையும் நாங்க பாக்கல,” என, இருவரும் இன்ஸ்பெக்டரை பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டு, மன்றாடினர்.
“விவசாய வங்கியில நகையை அடகு வச்சு, பணம் வாங்க தான், அஞ்சி பவுன், தங்க வளையலோட, 'மொபட்'ல போய் இருக்கார், சின்னசாமி. வழியில தான் உங்க வீட்டு முன்னால அவர் மயக்கம் போட்டு விழுந்திருக்கார். அதுபற்றி எங்களுக்கு புகார் வந்துள்ளது. நகை ஒண்ணும் மாயமா மறைஞ்சிடல. உங்க கையில தான் இருக்கு,' என்று, அவரே நேரில் பார்த்தது போல சொன்னார், இன்ஸ்பெக்டர்.
என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரும் தவித்தனர்...
'ஐயா, எங்களை நம்புங்கய்யா. என் பொண்ணு கல்யாணத்துக்கு இன்னும் அஞ்சாறு நாள் தான் இருக்கு. கையில காசு இல்லாம இன்னும் பணத்துக்குத்தான் அலைஞ்சிக்கிட்டிருக்கேன். நாங் கல்யாண வேலையை பார்க்கன எங்களை விட்டுடுங்கய்யா,” என்று, காலில் விழாத குறையாக மீண்டும் மீண்டும் கெஞ்சினார், வேங்கடபதி.
அதுவரையில் சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, அம்மையார் ஒருவர், சற்று நெருங்கி வந்து, 'ஐயா, இவுங்களைப் பார்த்தா, அப்பாவிகளா தெரியறாங்க. இவங்க பொய் சொல்றதா தெரியல. இவங்களை விட்டுடுங்க. நான் கொடுத்தப் புகாரை வாபஸ் வாங்கிக்கிறேன், என்றார்.
அவர் அவ்வாறு கூறியதைக் கேட்டதும், வேங்கடபதிக்கும், பார்வதிக்கும் ஒன்றும் புரியவில்லை. இருவரும் அந்த அம்மையாரை பார்த்து, விழித்தனர்.
“இவங்க தான் பெரியவர், சின்னசாமியோட சம்சாரம், லட்சுமியம்மாள். ஏதோ பெரிய மனசு பண்ணி உங்களை மன்னிச்சு விட்டுட்டாங்க. கிளம்புங்க,' என்று, வேண்டா வெறுப்பாக சொன்னார், இன்ஸ்பெக்டர்.
இன்ஸ்பெக்டர் அவ்வாறு கூறியதை கேட்டதும், இருவருக்கும் மரண தண்டனையிலிருந்து உயிர் தப்பியது போல இருந்தது. இந்த இக்கட்டான நேரத்தில் உதவிய அந்த அம்மையாரை நன்றி உணர்வுடன் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டு, இருவரும் வீட்டுக்கு கிளம்பினர்.
சம்பந்தி, கந்தவேலு, இப்படி திடுதிப்பென்று வந்து நிற்பார் என்று, சற்றும் எதிர்பார்க்கவில்லை, வேங்கடபதி. வாசல்வரை ஓடிச் சென்று, வரவேற்றார். ஆனால், அந்த வரவேற்பை அசட்டை செய்தபடி, வீட்டுக்குள் நுழையாமல் திண்ணையிலேயே அமர்ந்து கொண்டார்.
கந்தவேலுவின் போக்கு இருவருக்குமே விபரீதமாகப் பட்டது. சிறிது நேரம் மவுனத்துக்கு பின், பேசினார், கந்தவேலு...
'நம்ம கல்யாண சம்பந்தத்தை, இத்தோட முறிச்சிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.' அவர் உச்சரித்த வார்த்தையைக் கேட்டதும், அவர்கள் தலையில் இடி விழுந்தது போல நிலைகுலைந்து போயினர்.
“நான் எல்லா சங்கதியையும் கேள்விப்பட்டேன். பந்தக்கால் நட்ட அன்னிக்கே உங்க வீட்டுல சாவு விழுந்துடுச்சி. அப்போவே உங்க குடும்பத்துக்குத் தீட்டு ஒட்டிக்கிடுச்சு. ஆரம்பத்திலேயே சகுனம் சரியில்லாத போது, இந்த சம்பந்தத்தை தொடர நான் விரும்பல,' என, கடுகடுப்புடன் சொன்னார், கந்தவேலு.
“ஐயா, இறந்து போனவர் யார் எவர் என்று எங்களுக்குத் தெரியாது. அதோட அவரு எந்த வகையிலும் எங்களுக்குச் சொந்தமுமில்லை, பந்தமுமில்லை. அப்படி இருக்க இந்தத் தீட்டு, சகுனம் எல்லாம்...'
வேங்கடபதி பேசி முடிப்பதற்குள்ளாகவே, கந்தவேலு குறுக்கிட்டு, “இது மட்டுமே காரணம் இல்லை. செத்துபோன அந்த பெரியவர் வச்சிருந்த, அஞ்சு பவுன் தங்க வளையலைத் திருடிட்டு, போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் வந்திருக்கீங்க. எங்க குடும்பம் கவுரமான குடும்பம். ஒரு திருட்டுக் குடும்பத்துல சம்பந்தம் வச்சிக்க நான் விரும்பல,' என்று கறாராகக் கூறினார். கந்தவேலு.
இனி, என்ன சொன்னாலும் எடுபடாது போல இருந்தது, கந்தவேலுவின் பேச்சு.
அப்போது, ஆட்டோ ஒன்று, வாசலில் வந்து நின்றது.
ஆட்டோவிலிருந்து பெரியவர், சின்னசாமியின் மனைவி, லட்சுமியம்மாள் இறங்கினார். அவரைக் கண்டதும், கந்தவேலு வாயெல்லாம் பல்லாக, “வணக்கம்மா,' என்று தன்மையுடன் வணங்கினார்.
“சவுக்கியமா இருக்கியா, கந்தவேலு. உன் பொண்ணு சவுந்திரவள்ளி எப்படி இருக்கா?” என்று நலம் விசாரித்தார், லட்சுமியம்மாள்.
“அவளுக்கு என்னம்மா குறைச்சல். பெரியவர் சின்னசாமி ஐயா கையால தாலி எடுத்துக் கொடுத்து கல்யாணம் பண்ணிக்கிட்டவளாச்சே. ரெண்டு பிள்ளைகளோட சீரும் சிறப்புமா வாழ்ந்துக்கிட்டிருக்கா.”
“அது இருக்கட்டும், நீ எங்க இந்தப் பக்கம்?” என்று கேட்டார், லட்சுமியம்மாள்.
ஒரு சிறு தடுமாற்றத்திற்கு பிறகு, வேறு வழியில்லாமல் நடந்தவற்றைக் கூறினார், கந்தவேலு.
அதைக்கேட்ட, லட்சுமியம்மாள், வேங்கடபதி குடும்பத்தின் இக்கட்டான நிலையை நினைத்து சங்கடப்பட்டார்.
பிறகு, கந்தவேலுவைப் பார்த்து, “சுப காரியம் நடக்கப்போற நேரத்துல சாவு விழுந்துட்டுது, தீட்டுன்னு சொல்றீயே, அந்த சாவு யாருடைய சாவு தெரியுமா? ஊருக்கு உபகாரம் பண்ற உங்க, சின்னசாமி ஐயாவோட சாவுதான்.
“என் குலசாமி உயிர்விட்ட இடத்தைப் பார்க்கணும். அங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்து, மன சாந்தி அடையணும்ன்னு தான் நான் புறப்பட்டு வந்தேன். வந்ததும் நல்லதா போச்சு. மரணம் எப்பவும், எப்படியும் வரலாம். அது, புரியாம நடக்கப்போற கல்யாணத்தையும், எதிர்பாராம நடந்த இறப்பையும் முடிச்சி போட்டு, கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறது எத்தனைப் பெரிய மடத்தனம்?” என்று, லட்சுமியம்மாள் கூறியதைக் கேட்டதும், கந்தவேலுவின் முகம் தொங்கிப் போனது.
“அவர் இந்த வீட்டு வாசல்ல விழுந்ததும், 'தலை சுத்தலா இருக்கு, கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டுப் போறேன்'னு சொன்ன முகம் தெரியாத மனிதருக்கு, பாயும் தலையணையும் கொடுத்துப் படுக்க வச்ச மனிதாபிமானத்துக்கா இந்த தண்டனை?”
லட்சுமியம்மாள் மேலும் தொடர்ந்தார்...
“வெள்ளாமைக்கு அதிகப்படியா அஞ்சு லட்சம் தேவைப்படுதுன்னு அவசரத்துக்கு அடகு வைக்கத்தான் பெரியவர், என்னுடைய அஞ்சு பவுன் வளையலோட, விவசாய வங்கிக்குப் போனார். போனவர் நகையை அடகு வச்சிட்டு, அஞ்சு லட்சம் பணத்தோட வீட்டுக்குத் திரும்பியிருக்கார். ரொம்ப களைப்பா இருக்கவே, வழியில டீ குடிக்க நினைச்சுப் பணப் பையை, கையோட எடுத்துக்கிட்டு ஒரு டீ கடைக்குப் போய், டீ குடிச்சு முடிஞ்சதும் பணப் பையை மறந்து அங்கேயே வச்சுட்டு வந்துட்டார்.
“டீ கடைக்காரர் அந்தப் பணப் பையைப் பத்திரமா எடுத்து வைத்திருந்து, உரியவர் வந்து கேட்டால் கொடுத்து விடலாம் என்று நினைத்திருக்கிறார். ஆனால், யாரும் வராததால பையில இருந்த, அடகு வச்ச சீட்டிலிருந்த முகவரியை பார்த்து, இன்னைக்கு காலையில தான் என்கிட்டக் கொண்டு வந்து சேர்த்தார். இந்தப் பணம் உடனடியா அப்பவே என் கைக்கு கிடைச்சிருந்தா, இவங்க மேல திருட்டுப் பட்டம் வந்திருக்காது. போலீஸ் ஸ்டேஷனை மிதிக்க வேண்டிய சூழ்நிலையும் வந்திருக்காது,” என்று, லட்சுமியம்மாள் கூறியதைக் கேட்டதும், வேங்கடபதி, பார்வதி ஆகிய இருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
“இன்னைக்கு என் குலசாமி இறந்த இடத்தை தரிசிக்க இந்த வீட்டுக்கு வந்த நான், இனி, ஆண்டுதோறும் வருவேன். இனிமே இது என் குடும்பம். இந்தா, இந்த, அஞ்சு லட்சத்தை பெண் வீட்டுச் சீதனமா நான் தர்றேன். கல்யாணத்தை சந்தோஷமா நடத்து. இது, என் வீட்டுக் கல்யாணம்,” என்று கூறியபடி, கொண்டுவந்திருந்த பணத்தை, கந்தவேலுவின் கைகளில் திணித்தார், லட்சுமியம்மாள்.
அதுவரையில், நிலைப்படியில் சாய்ந்து கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த, வள்ளியம்மை, ஓடி வந்து, லட்சுமியம்மாளின் கால்களில் விழுந்தாள்.
ப. முருகேசன்
வயது: 75
படிப்பு: எம்.ஏ. (M.A.)
பணி: பள்ளித் தலைமையாசிரியர் (பணி நிறைவு)
சொந்த ஊர்: புதுச்சேரி
இதுவரை இவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் தமிழ் வார, மாத இதழ்களில் வெளியாகியுள்ளன.
வானொலி மற்றும் மேடை நாடகங்கள் எழுதியுள்ளார். சிறுகதை, கவிதை, நாவல் என மொத்தம் 17 நூல்களை வெளியிட்டுள்ளார்.
பெற்ற விருதுகள்: கலைமாமணி விருது, மாநில மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது, தமிழக மற்றும் புதுச்சேரி அரசு வழங்கிய விருதுகள்
இறுதி காலம் வரை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது இவரது இலட்சியம்.
கதை கரு பிறந்த விதம்: நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து உருவான கதை
தொடர்புக்கு: 94432 57989
