தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சிடுமூஞ்சி சித்ரா!

சிடுமூஞ்சி சித்ரா!

சிடுமூஞ்சி சித்ரா!

1


PUBLISHED ON : அக் 04, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 04, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலை 8:00 மணி. 'சாரதா மில்' நிறுவனத்தின் வெள்ளை நிற வேன் வழக்கம்போல், பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது. மில் வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒவ்வொருவராக ஏறினர்.

''ஏய் பவானி, சீக்கிரம் வா... இல்லேன்னா, பின் சீட் தான் கிடைக்கும்,'' என்று சிரித்தபடி சொன்னாள், சாந்தி. இருவரும் தங்களது வழக்கமான இடத்தில் அமர்ந்தனர்.

''இன்னும், சித்ரா வரலையே?'' என்றாள், பவானி.

''ஆமா, அப்படி அவ வந்தா மட்டும் 'கலகல'ன்னு பேசிருவா பாரு. அந்த, சிடுமூஞ்சி வந்தாலும் ஒண்ணுதான், வரலைன்னாலும் ஒண்ணுதான்,'' என்று சிரித்தாள், சாந்தி.

''ஆமாக்கா, எப்பப்பார்த்தாலும், மூஞ்சிய 'உர்ர்'ன்னு வெச்சுட்டு இருக்கும். போன வாரம் மளிகை கடைல அவ வீட்டுக்காரரை பார்த்தேன். மனுஷன் அவளோ அமைதியான ஆளா இருக்காரு. நல்லா பேசுனாரு. எப்படித்தான் இந்த சிடுமூஞ்சியோட இருக்காரோ.''

பவானி பேசிக்கொண்டிருக்கும் போதே, 'சிடுமூஞ்சி' என்று அவர்களால் பட்டம் சூட்டப்பட்ட, சித்ரா வந்து, பஸ்ஸில் ஏறி, காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

ம தியம் அனைவரும் உணவு இடைவேளையில் இருந்த போது, சூப்பர்வைசர் முத்து வந்தார்.

''எல்லாரும் கவனிங்க... இன்னைக்கு சாயந்திரம் 5:00 மணிக்கு மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி இருக்கு. 'ஸ்பெஷல் கெஸ்ட்' வர்றாங்க. எல்லாரும் கண்டிப்பா கலந்துக்கணும்.''

பவானி உற்சாகமானாள். இதுபோன்ற நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்ப்பது அவளுக்கு பிடித்தமானது...

''டின்னர் இருக்கில்ல சார்?'' என்று உற்சாகமாக கேட்டாள். அவளது உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொண்டது.

''இருக்கு, இருக்கு... வீட்டுக்கு போக, வண்டியும் ஏற்பாடு பண்ணிருக்காங்க.''

'அப்போ சூப்பர்' அனைவரும் குதுாகலித்தனர். அப்போது, எழுந்து நின்றாள், சித்ரா.

''சார், என்னால இருக்க முடியாது. நான் 5:00 மணிக்கு கிளம்பணும்.''

''ஏன், சித்ரா?''

''பசங்களுக்கு பரீட்சை இருக்கு, சார். பாடம் சொல்லித் தர, வீட்டுக்கு போகணும்,'' என, கறாராக கூறினாள், சித்ரா.

''ஏம்மா, உன்னோட பசங்க படிக்கிற அதே ஸ்கூல்ல தான், பவானி பசங்களும் படிக்கறாங்க. அவங்க உன்ன மாதிரியா சொல்றாங்க? மேனேஜர் எல்லாரும் கண்டிப்பா இருக்கணும்ன்னு சொல்லி இருக்காரு. ஏதாவது சொல்லணும்ன்னா அவர்ட்ட சொல்லிடுங்க,'' என்று சொல்லி சென்று விட்டார், முத்து. வேறு வழியின்றி முகச்சுளிப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள், சித்ரா.

பவானியும், சாந்தியும் ஜாடையாக பார்த்து சிரித்துக் கொண்டனர்.

மா லை 5:00 மணி. நிறுவனத்தின், கூட்டரங்கில், ரோஜா வண்ண பலுான்கள் கட்டப்பட்டு, மகளிர் தின, பேனரால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.

விழா மேடைக்கு கீழே வரிசையாக போடப்பட்டிருந்த சேர்களில் எல்லாரும் மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தனர். 'ஸ்பெஷல் கெஸ்ட்' இன்னும் வரவில்லை.

மாலை மணி 5:30. சித்ராவின் முகத்தில் எரிச்சல் அதிகரித்தது. அடிக்கடி கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்...

''ஹோட்டலுக்கு எல்லாம் போக வேண்டாம். நானே வந்து சமைக்கிறேன். நீங்க கிளம்பி வாங்க. நான் சூப்பர்வைசர்கிட்ட சீக்கிரம் போக, 'பர்மிஷன்' வாங்குகிறேன்,'' என்று மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தாள்.

அதைப்பார்த்த சாந்தி மெதுவாக பவானியிடம், ''பாரேன்... உலகத்துல அவளுக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கறது மாதிரி, 'ஓவரா' பண்றா,'' என்று கிசுகிசுத்தாள்.

''அட, ஒரு மணி நேரம் தானே. ஒரு நாள் 'லேட்'டா போனா என்ன ஆயிடும்,'' என, பவானி எதார்த்தமாக கூற, மொபைல் போனையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்த, சித்ரா, ''எதுவும் ஆயிடும்ன்னு உங்ககிட்ட சொன்னனா?'' என்றாள் காட்டமாக.

பவானி விழிக்க, ''உனக்கு தேவையா?'' என்று முறைத்தாள், சாந்தி.

ச ரியாக 6:00 மணி. அரங்கிற்குள் வந்தார், சிறப்பு விருந்தினர், அமிர்தா. கைத்தட்டலுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு உரை முடிந்ததும், அமிர்தா பேச ஆரம்பித்தார்:

எல்லாருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்! இன்னைக்கு பெண்கள் செய்யாத வேலைகளே இல்ல. தொழிற்சாலை, ஆபிஸ், போலீஸ், டிரைவர், பிசினஸ், விண்வெளி என, எல்லா துறையிலும், ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதிச்சுட்டு இருக்காங்க.

இவ்வளவு பெண்கள் வேலை செய்து, தங்கள் கால்ல நிக்கறதை பார்க்கறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு வேலைன்னா சம்பளம் மட்டும் இல்ல, அது ஒரு பெண்ணுக்கு தன்னம்பிக்கையும், சுயமரியாதையும், என்னாலயும் முடியும்ங்கிற நம்பிக்கையும் கொடுக்குது.

சரி, இப்போ உங்கள்ல யாராவது மேடைக்கு வந்து, வேலைக்கு வந்த பிறகு உங்க வாழ்க்கையில் என்ன மாற்றம் வந்துச்சுன்னு சொல்லுங்க. உங்க அனுபவம் இன்னொரு பெண்ணுக்கு நம்பிக்கையா, ஊக்கமா இருக்கலாம். யார் முதல்ல வர்றீங்க? என்று அழைத்தார், அமிர்தா.

சந்தோஷமாக எழுந்து மேடைக்கு சென்றாள், பவானி...

''என் பேர் பவானி. நான் வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி வீட்டுல இருந்தப்போ, 'நீ சும்மாதானே வீட்டுல இருக்க'ன்னு என் கணவர் அடிக்கடி சொல்வாரு. வீட்டு வேலைகள்ல யாரும் பெருசா உதவி பண்ணமாட்டாங்க.

''ஆனா, நான் வேலைக்கு வந்ததுக்கப்புறம் எல்லாமே மாறிடுச்சு. இப்போ, என் மாமியாரும், கணவரும் வீட்டு வேலைகள்ல உதவி பண்றாங்க. இந்த வேலை, என் வீட்டுல ஒரு மரியாதையையும் வாங்கிக் கொடுத்திருக்கு,'' என்று கூற, அரங்கம் முழுக்க கைத்தட்டல் ஒலித்தது. அடுத்ததாக மற்றொரு பெண் மேடைக்கு சென்றாள்...

''என் பெயர் காயத்ரி. எனக்கு, 'டிரஸ்' அல்லது வேறு ஏதேனும் வாங்கணும்ன்னா, ஒவ்வொரு முறையும் என் கணவர்கிட்ட பணம் கேட்கணும். சில நேரம், 'இப்போ தேவையா?'ன்னு கேட்பாரு. அதனால, எனக்கு பிடிச்சதையும் வாங்க யோசிப்பேன்.

''ஆனா, இந்த வேலைக்கு வந்ததுக்கப்புறம், என் சம்பளத்துல எனக்கு தேவையானதை நானே வாங்கிக்கிறேன். அந்த தன்னம்பிக்கையும், என்னோட சின்ன சின்ன ஆசைகள நானே நிறைவேத்திக்குற சந்தோஷமும் இந்த வேலைதான் கொடுத்திருக்கு,'' என்றாள், பெருமையாக. அனைவரும் கைதட்டினர்.

அடுத்து யார் பேச போகின்றனர் என்ற ஆவலுடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருக்க, யாரும் எதிர்பாராத வண்ணம், எழுந்து மேடையை நோக்கி சென்றாள், சித்ரா.

சித்ராவை அறிந்த அனைவரும் வியப்புடன் பார்க்க, சாந்தி, 'இவ எதுக்குடி, 'ஸ்டேஜ்'க்கு போறா? நேரத்துக்கு வீட்டுக்கு அனுப்ப மாட்டேங்கறாங்க... இதுல எங்க பெண்கள் சுதந்திரம் பத்தி பேசறதுன்னு கேட்க போறாளா?' என்று, பவானியிடம் 'கிசுகிசு'த்தாள்.

மேடையில் மைக்கைப் பிடித்த, சித்ரா, சில நொடிகள் அமைதியாக நின்று, பிறகு பேச ஆரம்பித்தாள்:

என்னோட பேரு, சித்ரா. ஆனா, என்ன சுத்தி இருக்கவங்க எனக்கு வெச்ச பேரு, 'சிடுமூஞ்சி' சித்ரா. கல்யாணத்துக்கு முன் வரைக்கும், சித்ராவுக்கு இன்னொரு பேரு, சிரிப்புன்னு அக்கம்பக்கத்துல சொல்வாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் சிரிப்பு போய், சிடுமூஞ்சியா மாறிட்டேன்.

அமிர்தாவிற்கு, சித்ராவின் பேச்சு ஆர்வத்தை துாண்டியது. அவளை ஊன்றி கவனித்தார்...

தொடர்ந்தாள், சித்ரா:

என் பள்ளிப்படிப்பு முடிஞ்சதும், நான் கல்லுாரி போய் படிக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா, 'இப்போதான் கல்யாணத்துக்கு நல்ல நேரம்'ன்னு, ஜோசியர் சொன்னார்ன்னு, என் அத்தை மகனுக்கே என்னைக் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க...

என் கணவர் கெட்டவர் கிடையாது. அதேசமயம், பொறுப்பானவரும் கிடையாது. உடல்நிலை சரியில்லைன்னு அடிக்கடி லீவு போடுவாரு. அதனால, வேலை போயிடும். மறுபடியும் புதுசா வேலை தேடுவாரு. இப்படி அடிக்கடி வேலை மாறினதால, வீட்டுல வருமானம் நிலையா இருக்கல.

கடன், வீட்டு வாடகை, குழந்தைகள் படிப்பு என, எல்லாமே என் கண் முன் வர, கட்டாயத்தால வேலைக்கு வந்தேன். நான் வேலைக்கு வந்த பிறகு, என் கணவரும் பொறுப்பை உணர்வார்ன்னு நினைச்சேன். ஆனா, நடந்தது வேறு.

நான் சம்பாதிக்க ஆரம்பிச்சதும், அவரு இன்னும் பொறுப்பில்லாம ஆயிட்டாரு. குடும்பத்துக்கான பொறுப்பை மெதுவா என் தோள்மேலே இறக்கிட்டாரு.

உண்மையை சொல்லணும்ன்னா எனக்கு வேலைக்கு வர்றதுல விருப்பமே இல்லை. குடும்பத்தையும், குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு ஒரு இல்லத்தரசியா வாழணும்ன்றது தான் என் கனவு. என்னைப் பார்த்து, 'நீ வேலைக்கு போற... சுதந்திரமான பெண்'ன்னு சொன்னா, என்னால அதை ஏத்துக்க முடியாது.

எனக்கு வேலை என்பது சுதந்திரம் இல்லை; என் குடும்பத்தை காப்பாத்த வேண்டிய ஒரு கட்டாயம், என்று கூறி நிறுத்தினாள், சித்ரா.

அனைவரும், சித்ராவின் பேச்சை ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருக்க, இடைபுகுந்தார், அமிர்தா...

''சித்ரா, நான் ஒரு விஷயம் சொல்ல விரும்புறேன். நீங்க, வேலைக்கு வந்தது உங்க விருப்பத்தால இல்ல, குடும்ப சூழ்நிலையால தான். அது, உங்க வாழ்க்கையில் நடந்த ஒரு தனிப்பட்ட சம்பவம். அதை வைத்து பெண்கள் வேலைக்கு போறது சுதந்திரம் இல்லைன்னு சொல்லிட முடியாது இல்லையா?'' என்று கேள்வி எழுப்பினார்.

மறுப்பாக தலை அசைத்தாள், சித்ரா...

''நான் எனக்கு நடந்த விஷயத்தை பத்தி மட்டும் சொல்லல, மேடம். பல பெண்களோட நிலைமையை பார்த்ததால சொல்றேன். இன்னைக்கு பெண்கள் வேலைக்கு போறது நல்ல மாற்றம் தான். ஆனா, அதே நேரத்துல இன்னொரு மாற்றமும் நடக்குது.

''பல வீடுகள்ல, 'அவளும் சம்பாதிக்கிறாளே'ன்னு சொல்லிட்டு, குடும்ப பொறுப்பை முழுசா பெண்கள் மேல போட்டுடுறாங்க. பெண்கள் குடும்ப பொறுப்பை பகிர்ந்துக்கறதால, ஆண்கள் தன்னோட பொறுப்புகளையும் பெண்கள் தலையில கட்றது நியாயம் இல்லன்னு சொல்றேன்.

''பெண்கள் சுதந்திரம் வேலைக்கு போறதோ, சம்பாதிக்கிறதோ, பிடிச்சதை வாங்கிக்கிறதோ மட்டும் இல்ல.''

''சித்ரா, நீங்க எதை பெண்கள் சுதந்திரமாக பார்க்கறீங்க? அதை எப்படி பெண் அடையாளம்ன்னு சொல்றீங்க?'' யோசனையுடன் கேட்டார், அமிர்தா.

''என் பார்வையில் பெண் சுதந்திரம் என்பது, ஒரு பெண் தனியா போராடி ஜெயிக்க வேண்டிய விஷயமாக இருக்கக்கூடாது. ஒரு பெண்ணுக்கு சுதந்திரம் அவ பிறந்த வீட்டில் ஆரம்பிக்கணும். பெத்தவங்க, அவளுக்கு கல்வி, தன்னம்பிக்கை மற்றும் முடிவெடுக்கற தைரியத்தையும் கொடுக்கணும். அவளுக்கு திருமணம் ஆன பிறகு, அந்த சுதந்திரத்தை காப்பாத்துறது அவளோட கணவனோட பொறுப்பு. அவளோட உரிமையை மதிக்கணும், அவளோட கனவுகளுக்கு துணையா நிற்கணும், குடும்பப் பொறுப்பை சேர்ந்து சுமக்கணும்.

''ஒரு பெண் சுதந்திரமா வாழணும்ன்னா, அவ மட்டும் மாறினா போதாது, அவளைச் சுற்றி இருக்கிற மனிதர்களும் மாறணும். என்ன படிக்கணும், எப்போ கல்யாணம் பண்ணிக்கணும், என்ன வேலை செய்யணும், குடும்பத்தை எப்படி உருவாக்கணும் போன்ற முடிவுகளை ஒரு பெண் பயமில்லாம, கட்டாயமில்லாம, மரியாதையோட எடுக்க முடிஞ்சா... அதுதான் உண்மையான பெண் சுதந்திரம்.

''நான், 'சிடுமூஞ்சி' இல்ல மேடம். என்னோட சூழ்நிலை என்னை சிரிச்ச முகத்தோட வாழ விடல,'' என்று, சித்ரா சோகத்துடன் முடிக்க, அமிர்தா கைத்தட்ட ஆரம்பிக்க, அவரை தொடர்ந்து பலமான கைத்தட்டல் ஒலி எழுந்தது.

'சூப்பர் சித்ரா' என்று, பவானி அனைவரோடும் சேர்ந்து கைதட்ட, தான் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகு, தன் சம்பள பணத்தை பாதியை மட்டும் தன்னிடம் கொடுக்கும் கணவனை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள், சாந்தி.

பலரின் மனதில், 'சிடுமூஞ்சி' சித்ராவின் பிம்பம் மாறிக்கொண்டிருக்க, அவளை அழைத்து செல்ல வந்த, அவளின் கணவனின் மனதிலும் மாற்றம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது.

ப.தனலட்சுமி புனை ப்பெயர் : ஆதிரா, வயது : 34. படிப்பு : பி.சி.ஏ., பணி : சீனியர் டிஜிட்டல் பிராண்டிங் அதிகாரி. சொந்த ஊர் : கோவை. இவர் எழுதிய கவிதைகள், இணைய தளத்தில் வெளியாகியுள்ளன. திரைக்கதை எழுத்தாளராக வேண்டுமென்பது இவரது லட்சியம். கதைக்கரு பிறந்த விதம்: இந்த கதைக்கான கரு, நான் நேரில் பார்த்த ஒரு சம்பவத்திலிருந்து பிறந்தது. எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்த கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைகளையும், அப்பெண்ணின் நிலைமையும் என்னை பாதிக்க, கதையாக உருவானது. ஒருவரது வெளிப்புறத்தில் தெரியும் விஷயங்களை மட்டும் வைத்து, அவரது, 'கேரக்டரை' நாம் தீர்மானிக்கக்கூடாது என்பதையும் உணர்த்தவே இக்கதை எழுத துாண்டுதலாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us