
''அப்பா கிளம்பியாச்சா?'' மீசையில் முளைத்திருந்த வெள்ளை முடிகளை, நறுக்கி சீர் செய்தபடி தன் மனைவியிடம் கேட்டான், கண்ணன்.
''அடேங்கப்பா. நாங்க கேட்டதும் உங்கப்பா அப்படியே பதில் சொல்லிடுவார் பாருங்க. 'நான் இங்கே இருக்கிறது உனக்கு இடைஞ்சலா? 1966-ல், 'ஹவுசிங் லோன்' போட்டு நடையா நடந்து கட்டின வீடு. இதுல உட்கார கூட அனுமதி இல்லையா'ன்னு என்னைக் கேள்வி கேட்கவா? எதுவா இ ருந்தாலும் நீங்களே கேட்டுக்கங்க,'' என்றவளின் குரலில், கோபத்தை விட ஆற்றாமையே அதிக ம் வெளிப்பட்டது.
அவளின் கோபத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. யார் என்ன பேசினாலும் குதர்க்கம், அதற்குள் ஒரு அர்த்தம் என்று அப்பா பேசும் போது பெற்ற பிள்ளைகளுக்கே வலிக்கும் போது, மருமகள் என்ற உறவில் இருப்பவளிடம் பொறுமையை எதிர்பார்க்க முடியாது தான். வெளியில் வந்தான், கண்ணன்.
'டிவி'யில் நகைச்சுவை காட்சி ஒடிக் கொண்டிருக்க, அதை வேண்டாவெறுப்பாய் பார்த்துக் கொண்டிருந்தார், கண்ணனின் அப்பா, ரகுவரன்.
அவர் உடல் மொழியும், மனமொழியும் அந்த இயல்பான நகைச்சுவை காட்சிக்குள் ஆழ்ந்து போகவே இல்லை.
'நான் சொல்லல...' என்பது போல் பார்த்தாள், மருமகள், ராதா.
''அப்பா, கிளம்பலாமா?''
திரும்பி பார்த்தவர் முகம் நொடியில் சினந்து போனது.
''எதுல போறோம்?''
''பைக்கில தான்பா.''
''எனக்கு பைக்கில வர வசதிப்படாது. டாக்சி பிடி.''
''ஏன்ப்பா?'' என்று கேட்டது தான் தாமதம், அவரின் முகம் கடுகடுத்துப் போனது.
''எனக்கு ராத்திரியில, 'ஹெட்லைட்' வெளிச்சம் கண்ணை கூசும். வண்டியில போனா தலை சுத்தும். கீழே தள்ளுறது போல இருக்கும்,'' என்றார்.
''இல்லப்பா அதெல்லாம் பண்ணாது. நான் மெதுவாய் போறேன்,'' என்றான் தன்மையாக.
அவ்வளவு தான். அவரின் சிடுசிடுத்த முகம் சினமேறி சிவந்தது.
''நடந்து போறதுனா கூட போயிக்கலாம். இப்போ என்னாயிடப் போகுது? மேடவாக்கம் மெயின் ரோட்டுல தானே ஆஸ்பத்திரி இருக்கு. நான் பஸ்சோ, ஷேர் ஆட்டோவோ பிடிச்சு வந்துடறேன். நீ பைக்ல வந்துடு. நான் பார்க்காத மேடவாக்கமா?'' சுள்ளென்று பேசி, செருப்பை மாட்டிக் கொண்டு நடக்க, பின்னாடியே பதறி ஓடி வந்தான், கண்ணன்.
''என்னப்பா இது. ஒரு யோசனை தானே சொன்னேன். பிடிக்கலைனா, எது பிடிக்குதோ அதுல போயிட்டுப் போறோம். அதுக்கு ஏன் இத்தனை கோபம், சிடுசிடுப்பு?'' என்றான், சலிப்பாக.
''ஆமாடா, அப்படித்தான் இருக்கும். ஆசாரிக்கு வயசானால் அகப்பை செய்யத் தான் லாயக்காம். இருந்த இருப்பும், வாழ்ந்த வாழ்க்கைக்கும் என்ன அர்த்தமிருக்கு? அனுபவம் எல்லாம் முடிக்கு சமானம் உங்களுக்கு,'' என்றவர் நடக்க, எதிரில் வந்த ஆட்டோவை கையமர்த்தி, இருவரும் ஏறி கொண்டனர்.
வழிநெடுக ஒரு வார்த்தையும் பேசவில்லை. அப்பாவின் முகத்தில் சிடுசிடுப்பும், கடுகடுப்பும் கூடையில் அள்ளலாம் போல் கொட்டிக் கிடந்தது.
அ ம்மா தவறிப்போய், 10 ஆண்டுகள் ஆகின்றன. கண்ணனும், பெங்களூரில் இருக்கும் மூத்த பிள்ளை, சாரதியின் வீட்டிலும் மாறி மாறி இருப்பார்.
அவர் இருக்கும் நாட்கள் உண்மையில் இரு பிள்ளைகளுக்கும் சோதனையான நாட்கள் தான்.
வீட்டில் சிரிப்பு இருக்காது. எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழுவார். அவருக்கு பிடிக்காததை செய்து விட்டால், தர்க்கம் செய்ய மாட்டார். மாறாக சத்தியாக்கிரகம் செய்வார். காண்போர்களிடம் எல்லாம், 'பிள்ளைகள் சரியில்லை...' என்று குறை கூறுவார்.
இதுதான் அவர் குணமென்று சமாதானம் பண்ணிக் கொள்ள இயலாது, பிள்ளைகளால்.
டா க்டரை பார்க்க இரவு 8:00 மணியைத் தாண்டி இருந்தது. 'கிளினிக்'கில் உபாதையோடு பலர் அமர்ந்திருக்க, இவர் மட்டும், ''இவ்வளவு நேரமா ஒவ்வொருத்தரும் உள்ளே நுழைஞ்சா? போனவங்க எல்லாரும் துாங்கிட்டாங்களா? நீ போய் பாருடா,'' என்று முணங்கிக் கொண்டே இருந்தார். ஒரு வழியாக இவர்கள் முறை வந்ததும் உள்ளே நுழைந்தனர்.
டாக்டரும், அப்பா வயதிற்கு சமமானவராய் தான் இருந்தார். என்றாலும், அவர் முகத்தில் தவழ்ந்த கனிவும், தேஜஸும் ஒரு நொடி கண்ணனுக்கே, 'இவர், எனக்கு அப்பாவாக இருந்திருக்க கூடாதா...' என்ற சிந்தனை தோன்றி மறைந்தது.
''வாங்க, ரகுவரன் சார்,'' என்றார், முகம் மலர.
''எப்படியிருக்கீங்க?'' என்று கேட்டது தான் தாமதம், மடை திறந்த வெள்ளமாய் கொட்ட ஆரம்பித்தார், கண்ணனின் அப்பா, ரகுவரன்.
''ஏன் இருக்கேன்னு கேளுங்க, டாக்டர். தினமும் காலையில, இரண்டு மணி நேரம், 'வாக்கிங்' போயிடறேன். சுகர் குறைக்கவான்னு கேட்காதீங்க. அதான் இல்ல. இவங்க பண்றதை பார்த்தா, எனக்கு சர்க்கரை, ரத்தக் கொதிப்பு அத்தனையும் ஏறிடும்.''
''அப்படி என்ன பண்றாங்க?'' என்றார், டாக்டர்.
''காலையில, நேரமா எழுந்திரிக்க மாட்டாங்க. லேட்டா எழுந்துட்டு வீட்டையே களேபரம் பண்ணுவாங்க. கொஞ்சம் முன்னாடி எழுந்து, ஆற அமர செய்யக்கூடாதான்னு கேட்டா, நாலாபக்கமும் முணு முணுப்பு கேட்கும். என்னைத்தான் பேசுறாங்கன்னு தெரியும். ஆனா, என்னன்னு தெரியாது. காதுதான் கேட்கறது இல்லயே,'' என்றவரின் அந்த வார்த்தையில் அத்தனை ஆதங்கம் இருந்தது.
தர்ம சங்கடத்தோடு நின்றான், கண்ணன்.
''ஏதாவது கோவில், குளம்ன்னு போய் சுத்தி பார்த்துட்டு வாங்க, ரகுவரன். மனசுக்கு, 'ரிலாக்சா' இருக்கும்.''
''அதை கேட்காதீங்க, டாக்டர். அந்தக் கொடுமையை எங்கே போய் சொல்றது. போன வாரம், திருக்கடையூர் போனாங்க. எனக்கு பக்கத்து வீட்டு பெருமாளை துணைக்கு வச்சுட்டு. பாவம் இவங்களுக்கு தான் வயசாச்சு, திருக்கடையூர் அபிராமியை தரிசிக்கணுமில்ல,'' அவரின் குரலில் தெரிந்த கேலியில், கண்ணன் முகம் சுண்டிப் போனது.
''கொஞ்சம், 'செக்' பண்ணி மருந்து கொடுத்திட்டா நாங்க கிளம்பிடுவோம், டாக்டர்,'' என்றான், கண்ணன்.
செவிலி வந்து, அவரை ரத்த பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல, இன்னுமே இறுக்கம் தளராமல் அமர்ந்திருந்தான்.
''கண்ணன் ரிலாக்ஸ்,'' என்றார், டாக்டர்.
''இல்ல டாக்டர். அவர்கிட்ட எப்படி நடந்துக்கணும்ன்னு தெரியல. எப்பவும் சிடுசிடுன்னு இருக்கார். அவர் சிரிச்சு பார்த்து எத்தனையோ மாசம் ஆச்சு. எல்லாத்தையும் குறை சொல்றார்; எல்லார்கிட்டேயும் குறை கண்டுபிடிக்கிறார். சலிப்பா இருக்கு, வெறுப்பா கூட இருக்கு,'' என்றான்.
''எல்லாம் சரியாகும்,'' என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார், டாக்டர்.
அ ன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன.
வெறிச்சோடிய சாலையில் எந்தப் பக்கத்தில் இருந்து, நாயும், மாடும் வருமோ என்று சஞ்சலமாக இருந்தது. அவைகளுக்கு கூட வயதானவர்களை கண்டால் இளக்காரம் தான்.
''மிஸ்டர் ரகுவரன் எங்கே இந்தப் பக்கம்?'' என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார். டாக்டர் தான். கொஞ்சம் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது. ''எப்படி சார் உடம்பு இருக்கு? எல்லாம் நார்மலா இருக்கா? தனியா, 'வாக்கிங்' வந்திருக்கீங்க. குட் குட்,'' என்றார், புன்னகையுடன்.
''தனி தானே சார் எல்லாரும். நம்ம காலம் மாதிரி பிள்ளைகள் கிட்டே மரியாதை இல்ல. பெரியவங்க மேல அலட்சியம். வயதானவங்க மேல இருக்கிற ஒரு இளக்காரம்,'' என்றார், விரக்தியோடு.
அவர் முகத்தையே பார்த்தார், டாக்டர்.
''வாங்க சேர்ந்து நடப்போம்.''
இருவரும் சேர்ந்து நடந்தனர்.
''உங்களுக்கு எத்தனை வயசாகுது, மிஸ்டர் ரகுவரன்?''
''எழுபத்தைந்து வயசாகுது, சார்.''
''கிட்டதட்ட என் வயது தான். இன்னும் எத்தனை காலம் நம்ம கையில இருக்கோ?'' என்று மென்மையாக புன்னகைத்தார்.
ரகுவரன் முகத்தில் விரக்தி அடர்ந்தது.
''குறைந்தபட்சம், ஐந்து அல்லது பத்து ஆண்டுகள். அதுகூட அதிகம் தான். இந்த சின்ன வாழ்நாள்ல கூட இந்த சமூகமும், வீடும் நம்பளை சந்தோஷமா வச்சுக்க மாட்டேங்குதே என்ற ஆதங்கம் தான், டாக்டர்.''
''நான் ஒன்று சொல்லட்டுமா, ரகுவரன்? கணக்கில்லாம காலம் நம் கையில் இருக்கும் போது கவனக்குறைவா செ லவழிக்கலாம். இவ்வளவு தான் நம்ம காலம், என்ற திட்டவட்டத்திற்கு வந்த பிறகு மீதமிருக்க நாட்களை அழகாக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு.''
'புரியல' என்பது போல் பார்த்தார்.
''உங்களுடைய எஞ்சியிருக்கும் நாட்களை, வருஷங்களாக கணக்கிடாதீங்க, நிமிஷங்களாக கணக்கிடுங்க. கையில இருக்கிற, 100 ரூபாயை ஒரே தாளாய் பார்க்கிறதுக்கு பதிலா, கைநிறைய சில்லரையாய் மாத்துங்க. இருக்கிற ஒவ்வொரு நாணயத்தையும், அர்த்தமுள்ளதாகவும், உணர்வு மிகுந்ததாகவும் பயன்படுத்துவேன்னு உங்களுக்குள்ளே சின்னதா உறுதி எடுத்துக்கங்க.
''உங்களுடைய கவனத்துக்காக சொல்றேன், மிஸ்டர் ரகுவரன். காலம் மாறிடுச்சுன்னு நமக்கு நாமே சொல்லிக்கிறோம் இல்ல? காலம் மாறவே இல்லை. அது, நிலையானது. அதில் வாழ்கிற நாமதான் மாறி போய்ட்டோம். சகிப்புத் தன்மையும், விட்டுக் கொடுத்தலும் மறந்து போயிடுச்சு.
''குறைந்த வாழ்நாள் தான் இருக்கு. என்னை அனுசரிச்சு போகலைன்னு கவலைப்படாம மிச்சமிருக்க வாழ்நாள்ல என் குழந்தைகளின் மனதில் புன்னகையாய் உறைந்து இருப்பேன்னு ஏன் நாம நினைக்க கூடாது? யாரும் மரணமடைய விரும்பறதே இல்லை. அதை விட பேருண்மை எது தெரியுமா? மரணத்திற்கு பின்பும் யாருடைய மனதிலாவது அழியாமல் வாழ்வது தான்.
''உங்கள் வாழ்நாளை சில்லரையாய் மாற்றி, கையில் தர்றேன். சில்லரையோட சிறப்பே கலகலப்பது. எப்பவும் கலகலப்பா இருங்க. கோபம், விரக்தி, இயலாமை, பயம், எல்லாமே சின்னச் சின்னச் சில்லரைகள் தான். அது செலவானதும் மற்றொரு உணர்ச்சிக்கு வாங்க. எப்பவும் சிதறிய சில்லரைகள் போல் கலகலப்பா இருங்க. உங்கள் கை நிறைய வாழ்நாளும், பல்லாயிரம் கோடி உணர்வுகளும் மிச்சமிருக்கும் போது, எதற்கு எதையோ பறிகொடுத்த மாதிரி விரக்தியும், சிடுசிடுப்புமாய் இருக்கணும்?'' என்றார், டாக்டர்.
ரகுவரன் முகம் தெளிவானது.
கோவில் வாசலில் நாவல் பழம் விற்பதைப் பார்த்ததும், நீண்ட இடைவெளிக்கு பிறகு பேத்திக்கு பிடிக்குமென்று வாங்கிக் கொண்டார்.
டாக்டர் மாற்றிக் கொடுத்திருந்த நாணயத்தில் முதலாவதை, புன்னகைக்காக செலவு செய்திருந்தார்.
எஸ்.பர்வின் பானு

