PUBLISHED ON : அக் 11, 2026

''ப் ரியா, நான் சொல்றதை கேளு, இதெல்லாம் நம்ம மாதிரி குடும்பத்துக்கு ஒத்து வராது.''
''படிச்சு முடிக்கிற வரை தான், உன் தொல்லை பெரிசா இருந்துச்சு. இப்ப என் கால்ல நிற்கிறேன்; கை நிறைய சம்பாதிக்கிறேன். இன்னும் ஏன்ம்மா என்னை தொல்லைப் பண்ற?''
''இதோ பாருடி, அப்பா இல்லாத பொண்ணுங்களாச்சேன்னு தான், நான் நாலு வீட்டுல பத்து பாத்திரம் தேய்ச்சு, உன்னை பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வைச்சேன். உன் தங்கச்சி, பிளஸ்2 முடிக்கப் போறா. அவளையும் படிக்க வைக்கணும். ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்யணும். அம்மா வளர்த்தப் பொண்ணுங்க தறுதலையா போச்சுன்னு யாரும் சொல்லிடக் கூடாதுடி.''
''போம்மா, உனக்கு எப்பவும் இதே பாட்டு தான். நீ கஷ்டப்பட்டதையே சொல்றியே, நான் பி.இ., படிக்க காரணம் பிளஸ் 2வில் நல்ல மார்க் எடுத்தது தான். தவிர, 'ஸ்காலர்ஷிப்' கிடைச்சு தான், நான் படிச்சேன். அப்பவும், மத்தவங்க மாதிரி, ஏதாவது கேட்டு நச்சரிச்சிருக்கேனா? எல்லாரும் கலர் கலரா டிரெஸ் போடும் போது, நான் இருக்கிற 4, 5 சுடிதார்களை போட்டுக்கிட்டுப் போகலையா?
''காலையில் பழைய சோறும், மதியம் கேன்டீனில் ரெண்டே ரெண்டு இட்லியும் தான் சாப்பிடுவேன். யாராவது கேட்டால், பந்தாவா, 'டயட்'ல இருக்கேன்னு சொல்லிடுவேன். அப்படி படிச்சு தான், 'கேம்பஸ் இன்டர்வியூ'ல, 'செலக்ட்' ஆகி, சம்பாதிக்கிறேன். இப்ப என்ன குடி முழுகிப் போச்சு?
''நாளைக்கு புது வருஷம் பிறக்கப் போகுது. 'ப்ரெண்ட்ஸ்' எல்லாரும் சேர்ந்து நட்சத்திர ஹோட்டலுக்கு, புது வருஷ கொண்டாட்டத்துல கலந்துக்கப் போறோம். அதிலும், பத்து பேர் பெண்கள். அதில் மூன்று பேர் நம்ம பகுதியை சேர்ந்தவங்க. இதுல பயப்பட என்னம்மா இருக்கு?''
''எவ்வளவு பேர் இருந்தாலும், வயசுப் பொண்ணுங்க இரவு 12:00 மணிக்கு மேல் தனியா போறதாவது?''
''ஏன்ம்மா பேசியே உயிரை எடுக்கற? இப்படி பேசி, அறுத்ததினால தான், எங்கப்பன் உன்னை விட்டுட்டு போயிட்டான் போல.''
கமலாவின், 'வீக் பாயின்ட்டை' தொட்டு விட்டாள், ப்ரியா. கண்கள் கலங்க அமைதியானாள், கமலா.
சி றிது நேரத்தில் உள்ளே நுழைந்தாள் பக்கத்து வீட்டு, பாஞ்சாலி.
''கமலா, நான் வேலைக்கு கிளம்பிட்டேன். என் பையன் வந்தா இந்த சாவியை குடுத்துடு. 'நைட் டியூட்டி' முடிச்சு, களைச்சு போய் வருவான். சாப்பிடாம துாங்கிடப் போறான். நீ சாப்பிட வைக்கறியா?''
''நீ கவலைப்படாதேக்கா, நான் பார்த்துக்கிறேன்.''
''உன் கண்கள் ஏன் கலங்கியிருக்கு?''
நடந்ததைக் கூறினாள், கமலா...
''அக்கா, உனக்கே தெரியும், பசங்க பழைய சோறு சாப்பிட்டு, மிச்சம் வைக்கும் நீச்சத் தண்ணீரை குடிச்சுட்டு, ஒவ்வொரு வீடா, வேலை செய்ய போயிடுவேன். சில வீடுகளில் சாப்பாடு கொடுத்தால், அதை நான் சாப்பிடாமல், படிச்சுட்டு வர பசங்க சாப்பிடட்டும்ன்னு அப்படியே அவங்களுக்கு, கு டுத்துடுவேன். இரவு நான் சமையல் செய்து, அவங்க திருப்தியா சாப்பிட்டு மீதி வைக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு தானே, உயிர் வாழ்ந்தேன்?''
''நீ கவலைப்படாதே, அதுவும் சின்னஞ்சிறிசு தானே? இப்ப கையில் நாலு காசு புழங்கவே, வெளில, வாசல்ல போகணும்ன்னு தோணியிருக்கு. எல்லாம் சரியாயிடும்,'' என்று ஆறுதல் கூறி கிளம்பி விட்டாள், பாஞ்சாலி.
இ ரவு 10:00 மணி. ஊதா நிறத்தில், 'லெக்கின்ஸ்' உடம்பை கவ்விப் பிடித்திருக்க, இளஞ்சிவப்பு நிறத்தில், ரோஜா பூ ஆங்காங்கே போட்டிருக்கும், 'டைட் டாப்ஸ்' ப்ரியாவினுடைய பால் நிறத்திற்கும், உடல்வாகுக்கும் கவர்ச்சியூட்ட, அவளைப் பார்ப்பதற்கே, கமலாவின் கண்கள் கூசின. அம்மா தன்னை நோட்டமிட்டபடி நிற்பதை கீழ் கண்ணால் பார்த்தவாறே, நேற்று கடையில் வாங்கி வைத்திருந்த, 'பர்ப்யூமை' அடித்துக் கொண்டு கிளம்பி விட்டாள், ப்ரியா.
ஆ ட் டோவில், அந்த, 'பைவ் ஸ்டார்' ஹோட்டலை தோழிகள் அடையும் போது, இரவு மணி 11:00. புத்தாண்டு கொண்டாட்டம் ஆரவாரமாக தொடங்கியது. யார் வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் ஜோடி சேர்ந்து ஆடலாம். சிறிது நேரத்தில் ஆட்டம் களை கட்டியது. முதலில் கூச்சப்பட்டாலும், பிறகு அனைவரும் எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஆடுவதை கண்டவுடன், ப்ரியாவும் தன்னை மறந்து ஆடத் தொடங்கினாள்.
அனைவருக்கும் அழகிய வேலைப்பாடமைந்த கோப்பையில், மது வழங்கப்பட்டது. அம்மாவால் கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்பட்ட, ப்ரியா, அதை மட்டும் தொடவில்லை. அவளுடைய தோழிகளில் பலரும் மது அருந்தினர். அடுத்து சாப்பாடு. அவரவருக்கு வேண்டிய உணவை எடுத்து சாப்பிட, கலகலப்பாக நேரம் போனதே தெரியவில்லை. ஒரு வழியாக கொண்டாட்டம் முடிந்து, அவர்கள் கிளம்பும் போது இரவு மணி 2:00. ஆண்கள், தத்தம் வண்டிகளில் கிளம்பி விட, அவர்களுடன் வேலைப் பார்க்கும், சசிகுமார், பெண்களை அவனுடைய காரில் அவரவர் வீட்டு பக்கத்தில் மெயின் ரோட்டில் இறக்கி விடுவதாக கூற, அனைவரும் காரில் ஏறினர். சசியுடன் அவனுடைய மனைவியும் வந்திருந்தாள்.
வழியெங்கும் மக்கள் நடமாட்டம். அந்த நேரத்திலும் பைக்கில் இரண்டு, இரண்டு இளைஞர்களாக, 'ஹாப்பி நியூ இயர்...' என்று கத்திக் கொண்டும், மிக சிலர், ஜோடியுடன் பறந்துக் கொண்டும் இருந்தனர்.
இவர்கள் இருக்கும் பகுதியில், முதலில் குமாரியையும், லீலாவையும் இறக்கி விட்டு, கடைசியில், ப்ரியாவின் குடியிருப்பு இருந்த தெரு அருகில் உள்ள, 'மெயின் ரோடில்' இவளையும் இறக்கி விட்டு, கார் கிளம்பியது.
'மெயின் ரோடி'லிருந்து உள்ளே திரும்பும் அந்த தெரு பெரியது. அடுத்தடுத்து, 'அப்பார்ட்மென்ட்'கள் மற்றும் சிறு வீடுகள் நிறைந்த பகுதி. அதையும் தாண்டி, ஏழ்மையான மக்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்தது, ப்ரியாவின் வீடு. மெயின் ரோடும், தெருவும் சந்திக்கும் முனையில், நான்கு கல்லுாரி மாணவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
தெருவில் எப்படி தனியாக நடப்பது என்று பயந்து போயிருந்த, ப்ரியாவிற்கு, அந்த இளைஞர்களை பார்த்தவுடன் தான் உ யிர் வந்தது. இன்னும், 60 வீடுகள் தள்ளி போனால், வீடு வந்து விடும். ப்ரியா, வேகமாக நடக்க, எதிர்புறத்தில் வந்துக் கொண்டிருந்த, 'ஹீரோ ஹோண்டா, பைக்' இவளுக்கு எதிர்புறத்தில் 'ப்ளாட்பார்ம்' அருகில் நிறுத்தப்பட்டு, அதில் பின்புறம் அமர்ந்திருந்த ஒருவன், இவளை நோக்கி வர தொடங்கினான்.
ஏதோ விபரீதம் என்று இவள் சுதாரிப்பதற்குள், அவன், அவளை நெருங்கி கட்டியணைக்க, 'உதவுங்கள், உதவுங்கள்' என்று, இவள் கூக்குரலிட்டாள். யாரும் உதவ முன் வரவில்லை. அதற்குள் அந்த இளைஞன் அவளை இழுத்துக் கொண்டு, 'பைக்' அருகில் சென்றான். எவ்வளவு திமிறியும், அடித்தும், அவளால் விடுபட முடியவில்லை. அதற்குள் அவன், அவள், 'டாப்ஸை' கிழிக்கவும், அவளை முத்தமிடவும் முயன்றான். அப்போது, அந்த தெரு முனையில், போலீஸ் ரோந்து வண்டி நுழைய, இவளை தெருவிலேயே வீசி விட்டு, பைக்கில் ஏறி தப்பித்தனர், அந்த இளைஞர்கள்.
கீழே விழுந்துக் கிடந்த, ப்ரியா அருகில் வந்து நின்றது, 'போலீஸ் ஜீப்!' பெண் போலீஸார் இருவர், இறங்கி வந்து, இவளை துாக்கி நிறுத்தி விசாரிக்க, நடந்ததை கூறினாள், ப்ரியா.
''வா, உன்னை உன் வீட்டில் விட்டு விடுகிறேன்,'' என்றார், இன்ஸ்பெக்டர் தேவகி. அதே நேரத்தில், இன்னும் ப்ரியா வரலயே, இருட்டில் தனியா வர பொண்ணு பயப்படுமே என்று யோசித்து, பாஞ்சாலியை கூட அழைத்துக் கொண்டு, அங்கு பதைபதைக்க, ஓட்டமும், நடையுமாக வந்து சேர்ந்தாள், கமலா.
இன்ஸ்பெக்டரை பார்த்தவுடன், ''வாங்கம்மா,'' என்று பாஞ்சாலி கூற, ''உனக்கு மேடத்தை தெரியுமா?'' என்று கேட்டாள், கமலா.
''மேடத்தின் மகளை தான் நான் தினமும் பார்த்துக்கறேன்,'' என்றாள், பாஞ்சாலி.
தேவகியின் 21 வயது மகள், ரமா. மனநிலை பாதிக்கப்பட்டவள். மேடம் வேலைக்கு சென்ற நேரத்தில், அவளை அக்கறையுடன் கவனித்துக் கொள்வது தான், பாஞ்சாலியின் வேலை. இரவு பகல் என்று இரண்டு நேரமும், இரண்டு பணிப்பெண்கள், ரமாவை பார்த்துக் கொள்ள அமர்த்தப் பட்டிருந்தனர்.
''மேடம், இவளைப் பற்றி தான் நான் உங்களிடம் நேற்று காலை கூறினேன். இவ தான் நான் சொன்ன அந்த, ப்ரியா,'' என்று, பாஞ்சாலி கூற, ஆவேசமானார் தேவகி...
''ஏன்டி, முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள உனக்கு, 'ஸ்டார் ஹோட்டல்' கொண்டாட்டம் கேட்குதா? போட்டிருக்கிற 'டிரெஸ்'ஸைப் பாரு. இந்த மாதிரி கவர்ச்சியா,'டிரெஸ்' பண்ணிக்கிட்டு, 'எங்களுக்கு பாலியல் தொல்லை குடுக்கறாங்க, பலாத்காரம் பண்றாங்க'ன்னு கூப்பாடு போட்டா, என்னடி அர்த்தம்?''
''மேடம், ரொம்ப பேசாதீங்க. நாங்க இந்த மாதிரி, 'டிரெஸ்' பண்றதுனால தான் ஆம்பளைங்க அத்து மீறுவதா சொன்னீங்க. அப்ப, சின்னஞ்சிறு 3, 4 வயசு குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யறாங்களே, அதுக்கு, அந்தக் குழந்தைகளா காரணம்? ஆம்பளைங்க மட்டும் தான் கொண்டாட்டங்கள்ல கலந்துக்கணுமா? நாங்க விரும்பிய உ டையை போடக் கூட எங்களுக்கு உரிமையில்லையா?''
அடுக்கிக் கொண்டே போக, ''அம்மாவை அசிங்க அசிங்கமா பேசறியாமே? என்கிட்டயே இவ்வளவு பேசற நீ, உன் அம்மாகிட்ட ஏன் பேச மாட்ட? மானத்தை காப்பாத்திக்க திராணியில்லாம எதுக்குடி இப்படி அவமானத்தை தேடிக்கிறீங்க? ஒரு தற்காப்பு கலையையாவது தெரிந்து வைச்சிருக்கியா? எந்த குருட்டு தைரியத்தில் தகுந்த துணை இல்லாமல், நீங்கல்லாம் நடுராத்திரியில் வெளியில் கிளம்பறீங்க?''
கேட்டுக் கொண்டே, 'பளீர் பளீர்' என்று கன்னத்தில் நாலு அடிவைக்க, ''மேடம், என் பொண்ண அடிக்காதீங்க,'' என்று கமலா, காலில் விழுந்து கதறினாள்.
''பாத்தியாடி, இது தான் அம்மா,'' என்ற, தேவகி, ''உங்களுக்காக மெழுகு போல் உருகியிருக்காங்க, இவங்க. உங்க அப்பா, உங்க அம்மாவுடைய, 'தொணதொண'ப்பினால உங்களை விட்டு போகல. ரெண்டும் பொம்பள பிள்ளைகளா இருக்கிற வீடு தரித்திரம்ன்னு யாரோ ஒரு போலி ஜோசியன் சொன்னதை நம்பி தான் ஓடிட்டான்,'' என்று, தேவகி கூற, ப்ரியாவின் மனது மெதுவாக அம்மாவிற்காக கசியத் துவங்கியது.
''பாஞ்சாலி, உங்க அம்மாவை புரிஞ்சுக்கிட்ட அளவுக்கு கூட, பெத்த பொண்ணு நீ புரிஞ்சுக்கலையே? உங்க அப்பா உங்களை அனாதரவா விட்டுட்டு போன பிறகு, உங்க அம்மாவை கல்யாணம் பண்ணிக்க நெறய பேரு முன் வந்தாங்க. அவங்க கல்யாணத்துக்கு போட்ட ஒரே 'கண்டிஷன்!' 'குழந்தைகளை அவங்க அம்மா வீட்டுல, இல்லைன்னா அனாதை ஆசிரமத்துல விட்டுட்டு வரணும்...' என்பது தான். அதுக்கு, உங்க அம்மா சொன்ன ஒரே பதில், 'எனக்கு ஆம்பள துணை வேண்டாம், என் ரெண்டு பொண்ணுங்களை வளர்த்து ஆளாக்கறது தான் என் ஒரே லட்சியம்'ன்னு சொல்லிட்டாங்க. இன்னிக்கு காலைல தான் உங்க அம்மாவைப் பற்றி, பாஞ்சாலி அழாத குறையா சொன்னா.''
மேடம் முடிப்பதற்குள், ''மேடம், இனி சத்தியமா நான் எந்த தப்பும் பண்ண மாட்டேன். அம்மாவை தவறா பேச மாட்டேன், இப்ப தான் நான், எங்களுக்காகவே வாழற எங்க அம்மாவை புரிஞ்சுக் கிட்டேன்,'' என்று, ப்ரியா அழுகையுடன் சொல்ல, ஒன்றும் பேசாமல் தன் 'ஜீப்'பில் ஏறினார், இன்ஸ்பெக்டர், தேவகி.
கடந்த ஆண்டு, இதே நாளில், அம்மாவுக்கு தெரியாமல், 'டிஸ்கொதே' போன, இன்ஸ்பெக்டர், தேவகியின் மகள், கூட்டு பாலியல் வன்கொடுமையால், மனநோயாளியானது எவருக்கும் தெரியாது. கண்டிப்பாக தன் மகளுக்கு ஒரு நாள் குணமாகி விடும் என்ற திட நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள், தேவகி.
தன் மகளையொத்த ஒரு பெண்ணின் மானத்தை காப்பாற்றி, அவளை நல்வழிப்படுத்திய நிம்மதியிலும், தன் மகளின் தற்போதைய நிலையையும் ஒரு சேர நினைத்தவாறே, 'ஜீப்'பில் ஏறி அமர்ந்த, தேவகியின் கண்களிலிருந்து கண்ணீர், 'சரசர'வென இறங்கி, அவருடைய சீருடையை நனைத்தது.
ஜோதி காந்தரூபி
வயது: 42.
படிப்பு: வணிகவியல் முதுகலை மற்றும் கணினி அறிவியலில் பட்டய படிப்பு.
பணி: இல்லத்தரசி.
சொந்த ஊர்: சென்னை.
இதுவரை வெளியான படைப்புகள்: 4.
எழுத்துத்துறையில் தனக்கான குறிப்பிட்ட இடத்தைப் பிடிப்பதே, இவரது லட்சியம் என்கிறார். கதைக்கரு பிறந்த விதம்:
இளம் தலைமுறையினரின் போக்கும், அவர்கள், தன் பெற்றோரிடம் பேசும் விதத்தையும் கேள்விப்பட்ட போது, தோன்றிய சிந்தனையின் வெளிப்பாடே இக்கதை.
