PUBLISHED ON : மே 31, 2026

கோர்ட் வாசலில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்தி, ஏதோ யோசனையுடன் உட்கார்ந்திருந்தான், ராமு.
''தம்பி, ஆட்டோ வருமாப்பா?''
''எங்கே போகணும்.''
''அண்ணா நகர்.''
ஒரு பெரியவரும், இளம் வயது பெண்ணும் நிற்பதை பார்த்து, ''சரி ஏறுங்க,'' என்றான், ராமு.
ஆட்டோ கிளம்பி, 'டிராபிக்'கில் போக, அந்த பெரியவர் அருகில் இருந்த பெண்ணிடம், ''வித்யா... எனக்கென்னமோ நாம் அவசரப்படுறோமோன்னு தோணுது. கல்யாணமாகி மூணு வருஷம் தானே ஆகுது. கொஞ்சம் பொறுத்திருக்கலாம்.''
''என்னப்பா நீங்க, கல்யாணம் பண்ணியதற்காக, கடைசி வரை என்னைக் கஷ்டப்பட சொல்றீங்களா? முடியாதுப்பா. பொறுத்து பார்த்து தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். அவர்கிட்டயிருந்து எனக்கு விடுதலை வேண்டும். காலமெல்லாம் அடிமை வாழ்க்கை வாழ முடியாது.''
சற்று கோபமாகவே பதில் சொன்னாள், அந்தப் பெண்.
அவர்கள் பேசுவதிலிருந்து, 'டைவர்ஸ்' விஷயமாக கோர்ட்டுக்கு வந்து போகின்றனர் என்பது, ராமுவுக்கு புரிந்தது.
''என்னம்மா பண்றது. பெத்த மனசு கலங்குது. உனக்கு நல்லது நினைச்சுதானே கல்யாணம் பண்ணி வச்சோம். இப்படி ஆகும்ன்னு கனவிலும் நினைக்கலை.''
அவர் குரல் வருத்தத்துடன் ஒலித்தது.
''கவலைப்படாதீங்கப்பா... என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். படிச்சிருக்கேன். கூடிய சீக்கிரம் நல்ல வேலை தேடிப்பேன். என் சுயத்தை இழந்து வாழுறதுக்கு, சுதந்திரமாக இருந்துட்டு போறேன்.''
குறுக்கே ஒருவன் சைக்கிளில் வர, 'பிரேக்' போட்டு ஆட்டோவை நிறுத்தியவன், ''தம்பி பார்த்து போப்பா. கொஞ்ச நேரத்தில், 'ஆக்சிடென்ட்' பண்ண பாத்தியே. உனக்கு மட்டுமில்லை, எனக்கும் தானே அடிபடும்.''
திரும்பி பார்த்து, பெரியவரிடம், ''இப்படிதான் சார், 'டிராபிக் ரூல்ஸ்' எதையும் பார்க்காம வண்டி ஓட்டறாங்க. என்ன செய்யறது? நாம்தான் பார்த்துப் போக வேண்டியிருக்கு,'' என்றான்.
அவரிடம் பதிலில்லை. மகள் வாழ்க்கையில் என்ன நடக்க இருக்கிறதோ என்ற கவலையில் இருக்கிறார் என்பது அவனுக்கு புரிந்தது.
அந்த பெண் கையில் இருந்த மொபைல்போன் அடிக்க, ''சொல்லும்மா. 'ஹியரிங்' முடிஞ்சது. வழக்கம் போலதான். அடுத்த வாரம் தேதி கொடுத்திருக்காங்க. எரிச்சலா வருது. சரிம்மா, தீபக் என்ன செய்யறான்? சாப்பாடு கொடுத்து துாங்க வை. நாங்க அரைமணி நேரத்தில் அங்கே இருப்போம்.''
அவள் பேசியதில் இருந்து, அவளுக்கு ஒரு குழந்தை இருப்பது, ராமுவுக்கு தெரிந்தது. மெல்ல அவர்களிடம் பேச்சுக் கொடுத்தான்...
''என்னங்க ஐயா, 'டைவர்ஸ் கேஸ்' விஷயமாக குடும்ப நல கோர்ட்டுக்கு வந்துட்டு போறீங்களா. சமானியத்தில், 'கேஸ்' முடியாதே.''
''ஆமாம்பா. ஆறு மாசமா அலையறோம். என்னப்பா பண்றது. நல்ல இடம், நல்ல குடும்பம்ன்னு, நம்பி கல்யாணம் பண்ணி வைச்சேன். கடைசியில், இரண்டு பேருக்கும் ஒத்துப்போகாம கோர்ட் படி ஏற வேண்டியதா போச்சு.''
''என் நிலைமையும் கிட்டத்தட்ட இதே மாதிரி தான், ஐயா.''
''என்னப்பா சொல்ற?''
அந்த பெண்ணும் ஆர்வமுடன் கவனிக்க தொடங்கினாள்.
''ஆமாங்க, ஐயா. என் மனைவி சரியான, ராட்சசி. எதுக்கு கோபப்படுவா, எதுக்கு கத்துவான்னு தெரியாது. உழைச்சு முடிச்சு வீட்டுக்கு போனா, நேரத்துக்கு சாப்பாடு கிடைக்காது.
''ஏதாவது கேட்டால், 'நான் என்ன உனக்கு சமைச்சு போடுற வேலைக்காரியா'ன்னு கேட்பா. கல்யாணம் ஆகி, இரண்டு வருஷமாச்சு. இன்னும் அவளை புரிஞ்சுக்க முடியலை. காரணமில்லாமல் கோபப்படறது. பாத்திரத்தைப் போட்டு உடைக்கிறதுன்னு... ஏன்டா வீட்டுக்கு போறோம்ன்னு இருக்கும்.''
''அடப்பாவமே உனக்கு இப்படி ஒரு கஷ்டமா?''
''ஆமாங்க, ஐயா. என் நிம்மதியே போச்சு.''
''அப்படின்னா. நீங்களும், உங்க மனைவியை, 'டைவர்ஸ்' பண்ண போறீங்களா?''
இவ்வளவு நேரம் அவனிடம் எதுவும் பேசாமல் வந்த, அப்பெண், வாய் திறந்தாள்.
சட்டென திரும்பி, அவளை பார்த்து, மீண்டும் வண்டியை ஓட்டியபடியே, ''அது அவ்வளவு சுலபமில்லம்மா. பெரியவங்க பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. கல்யாணமாகி அடுத்த வருஷமே எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திடுச்சு. ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிறதுக்கு முன் குழந்தையும் வந்தாச்சு. இப்ப போய் வாழ முடியாதுன்னு பிரிஞ்சா, அந்த பாதிப்பு என் குழந்தைக்கும் தானே!
''அப்பா, அம்மான்னு சேர்ந்து வாழற அந்த குழந்தையோட உரிமையை பறிக்க விரும்பலைம்மா. அந்த குழந்தையின் முகத்தை பார்த்து எல்லாத்தையும் பொறுத்து போயிட்டு இருக்கேன்.''
''அது எப்படிங்க முடியும். உங்களுக்கான வாழ்க்கையை இப்படி சண்டையும், சச்சரவுமாக வாழ முடியுமா?'' என்றாள், அந்தப் பெண்.
''நீங்க நினைக்கிறது தப்புமா. காலம் இப்படியே போகாது. நிச்சயம் அவள்கிட்டேயும் மாற்றம் வரும். குழந்தை வளர, வளர எங்களுக்கு இடையில் இருக்கிற இடைவெளி, நிச்சயம் குறையும்ன்னு நம்புறேன். கோபப்பட்டாலும், கத்தினாலும், அவள் என் மனைவி. என்னோட பொறுமை நிச்சயம் அவகிட்ட மாற்றத்தை ஏற்படுத்தும்.
''வருஷம் போக, போக, என் மகள் வளர, இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கா சண்டை போட்டோம்ன்னு, அவளே சொல்லி சிரிக்கும் நாட்களும் வரும்.
''அப்படிதான் நினைச்சு, என்னோட நாட்களை, என் மகள் முகம் பார்த்து திருப்தி பட்டு கடத்திட்டு இருக்கேன்.''
''அப்படின்னா, உன் மகளுக்காக இதையெல்லாம் பெரிசு பண்ணாமல் பொறுத்து போறன்னு சொல்றியாப்பா?'' என்று கேட்டார், பெரியவர்.
''ஆமாங்க, ஐயா. நாங்க பிரிஞ்சா, எங்க மகளோட நிலைமை என்ன ஆகிறது? பிள்ளைகளை பெத்துக்கிறது பெரிசில்லை. அவர்களை, நல்லபடியா வளர்க்கணும் இல்லையா? அம்மா, அப்பான்னு சேர்ந்து வாழற அந்த குழந்தையோட உரிமையை பறிக்க எனக்கு விருப்பமில்லை, ஐயா. என் மனைவி என்னை புரிஞ்சுப்பா. இந்த கஷ்டங்கள் கொஞ்ச காலம்தான்னு நினைச்சு, எல்லாவற்றையும் பொறுத்துக்கிட்டு பிழைப்பை நடத்தறேன்.''
அப்பாவும், பெண்ணும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.
''அடுத்தது எந்த தேதிம்மா வரச்சொல்லி இருக்காங்க,'' என்று கேட்டார், அப்பா.
''இருபதாம் தேதிப்பா. அதுக்குள்ளே நம்ம, 'லாயர்' மூலமாக திரும்ப அவர்கிட்ட பேசிப் பார்க்கலாம்ன்னு தோணுதுப்பா.''
முகத்தில் லேசான மலர்ச்சி தெரிய, ''இதுக்கு எதுக்குமா, 'லாயர்' அவர், உன் புருஷன். நீங்க ரெண்டு பேரும் சந்திச்சு, மனசு விட்டு பேசுங்க. நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும். போகும்போது, தீபக்கையும் அழைச்சிட்டு போ. அவன் அப்பாவை பார்த்து ஆறு மாசமாச்சு.''
ஆட்டோவிலிருந்து இறங்கினர். மகள் உள்ளே போக, பணத்தை கொடுத்தவர், ''ரொம்ப நன்றிப்பா. நாங்க எவ்வளவோ எடுத்து சொல்லியும் பிடிவாதமாக இருந்தவ, உன் கதை அவள் மனதில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கு. நல்லது நடக்கும்ன்னு நம்புறேன்.''
''சரிங்க, ஐயா. நம்பிக்கையோடு இருங்க. நம்பிக்கை தானே வாழ்க்கை.''
ஆட்டோவை கிளப்பியவன், போனில் மனைவியை அழைத்தான்...
''என்னங்க, வீட்டுக்கு எப்ப வருவீங்க? உங்களுக்கு பிடிச்ச, இறால் மீன் குழம்பு வெச்சிருக்கேன்.''
''இதோ வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன். மாசமா இருக்கே. உனக்கு வரும்போது 'ஸ்வீட்' வாங்கிட்டு வர்றேன். அப்புறம் நமக்கு பெண் குழந்தை தான் பிறக்கும்.''
''அது எப்படி உறுதியா சொல்றீங்க?''
''அது அப்படி தான். நம்ம மகள் அம்மா, அப்பாவின் செல்லமாக நம்மோடு சந்தோஷமாக வாழப் போறா.''
''என்ன, ஐயா இன்றைக்கு ஏக குஷியாக இருக்கீங்க போலிருக்கு...''
''என் பொண்டாட்டி போல ஆகுமா? ஸாரிடா செல்லம்.''
''எதுக்கு?''
''அதை சொல்ல முடியாது.''
''சரி சரி சீக்கிரம் வாங்க. இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவோம்,'' என்றாள், ராமுவின் மனைவி.
பரிமளா ராஜேந்திரன்
