PUBLISHED ON : மே 10, 2026

வேலு நாச்சியாராய் குதிரை மீது வந்தேன் ராணி மங்கம்மாளாய் வாளைச் சுழற்றினேன் ஜான்சிராணியாய் எதிரிகளை பந்தாடினேன் குக்கர் சத்தம் கேட்டது சமையலறைக்குள் ஓடினேன்! - பால பாரதி எ த்தனை முறை இந்த கவிதையைப் படித்திருக்கிறாள், நித்யா. நாள் முழுவதும் மனதுக்குள் இக்கவிதை ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது. இந்தக் கவிதையோடு கூடவே, போகன் சங்கரின் கவிதை ஒன்றும் நினைவுக்கு வரும்...
ஆலிஸ் - புன்னகை மறைந்ததிலிருந்து அது ஒரு பெண் பூனை என்று அறிந்து கொண்டேன். இவ்விரு கவிதைகளும், நித்யாவின் நெஞ்சில் நிரந்தரமாக தங்கிப் போனவை. இவைகளின் எதார்த்தம் அவளுக்குள் எப்போதும் ஒரு வலியை ஏற்படுத்தும். எந்த ஜீவராசியானால் என்ன... பெண் என்றும் பெண் தான்! அதில், பூனை என்ன, புலி என்ன? எத்தனை படித்திருந்தாலும், எவ்வளவு சிந்தித்தாலும் குக்கர் சத்தம் கேட்டால், சமையலறைக்குள் ஓட வேண்டியவள் தான்.
இந்தக் கவிதைகளைக் கூட, நித்யாவின் அத்தை மகன், ராஜாமணி சொல்லித்தான் படித்தாள், நித்யா. எழுத்தும், இலக்கியமும் அறிமுகமானது, ராஜாமணியால் தான். 'பைண்ட்' பண்ணப்பட்ட பத்திரிகை தொடர்களை படித்துக் கொண்டிருந்தவளுக்கு, வித்தியாசமான சிறு பத்திரிகைகளை கொண்டு வந்து தந்தவன், அவன். வேறு எந்த ஆண் மகனும், அவள் வீட்டினுள் அத்தனை சுலபமாக நுழைந்து விட முடியாது. அவ்வளவு கண்டிப்பும், பாதுகாப்பும் கொண்டவர், அப்பா. ராஜாமணி, அப்பாவின் தங்கை மகன் என்பதால், சுலபமாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். ஜாம்ஷெட்பூர் எக்ஸ்.எல்.ஆர்.ஐ., கல்லுாரியில், எம்.பி.ஏ., மனிதவள நிர்வாக படிப்பு படித்து, தன் கனவுத் துறையான திரையுலகில் காலடி எடுத்து வைத்திருந்தான். பிரபல இயக்குனர் ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்திருந்தான். அந்த இயக்குனரும் இலக்கியம் படிப்பவர், உலகத் திரைப்படங்களைப் பார்ப்பவர். அவரும் அதே, ஜாம்ஷெட்பூர் கல்லுாரியில் படித்தவர் தான். இவனுக்கு சீனியர். இருவரின் படிப்பும், ஒத்த ரசனையும் ஒன்றாக இணைய வைத்தது.
ரா ஜாமணி வீட்டுக்கு வந்தாலே, முகம் சுளிப்பார், அப்பா.
'என்னடா?'
'சும்மா பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன், மாமா...' என்பான்.
'யாரைப் பார்க்க வந்த?'
'உங்க எல்லாரையும் தான், மாமா...'
'டேய், நீ ரொம்ப படிச்சவனா இருக்கலாம், அறிவாளியா இருக்கலாம். ஆனா, உனக்குப் பல வருஷம் முன்னால பொறந்தவன்டா நான். உங்கம்மாவுக்கு அண்ணன், நான். அதனால், நீ யாரைப் பார்க்க அடிக்கடி வரேன்னு தெரியும். கதை, கவிதை, சினிமா, டிராமான்னு சொல்லி, என் பொண்ணு மனசை திசை திருப்ப பார்த்த, கொன்னுப்புடுவேன் படவா உன்னை...'
'ஐயோ, அதெல்லாம் செய்வேனா, மாமா. உங்களை பத்தி எனக்குத் தெரியாதா என்ன?' என்று மெல்ல நகர்ந்து விடுவான், ராஜாமணி. பெரும்பாலும் அப்பா இல்லாத நேரங்களில் தான் வருவான்.
'இன்னிக்கு, புத்தக கண்காட்சிக்கு போயிருந்தேன். ப.சிங்காரத்தின், 'புயலிலே ஒரு தோணி!' கிடைச்சுச்சு. ஜே.டி.சாலிங்கரின், 'கேட்ச் ஹர் இன் தி ரை' புத்தகமும், கலீல் கிப்ரானின் முழு தொகுப்பும் உனக்காக வாங்கிட்டு வந்தேன்...'
அவன் கொடுத்த புத்தகங்களை வாங்கி தடவிப் பார்த்தாள், நித்யா. புது புத்தகங்களின் வாசனை அவளுக்கு பிடிக்கும். முகத்தருகே கொண்டு போய் ஆழமாய் சுவாசத்தை உள்ளுக்கிழுத்து விட்டுச் சொன்னாள்...
'எனக்கும், 'புக் எக்ஸிபிஷன்' போகணும்ன்னு தான் ஆசை. இந்த சனிக்கிழமை காலேஜ் கிடையாது போகலாமா?'
'ஐயய்யோ...' என்று பதறினான், ராஜாமணி.
'நம்ம வீட்டு, ஹிட்லருக்கு தெரிஞ்சா அவ்வளவு தான். நான், உன்னைப் பார்க்க வர்றது கூட, 'கட்' ஆயிடும். உனக்கு என்னென்ன புத்தகங்களைப் படிக்கத் தரணும்ன்னு எனக்குத் தெரியும். இதே மாதிரி கொண்டு வந்து தர்றேன், படி...' என்பான்.
பி.காம்., படிப்பிற்கும், அவன் தரும் கதை, கவிதைகளுக்கும் சிறிது கூட சம்பந்தமில்லை. இவள் குடும்பத்தில், யாருக்கும் புத்தகம் வாசிப்பதில் ஆர்வமில்லை. ஆனால், அம்மாவின் அம்மா முதல் சித்திகள் வரை படிப்பதில் ஆர்வமுள்ளவர்கள். பாட்டி ஒரு மர பீரோ முழுதும் புத்தகங்கள் சேமித்து வைத்திருந்தார். எல்லா பத்திரிகைகளுக்கும் சந்தா கட்டி வரவழைப்பார், பாட்டி. அவர்கள் இருந்த கிராமத்தில் பாட்டிக்காக மட்டுமே தபால்காரர் வருவார்.
'பாட்டிம்மா... உங்க ஒருத்தருக்காக, வந்தவாசியிலிருந்து, 10 கி.மீ., சைக்கிளை மிதிச்சுக்கிட்டு இந்த குக்கிராமத்துக்கு வரேன்...' என்பார், தபால்காரர்.
பாட்டி ஒவ்வொரு முறையும், பத்து அல்லது இருபது ரூபாய் தபால்காரருக்கு கொடுத்தனுப்புவார். இதெல்லாம் அம்மா பிறந்த வீட்டில்.
அப்பாவின் வீட்டில், அப்பாவின் அம்மாவோ, கூட பிறந்த அத்தைகளோ யாரும் புத்தகம் படிப்பவர்கள் இல்லை. படிக்கவும் விட மாட்டார், அப்பா. பத்திரிகைகள் வீட்டுக்கு வந்தாலே முதுகுத் தோலை பிய்த்து எடுத்து விடுவார். நித்யா வாசிப்பது கூட அப்பாவுக்குத் தெரியாது.
அ ண்ணன் நாராயணன் தொரைப்பாக்கத்தில் இருந்த கல்லுாரி ஒன்றில் வேறெந்த பட்டப்படிப்பு கிடைக்காமல், பி.ஏ., எக்கனாமிக்ஸ் சேர்ந்தான். முதல் செமஸ்டரில் அனைத்துப் பாடங்களிலும் மிகவும் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்த காரணத்தால், அவனைக் கல்லுாரியை விட்டு நிறுத்தினார், அப்பா.
'இனிமே நான் நல்லாப் படிக்கறேன்ப்பா... எதுலயும் பெயிலாக மாட்டேன்ப்பா. காலேஜை விட்டு நிறுத்திடாதீங்கப்பா. 'ப்ளீஸ்'ப்பா...' என்று கண்ணீரோடு கெஞ்சினான், நாராயணன்.
'நீ படிக்கிற லட்சணம் தான் தெரியுதே. நாளையிலிருந்து என் கூட மரக்கடைக்கு வா!'
அப்பாவின் முரட்டுத் தீர்மானங்களுக்கு எதிராக யாராலும் எதுவும் பேச முடியாது. மறுநாளிலிருந்து அப்பாவிற்கு துணையாக வியாபாரத்தில் இறங்கி, அவருடனேயே கடைக்குச் சென்று கொண்டிருந்தான், நாராயணன்.
தா த்தா ஆரம்பித்த மரக்கடை வியாபாரம் அது. அந்தக் காலத்திலிருந்தே பர்மாவிலிருந்து தேக்கு மரத்தை இறக்குமதி செய்து கடைக்குள் இருந்த, வாள் குழியில் ரம்பத்தால் அறுத்து துண்டுகளாகவும், பலகைகளாகவும் ஆக்கி விற்று கொண்டிருந்தார், தாத்தா.
வட சென்னையில், தாத்தாவின் மரக்கடை மிகவும் பிரபலம். விலையில் எப்படி கறாரோ, அதேபோல் அப்பழுக்கற்ற, கணுக்கள் இல்லாத தேக்கு மரத்திற்கும், துாக்கு மரப்பலகைகளுக்கும் தாத்தாவின் கடை மிகவும் பிரசித்தம்.
'பெரியவரு, 'கட் அண்ட் ரைட்டா' பேசினாலும், சுத்தமான மரமா இருக்கும். பேச்சும் சுத்தம். லட்சக்கணக்கானாலும் நம்பி வாங்கலாம். நாணயஸ்தர்!' என்ற நல்ல பெயரை சம்பாதித்திருந்தார்.
மரக்கடைகளை, மரத்தொட்டி என்றே சொல்வது வழக்கம். தாத்தா வியாபாரத்திலும், புகழிலும் கொடி கட்டிப் பறந்தார். துறைமுகத்தில் பெரிய பெரிய மர உருளைகள் வந்து இறங்குகிற சமயங்களில் வீடே அமர்க்களப்படும். அதிகாலை, 2:00 மணிக்கெல்லாம் எழுந்து தாத்தாவும், அப்பாவும் ஹார்பருக்குக் கிளம்புவர். 'லோடு வந்துடுச்சு...' என்பர்.
அப்போது, தெருக்கோடி பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள், நித்யா. கடைசி அத்தையின் கை பிடித்துப் போய்க்கொண்டிருந்தாள். தாத்தாவும், அப்பாவும் ஹார்பருக்குக் கிளம்புகிற அமர்க்களத்தில் துாக்கக் கலக்கத்தோடு இவள் மெல்ல கண் விழித்து பார்ப்பாள். பாட்டியும், அம்மாவும் சமையல் கட்டில் இருப்பர். அத்தைகள் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருப்பர். காபி வாசனை வீட்டை நிறைக்கும். மிளகாய்ப் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து, அதில் புரட்டப்பட்ட இட்லிகளும், தோசைகளும், பெரிய சம்படங்களில் நிரப்பி கூடைகளில் வைக்கப்பட்டு அனுப்பப்படும். தாத்தாவும், அப்பாவும் வீடு திரும்ப மறுநாள் நள்ளிரவு கூட ஆகிவிடும்.
துறைமுகத்திற்கு வந்த மரங்களை, 'கிரேன்' வைத்துத் துாக்கி, லாரிகளில் ஏற்றி, கடையில் கொண்டு போய் அடுக்குவது சாதாரண காரியமில்லை என்பார், அப்பா.
தாத்தாவிடமிருந்து அனைத்தும் கற்றுக் கொண்டிருந்ததால், தாத்தாவின் மறைவிற்குப் பின் கடையை நிர்வகிப்பது அப்பாவிற்கு சுலபமானதாகவே இருந்தது. வியாபாரத் தந்திரங்களெல்லாம் அப்பாவிடம் இயல்பாகவே இருந்தன. தாத்தா, மகா கோபக்காரர் என்று பாட்டி உயிரோடிருந்த போது பலமுறை சொல்லியிருக்கிறார்...
'உங்கப்பனுக்குக் கீழே மூணு பொண்ணுங்க. தாத்தா திடீர்ன்னு போய் சேர்ந்தப்போ, உங்கப்பனுக்கு, 21 வயசு. உங்கம்மாவுக்கு, 17 வயசு. தாத்தா கூடவே போயி தொழில் கத்துக்கிட்டதுனால சமாளிச்சான். மூணு தங்கச்சிங்களுக்கும் சிறப்பா கல்யாணம் பண்ணி வச்சான். 'உங்கம்மா பெரிய இடம். ஜமீன் பரம்பரை. கண்ணுக்கெட்டிய துாரம் வரை நஞ்சை நிலம். தோப்பும், துரவும், கொட்டாய் நிறைய மாடுகளும், வேலைக்கு வீடு நிறைய ஆட்களுமாக ராஜ வாழ்க்கை. வீட்டுக்கு மூத்த பொண்ணு, உங்கம்மா. அம்புட்டு அழகு! எப்படி அமைஞ்சுச்சுன்னே தெரியல. தரகர் சொன்னாருன்னு போய் பார்த்தோம். அவுங்க ரெண்டு கட்டு வீடும், பணமும், அந்தஸ்தும்...
'பொருந்தாத இடத்துக்கு வந்துட்டோம்ன்னு நினைச்சுக்கிட்டிருந்த போதே, பெண் வீட்டில் சம்மதம்ன்னு கட்டிக் குடுத்துட்டாங்க. பணக்கார இடத்திலிருந்து வந்ததுனாலயும், பேரழகியா இருந்ததுனாலயும் உங்கம்மா ரொம்ப ராங்கிக்காரியா இருப்பா. கர்வம்ன்னா அப்படி ஒரு கர்வம். உன் அத்தைமாருங்களை இளப்பமாகப் பார்ப்பா. உங்கப்பனை எளக்காரமாய் பேசுவா...
'உங்கப்பனும், அவனப்பனைப் போலவே மகா முரடன். உங்கம்மா, 'கட்டைத் தொட்டிக்காரனைக் கட்டிக்கிட்டேன்'னு பேசுவா. உங்கப்பன் விட மாட்டான்.
'வக்கில்லாமத்தானே கட்டைத் தொட்டிக்காரனுக்கு கட்டி வச்சாங்க. இந்த வாய்க்கும், அகங்காரத்துக்கும், திமிருக்கும் எங்க போனாலும் குப்பை கொட்ட மாட்டேன்னு தெரிஞ்சு தானே என் தலைல கட்டினாங்க'ன்னு திருப்பி கேப்பான்...
'பேச்சு முற்றி, அடிதடியில் இறங்கும். உங்கம்மா அடிவாங்குவாளே தவிர, வாயடக்க மாட்டா. தடுக்கப் போற எங்களுக்கும் அடி விழும். அடியும், உதையும், சண்டையும், சச்சரவுமாகத்தான் வீடு எப்பவுமே இருக்கும். இது வீடா, நரகமான்னு கூடத் தோணும். எப்ப சண்டை வருமோன்னு பயம் வயித்தை கவ்வும். இப்படி அடிச்சுக்கிறவங்க ராத்திரியில எப்படி சகஜமாவாங்களோ தெரியல. அதனால தானே உங்கம்மா வயித்துல, ஒம்பது உண்டாச்சு...'
'ஒன்பதா பாட்டி?' என்று கேட்டாள், நித்யா.
'ஆமாண்டீ... உங்கண்ணன் நாராயணன், நீ, ரெண்டு தங்கச்சிங்க அதுக்கப்புறம் பொறந்து குழந்தையிலே செத்துப்போன ரெண்டு தம்பிங்க. எத்தனை ஆச்சு? ஆறாச்சா! மீதி மூணும் குறைப் பிரசவம்...
'பாவம் தான் உங்கம்மா. உங்கப்பனுக்கு வாக்கப்பட்டது தான் அவ பண்ணின ஒரே தப்பு. நறுக்நறுக்குன்னு பேசுவாளே தவிர, வேறு ஒரு குறை சொல்ல முடியாது. உங்கப்பனுக்கு புத்தி கெட்டுப்போச்சு. 10 பெத்தும் அடங்கல! உங்கம்மா தன் தலைக்கு தானே கொள்ளி வச்சுக்கிட்டா. ரதி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும், குரங்கு மாதிரி கூத்தியா வேணும்ன்னு சொல்லுவாங்க. அது தான் உங்கப்பனுக்கு வேண்டியிருந்துச்சு போல?
'வீட்டையும், குழந்தைகளையும் பார்த்துக்க தன் கிராமத்துலேயிருந்து துாரத்து சொந்தக்காரப் பொண்ணு, பரம ஏழைன்னு ஒரு, 20 வயசுப் பொண்ணை கூட்டிட்டு வந்தா உங்கம்மா! சகுந்தலான்ற பேர்ல விதி வீட்டுக்குள்ள நுழைஞ்சுச்சு...'
பாட்டி நிறுத்தி பெருமூச்சு விட்டதும் அந்த சகுந்தலாவால் தான் பட்டதெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது, நித்யாவுக்கு.
- தொடரும்.
இ.ரங்கநாயகி
