தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/உனக்காகவே நான்! (3)

உனக்காகவே நான்! (3)

உனக்காகவே நான்! (3)


PUBLISHED ON : மே 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம் : நி த்யாவின் அம்மா, வீட்டு வேலை செய்ய ஊரிலிருந்து, சகுந்தலாவை அழைத்து வருகிறாள். நித்யாவின் அப்பாவிடம், சகுந்தலாவுக்கு தொடர்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக, தினமும் அவளை சந்திக்க, ஒரு இடத்தை கடிதத்தில் எழுதி, தன் மகள் நித்யாவிடம் கொடுத்து, சகுந்தலாவிடம் கொடுக்க சொல்கிறார். ஒரு நாள், அந்த கடிதத்தை ெகாடுக்க நித்யா, போகும் போது, அவள் அம்மா பார்த்து, கடிதத்தை பிடுங்கி, படித்து விடுகிறாள். அப்போது... மு கம் ஜிவுஜிவுத்து கண்கள் சிவக்க கையில் கடிதத்தோடு, தன் எதிரில் நின்றிருந்த அம்மாவைப் பார்த்து பயந்து போனாள், நித்யா. இதயம் படபடத்தது. உடல் மெல்ல நடுங்கியது. ''திருட்டுக் கழுத... துாதாடீ போற? இதுக்கு தான் தெனந்தோறும் அவளோட வெளிய போனியா? உங்கப்பன் வந்தானாடீ அங்க?''



தற்காப்பு உத்தியில், 'இல்லை...' என்று தலை தானாக ஆடியது. சட்டென்று அம்மாவின் கை, அவள் காதைப் பிடித்துத் திருகியது.

''பொய் சொன்ன, கொன்னுப்புடுவேன். உண்மையைச் சொல்லுடீ... வந்தானா இல்லையா?''

காது வலி தாங்க முடியாமல், ''வந்தாரும்மா,'' என்று அலறினாள்.

''இந்த வயசுல கூட்டிக் குடுக்கற புத்தி உனக்கு எப்படிடீ வந்திச்சு?''

விளாசி எடுத்தாள், அம்மா. கன்னம், முதுகு என, மாறி மாறி விழுந்தன.

''ஐயோ, அம்மா... வலிக்குதும்மா,'' என்று கதறினாள்.

''நீ செய்தது எனக்கு வலிக்காதாடீ?''

தலைமுடியை பற்றி இழுத்து கீழே தள்ளி காலால் எத்த முற்பட்ட போது, சகுந்தலா ஓடிவந்து தடுத்தாள். நித்யாவை விட்டு அவளை புரட்டி எடுத்தாள், அம்மா.

''எச்சில் இலைக்கு அலையுற நாயே... நீ, அவருக்கு சாப்பாடு போட்ட விதத்துலயே எனக்கு பொறி தட்டுச்சுடீ. அப்பவே நான் முழிச்சுக்கிட்டிருக்கணும். வயித்துல பொறந்த பொண்ணே துரோகம் செய்யுது. துாரத்து சொந்தக்காரியான நீ செய்யுறதுக்கு கேக்கணுமா? கிளம்புடீ முதல்ல, ஊரைப் பார்த்து ஓடிடு.''

தரதரவென, சகுந்தலாவை இழுத்து வெளியில் தள்ளப் போன போது, ஓடிவந்து அம்மாவின் கன்னத்தில் அறைந்தார், அப்பா.

''சகுந்தலா, எங்கயும் போக மாட்டா... இங்க தான் இருப்பா,'' என்றார்.

''அவ இங்க இருக்க மாட்டா, இருக்கக்கூடாது.''

''நீ, யாருடீ கூடாதுன்னு சொல்ல?''

அப்பா மூர்க்கமாகி அடிக்கத் துவங்கினார். அம்மா அலறினாள். அண்ணன், தங்கை இருவரும் ஓடிவந்து தடுக்க, அப்பாவின் ராட்சதத் தனத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போயிற்று. அக்கம் பக்க வீடுகளிலிருந்து ஓடி வந்தனர். ஆத்திரம் தாங்காத அம்மா வந்தவர்களிடமெல்லாம் நடந்த விஷயங்களை சொல்லி துாற்றினாள்...

''இதோ நிக்கறாளே, நான் பெத்த கடங்காரி... பிஞ்சுலயே பழுத்தவ. இவ தான் ரெண்டு பேருக்கும் துாது போயிருக்கா. என் வாழ்க்கையை கெடுத்த கோடாரிக் காம்பு. நல்லா இருப்பாளா இவள்? போற அன்னிக்கு போயி, மூன்றாவது நாள் தாலி அறுத்துத் திரும்பப் போறா.''

அதற்கும், நித்யாவுக்கு அர்த்தம் தெரியவில்லை. முழித்துக் கொண்டு தான் நின்றாள். அன்றிரவே கிளம்பி ஊருக்குப் போய் விட்டாள், சகுந்தலா. பாட்டியும் இல்லாத, சகுந்தலாவும் இல்லாத வீடு, நித்யாவுக்கு மிகவும் அந்நியமாகப்பட்டது. குபீரென்று ஓர் தனிமை உணர்வு பூதாகரமாக, நித்யாவை பற்றிக் கொண்டது.

அன்றைய நிகழ்வுக்கு பின், அப்பாவுக்கு பரம விரோதியானாள், அம்மா. அம்மாவோடு பேசுவதில்லை, அம்மாவை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, அம்மா நின்ற இடத்தில் கூட நிற்பதில்லை. அவள் கையால் சாப்பிடுவதில்லை. அவர்கள் இருவருக்குமிடையே இட்டு நிரப்பவே முடியாத பள்ளம் விழுந்தது.

அப்பாவின் அந்தப் பாராமுகம், அம்மாவை எரிமலையாக்கியது. தன் கோபம், வெறுப்பு, இயலாமை அனைத்தையும், நித்யா மீது திருப்பினாள். அடிவயிறு பற்றி எரிய தீப்பிழம்பாக சொற்களை அவள் நெஞ்சில் கொட்டினாள்.

எல்லாரும் தட்டு போட்டு வரிசையாக சாப்பிட உட்கார்ந்தால், இவள் தட்டில் இட்லியோ, தோசையோ, 'பொத்' என்று வந்து விழும்.

வேண்டுமென்றே குண்டான் சோறு, தட்டில் கவிழ்க்கப்படும். அதன் மீது ஒரு குழிக்கரண்டி சாம்பார் கொட்டப்படும். வீட்டில் செய்யப்படும் முறுக்கு, வடை, தட்டை எதுவுமே இவளுக்கு கிடைக்காது.

ஒருநாள் மாலை பஜ்ஜி போட்டு, கேசரி கிளறியிருந்தாள், அம்மா.

வெங்காய பஜ்ஜி வாசனை மூக்கைத் துளைத்தது. வெங்காய பஜ்ஜி, நித்யாவுக்கு மிகவும் பிடிக்கும். இவள் கண் எதிரிலேயே அண்ணன், தங்கை, அம்மா எல்லாரும் சாப்பிட்டனர். கடைசித் தங்கை, பானுமதியின் நாக்கில் கூட அம்மா ஒரு துளி ரவா கேசரி வைத்தாள். அது, சப்புக்கொட்டி சாப்பிட்டது. இவளுக்கு நாக்கில் நீர் ஊறியது.

''அம்மா எனக்கும் பஜ்ஜி, கேசரி தாம்மா.''

''நீயெல்லாம் ஒரு ஜென்மம். உனக்கு பஜ்ஜியும், கேசரியும் தான் பாக்கி.''

அதைக் கேட்டுக் கொண்டே வந்த அப்பாவின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

''அவளும் நீ பெத்த பொண்ணு தானே. எதுக்காக இந்த ஓரவஞ்சனை!''

''பெத்த பொண்ணுன்னு கூடப் பார்க்காம, கூட்டிக் கொடுக்க உபயோகப்படுத்திக்கிட்ட உனக்கெல்லாம் பேசுற தகுதி இல்ல.''

''அடச் சீ! சாக்கடைல கல்லெறிஞ்சா, மேலத்தான் தெறிக்கும். நீ வாம்மா, நான் வாங்கித் தர்றேன்.''

''தான் கெட்டதுமில்லாம, குட்டியையும் சேர்த்து கெடுத்தாச்சு. இப்போ ஹோட்டல் பழக்கம் வேறயா? தாயைப் போலப் பிள்ளைன்னு சொல்வாங்க. இது எல்லாத்துலயும் அப்படியே அப்பனைக் கொண்டு வந்திருக்கு.''

நறுக்கென்று, நித்யா தலையில் குட்டி விட்டுப் போனாள், அம்மா.

அதன்பின், அப்பா கூப்பிட்டும் இவள் அவரோடு ஹோட்டலுக்கு போகவில்லை. அப்பா காலையில் ஹோட்டலில் டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பினால், இரவு ஏழு, ஏழரை மணிக்கு மீண்டும் சாப்பிட்டு விட்டு வீடு திரும்புவார். பகலில் கடை அருகிலுள்ள வியாபாரிகளின் நலனுக்கென அவர்களால் வைக்கப்பட்டிருந்த, 'மர்ச்சண்ட்ஸ் க்ளப்'பிலிருந்து சுவையான, உணவு வரும். முன்பெல்லாம் அப்பா அங்கிருந்து பாதாம் அல்வா வாங்கி வருவார். அத்தனை சுவையாக இருக்கும். அதெல்லாம் ஒரு காலம் என்றாகி விட்டதை நினைத்துக் கொண்டாள், நித்யா.

நீ ண்ட நாட்களாக அப்பாவுக்கு, ராவுத்தர் என்பவர் தான் வாகன ஓட்டி. சகுந்தலாவைப் பார்க்க அப்பாவை ராவுத்தர் தான் அவளிருக்கும் ஊருக்கு அழைத்து செல்கிறார் என்பது ராவுத்தரே, நித்யாவிடம் சொன்ன விஷயம்.

'மறந்து போய்க்கூட இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லிடாத, பாப்பா. உங்கம்மா காதுல விழுந்துச்சு, என்னை வீட்டுப் பக்கமே வர விடமாட்டாங்க. வேலை போயிடும். உங்கப்பா தர்ற சம்பளத்துல தான் நானும், என் பொண்டாட்டியும் வாழ்ந்துக்கிட்டிருக்கோம். இந்த வயசுக்கு மேல எனக்கு வேற எங்கேயும் வேலைக் கிடைக்காது, பாப்பா...'

பிளஸ்2 முடிக்கும் தருவாயில், ராவுத்தர் மற்றொரு இடியைத் துாக்கி தலையில் போட்டார்.

''ஒரு முக்கியமான சங்கதி சொல்லணும், பாப்பா.''

''சொல்லுங்க பெரியவரே.''

ராவுத்தர் சுற்று முற்றும் பார்த்தார். யாருமில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு, சொன்னார்...

''உங்கப்பா அந்தப் பொம்பளையக் கல்யாணம் கட்டிக்கிட்டாரு!''

சடாரென்று உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து நின்றாள், நித்யா.

''எ... என்ன சொல்றீங்க, பெரியவரே?''

''ஆமாம் பாப்பா. அந்தப் பொம்பளையும், உங்க அப்பாவும் கல்யாணம் கட்டிக்கிட்டாங்க.''

''எப்போ?''

''நேத்து.''

''எங்க?''

''திருக்கழுக்குன்றத்துல.''

''சகுந்தலா டீச்சரா இப்படி செஞ்சாங்க?''

''ஆமாம், பாப்பா.''

''அவங்க எப்படி திருக்கழுக்குன்றம் வந்தாங்க?''

''முந்தா நேத்து நான் தான் போயி கூட்டிக்கிட்டு வந்தேன். அப்பா வழக்கமா சாப்பிடும் ஹோட்டல்ல தான் தங்க வச்சாரு.''

நித்யாவுக்கு அடி வயிறு புரண்டது. அம்மாவை நினைத்து மனது மிகவும் சங்கடப்பட்டது. மெல்ல மெல்ல விபரம் தெரிய ஆரம்பித்த போது, தான் தவறு செய்து விட்டோம் என்பது புரியத் துவங்கியது. ஏற்கனவே அந்தக் குற்ற உணர்ச்சியால் மருகிக் கொண்டிருந்தவளுக்கு இப்போது துக்கம் தொண்டையை அடைத்தது.

'பாவம் அம்மா. நான் அவளுக்கு மிகப் பெரிய தவறாகத்தான் செய்து விட்டேன். எந்தப் பெண்ணாலும் தாங்கிக் கொள்ள முடியாதது இது. அம்மாவின் அழகிற்கும், வசதிக்கும் வேறு ஒருவனாக இருந்திருந்தால் அவளைத் தலையில் துாக்கி வைத்துக் கொண்டாடியிருப்பான். பாதங்களை கன்னங்களில் ஒற்றிக் கொண்டிருப்பான்.

'ஆனால், அப்பா இவையெல்லாம் செய்வதற்கு பதிலாக அம்மாவோடு ஒண்டிக்கு ஒண்டி நின்றிருக்கிறார். எகிறி, எகிறி அடித்திருக்கிறார். அப்பாவிற்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மை இருந்து கொண்டிருக்க வேண்டும். வீடு, வாசல், கார், பங்களா என்று வசதிகளுக்குக் குறைவில்லாமல் இருந்த போதிலும் அம்மா நிற்கும் இடத்தை அவரால் நெருங்க முடியவில்லை. அது, காரணமாக இருக்க வேண்டும். ஒருவேளை அம்மா அவருக்கு சரிசமமாக நிற்காமல், அவர் சொல்வதை மட்டும் கேட்டு நடந்து கொண்டிருந்தால், அவருக்குள், 'ஈகோ' கொழுந்து விட்டு எரிந்திருக்காது. சகுந்தலாவை தேடச் சொல்லியிருக்காது.

'சகுந்தலா மீது அப்பாவுக்கு உண்மையான அன்பு இருக்க முடியாது. சகுந்தலாவை கருவியாக உபயோகப்படுத்தியிருக்கிறார். அம்மாவின் அகங்காரத்தை சிதைக்க அப்பாவுக்கு கிடைத்த சாதனம், சகுந்தலா.

'அம்மாவை மட்டும் அப்பா ஏமாற்றவில்லை. சகுந்தலாவையும் சேர்த்தே ஏமாற்றியிருக்கிறார்...'

''என்ன பாப்பா... இப்படி ரொம்ப நேரம் பேசாம இருக்க?''

தன்னிலைக்கு திரும்பியவள், ராவுத்தரை ஏறிட்டாள், நித்யா.

''ஏன் இப்படி செய்தீங்க, பெரியவரே? அப்பாவின் தப்புக்கு நீங்க துணை போகலாமா?''

திடுக்கிட்டார், ராவுத்தார். அப்படி ஒரு கேள்வியை, அவளிடமிருந்து எதிர்பார்க்கவிலை. சிறிது நேரம் மவுனமாக இருந்து, பின் மெல்லப் பேச ஆரம்பித்தார்...

''நீயே என்னை இப்படி கேட்டா எப்படி, பாப்பா? அன்னிக்கு எந்த நிலைமையில் நீ, உன் அப்பாவுக்கு துணை போனியோ, அதே நிலைமையில் தான் நானும் இன்னிக்கு துணை போயிருக்கேன். உங்கப்பாவ பத்தி உனக்கு தெரியாதா, பாப்பா? முயலுக்கு மூணே கால்ன்னு சொல்பவர். நாலு கால்ன்னு நாம சொன்னோம்ன்னா நாலாவது காலை உடைச்சு, இதோ பாரு மூணே கால் தான்னு காட்டக்கூடிய மனுஷன் தானே அவரு?''

அவர் சொன்னது சரி தான் என்று தோன்றியது, நித்யாவுக்கு. அவரே தொடர்ந்தார்...

''உங்கப்பாவை மீறி நடக்கணும்ன்னா ஒண்ணு நாம உங்கப்பாவை விடப் பணக்காரங்களா இருக்கணும். இல்லாட்டி உங்கப்பா தயவு இல்லாம சொந்தக் கால்ல நிக்கணும். ரெண்டுமே இல்லாத நாம என்ன செய்ய முடியும்?''

பேசிவிட்டு போய் விட்டார், ராவுத்தர். ஆனால், கடைசியாக அவர் சொன்னது அவளுக்குள் மிக ஆழமாக நங்கூரமிட்டுக் கொண்டது.



- தொடரும்இ.ரங்கநாயகி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us