PUBLISHED ON : மே 31, 2026

முன்கதைச் சுருக்கம் : 'வே லைக்காரி, சகுந்தலாவை உங்க அப்பா திருமணம் செய்து கொண்டார்...' என்று நித்யாவிடம் சொல்கிறார், ஓட்டுநர் ராவுத்தர். 'இந்த திருமணத்திற்கு நீங்கள் துணை போகலாமா?' என்று, அவரிடம் கேட்கிறாள், நித்யா. அதற்கு அவர், 'நீ, உன் அப்பாவுக்கு எப்படி துணை போனாயோ, அதே நிலைமையில் தான் நானும் துணை போயிருக்கேன்...' என்கிறார். நி ஜம் தான்! ராவுத்தர் சொன்னது அத்தனையும் நிஜம்!
ராவுத்தரை கேள்வி கேட்க, தனக்கு எந்தவித தகுதியும் இல்லை என்று நினைத்துக் கொண்டாள், நித்யா. முதன் முதலில் அப்பா தவறு செய்ய ஆரம்பித்த போது, அவருக்குத் துணை போனது, நான் தான். அப்பா முதல் குற்றவாளி. முதலில் கடிதம் கொடுத்த போதே, அம்மாவிடம் சொல்லியிருந்தால், அவள் முளையிலேயே கிள்ளி எறிந்திருப்பாள். சகுந்தலா டீச்சரை உடனே ஊருக்கு அனுப்பியிருப்பாள். சகுந்தலா டீச்சருக்கு அப்பாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிற அளவுக்கு தைரியம் வந்திருக்காது.
அம்மாவுக்கு, அப்பா செய்தது, துரோகம் என்றால், சகுந்தலா செய்தது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். எவ்வளவு பிரியத்தோடு சகுந்தலா டீச்சரை அழைத்துக் கொண்டு வந்தாள், அம்மா. காது, கழுத்து, கைகள் என, எதிலும் ஒன்றுமில்லாமல் தான் வந்தாள், சகுந்தலா டீச்சர்.
'சென்னைக்கு வந்திருக்கிறாய். கிராமத்தில் இருந்த மாதிரியெல்லாம் இருக்கக் கூடாது. பளிச்சுன்னு இருக்கணும்...' என்று அப்பாவிடம் சொல்லி, பத்து புடவைகள் வாங்கி வரச் செய்தாள். அவைகளுக்கேற்ப பிளவுஸ் தைத்துக் கொடுத்தாள். டவல், உள்ளாடைகள் என, எதற்கும் குறை வைக்கவில்லை. அப்படிப் பார்த்துப் பார்த்து செய்த அம்மாவின் முதுகில் குத்திவிட்டாள், சகுந்தலா. சாதாரணக் கத்தி கூட அல்ல; விஷம் தோய்ந்த கத்தி.
பாவம் அம்மா. எப்படி வலித்திருக்கும். அப்பா கொடுத்த கடிதத்தோடு, கையும் களவுமாகப் பிடிபட்டு உதை வாங்கிய அன்று, அம்மா கேட்டாளே, 'நீ செய்தது எனக்கு வலிக்காதாடீ...' என்று.
அப்போது தெரியவில்லை. இப்போது நெஞ்சில் அம்பு குத்தியது. உதிரம் வடியத் துவங்கியது. ரஷ்ய எழுத்தாளர், தாஸ்தயேவ்ஸ்கியின், 'குற்றமும் தண்டனையும்!' நாவல் நினைவுக்கு வந்தது. அந்த புத்தகத்தை வாங்கிக் கொடுத்தது, ராஜாமணி தான்.
தாஸ்தயேவ்ஸ்கியை விட, வலிமையான எழுத்தாளர் இருக்க முடியாது. மனிதனின் மனம் தான் அவன் செய்த குற்றத்திற்கான தண்டனை. புற தண்டனைகளை விட, அக தண்டணையின் வலியும், வேதனையும் அதிகம் தரும். சிக்கலான உள்மனப் போராட்டத்தை அவரைப் போல் வேறு யாரும் சொல்ல முடியாது. 'குற்றமும், தண்டனை'யும் நாவலில், அவர் எழுதியிருந்த விதமாகவே அம்மாவுக்கு நான் இழைத்த குற்றத்திற்கான தண்டனையை அனுபவிக்க ஆரம்பித்திருந்தாள், நித்யா. அந்த உள்மனப் போராட்டம் மரண வேதனையாக இருந்தது. இதுபோன்ற குற்ற உணர்ச்சி ஏதுமின்றி, அப்பாவாலும், சகுந்தலா டீச்சராலும் எப்படி இவ்வாறு செய்ய முடிந்தது.
நீரில் மூழ்குபவன் சிறு கிளை கிடைத்தால் போதும் என்று தவிப்பவனைப் போல் காத்துக் கொண்டிருந்தவள், கிளை என்ன, மரமே கிடைத்து விட்டது. பற்றிக் கொண்டு விட்டாள், சகுந்தலா டீச்சர்.
ஆனால், அப்பா? வயதிலும், அனுபவத்திலும் பெரியவர். ஒன்பது குழந்தைகளுக்கு அப்பா. தன், மூன்று தங்கைகளுக்கு திருமணம் செய்து கொடுத்தவர். வாழ்க்கையின் நெளிவு சுளிவு தெரிந்தவர். அடிபட்டு விழுந்தெழுந்த அனுபவஸ்தர். இப்படி செய்யலாமா?
அதிலும், அம்மா பேரழகி. எலுமிச்சை நிறம். அலை அலையாக முட்டி தொடும் கூந்தல். நல்ல வாளிப்பான செழுமையான உடல். புகைப்படத்தில் அம்மாவைப் பார்க்கும் போது, ரவி வர்மாவின் ஓவியத்தைப் பார்ப்பது போலவே இருக்கும். அப்படிப்பட்ட அம்மாவை விட்டு, எலும்பும், தோலுமாக, ஒட்டி உலர்ந்த உடம்பும், மா நிறமும் கொண்ட, சகுந்தலாவை எப்படி?
பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது... 'ரதி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும், குரங்கு மாதிரி கூத்தியா வேணும்'ன்னு சொல்வாங்க!
ஒருவேளை அப்பாவுக்கு அது தான் தேவைப்பட்டுச்சோ என்னவோ!
ஒருவேளை பாட்டிக்கு இந்த விஷயம் முன்பே தெரிந்திருக்குமோ. அதனால் தான் அன்று அப்படி சொன்னாரோ! 'சகுந்தலா பேர்ல விதி உள்ள நுழைஞ்சிச்சு'ன்னு வேற சொன்னாங்களே!
தெரிந்து தான் பாட்டி வீட்டை விட்டு கிளம்பிவிட்டார் என, நினைத்துக் கொண்டாள், நித்யா.
எப்போது திரும்பி வருவார் என்ற உத்தேசம் ஏதுமில்லை. அப்பா - அம்மா சண்டையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று வராமலே கூட போகலாம். தனக்கு சினேகமாய் இதமாய் இருந்த பாட்டியின் ஆதரவும் இல்லாத நிலை மிகப்பெரிய வெற்றிடத்தை தோற்று வித்தது.
யார் இருந்தாலும், இல்லாது போனாலும் அப்பாவை எதிர்க்க உறுதி கொண்டாள். அப்பா தன் சுயநலத்திற்காக தன்னையும் உபயோகப்படுத்திக் கொண்டவர். விபரமறியாத சிறுமியிடம் இதுபோன்ற கடிதங்களை கொடுத்தனுப்பக் கூடாது என்ற எண்ணமற்று செய்தவர். அம்மாவுக்கு எதிராக தன்னைத் திருப்பி விட்டவர். இதற்காக, அம்மா வாழ்நாள் முழுதும் தன்னை மன்னிக்கப் போவதில்லை. அம்பு எய்தவள், தான் இல்லை என்றாலும், அம்பாக இருந்தவள் நான் தான்!
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்றா அம்மா நினைப்பாள்? நிச்சயம் நினைக்க மாட்டாள். அந்த அளவு அறிவுபூர்வமோ, பக்குவமோ அம்மாவுக்கு கிடையாது. பார்க்கப் போனால், சகுந்தலாவிடம் இருக்கும் சாமர்த்தியம் கூட, அம்மாவிடம் இல்லை. இருந்திருந்தால், அப்பாவை இப்படிப் போக விட்டிருக்க மாட்டாள். அழகோ, கவர்ச்சியோ, லட்சணமோ அற்ற, சகுந்தலாவை அப்பா நாடி இருக்கிறார் என்றால்...
அழகும், லட்சணமும், கவர்ச்சியும் கொண்ட அம்மா தன் புத்திசாலித்தனமில்லாத காரணத்தால் அப்பாவை தன்னை விட்டு விலக செய்து, சகுந்தலாவைப் பற்றிக்கொள்ள வைத்து விட்டாள். இதில், அம்மாவின் தவறும் இருந்தால் கூட தலையாயத் தவறு, அப்பாவினுடையதே. 40 வயதைக் கடந்தவர் செய்கிற வேலையா இது?
நினைக்க நினைக்க அவளுக்குள் கோபம் பொங்கியது. ஒரு விநாடி கண்களை மூடி யோசித்தாள். பாட்டிக்கு தெரிந்திருக்கிறது என்றால், நிச்சயம் பெரிய அத்தைக்கும் தெரிந்திருக்கும். பெரிய அத்தைக்குத் தெரிந்திருந்தால், ராஜாமணிக்கும் தெரிய வந்திருக்கும். அவர்களிடம் பேசினால் என்ன? அடுத்த தெருவில் தானே இருக்கின்றனர். ஒரு நடை போய்விட்டு வந்தால் என்ன!
அப்பா வருவதற்குள் திரும்பி விட வேண்டும். அப்பா வீட்டிற்கு வந்தே, இரண்டு நாட்களாகி விட்டன. அடிக்கடி மரங்களை ஏலத்தில் எடுக்க அப்பா வெளியூர்களுக்கு சென்று வந்து கொண்டிருந்ததால், அம்மாவுக்கு சந்தேகம் ஏதும் ஏற்படவில்லை. மைசூரைச் சுற்றி உள்ள நிறைய ஊர்களுக்கு சென்று, ஒருவாரம், பத்து நாட்கள் என்று கூட இருந்து வந்திருக்கிறார். எனவே, இந்த இரண்டு நாட்களும் கூட அப்பா ஏலத்திற்கு போயிருப்பதாகவே நினைத்துக் கொண்டிருப்பாள்.
'பாவம் அம்மா!'
ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் அத்தை வீட்டிற்கு கிளம்பினாள்.
'அ ட!' என்று உற்சாகமும், சந்தோஷமுமாக வரவேற்றாள், அத்தை.
''என்ன திடீர்ன்னு இந்தப் பக்கம் காத்து வீசியிருக்கு?''
''சும்மாத்தான், அத்தை. ராஜாமணி இல்லையா?''
''ஏன் அவனைத்தான் பார்க்க வருவியோ! என்னையெல்லாம் பார்க்க வர மாட்டாயோ?''
''ஏன் அத்தை இப்படியெல்லாம் பேசுறீங்க? நான் உங்களைப் பார்க்க வந்ததே இல்லையா?''
''என்ன இன்னிக்கு, 'மூட் அவுட்'டா? எல்லாத்தையும் 'சீரியசா' எடுத்துக்கற?''
''இல்லீங்கத்த கொஞ்சம் மனசு சரியில்ல.''
''வீட்ல சண்டையா, சமுத்திரத்து அலை கூட ஓய்ஞ்சுடும். ஆனா, உங்கப்பா - அம்மா சண்டை மட்டும் ஓயாது போலிருக்கு?''
''நீங்களும், மாமாவும் கூட சண்டை போடுவீங்களா, அத்தே?''
''குடும்பம்ன்னு இருந்தா சண்டை வராமலா இருக்கும். ஆனாலும், உங்க வீடு மாதிரி, யார் வீட்லயும் நித்ய சண்டை இருக்காதுடியம்மா.''
''ஏன் அத்தை அப்படி தெனைக்கும் சண்டை வருது?''
''ஏற்கனவே குரங்கு. அதுக்கு சாராயமும் ஊத்திக் குடுத்தா எப்படி இருக்கும்? அப்படித்தான் உங்கப்பனும். ஏற்கனவே முரடன், கூட அந்த சகுந்தலாவும் சேர்ந்திடுச்சா.''
''அப்ப சகுந்தலா மேட்டர் உங்களுக்குத் தெரியுமா, அத்தை?''
''வீட்டு விஷயம் வேலைக்காரிக்கும், டிரைவருக்கும் தெரிஞ்சா, ஊருக்கே தெரிஞ்ச மாதிரி. மைலாப்பூர் கோவில் குளத்தங்கரையில அந்தக் கண்றாவிய நானே, என் கண்ணால பார்த்தேன்.''
''பார்த்தீங்க இல்ல அத்தே... உடனே வந்து அம்மாகிட்ட சொல்லி இருக்கலாமில்ல?''
''ஏன்டி, என் அழகு மருமகளே... ரெண்டு பேருக்கிடையே துாது போன நீயே சொல்லலன்றப்போ, நானாடி சொல்ல முடியும்? அப்புறம் உங்கம்மா வாய்ல யார் வுழுந்து எந்திரிக்கிறது? பிலுபிலுன்னில்ல என்னப் பிடிச்சுக்குவா?''
''அப்படியானால் எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருக்கிறது. இது போன்ற விஷயங்களெல்லாம் ஊர் சிரிச்சு, சந்தி சிரிச்சு கடைசியாகத்தான் வீட்டுக்குத் தெரியவரும் போல? ரெண்டு நாளைக்கு முன்னால, திருக்கழுக்குன்றத்துல வச்சு, சகுந்தலாவை அப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்காரு!''
''என்ன... என்ன... என்ன?''
அத்தை அதிர்ந்த போது மாடியிலிருந்து இறங்கி வந்த, ராஜாமணி, ''யாரு, நித்யாவா?'' என்று முகம் மலர்ந்தான்.
சட்டென்று சமாளித்து கொண்ட, அத்தை, ''ஆமாண்டா... உன்னைக் கேட்டுக்கிட்டேதான் உள்ள நுழைஞ்சா. உன் ரூமுக்கு கூட்டிக்கிட்டுப் போய் என்ன விஷயம்ன்னு கேளு?''
இருவரும் மாடியிலிருந்த அறைக்குள் நுழைந்தனர். சட்டென்று மிகப்பெரிய வித்தியாசம் புலப்பட்டது. கோவில் கர்ப்பக்கிரகத்தினுள் நுழைந்த மாதிரி இருந்தது.
ராஜாமணியின் அறை பிரமாதமாக ஒன்றுமில்லை. மொட்டை மாடியில் கூரை வேயப்பட்டு தட்டிகளால் சுற்றி தடுக்கப்பட்ட இடம் தான். ஆனால், அதன் நேர்த்தி. அழகு! அவனே வரைந்த சித்திரங்கள். சுற்றி கண்ணாடி பீரோக்களில் அடுக்கப்பட்ட புத்தகங்கள். நடுவில் பெரிதான 'ஓவல்' வடிவ மேஜை. சுற்றியும் நாற்காலிகள் என, ஆங்காங்கே மேற்கூரையின் கட்டைகளிலிருந்து தொங்க விடப்பட்ட, 'டெரகோட்டா' சிற்பங்கள். பூந்தொட்டிகளின் செடிகள். அவற்றில் பூத்திருந்த வண்ண வண்ண ரோஜாக்கள்.
மயிலிறகால் வருடிக் கொடுத்த மாதிரி, காயம்பட்ட அவள் மனதுக்கு இதமாக இருந்தது. அவள் உதடுகளில் தானாக ஒரு புன்னகை மலர்ந்தது.
''எத்தனை அழகாக இருக்கிறது உங்கள் அறை. எளிமையில் இவ்வளவு அழகு இருக்கும் என்று இப்போது தான் தெரிகிறது.''
அதைகேட்டு சிரித்தான்.
''எதற்கு சிரிக்கிறீர்கள்?''
''தினமும் கண்ணாடியில் பார்த்துத்தானே நீ பொட்டு வைத்துக் கொள்கிறாய்?''
சின்னதாக அவள் புருவங்கள் சுருங்கின.
''ஆமாம், ஏன்?''
''அப்போது உன் முகம் உனக்கு தெரிகிறது தானே!''
''ஆமாம்!''
''எளிமை எத்தனை அழகு என்பது இன்னுமா பிடிபடவில்லை?''
''ஐயோ, ராஜாமணி...'' என்றாள், மிகுந்த வேதனையுடன்.
''நான் ரொம்பவும் கனத்த இதயத்தோடு வந்திருக்கிறேன். கொஞ்சம் புரிஞ்சுக்கோங்களேன் ப்ளீஸ்.''
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவனாக சட்டென்று சொன்னான், அவன்...
''நித்யா, 'ஐ யம் சாரி...' சொல்லு என்ன விஷயம்?''
''அப்பா, அந்த சகுந்தலா டீச்சரை கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டார்!''
இந்தச் செய்தியினால் சிறிதும் அதிர்ச்சி அடையாதவனாக அமைதியாக அவளை ஏறிட்டான், அவன்.
- தொடரும்
இ.ரங்கநாயகி
